Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னைக் கடத்துவதற்கு முன், வேறு சில விடையங்கள் நடந்தன. ஐவரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சியாகவே, ஆறாவது நபராக நான் கடத்தப்பட்டேன். மற்றவர்களைக் கைது செய்தவர்கள், என்னை உரிமை கோராது கடத்திச் சென்றனர். இந்த ஐவரும் என்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களின் ஐந்தாவது நபருடன் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவன். அவர் வேறு யாருமல்ல, சரிநிகர் பத்திரிகை மூலம் அனைவருக்கும் தெரிந்த சிவகுமார் தான். இதற்கு முதல் நபரோ (நாலாவது நபர்) இன்று "உலக தமிழ் நியூஸ்" இணையம் நடாத்தும் குருபரன் தான். புலிகள் இது போன்ற கைது, கடத்தல் படுகொலைகளை, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்தனர். இதன் மூலம் தான், தமிழ் மக்களின் சரியான போராட்டத்தை ஒடுக்கி அதை நசுக்கினர். அதுதான் என் கதையும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்ட நான், மக்களை அணிதிரட்டவும் ஆயுதபாணியாக்கும் தீவிரமான முயற்சியிலும் ஈடுபட்டேன். இப்போராட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள்  குத்தகைக்கு எடுப்பதை எதிர்த்து, தமிழ் மக்களின் அனைத்து நியாயமான ஜனநாயக கோரிக்கைகளுடன் இணைந்த ஒரு போராட்டமாக மாற்றுவதையும் கோரி நின்றேன். தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் சரியான அரசியல் உள்ளடகத்தை, தமிழ் குறுந்தேசிய பாசிட்டுகளில் இருந்து மாற்றப்பட வேண்டியதையும் கோரினேன். புலிகள் தமிழ் மக்களின் தேசிய பொருளாதாரத்தைக் கூட கோரவும் பாதுகாக்கவும் மறுத்து, ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்ற பொய்யான படுபிற்போக்கான தமிழ் மக்கள் விரோதக்கொள்கையைக் கொண்டு இயங்கினர். யூத மற்றும் சிங்கப்பூர் உதாரணங்களைக் காட்டி, அதை முன்மொழிந்த போது அது தமிழ் மக்களின் தேசியத்துக்கும், மக்களின் தேசிய அடிப்படைக்கும் திட்டவட்டமாக எதிரானதாக இருந்தது. இவற்றை எல்லாம் எதிர்த்து, மக்களின் சொந்த அதிகாரத்தை ஆயுதமேந்திப் போராடிப் பெறவேண்டும் என்பதை முன்வைத்து தீவிரமாக இயங்கினேன். இந்த வகையில் பல்வேறு இயக்கங்களின் மேல் அதிருப்தியுற்ற அரசியல் நபர்கள், குழுக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டவும், மற்றைய இயக்கங்கள் கைவிட்ட ஆயுதங்களைச் சேகரிக்கவும் வாங்கவும் முயன்றேன். இது ஒன்றும் புலிகள் குறிப்பிட்டது போல் (பார்க்கவும் பத்திரிகைச் செய்தியை) சட்ட விரோதமானவையல்ல. இந்த குற்றச்சாட்டை புலிகள் முன்வைத்த அன்றே, அதே மேடையிலேயே நான் மக்கள் முன்பும் புலிகள் முன்பும் இவற்றை மறுத்து இந்த அவதூற்றை அம்பலப்படுத்தினேன்.

இந்த வகையில் பாசிசத்தின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்ளவும், புலிகளின் வதையின் வரலாற்றை தமிழ் மக்களும் உலக மக்களும் புரிந்து கொள்ள, அன்று வெளிவந்த புலிக்கு சார்பான பத்திரிகைச் செய்திகளே நிறைய உதவும். அன்று பத்திரிகைகள் சுதந்திரமான செய்தியை வெளியிடும் ஊடகமாக இருக்கவில்லை. புலியின் பாசிச படுகொலைக்கு இசைவாக செய்திகளை சொல்வனவாகவே இருந்தன. இருந்தபோதும் வரலாற்று ரீதியாக அம்பலம் செய்யும் போது, அக்காலத்தை படம் பிடித்துக் காட்ட அவை ஆதாரங்களை தந்து விடுகின்றன. உதாரணமாக அன்றாடம் நடந்த வீதிப் படுகொலைகளை அன்றையச் செய்தியில் இருந்து தொகுத்துக் கொள்வதன் மூலம், கொலையின் பாசிச பயங்கரவாதத்தை இலகுவாக நிறுவமுடியும். இது போன்றே எனது விடையம் தொடர்பாக, புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பிய பின் நடந்த விடையங்களை, அடிப்படையாக கொண்டு வெளியாகிய செய்திகளை முதலில் நாம் பார்ப்போம்.

