02052023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

காட்டுவேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரம் – அருந்ததி ராய்

கிராமப்புறங்களில் எழும் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவத்தையும் விமானப்படையையும் பயன்படுத்த எண்ணியிருக்கிறது இந்திய அரசு. நகர்ப்புறத்திலோ விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

ஜூன் 2ஆம் தேதியன்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. கவுதம் நவ்லகாவும் நானும் அதில் முக்கியப் பேச்சாளர்கள். அச்சு ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் கூட்டம் குறித்த செய்தி பரவலாக வெளிவந்திருந்தது. கூட்டத்தின் ஒளிப்பதிவு இணையத்தில் யுடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. மறுநாள் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (செய்தி நிறுவனம்) என்னுடைய பேச்சை அப்பட்டமாகத் திரித்து வெளியிட்டிருந்தது. பி.டி.ஐ இன் இந்தச் செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழ் ஜூன் 3ஆம் தேதியன்று பிற்பகல் 1.35 மணியளவில் வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு இதுதான்: ""மாவோயிஸ்டுகளுக்கு அருந்ததி ரோய் ஆதரவு! "முடிந்தால் என்னைக் கைது செய்து பார்' அரசுக்கு சவால்!!''

வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறேன்.

"மாவோயிஸ்டுகளின் ஆயுத வன்முறையை நியாயப்படுத்திய எழுத்தாளர் அருந்ததி ராய், அவர்களுடைய இலட்சியத்தை ஆதரிக்கின்ற காரணத்துக்காக தன்னைக் கைது செய்வதற்கு தயாரோ என்று அதிகாரிகளுக்கு சவால் விடுத்தார்.''

"அது ஆயுதப் போரோட்டமாகத்தான் இருந்தாக வேண்டும்.... ""நக்சல் இயக்கம் என்பது ஆயுதப் போரோட்டம் தவிர்த்த வேறு எதுவாகவும் இருக்க முடியாது... காந்திய வழியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவற்றைக் காண்பதற்குப் பார்வையாளர்கள் வேண்டும். அது அங்கே கிடையாது. இந்தப் போரோட்ட வடிவத்தை மேற்கொள்வதற்கு நெடுநாட்களுக்கு முன்பே மக்கள் இது குறித்து விவாதித்துத்தான் முடிவு செய்திருக்கிறார்கள்'' என்றார் அருந்ததி ராய்.

"பாதுகாப்புப் படையினர் மீதான கொடூரமான தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப் படைவீரர்களை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்திருக்கும் இந்தச் சூழலில், ""தந்தேவாடாவின் மக்களுக்குத் தலைவணங்குவதாக'' தனது உரையில் கூறினார் அருந்ததி ராய்.''

"நான் கோட்டுக்கு இந்தப்புறம்தான் இருக்கிறேன். நான் கடுகளவும் கவலைப்படவில்லை. என்னைக் கைது செய்யுங்கள். சிறையில் தள்ளுங்கள்'' என்று உறுதிபடப் பிரகடனம் செய்தார்.

பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியின் இறுதிப் பகுதியிலிருந்து தொடங்குகிறேன். சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் 76 பேரை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்ததை ஒட்டி, தந்தேவாடாவின் மக்களுக்கு நான் எனது வணக்கத்தைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டிருப்பது ஒரு கிரிமினல் தன்மை வாய்ந்த அவதூறு. சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சி க்கு நான் அளித்த பேட்டியில் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறேன். சி.ஆர்.பி.எஃப். சிப்பாய்களைக் கொன்றதைக் கண்டிக்கவேண்டும் என்று நம்மை நிர்ப்பந்திப்பது, நம்மில் பலருக்கும் உடன்பாடில்லாத இந்தப் போரில், அரசாங்கத்தின் தரப்பை ஆதரிக்கும்படி நம்மை நிர்ப்பந்திப்பதாகும். ""சி.ஆர்.பி.எஃப் சிப்பாய்களின் மரணம் வருந்தத்தக்கது. ஏழைகளுக்கு எதிரோகப் பணக்காரர்கள் தொடுத்திருக்கும் இந்தப் போரில் அந்தச் சிப்பாய்கள் பகடைக் காய்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தேன்...

