தன்னுடன் இல்லாத எவருக்கும் ஜனநாயகம் கிடையாது. இதுதான் இலங்கையின் சட்ட ஆட்சி சொல்லும் மிகத் தெளிவான செய்தி. யார் மகிந்தவை தொழ மறுக்கின்றனரோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்;. இதுதான் மகிந்தவின் சிந்தனை. இப்படித்தான் புத்தனின் சிந்தனைக்கு, மகிந்த சிந்தனை இன்று புது விளக்கம் கொடுக்கின்றது.

தமிழர் பிரச்சனை முதல் ஊடகவியல் சுதந்திரம் வரை, கொடுமையும் கொடூரமும் நிறைந்த தங்கள் சிந்தனைகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர்.     

தன்னுடன் இல்லாத அனைவரும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். இதைத்தான் மகிந்த சிந்தனை, இலங்கையில் தெளிவாக இன்று அமுல்படுத்துகின்றது. அண்மையில் மன்னார் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். வொய்ஸ் ஓவ் ஏசியா (சியத) வானொலி நிலையத்தை குண்டு வைத்து அழித்தவர்கள், அதன் ஊழியர்களைத் தாக்கினர். இவை எல்லாம் மகிந்த சிந்தனையின் தெளிவான அரசியல் வெளிப்பாடுகள்தான்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தலைமையில் இயங்கும் ஆயுதம் ஏந்திய மகிந்த குண்டர்கள், முகமூடி போட்டுக்கொண்டு இனந்தெரியாத நபர்களாக இயங்குகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல, யுத்தகாலத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள். இவர்கள் தான்,   உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த "வொய்ஸ் ஓவ் ஏசியா" வுக்கு குண்டு வைத்தனர். இவை அனைத்தும் மகிந்த சிந்தனை தவிர வேறு எதுவும் நாட்டில் இருக்கக் கூடாது என்பது தான், இந்த வன்முறை மூலம் அவர்கள் நாட்டு மக்களுக்கு கூறும் செய்தியாகும்.

யுத்தம் தீவிரமான காலத்தில் ஊடகவியலாளர்களை கொன்ற அரசு தான் இன்றும் தொடர்ந்தும் வன்முறையை ஏவுகின்றது. இந்தக் குடும்பக் கும்பல் நடத்தும் சர்வாதிகார அரசால் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், காணாமல் போனார்கள், தாக்கப்பட்டார்கள், மிரட்டப்பட்டார்கள், சிறையில் தள்ளினார்கள், விலை பேசப்பட்டார்கள், ஊடகத் தொழிலையே கைவிட்டு ஓட வைத்தனர், ஊடக சொத்துகளைச் சேதமாக்கினர், பல பத்து பேரை நாட்டைவிட்டு தப்பியோட வைத்தனர். இலங்கையில் நிலவும் ஜனநாயக ஆட்சியில், இவைதான் நடக்கின்றது. இந்தக் குற்றங்களுக்கு எதிராக நாட்டின் சட்டமோ, நீதியோ யாரையும் இதுவரை தண்டிக்கவில்லை. குற்றவாளிகள் நாட்டை ஆளுகின்றனர். 

இந்தக் குற்றங்களை அரசே செய்கின்றது. தான் அல்லாத அனைத்து தரப்பு மீதும், வன்முறையை ஏவி வருகின்றது. அடங்கிப் போ, அடங்கி இரு என்கின்றது. இது போன்ற வன்முறைகள் மூலம், ஊடகவியலாளரை சுய கட்டுப்பாட்டுக்குள் நீயாகவே அடங்கி ஒடுங்கி செயல்படக் கோருகின்றது. சுய தணிக்கை செய்யக் கோருகின்றது. எதையும் கண்டு கொள்ளாத சுதந்திர ஊடகவியலாளராக, இந்த ஜனநாயகத்தைப் போற்றி நக்கக் கோருகின்றது. 

மகிந்த சிந்தனையிலான இந்தப் பாசிசத்தை தொழக் கோருகின்றது. இப்படித் தொழுவதை சுதந்திர ஊடகவியலாகக் காட்ட, அதையே உண்மையாக்கவும் முனைகின்றது.