எனது கடத்தல் மற்றும் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நடவடிக்கையும், புலிகளின் நிலைப்பாடு தொடர்பான அன்றைய பத்திரிகை செய்திகள்.

பல்கலைக்கழக மாணவர் பொதுக்கூட்டம்

ஈழநாடு 18.8.1987
யாழ்ப்பாணம், செவ்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான அவசரப் பொதுக்கூட்டமொன்று இன்று காலை 11.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் பலமுக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  ************************************

 

பல்கலைக்கழக மாணவர் கூட்டம்

உதயன் யாழ்ப்பாணம்ஆக, 18-1987


யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அவசரப் பொதுக் கூட்டம் ஒன்று இன்று செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ************************************

 

கூட்டம் உதயன் யாழ்ப்பாணம், ஆக.21-1987

இன்று வெள்ளிகிழமை காலை 10மணிக்கு விஞ்ஞானபீட மாணவன் பி.றயாகரன் பிரச்சனை தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்று யாழ்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. சகல மாணவர்களையும் சமூகமளிக்குமாறு மாணவர் குழு கேட்டுக்கொள்கிறது.

   ************************************

 

இன்றைய கூட்டம் ஈழமுரசு 21.8.1987


இன்று காலை 10-00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் விஞ்ஞான பீட மாணவன் பி.றயாகரன் பிரச்சனை தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. சகல மாணவர்களையும் சமூகமளிக்குமாறு மாணவர் குழு கேட்டுக்கொள்கிறது.

  ************************************

 

கைலாசபதி கலையரங்கில் இன்று கூட்டம் முரசொலி 21.08.1987


இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு விஞ்ஞான பீட மாணவன் பி.றயாகரன் பிரச்சனை தொடர்பான பொதுக் கூட்டம் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

  ************************************

 

இன்று நடைபெறும் மாணவர் குழுவின் பொதுக் கூட்டம் ஈழமுரசு 21.8.1987


இன்று காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுவினரால் பொதுக் கூட்டம் ஒன்று நடத்தப்படும். பல்கலைக்கழக மாணவன் றயாகரன் தொடர்பான விடயங்களும் ஏனைய விடயங்களும் இதில் ஆராயப்படும். இதில் விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா கலந்து கொள்வார். இது தொடர்பாக மாணவர் அமைப்புக் குழுவினர் விடுத்திருந்த அறிக்கையினை கீழே தருகிறோம்.

28.4.1987 அன்று யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் பி. றாயாகரன் காணாமற்போனார். இது தொடர்பாக றயாகரனின் பெற்றோர் மூலம் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களும் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

17.7.1987 அன்று, காணாமற் போன மாணவன் றயாகரன் எழுதிய கடிதம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வந்திருந்தது. அக்கடிதத்தில் றயாகரன் தான் விடுதலைப் புலி உறுப்பினர்களால் கடத்தப்பட்டதாகவும் 16.7.1987 அன்று தான் முகாமிலிருந்து தப்பி வந்து, இக்கடிதத்தை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதத்திற்கு எவ்விதத்திலும் பதில் கிடைக்காதவிடத்தில் 11.8.1987 அன்று மேலும் 4 கடிதங்கள் ஆசிரியர்சங்கம், விஞ்ஞானபீடம், துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக் குழு, ஆகியோருக்கு வந்திருந்தன. இக்கடிதத்தில் பி.றயாகரன் தான் மீண்டும் பல்கலைக்கழகம் வந்து படிப்பினைத் தொடர உத்திரவாதத்தைப் பெற்றுத் தரும்படி குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக 18.8.1987 அன்று மாணவர்கள் கூடி மாணவர் குழு அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை 19.8.1987 அன்று சந்தித்தனர். இச் சந்திப்பில் மாணவர் குழுவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. அவையாவன:

பி.றயாகரனை தாமே கைது செய்ததாகவும், அது அரசியல் காரணங்களுக்காகவென்றும், அவரது விசாரணை முடிந்து விட்டமையால் மீண்டும் றயாகரன் பல்கலைக்கழகம் வந்து கல்வி கற்க இனி எவ்விதமான அச்சுறுத்தலும் இருக்கமாட்டாது என்றும் மாணவர் குழுவிற்கு உறுதியளித்திருந்தனர்.