வன்செயல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வது பொருளற்ற முயற்சி என்று நான் மும்பை கூட்டத்தில் குறிப்பிட்டேன். அவர்கள் ஒரு போரைத் தொடுப்பதற்காகத்தான் அங்கே சென்றிருக்கிறார்கள் எனும் போது, மாவோயிஸ்டுகள் சி.ஆர்.பி. எஃப். சிப்பாய்களைக் கொன்றதைக் கண்டிக்கவேண்டும் என்று நம்மை நிர்ப்பந்திப்பது, நம்மில் பலருக்கும் உடன்பாடில்லாத இந்தப் போரில், அரசாங்கத்தின் தரப்பை ஆதரிக்கும்படி நம்மை நிர்ப்பந்திப்பதாகும் என்று கூறினேன்.

மாவோயிஸ்டுகளைப் பற்றிய எனது கருத்துகள் தெளிவானவை... கார்ப்பொரேட் நிறுவனங்கள் நடத்தும் நிலப்பறிப்புக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் பல வகைப்பட்டவை, பல சித்தாந்தங்கள் கொண்டவை. மாவோயிஸ்டுகள் அவற்றில் போர்க்குணமிக்க பிரிவினர். எல்லாவிதமான எதிர்ப்பு இயக்கங்களையும் செயல்வீரர்களையும் ராணுவரீதியில் நசுக்குவதை நியாயப்படுத்துவதற்காகத்தான் அனைவர் மீதும் மாவோயிஸ்டு முத்திரையை அரசு குத்துகிறது என்று குறிப்பிட்டேன். ""அது ஆயுதப்போராட்டமாகத்தான் இருக்க முடியும்'' என்று நான் நிச்சயமாகக் கூறவில்லை. ""ஏற்கெனவே பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதத்தை ஒரு போராட்டமாக எப்படி நடத்தமுடியும்?'' என்றுதான் கேட்டேன்.

அடுத்து நான் பேசிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். ""நாம் ஆதரிக்கின்ற எதிர்ப்பு இயக்கங்கள் குறித்து பரிசீலனை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். நான் கோட்டுக்கு இந்தப் பக்கம் இருக்கிறேன். அதில் தெளிவாக இருக்கிறேன். கைது செய்யுங்கள், சிறையில் வையுங்கள். நான் கவலைப்படவில்லை. நான் எதிர்ப்பியக்கங்களின் பக்கம்தான் இருக்கிறேன். ஆனால் கோட்டிற்கு இந்தப்புறம் நிற்கின்ற நாம், தோழர்களை நோக்கித் திரும்பி அவர்களிடம் கேள்வி எழுப்பவேண்டும் என்றும் கருதுகிறேன்.'' இவைதான் நான் பேசிய வார்த்தைகள்.

மேற்கூறிய பி.டி.ஐ செய்தி பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் 4ஆம் தேதி வெளிவந்தது... ""விளம்பர மோகம் பிடித்த அருந்ததி ராய் ஆங்சான் சுகி ஆக விரும்புகிறார்'' என்று எகனாமிக் டைம்ஸ் தலைப்பிட்டிருந்தது. எனக்கு இது அதிசயமாகத் தெரிகிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஒரே செய்தியை இரண்டு முறை ஏன் பிரசுரிக்க விரும்புகின்றன? உண்மையாக ஒருமுறையும், பின்னர் பொய்யாக இன்னொருமுறையும்?

அன்றைக்கு மாலையே சுமார் 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தில்லியில் என் வீட்டுச் சன்னலின்மீது கல்லெறிந்திருக்கின்றனர். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஒரு கல் பட்டுவிட்டது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள் கூட்டமாகச் சேர்ந்துவிடவே வந்தவர்கள் ஓடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் ஜீ டிவி நிருபர் என்று சொல்லிக்கொண்டு இண்டிகா காரில் வந்து இறங்கிய ஒரு நபர், ""இதுதான் அருந்ததி ராய் வீடா? இங்கே ஏதாவது கலவரம் நடந்ததா?'' என்று விசாரித்திருக்கிறார்.

சந்தேகமேயில்லாமல் இது ஒரு நாடகம். எனக்கெதிரான மக்கள் கோபம் என்று தொலைக்காட்சி முதலைகளுக்கு தீனி போட்டுப் பரப்புவதற்காக திட்டமிட்டே தயாரிக்கப்பட்ட ஒரு நாடகம். ஆனால் என்னுடைய அதிருஷ்டம், அவர்கள் தயாரித்த கதை வசனம் அன்று குளறுபடியாகிவிட்டது.

