Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போராட்டம் என்பது தங்கள் நலன் சார்ந்த ஒன்றாக குறுகிப் போன காலகட்டம். இந்த மக்கள் விரோத ஜனநாயக படுகொலை வரலாற்றுப் போக்கில் இவற்றை எதிர்த்தே, நான் என் சொந்த மண்ணில் மக்களின் நலன் சார்ந்து போராடினேன். இந்த போராட்டம் என்பது பல தளத்தில், பல மட்டத்தில் நடத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1980 இல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் சாதாரண உறுப்பினராக இணைந்த நான், மிக தீவிரமாக மக்கள் மத்தியில் செயற்பட்டேன். 1983 இல் நான் வாழ்ந்த சுற்று வட்டாரம் மற்றும் மன்னார், வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட அமைப்பு செயல் வீரர்களை அணிதிரட்டியிருந்தேன். மக்கள் மத்தியில் வேலை செய்வது முதல், வீடு வீடாக விருப்பார்ந்த சிறு தொகை நிதி சேகரிப்பு என்று பல்வேறு துறை சார்ந்து, அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

அக்காலத்தில் அமைப்பின் மத்திய குழு இயக்கமற்று செயலற்று போன நிலையில், பிரதேசக் குழுவின் ஒரு பகுதியே அமைப்பை உருவாக்கியது. இந்த நிலையிலும்;, 1983 இனக் கலவரத்துக்கு முன்பாக மண்ணில் இருந்த பல்வேறு இயங்களுக்குள், அதிக செயல் வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய அமைப்பாக என்.எல்.எப்.ரி.யே இருந்தது.

தமிழ் மக்களின் மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்டவும், தமிழ் மக்கள் மேலான ஆணாதிக்க, சாதிய மற்றும் சுரண்டல் ஒடுக்குமுறைகளை ஒழித்துக் கட்டவும், நாம் எம்மை  ஸ்தாபனப்படுத்தினோம். இதை வென்றெடுக்க மக்களை அணிதிரட்டினோம். அவர்களை ஆயுத பாணியாக்க அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அணிதிரட்டிப் போராடினோம். புறநிலையாக ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், வளர்ந்து வந்த எம் இயக்கத்தால் எதிர் கொள்ளமுடியாத அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது. 1983இல் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக் கலவரத்துக்கு பிந்தைய கால கட்டத்தில், இந்தியா தனக்கான கூலிப்பட்டளாங்களை உருவாக்கியது. இந்தியா வழங்கிய இராணுவ பயிற்சியுடன் வழங்கிய ஆயுதங்கள், பணம் மற்றும் கைக்கூலி அரசியலும் இணைந்த போது, சீராக வளர்ச்சி பெற்ற மக்கள் இயக்கத்தின் போராட்டத்தையே அது நிலைகுலையவைத்தது. இவை பற்றி நான் எழுதவுள்ள என்.எல்.எப்.ரி.யின் வரலாற்றில் விரிவாக பார்ப்போம்.

இக் காலத்தில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற இயக்க பெயரை, என்.எல்.எப்.ரி. என்று மாற்றிய அதே மகாநாட்டில் மத்தியகுழு உறுப்பினராக நான் தெரிவுசெய்யப்பட்டேன். இதன் பின்பாக அமைப்பின் பல்வேறு பொறுப்புகளை பொறுப்பு ஏற்றேன்;. இதன் பின்பான இடைகாலத்தில் தளத்தில் நிதி மற்றும் ஆயுதங்களுக்கு பொறுப்பு, மாணவர் அமைப்புக்கான பொறுப்பு, இராணுவ பயிச்சிக்கான பொறுப்பு, இந்தியாவில் எமது நடவடிக்கைகளுக்கு பொறுப்பு, பல்வேறு பிரதேசத்துக்கு மாறி மாறி பொறுப்புகள், புலியின் அழித்தொழிப்பு காலகட்டத்தில் தள அமைப்பை வழிகாட்டிய இரு மத்திய குழு உறுப்பினரில் நானும் ஒருவன் என்ற வகையில், பலவற்றுக்கு குறுகிய காலத்தில் வழிகாட்டினேன்;. என்.எல்.எப்.ரி., பி.எல்.எப்.ரி.யின் உடைவின் பின்பு, இராணுவ குழுவுக்கு தலைமை பொறுப்பையும் ஏற்று இருந்தேன். இதேநேரம் பல்கலைக்கழகத்தில் இருந்த புலி ஆதரவு மாணவர் விரோத கமிட்டிக்கு பதிலாக நான் முன்னின்று உருவாக்கிய மாணவ கமிட்டி, ராக்கிங் என்ற "பகிடிவதைக்கு" எதிராக சமரசமின்றி கடுமையாக போராடியது உட்பட, மாணவர் கமிட்டிக்கு தெரிவு செய்யாத நிலையிலும், நானே உத்தியோகபூர்வமற்ற வகையில் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தேன். விஐpதரனை புலிகள் கடத்தியதை எதிர்த்து நடத்திய போராட்டத்தை வழிநடத்துவது முதல், அதன் அரசியல் கோசங்கள் முன்வைப்பதிலும், துண்டுப் பிரசுரங்களை எழுதுவதில் தொடங்கி போராட்ட தலைவனாகவும் செயல்பட்டேன். பின்பு இப் போராட்டம் தொடர்ச்சியான தொடர் நெருக்கடியை சந்தித்த நிலையில், நேரடியாக தலைமை தாங்கக் கோரி மாணவர்களே விசேட கூட்டத் தொடர் ஒன்றின் மூலம் என்னை தலைமை கமிட்டிக்கு தெரிவு செய்தனர். இதன் மூலம் ஜனநாயகத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதிலும், மக்களை அணிதிரட்டுவதிலும், என் மீதான நம்பிக்கையை தெரிவித்து மாணவர்களால் தலைமைக்கு உயர்த்தப்பட்டேன்.

