09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

 

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

சிவசேகரம் கவிதை எழுதுவார். அது,எல்லோருக்கும் தொப்பியை அளவாகத் தைத்து மெல்ல நயவஞ்சகத்தோடு விஷம் பருக்கும்.இது, நடக்கும் தருணம் "புரட்சி"யின் பெயரால்.இப்போது,"புரட்சி" பேசுபவர்கள் அனைவரும், மற்றவர்கள் மந்தைத் தெருவில் நாலு மந்தைகளை மேய்ப்பதென்ற தோரணத்தில்"மார்க்சியம்"படிப்பிக்கின்றனர்.

காலந்தாம்!

இந்தவுலகத்தின் திசைவெளிகளெல்லாம் ஏதோவொரு புனைவுக்கும்-நிஷத்துக்கும் இடையில் காட்சிப்படுத்தும் நிஷம், எங்கோ ஒரு "அறிவாளியின்"வீட்டுக் கோடியில் அடை காப்பதாக இவர்கள் கருதுவதாகவிருந்தால் அஃது, நிஷமாகவே காலக் கொடுமைதாம்.

விஷமக் கருத்துக்களை கட்டிக் கவிதையெனக் கோர்க்கும் சிவசேகரத்திடம் நிஷமாகவே புரட்சி குறித்த எந்த மதிப்பீடும் இருப்பதற்கில்லை!அப்படி இருந்திருப்பின் புலியினது பாசிசச் சேட்டைக்கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டத்தை இலங்கையில் நடாத்திக் காட்டியிருக்க முடியாதுபோயினுங் குறைந்தபட்சம் புலிகளது அழிவு யுத்தத்தை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.தன்னந்தனியர்களாக நாம் அம்பலப் படுத்தியபோது தலையைப் புதைத்துத் தமிழ்த்தேசியப்பால் குடித்தவர்கள், இப்போது, புரட்சிபேசி மற்றவர்களைச் சீண்டுகிறார்கள்.இவர்களெல்லாம் நீதியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு அழிவைப் புலிப் பாசித்தின் வழி சந்தித்திருக்க முடியாது!மக்களைப் புலிகளும்,சிங்கள ஆளும் வர்க்கமும் மொட்டையடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இன்று, புரட்சிக் கோசமெனப் புலம்பும்"கவிதை" தனிநபர்வாதமாக மற்றவர்களுக்கு "ஒழுங்கு"கற்பிக்கிறது!புலிகளது அராஜகத்தின்வழி, கேடுகெட்ட பாசிசம் கோலாச்சியத்திற்கு இந்த மனிதர்கள் எங்ஙனம் காரியம்-ஒத்திசைவாகவிருந்தார்களென நாம் பல் நூறு கட்டுரை எழுதியுள்ளோம்.என்றபோதும்,இன்றைய "புரட்சிகர-மார்க்சிய"ப் புதிய புரவலர்கள் கட்டியமைக்க முனையும் கருத்துக்களோ அவர்களது பின் தங்கிய புரிதலை நன்றாகவே நமக்குப் புரியவைக்கிறது. எல்லாக் காலத்துக்கும் அடிப்படையான புரிதல் பொருந்திவிடுவதாக இவர்கள் புசத்துகிறார்கள்.

புலிப்பாசிசத்தின்"(வி)தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு" மார்க்சியத்தின்வழி மரபுரீதியாகக் கருத்துச் சொல்லிக்கொண்டு மௌனித்திருந்த இந்த மகான்களெல்லாம் இப்போது கிணற்றுக்குள்ளிருந்து வெள்ளமேற வெளியல் வந்த தவளைகளாகக் கத்திக் கொள்கின்றனர்.அத்தக் கத்தலைப் புரட்சியின் தெரிவில்"புரட்சி" இலக்கியமெனப் புரட்டும் சிவசேகரம் தனது கடந்த கால மௌனத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் எந்த வருத்தத்தையுஞ் சொன்னதாக வரலாறில்லை!

பாசிசம் கோலாச்சியது எதன் பெயரால்?எவரது துணையோடு தமிழ்த் தரகு முதலாளிகள் இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்? எவரது மௌனம் புலிகளுக்கு விதேசியச் சிந்தாந்தப் பலம் கொடுத்தது?

இன்று, இத்தனை இலட்சம் மக்களது வாழ்வை வேட்டையாட ஒத்துழைத்த இந்த நரிகளெல்லாம்"புரட்சி-புரட்சி"என ஊளையிடுகின்றன. இது, குறித்து விமர்சனம்-எதிர்வினையாற்றும்போது நேசமிகு அஷோக்கோ அதை வெளியிட முடியாது தவிர்த்துத் தனது கரசேவையை ஒழுங்குற நடாத்துகிறார்.

இதெல்லாம் "புரட்சிக்காரர்களுக்கு" உரிய கோலந்தாம்!நாமும் கடந்த கால் நூற்றாண்டாக இந்தப் "புரட்சிக் காரர்களை"ப் பார்த்தே வருகிறோம்-இணைவதும்,பிரிவதுமாக...