விசயம் இத்தோடு முடியவில்லை. ஜூன் 5ஆம் தேதியன்று ராய்ப்பூரிலிருந்து வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ""தைரியமிருந்தால் தன்னுடைய ஏ.சி அறையை விட்டு வெளியேறி அருந்ததி காட்டுக்கு வரட்டும்'' என்பது அந்தச் செய்தியின் தலைப்பு. ""காட்டுக்கு வந்து மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு, போலீசை எதிர்த்து சண்டை போடத் தயாரா?'' ஏன்று சட்டீஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி, விசுவரஞ்சன் அந்தச் செய்திக் கட்டுரையில் எனக்குச் சவால் விட்டிருந்தார். கற்பனை செய்து பாருங்கள். ஒரு போலீசு டி.ஜி.பி யுடன் நான் ஒண்டிக்கு ஒண்டி மோதவேண்டுமாம். இதுவாவது பரவாயில்லை. பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பூனம் சதுர்வேதி என்ற பெண், என்னை முச்சந்தியில் நிறுத்தி சுட்டுக் கொல்லவேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

கணக்கில் அடங்காத பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்தியிருக்கின்ற சல்வா ஜூடும் என்ற கொலைகாரப் படையின் தலைவர் மகேந்திர கர்மா, எனக்கெதிரோக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். நான் வெளிப்படையாக மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதாக குற்றம் சாட்டி யாரோ இரண்டு பேர் சட்டிஸ்கார் மாநிலத்தின் இரு காவல் நிலையங்களில் எனக்கு எதிராகப் புகார் கொடுத்திருப்பதாக நயிதுனியா என்ற இந்தி நாளேடு, ஜூன் 8 ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டிருந்தது.

உளவியல் தாக்குதல்கள் என்று இராணுவ உளவுத்துறையின் மொழியில் கூறுவார்களே அது இதுதான் போலிருக்கிறது. அல்லது இது காட்டு வேட்டை நடவடிக்கையின் நகர்ப்புற அவதாரமா? உள்துறை அமைச்சகம் யாரை ஓரங்கட்டி அடிக்க நினைக்கிறதோ, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் ஏதும் இல்லாதபோது, அப்படிப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை உருவாக்குவதற்காக அரசாங்கத்தின் செய்தி நிறுவனமே அத்தகைய சாட்சியங்களை இட்டுக்கட்டி உருவாக்கித் தருகிறதா? அல்லது எம்மில் பிரபலமானவர்களை கைது செய்தாலோ அல்லது ஒழித்துக் கட்டினாலோ அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் முன் கவுரவத்தை இழந்துவிடும் என்பதால், எங்களைக் கொலைவெறி பிடித்த கும்பல்களின் கையில் ஒப்படைப்பதற்கு பி.டி.ஐ செய்தி நிறுவனம் முயற்சிக்கிறதா?

எதுவாக இருந்தாலும் சரி, இது மிகவும் அபாயகரமானது, வெட்கக் கேடானது. ஆனால் இது புதியதல்ல. சாட்சியங்கள் எதுவும் இல்லாமல், அடிப்படையே இல்லாத பத்திரிகை செய்திகளை மட்டும் வைத்து, பயங்கரவாதி என்று கைது செய்து சிறை வைக்கப்பட்டிருக்கின்ற எந்த ஒரு முஸ்லிம் இளைஞனையும் கேட்டுப் பாருங்கள். அல்லது காஷ்மீர் மக்களைக் கேட்டுப் பாருங்கள். அல்லது சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை திருப்திப்படுத்துவதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது அப்சலைக் கேட்டுப் பாருங்கள். இது புதியதல்ல.

காட்டு வேட்டை நடவடிக்கை என்னைப் போன்றோரின் வீட்டுக் கதவுகளையே தட்டத் தொடங்கிவிட்டது என்றால், பிரபலம் ஏதும் இல்லாத அரசியல் ஊழியர்கள் செயல் வீரர்கள் ஆகியோருக்கு என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். சிறை வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொன்று ஒழிக்கப்படும் நூற்றுக் கணக்கானோருக்கு என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

ஜூன் 26ஆம் தேதி அவசரநிலை அறிவிப்பின் 35ஆம் ஆண்டு. இந்த நாடு ஒரு அவசரநிலை ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதை (அரசாங்கம் சொல்லாது என்பதால்) மக்கள்தான் பிரகடனம் செய்யவேண்டுமோ? (கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவசரநிலை என்றைக்காவது விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது) இந்த முறை செய்தித் தணிக்கை மட்டுமல்ல பிரச்சினை. செய்திகளை உற்பத்தி செய்வதென்பது அதைவிட இன்னும் ஆபத்தானது.

(14, ஜூன், 2010 டான் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.)