மாணவர் குழுவின் வேண்டுகோள்:- பி.றயாகரன் எங்கிருப்பினும் உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு வருமாறு வேண்டுகிறோம்.

 ************************************

 

யாழ்.பல்கலைக்ழக மாணவர் விவகாரம்: இன்று முக்கிய கூட்டம் ஈழநாடு 21.8.1987(யாழ்ப்பாணம்)

யாழ் பல்கலைக்கழக மாணவன் பி.றயாகரன் அரசியல் காரணங்களுக்காக தம்மால் கைதுசெய்யப்பட்டதாகவும், அவரது விசாரணை முடிந்து விட்டதால் பல்கலைக்கழகத்தில் அவர் மீண்டும் கல்வியை தொடர எவ்விதமான அச்சுறுத்தலும் இருக்கமாட்டாது எனவும், விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் குழு சார்பில் உ.ஒளவை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் பி.றயாகரனை உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு வருமாறு வேண்டுகிறோம்.

 ************************************

 

தலைமறைவான றயாகரனை உடனே வருமாறு அழைப்பு முரசொலி 21.8.1987


பல்கலைக்கழக மாணவன் திரு பி.றயாகரன் தொடர்பான விசாரணை முடிந்து விட்டதாகவும் மீண்டும் அவர் பல்கலைக்கழகம் வந்து கல்வி கற்க எந்த அச்சுறுத்தல்களும் இருக்கமாட்டாது எனவும் விடுதலைப் புலிகள் தமக்கு உறுதியளித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மாணவர் குழுவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போதே இவ்வுறுதியளிக்கப்பட்டதாக மாணவர் குழு தெரிவித்துள்ளது.

பி.றயாகரன் எங்கிருந்தாலும் உடனடியாக பல்கலைக்கழகம் வந்து தம்முடன் தொடர்பு nhள்ளுமாறு மாணவர் குழுவின் தலைவி உ.ஒளவை கேட்டுக்கெண்டுள்ளார்.

 ************************************

 

இன்று கூட்டம் ஈழநாடு 21.8.1987

இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் விஞ்ஞான பீடமாணவன் பி.றயாகரன் பிரச்சனை தொடர்பாக கைலாசபதி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாணவர் தமது கல்வியைத் தொடர விடுதலைப் புலிகள் இயக்க பிரதி தலைவர் மாத்தையா நேரில் வந்து மாணவர்களுக்கு உறுதியளிப்பார்.

 ************************************

 

புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா பேச்சு:
இனவிரோத சக்திகளை புலிகள் அனுமதிக்கமாட்டார்
முரசொலி 22.8.1987


"தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலைப் போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு இனவிரோத சக்திகளுக்கும் இடம் கொடாது"

இவ்வாறு விடுதலைப் புலிகளினால் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் பி. றயாகரன் தொடர்பாக விடுதலைப் புலிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டினை நேற்றுக்காலை பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் விளக்கி கூறிய புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் "றயாகரன் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்ற ரீதியிலோ அல்லது பல்கலைக்கழகப் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார் என்பதாலோ நாம் அவரை கைதுசெய்யவில்லை. கடந்த சித்திரை மாதம் 18ஆம் திகதி பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்காகத் திரிந்த இன விரோதி ஒருவன் எம்மால் கைது செய்யப்பட்டான். இது தொடர்பான மேலதிக விசாரணையின் பின்பு சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஆறாவது நபராக 28ஆம் திகதி சித்திரை மாதம் றயாகரன் கைது செய்யப்படடார். அப்போது அவரிடமிருந்த ஒரு கைத்துப்பாக்கியும் நூற்றி ஜம்பத்தி நான்கு ரவைகளும் கைப்பற்றப்பட்டன.
 