இயக்க வாத மாயை,அந்நியச் சேவை-அடியாட் பாத்திரமென எல்லா வகைத் துரோகத்தையும் ஒழுங்குற நமது மக்களது தலையிற் சுமத்தி,அவர்களது வாழ்வை நாசமாக்க"அவர்களுக்கு விடுதலை"வகுப்பெடுத்த இந்தக் கடைந்தெடுத்த கபோதிகள்தாம் தம்மையும் "பேராசிரியர்கள்-புரட்சிக்காரர்கள்"எனப்பசப்பு மொழி பேசுகிறார்கள்! என்றோ நமது மக்களது உரிமைகளை அந்நியர்களுக்கு ஏலம்விட்ட இத்தகைய மனிதர்கள் இன்றும்"புரட்சி" பேசுவதும்,கட்சி கட்டுவதும்,மக்களை ஏய்த்து அரசியல் செய்வதென்ற திசையில்தம்மைத் தகவமைத்துக்கொண்டதன் பயனென இவர்களே தமது நடத்தையின் மூலம் நமக்குரைக்கின்றனர்!

புலிப்பாசிசத்தின் தோல்வியில்,படிப்பினைகளைச் செய்து, மக்களது அரசியலைப் பேச வக்கற்ற இத்தக் கோமாளிகளுக்கு "மார்க்சியம்" குறித்தென்ன மதிப்பீடு இருக்கிறது? புதிய உலகவொழுங்கமைப்பின் இன்றைய புரட்சிகர நிலவரங்கள் என்ன? பாட்டாளிய வர்க்கத்தின் இன்றைய வர்க்கவுணர்வினது தீர்மானகரமான இருப்பு என்ன? புதிய தலைமுறையை நோக்கிய புரிதலில் எத்தகைய மனித மாதிரிகளை இனங்காண்கின்றனர்?தொழிற்சாலைக்கும் மூலதன இயகத்துக்கிடையில், உற்பத்திச் சக்திகளுக்கும்,உறவுக்கும் இடையிலான இன்றைய பண்பு என்ன?இது குறித்து எந்தப் புரிதலை தமிழ்ச் சூழலில் முன்வைத்திருக்கிறீர்கள்? இன்றையவுற்பத்தியில் பங்குறும் பல்கலைக்கழகங்களுக்கும் பாட்டாளிய வர்க்கப் பண்புக்குமிடையிலான முரண்பாடென்ன? இது குறித்தெல்லாம் புரிதலற்றவர்கள் எதிர்காலப் "புரட்சி" குறித்து வகுப்பெடுக்கின்றனர்.அதையும், அதே பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து நிலைகளோடு...

இவர்களிடம்,எதிர்வினையாற்றும்போது,அதை மறைத்து மதிலமைக்க முடியுமெனக் கருதும் கருந்துளைகளுக்கு"ஈர்ப்புச் சக்தியினது சுழற்சிக் கணம்"எத்தகைவொரு நிலையில் எத்தகைய எதிர்த் தாக்குதலைத் தருமெனப் புரிவதுகூடப் பொருந்தாத தருணந்தாம். இல்லையென்றால், எதிர்வினைகளை-பின்னூட்டங்களை வெளியிட்டு,ஆரோக்கியமானவொரு உரையாடலைக் கட்டியமைத்திருப்பார்கள்.

இவர்களது தெரிவில், கடந்தகால இயக்கவாதக் கொள்கை வழியான பரிதலே மேன்மையான கோட்பாடாகவிருக்கலாம்.இல்லையென்றால் அங்காலவொருவன் கட்சி கட்டுகிறான்.இங்காலவொருவன் தெரிந்தெடுத்த கருத்துக்களை வைத்து அரசியலமைக்கின்றான். இவர்கள் மார்க்சியமெனக் கத்தும் மந்தைக் கருத்துகளோ மார்க்சியத்தின் அரிச்சுவடியையே கற்காத இவர்களது மேதமையை வெளிப்படுத்துகிறது!

என்ன மேதைமை!

போங்க சிவசேகரரே-போங்க அஷோக்கு யோகன் கண்ண முத்துப் புரட்சித்தோழரே! புதுமையாய் ஏதாவது வழியில் கருத்துக்கு மதிலிட முனையுங்கோ...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.08.2010


இட்ட பின்னூட்டமும்,சிவசேகரத்தின் கவிதையும்:


"இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ..."

சிவசேகரம் அவர்களது இக் கவிதையை

மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.


இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!


புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம "பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!


ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் "காய் அடிப்பு "அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது "இவர்களது" கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.


>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<<

-Albert EINSTEIN


"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது, அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ, போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி 02.08.10


புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்

-சி.சிவசேகரம்

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

http://inioru.com/?p=15700


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்