மகிந்த குடும்பம் பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நடத்தும் இந்தச் சர்வாதிகார பாசிச ஆட்சி இதுதான். தன்னை மூடிமறைக்கவே, தொடர்ந்து ஊடகவியல் மீதான தாக்குதலை நடத்துகின்றது. தங்கள் அக்கிரமங்கள், அநியாயங்களை மக்கள் முன் மூடிமறைக்க அது விரும்புகின்றது.

ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தன்னை எடுபிடியாக்கிய மகிந்த கும்பல் ஆட்சி, இன்று நாட்டை விற்று வருகின்றது. தென்னாசிய பிராந்திய ஆதிக்க சக்திகளுக்கு இடையில், இலங்கையையும் ஒரு மோதல் களமாக்கி வருகின்றது. மறுகாலனியாக்கம் என்பது, மகிந்த அரசின் போர்க்குற்றத்தை மூடிமறைக்கும் பின்னணியில் மேலோங்கி வருகின்றது.

தொடர்ச்சியான தங்கள் மக்கள் விரோத கும்பல் ஆட்சியை தக்க வைக்க, ஊடகவியல் மீது வன்முறை ஏவுகின்றது. இலங்கை மக்களுக்கு தங்களைப் பற்றிய உண்மைகள் எதுவும் தெரிந்து விடக் கூடாது என்பதுதான், அரசு நடத்தும் வன்முறை உலகறியச் சொல்லும் செய்தியாகும்.

இது போல்தான் இன்று தமிழ் மக்களின் பிரச்சனையை கையாளுகின்றது. தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்குவதன் மூலம், மக்களை வெல்வதற்கு பதில் அவர்களை தொடர்ந்து ஓடுக்குவதன் மூலம் தீர்வு காண முனைகின்றது. அவர்களின் நிலத்தை அபகரிக்கின்றது, அவர்களைச்  சுற்றி இராணுவத்தை நிறுத்துகின்றது. ஆட்களை விலைக்கு வாங்குகின்றது. புலத்தில் பல அமைப்புக்குள் ஊடுருவி வருகின்றது… இப்படி தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்வு மூலம் தீர்ப்பதற்கு பதில், குறுக்கு வழியில் மகிந்த சிந்தனை செயல்படுகின்றது. சதி, குழிபறிப்பு, விலைக்கு வாங்குதல், மிரட்டுதல், இட்டுக்கட்டுதல், ஏமாற்றுதல், பித்தலாட்டம் செய்தல், மோசடி செய்தல்  … என்று அனைத்து குறுக்கு வழியிலும் தமிழர் பிரச்சனையைக் கையாளுகின்றது. இதுதான் மகிந்த சிந்தனையாகிவிட்டது. எல்லாப் பிரச்சனையையும் இப்படித்தான் அது அணுகுகின்றது. அதுவும் அச்சொட்டாக புலிகளைப் போல்.  

இந்த கேடுகெட்ட மகிந்த சிந்தனையிலான பாசிச குடும்ப ஆட்சியை மூடிமறைக்க,   வன்முறைகள் இனந்தெரியாத ஒன்றாக தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. இலங்கையின் சட்டமோ, நீதியோ இதை ஒருநாளும் தண்டிக்கப் போவது கிடையாது. இதைத்தான் மகிந்த சிந்தனை தெளிவாகச் சொல்லுகின்றது, செய்கின்றது. இந்தக் குடும்ப சர்வாதிகார ஆட்சியை நிரந்தரமாக்கி தொடரவே, அது பாராளுமன்ற ஜனநாயகத்தை அதன் ஒழுங்குகளையும் தனக்கு நாயாக்கி வருகின்றது. அனைத்துவிதமான குறுக்கு வழிகளிலும், தன்னை தொடர்ந்து மிதப்பாக்கி வருகின்றது.

இந்த குடும்ப சர்வாதிகார கும்பலுக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, இன்னமும் வெளிப்படையாக உருவாகவில்லை. யுத்தமும், அதைத் தொடர்ந்து அதன் வெற்றியும் மக்களை மந்தையாக்கி, முரண்பாட்டை பின்தள்ளியது. இன்று அவையின்றி, மக்களுடனான முரண்பாடுகள் முன்னிலைக்கு வருகின்றது. இவை ஒரு புரட்சிகரமான வடிவம் பெறும் போதுதான், மகிந்த பாசிசத்தை முறியடிக்க முடியும். 

பி.இரயாகரன்
31.07.2010