இவர் ஒரு இயக்கத்தின் உறுப்பினரும், தற்போது அவ்வியக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமாவார். எது எப்படியானாலும் இவரது உயிருக்கோ அல்லது கல்விக்கோ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக  இருக்கமாட்டார்கள்" என்றார். இக்கூட்டத்தில் பல்கலைகழக மாணவர் அமைப்புக்குழுவின் சார்பில் உ.ஒளவை விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் திரு இ.திலிபன், ஸோல்ற் அமைப்பின் பொறுப்பாளர் முரளி ஆகியோர் கலந்துகொண்டர். இறுதியில் றயாகரன் விடுதலைப் புலிகளின் கருத்துக்குப் பதிலளித்துப் பேசினார்.

 ************************************

 

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தவே றயாகரனை கைது செய்தோம்.
பிரதி தலைவர் மாத்தையா ஈழமுரசு 22.8.1987(யாழ்ப்பாணம்)


நேற்றுக்காலை 10.45மணி அளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் றயாகரன் தொடர்பாக மாணவர் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. செல்வி அவ்வை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதி தலைவர் மாத்தையா றயாகரனை நாம் ஏன் கைது செய்தோம் என்பதனை விளக்கினார்.

றயாகரன், பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக வெளியில் கூறப்படுவது போல் நாம் றயாகரனைக் கடத்திச் செல்லவில்லை. கைது செய்தோம் என்றே கூறினார். தொடர்ந்தும் கூறுகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நாம் தமிழீழ பகுதியில் சட்டவிரோத செயல்களைச் செய்வோரைக் கட்டுப்படுத்தும் கடமைப்பாடு தமக்கு இருந்தது என்றும், இதன் பிரகாரம் 18ம்; திகதி ஏப்பிரல் மாதம் பணத்தைக் கொடுத்து ஆயுதம் வாங்;க முற்பட்ட ஓர் சமூகவிரோதியைக் கைதுசெய்தோம். அவரை விசாரணை செய்தபோது அவர் கொடுத்த தகவலின் படியேதான் றயாகரனைக் கைது செய்தோம் என்று கூறினார். இச் சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றம் சம்மந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் றயாகரன் ஆறாவது நபராகும். இவரை நாங்கள் 28 ஏப்பிரல் மாதம் கைது செய்தோம் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு இவரிடம் இருந்து ஓர் கைத்துப்பாக்கியும் 154 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார். மேலும் கூறுகையில் இவர் ஓர் இயக்கத்தின் நீண்டகால உறுப்பினர் என்றும், தற்போது அவ் இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவர் எனவும், இவரை அழித்தொழிக்கும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் பல்கலைக்கழக மாணவரின் கோரிக்கைக்கு ஏற்ப அவர் கல்வியைத் தொடர்வதற்கோ,  அவரின் உயிருக்கோ அச்சுறுத்தலாகவோ நாம் இருக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

 ************************************

 

யாழ் பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விவகாரம் புலிகள் விளக்கம் ஈழநாடு 22.8.1987 (அலுவலக நிருபர்)

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப மாணவன் பி.றயாகரன் தமது கல்வியைத் தொடருவதற்கு எந்தவித அச்சுறுத்தலும் எம்மால் இருக்கமாட்டாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா உறுதியளித்துள்ளார்.

யாழ்பல்கலைக்கழக மாணவன் பி.றயாகரன் விவகாரம் சம்மந்தமாக, யாழ்பல்கலைகழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்றுக் காலை மாணவர் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்குழு சார்பாக செல்வி உ.ஒளவை இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

விடுதலைப் புலிகள் சார்பில் பிரதித்தலைவர் மாத்தையா, அரசியல் பிரிவு பொறுப்பாளர் திரு திலீபன் உட்பட பல பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர். 

திரு மாத்தையா, தங்கள் நிலைப்பாட்டை விளக்கி பேசுகையில் கூறியதாவது. மாணவன் றயாகரனை நாங்கள் கடத்தவில்லை@ கைதுசெய்தோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற எங்களுக்கு, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தோரைக் கட்டுப்படுத்தும் கடமைப்பாடு இருந்தது. கடந்த ஏப்பிரல் 18ம் திகதி பணத்தைக் கொடுத்து ஆயுதம் வாங்க முயற்சித்த சழூகவிரோதியைக் கைது செய்தோம். அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியபோது அவர் தந்த தகவலின்படி றயாகரனைக் கைதுசெய்தோம்.

சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட நபர்களில் றயாகரன் 6வது நபர். இவரை ஏப்பிரல் 28-ல் கைதுசெய்தோம். இவரிடமிருந்து கைத்துப்பாக்கியும் 154 ரவைகளும் கைப்பற்றினோம். இவர் ஒரு இயக்கத்தின் நீண்டகால உறுப்பினர், தற்போது அந்த இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராக இருக்கிறார்.

மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க மீண்டும் அவர் கல்வியைத் தொடர எந்த விதமான அச்சுறுத்தலும் எம்மால் இருக்கமாட்டாது.

இவ்வாறு திரு மாத்தையா உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து றயாகரன் இக்கூட்டத்திலிருப்பதாகவும் அவரை பேசவிடுமாறும் கூட்டத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டது.

தலைவர் அப்போது எழுந்து அவரைப் பேசுவதற்கு மாணவர்கள் அனுமதித்தால் அவர் இங்கு வந்து பேசலாம் என்று தெரிவித்தார்.

அச்சமயம் திரு மாத்தையா எழுந்து, உறுதிமொழி கொடுக்கத்தான் நாம் வந்தோம். அதனைக் கொடுத்து விட்டோம் என்று தெரிவித்து மேடையிலிருந்து இறங்கி சென்றார். அவருடன் விடுதலைப் புலிகளின் ஏனைய உறுப்பினர்களும் சென்றனர். மாணவன் றயாகரன் மேடையில் தோன்றி தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசினார்.


 ************************************

 

அந்த சம்பவத்தின் பின் இது குறித்த வெளியான சில செய்திகள்

முறிந்த பனை என்ற நூலில்

 
"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டாhகள். ....அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ...அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள். (பக்கம் 97)

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன விஜிதரனின் விவகாரத்தில் நடவடிக்கைக்குழு உறுப்பினராகப் பங்குபற்றினான். றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மாhக்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணாமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் றயாகரனை தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த றயாகரன் யூலை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜீலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவித இம்சையும் அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அந்த விடயம் பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசும் பணி மாணவர்களிடமே விடப்பட்டது. ஏனையோர் வேண்டாத பயத்தினால் பின்வாங்கியபோது, மாணவர்கள் மீண்டும் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .....மாத்தையா கைலாசபதி கலையரங்கில் நடந்த கூட்டத்தில், சமூகமளித்து அந்த உறுதிமொழியை அளித்தார். மாத்தயா தனது கூற்றிலே றயாகரன் "கிரிமினல்" இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தாரா என விசாரணை செய்யப்பட்டாரெனக் கூறினார். கிரிமினல்கள் வேலைகளில் அசகாய சூரர்களான விடுதலைப்புலிகள், ஏனைய இயக்கங்களை கிரிமினல் இயக்கங்களென முத்திரை குத்துவது வேடிக்கையானது. றயாகரன் கைலாசபதி கலையரங்கிலே பிரசன்னமாயிருந்து வேண்டுகோளின் பேரில் மேடையில் தோன்றியமை எதிர்பாராத நிகழ்வாயிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தது. றயாகரன் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனக்குச் செய்த சித்திரவதைகள் உட்படத் தனது அனுபவங்களை விபரமாக எடுத்துக் கூறினார். அவர் வெளியிட்ட முக்கியமான தகவல்களில் ஒன்று, மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவையைச் சேர்ந்த தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியின் முக்கிய பிரமுகரான திரு. கைலாசபிள்ளை .....தன்னுடைய முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தமையாகும். சில நாட்களுக்கு முன்னர் "ஈழமுரசு" பத்திரிகை தனது முக்கிய செய்தியில் திரு.கைலாசபிள்ளை பற்றிக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. ஒரு பேட்டியில் அவர், த.வி.ஐ.மு. இனியும் தேவையில்லையெனக் கூறி, ஆயுதப் போராட்ட இளைஞர்களைப் புகழ்ந்தார்." (பக்கம் 169,170) 


        
86 விஜிதரன் சுட்டுக் கொலை  
87 ல் றயாகரன் மயிரிழையில் உயிர் தப்பினார்
88 ல் விமலேஸ்வரன்.....

புதிய கண்ணோட்டம் என்ற இதழில் 1988 புரட்டாதி 01

தடியெடுத்த தண்டல்காரர்களின் சண்டித்தனத்திற்கு எதிராக தமிழ் மாணவர்களே எப்போது விழித்தெழப்போகிறீர்கள்?