அதே நேரம் வடக்கின் நடந்த சாதிய போராட்டங்களிலும்;, மக்களின் பல்வேறு ஜனநாயகத்துக்கான போராட்டங்களிலும், இலங்கை அரசின் இனவாத அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களிலும், பங்கபற்றியது முதல் தலைமை தாங்கி போராடினேன். இலங்கை அரசுக்கு எதிராக மாணவர் போராட்டங்களை ஒழுங்கமைப்பது, கோசங்களை வைப்பது முதல் மறைமுகமாக பல்கலைக்கழகம் ஊடாகவும், வெளி மாணவ அமைப்புக்கள் மூலமாகவும் தலைமையை வழங்கினேன்;. இந்தப் போராட்டம் அனைத்துமே மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கோருவதாக இருந்தது. 1983 முதல் 1986 வரையான காலத்தில், நூற்றுக்கு மேற்பட்ட சிறு கருத்தரங்குளை கிராமங்கள் தோறும் பரவலாக நடத்தியிருந்தேன். இது யாழ் பிரதேசங்கள் தொடங்கி கிளிநொச்சி, மன்னார், வவுனியா வரையான விரிந்த பிரதேசத்தில் நடத்தினேன். இயக்கங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அதை நிலைநிறுத்த ஆயுத வன்முறையை ஏவிய போது எல்லாம், மக்கள் போராட்டமாக வெடித்துக் கிளம்பிய போது எல்லாம், அதற்கு தலைமை தாங்குவதில் நடைமுறை செயல் வீரனாக இருந்தேன்.

இந்த தலைமை தாங்குவதில், மார்க்சியத்தை எமது தத்துவமாக வழிகாட்டியாக நாம் கொண்டிருந்த போதும், உண்மையில் பூர்சுவா எல்லையைத் தாண்டி ஸ்தாபனப் படுத்திவிடவில்லை. மார்க்சியம் மீதான விருப்பு மற்றும் அதை கற்றுக் கொண்டும் நடைமுறையில் அதை கையாள முனைந்து கொண்டிருந்த வராலாற்றில், மக்களுடன் இணைத்து நின்ற நிலையிலும் மக்களுக்கு வால் பிடித்தே தலைமை தாங்க முடிந்தது. இங்கு சில விதிவிலக்குகள் இருந்த போதும், வால் பிடித்த அரசியல் பண்பே, உழைக்கும் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கு தொடர்ச்சியான புரட்சியாக பேண முடியாத நிலைக்கு காலக்கிரமத்தில் இட்டுச் சென்றது. இது மக்களுடன் எம்மை ஸ்தாபனப்படுத்துவதில் தடையாக மாறியது. இது நான் சார்ந்திருந்த என்.எல்.எப்.ரி.யின் பொதுவான பூர்சுவா கண்ணோட்டத்தினால் ஏற்பட்டது. மார்க்சியத்தை வெறும் புத்தக வழியில் புரிந்து கொண்டிருந்த தலைமையின் குறிப்பான வழிகாட்டும் பண்பால், எம் மண்ணின் நீண்ட மக்கள் விரோத பாசிச அவலத்துக்கு முடிவுகட்ட முடியாது போனது.

இந்த நிலையில் நான் சார்ந்து நின்ற அமைப்பின் வழியிலும், பல்வேறு வெளி அமைப்புகள் சார்ந்தும் போராடினேன். பல்வேறு இயக்கத்தின் முரண்பட்ட உறுப்பினர்களை அவர்களின் இயக்கத்துக்கு வெளியிலும், அவர்களின் இயக்கத்தில் உள் வைத்தும், மக்களின் அடிப்படை உரிமையை முன்வைப்பதில், கோருவதில் சளையாத தொடர்ச்சியான போராட்டத்தை இடைவிடாது நடத்தினேன்;. புலிகளின் பாசிச படுகொலைகள் மூலம், முழு அதிகாரத்தையும் கைப்பற்றி சதிராட்டம் போட்டு நிறுவிய வரலாறு வரை, எனது போராட்டம் அந்த மண்ணில் மக்களின் உரிமையுடன் பின்னிப் பிணைந்து நின்றது. இப்படி மக்களின் உரிமை பற்றி உண்மையாக அறிவியல் பூர்வமாக நடைமுறை ரீதியாக சிந்தித்துப் போராடிய பலரை வீதி வீதியாகவும், உட்படுகொலைகள் மூலமும், மாற்று இயக்கப் படுகொலை மூலமும் கொல்லப்பட்ட எம் மண்ணில் இருந்து தப்பி; ஒருவனாக இருப்பதால், என்னை படுகொலை செய்ய கடத்திய நிகழ்வுகளை ~~வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை" மூலம் கொண்டு வருகின்றேன். இப்படி போராடிய பலர் வரலாற்றில் இருந்தும், வரலாற்றில் காணமல் போனார்கள். இதைச் சொல்ல, யாரும் அவர்களின் அரசியலுடன் எஞ்சவில்லை. 

இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் ஜனநாயகத்தை கோரியும், மக்களின் அடிப்படை உரிமையைக் கோரியும், மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்களை உணர்வு பூர்வமாக நேசித்து தம் உயிரை இழந்த ஆயிரம் ஆயிரம் போராளிகளின் தியாகம் மகத்தானவை. அவை உயிருள்ளவை. அவை  புலிகளில் இணைந்து போராடி மரணித்த தியாகங்களை விட, உன்னதமானவை மகத்தானவை. ஏனெனின் அவர்கள் மக்களை நேசித்தார்களே ஒழிய, வரட்டுத்தனமான மக்கள் விரோத பாசிச சர்வாதிகார தனிமனித ~மேதகு| தலைமைகளை நேசிக்கவி;லை. அவர்களை வெறுத்தார்கள். மக்களின் அடிப்படை உரிமை மற்றும் மக்களுக்காக போராடும் உரிமையை அவர்கள் நேசித்ததால், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவில்லை. தமிழ் இயக்க பாசிச ~மேதகு| தலைவர்களால், அவர்கள் சார்ந்து நின்ற வர்க்க நலன்களை பாதுகாக்க சதிகள் மூலம் தொடர்ச்சியான படுகொலைகளை இடை வெளியின்றி நடத்தினர். சமூக அறிவால், மக்களின் போராட்ட நியாயங்களால், மக்களின் கோரிக்கையால் அல்லாது, வீரமற்ற கோழைகளின் பேடித்தனமான படுகொலை வரலாற்றின் மேல் தான், மக்கள் விரோத புலிகளின் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பெற்றது. மக்கள் விரோத அதிகாரத்தை தூப்பாக்கி முனையில் பாசிசமாக நிறுவிய தேசிய தலைவர்களான தலைவர்களை எதிர்த்துப் போராடி, தம் உயிரை இழந்து போராளியாக திகழ்ந்த அந்த மனிதர்களின் மாபெரும் தியாகங்கள், வரலாற்றால் மீளவும் பாதுகாக்கப்பட்டு போற்றப்படும். மக்கள் தமது சொந்த விடுதலையால், அவர்களுக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தருவார்கள்;. இதை எந்த பாசிசமும் சர்வாதிகாரமும், வரலாற்றால் தடுக்கமுடியாது. படுகொலை மொழி மூலம், படுகொலை கலாச்சாரம் மூலம், படுகொலை தேசிய அதிகாரம் மூலம், தனிமனித படுகொலை மூலம், கட்டமைக்கப்பட்ட தனிநபர் வழிபாடு மூலமே புலிகள் தமது பாசிச வரலாற்றை நிறுவினர். இந்த பாசிச அதிகாரத்தினை எதிர்த்து மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தம் உயிரை தியாகங்களை செய்தவர்களை, கொச்சைத் தனமாக துரோக முத்திரை குத்தி, படுகொலை மொழி மூலம் கொலைகாரர்கள்; தம்மைத் தாம் தியாகியாக்கினர். மக்களுக்காக போராடியவர்களை படுகொலை செய்தவர்களின் தியாகங்களை விட, அரசையும் இயக்கத்தையும் எதிர்த்து மக்களுக்காக மக்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் ஈடு இணையற்றவை. இவை வரலாற்றினால் பதிவாக்கப்படுவதுடன், இதை மீளவும் முன்னிறுத்தி, எமது போராட்டத்தை இவர்களின் குறிக்கோளுடன் தொடர வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதே துரோகத்துக்குரியது என்பதே, மக்கள் விரோத அரசியல் அதிகாரப் பண்பாடு கூறுகின்றது. ஏனெனின் ஏகாதிபத்திய துணையுடன் தேசம் கடந்த மூலதனம், தேசிய மூலதனத்தை அழித்து சுரண்டவும் கொள்ளையிடவும் நடத்தும் ஆக்கிரமிப்பை இவர்கள் பாதுகாக்கின்றனர். மக்களை ஒட்டச் சுரண்டவும், ஆணாதிகத்தை பாதுகாக்கவும், உயர்சாதியின் அதிகாரத்தை தக்க வைக்கவும், தேசிய பொருளாதாரத்தை சூறையாடி சிதைக்கவும் தொடர்ச்சியான மக்கள் விரோதப் போக்கு அவசியமாகின்றது. இந்த நிலையலேயே இந்த ~~ வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை|| என்ற இந்த தொடர் வெளிவருகின்றது.

பி.இரயாகரன்
தொடரும்

15.ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

 11.புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)