கடந்த ஆடி மாதம் 18ம் திகதி நண்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வணிகபீட மாணவன் த.விமலேஸ்வரனை கொலை விசர் பிடித்திருக்கும் புலிகள் சுட்டுக் கொன்றனர்.

கல்விமான்களும், மாணவர்களும் மக்களிடையில் சரியான சிந்தனையோடு முற்போக்காய்ச் செயல்பட எத்தனிப்பவர்கள் எல்லோரும்....... இப்படியே தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்ற நாகரிக வளர்ச்சியை மௌனமாகவே அங்கீகரிக்கப் போகிறீர்களா?                 

மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள். மக்களை நேசித்துச் செயற்பட்டவர்கள் எல்லோரையும் சுட்டுக்கொன்றுவிட்டு அதிகாரத்தை நிலைநாட்ட நினைக்கும் இந்த கொலை விசர் நோயாளிகளை நீங்கள் தொடர்ந்தும் ஊக்கமளிப்பீர்களானால், எதிர்காலம், துப்பாக்கிகளால் மக்கள் வாயை அடைத்துவைக்கும் சண்டியர் கூட்டத்திற்குத் தலை வணங்குவதாகவே அமையும். அந்நிய நாட்டுப் படைகளைத் துரத்த வேண்டும், அரச படைகளை எதிர்த்துத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம்-- எங்கட பொடியள் நினைத்தபடியெல்லாம் எங்களுக்குள்ளேயே சுட்டுக் கொலைகள் செய்து கொண்டிருப்பதை அங்கீகரிப்பது| என்றா அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்?

1986 ஜப்பசி 4ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் புலிகளால் கடத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஜனநாயகப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவன் என்ற காரணத்தினாலேயே இப்போது விமலேஸ்வரனைப் புலிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சாதியொடுக்கு முறைக்கு உள்ளாகியிருக்கும் வறிய கூலி விவசாயிகளை, கிராமியத் தொழிலாளர்களை ஸ்தாபனரீதியாக ஒன்றிணைப்பதிலும் அவர்களை அறிவியல் ரீதியாக வளர்ப்பதிலும் தன் பங்கினை ஆற்றி வந்த விமலேஸ்வரனை பழிவாங்கும் வெறியினால் புலிகள் கொலை செய்துள்ளனர்.

தட்டிக்கேட்க யாருமில்லாத சண்டப் பிரசண்டர்களாய் இப்படித் தான்தோன்றித்தனமாய்க் கொலைகள் புரிவோம் என்று அடிக்கடி நிரூபித்துக் காட்டியே மக்களைப் பயமுறுத்திய நிலையில் வைத்திருக்கும் இந்தக் கொலை விசர்க் கூட்டத்தினரிடமிருந்து ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் விடுதலை செய்வது எப்போ?

 

இப்படி அன்றைய பத்திரிகை செய்திகளில் செய்தி வெளியாகியிருந்தது. இலங்கை ரேடியோச் செய்தியிலும், இந்த விடையம் அன்று வெளியாகிருந்தது. பத்திரிகை செய்திகளில் வெளியாகிய மாத்தையாவின் கருத்துகள் பற்றி, தொடர்ந்து விரிவாக ஆராயவுள்ளேன்.

எனது 45 நிமிட பேச்சு (இதுவே எனது நீண்ட நேர முதல் மேடை பேச்சு. அதாவது எனது கன்னி முயற்சியும் கூட) எதையும், இப்பத்திரிகைகள் வெளியிடவில்லை.

ஒரு பத்திரிகை மட்டும், ஒற்றை வரியில் "மறுத்து பேசினார்" என்று கூறி, முழுச் செய்தியை வெளியிடவில்லை. இதையும் கூட மற்றைய பத்திரிகைகள் எவையும் வெளியிடவில்லை. இது புலிப்பாசிசத்தின் முன், பத்திரிகைகளின் பரிதாபத்துக்குரிய நிலையை அன்று நிர்வாணமாக்கியது. இது நிகழ்ந்த காலமோ, இந்திய இராணுவம் எம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த காலத்தில் தான் நடந்தது.

தொடரும்

பி.இரயாகரன்

03.08.2010

 

17. புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

15.ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

 11.புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)