Language Selection

புதிய கலாச்சாரம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காங்கிரசைப் பொருத்தவரை இதனை நாம் மறந்து விட வேண்டும், ஒரு விபத்தாக கருத வேண்டும். "இப்பொழுதாவது மறந்து விடுங்கள். குறைந்தபட்சம் நாங்கள் மன்னிப்புக்கேட்டு விட்டோம். உங்கள் ஆளை பிரதமராக்கி விட்டோம்' என்கிறார்கள். நாங்கள் கூறும் பதில் என்னவென்றால், 21 ஆண்டுகள் கழித்து நீங்கள் மன்னிப்புக் கோருகின்றீர்கள். இந்திய சட்டத்தின்கீழ், கொலைக் குற்றத்துக்கான தண்டனைக்கு பதிலாக, மன்னிப்பு வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு வேண்டியது, நியாயம்! (ஹெ.எஸ்.பூல்கா)

"மக்கள் புயலடித்து செத்திருந்தால் அது வேறு விவகாரம்; ஆனால், ஒருபடுகொலையை எப்படி மறக்க முடியும்? குறிப்பாக நியாயம் வழங்கப்படாத போது...

' ஜர்னைல் சிங், சீக்கியர் படுகொலையில் தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசு அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய போது, அதனை எதிர்த்து நிதியமைச்சர் சிதம்பரத்தை நோக்கி செருப்பை வீசியவர்

...

ஒட்டுமொத்த டெல்லியிலும், இக்கட்டிடம் மிக அதிகமான சிரமங்களையும், நினைவுகளையும் சுமந்து நிற்கும் கட்டிடம். இருந்த போதிலும், நீங்கள் அதனை கடந்து செல்லும் வேளையில் அதனை தலை திருப்பி பார்க்க மாட்டீர்கள். ஏனெனில், நாடு முழுதும் விரவிக்கிடக்கும் அரசு உருவாக்கிய ஆயிரக்கணக்கான நகர்ப்புற கூண்டுகளிலிருந்து, ஒழுங்கற்ற, அழுக்கடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து இக்கட்டிடத்தை வேறுபடுத்தும் அம்சம் எதுவுமில்லை. அரசின் அலட்சியம், காணும் ஒவ்வொன்றிலும் விரவிக் கிடக்கிறது.

 வண்ணம் வெளிறிய சுவர்கள், உதிரும் காரைகள், ஆங்காங்கே தொங்கிநிற்கும் மின்சார வயர்கள், வெளிச்சமற்ற, மாசடைந்த அறைகள்... சிறியவரண்டாக்களில் காய்ந்து கிடக்கும் ஆடைகள், உள்ளாடைகள்... குறுகிய சந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், பள்ளியிலிருந்து யூனிஃபார்மோடு வீட்டு வேலைக்கு ஓடும் சிறுமிகள், சமையலிலிருந்தும், சுத்தம் செய்வதிலிருந்தும் சிறிதுநேர விடுதலை பெற்று ஆங்காங்கே கூடிநின்று பேசும்பெண்கள்...

கால் நூற்றாண்டுக்கு முன்பு 1984ல், திலக் விகாரிலுள்ள இந்தக் கவனிப்பாரற்ற கட்டிடத்தில்தான், டெல்லிதெருக்களில் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சீக்கியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 450 கணவனை இழந்தபெண்களும், அவர்களது குழந்தைகளும் அரசால் குடியமர்த்தப்பட்டனர். அரசின் ஆணையின் விளைவாக, இக்கட்டிடத்தின் துயரம் படிந்த சுவர்களுக்குப் பின்னே ஒரு விசித்திரமான சமூகம் வளர்ந்தது. ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் தகப்பனின்றி வளர்ந்தார்கள். துவக்கத்தில் எல்லாக் குழந்தைகளும் இதே வாழ்க்கைதான் வாழ்கிறார்களென அவர்கள் நம்பினார்கள்.

பின்னர் தங்கள் தந்தையை, சகோதரர்களை எவ்வாறு இழந்தோம் என்ற கொடூர உண்மையை மெல்ல மெல்ல, ஒவ்வொருவராக, தனித்தனியாக தெரிந்துக் கொண்டார்கள். துயரார்ந்தமுறையில், அந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளப் போராடினார்கள்; போராடுகிறார்கள். கழுத்தைச் சுற்றி எரியும் டயர்கள் மாட்டப்பட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டதைப் பற்றி... மரணிக்கும் வரை துடிதுடித்து ஓடியதைப் பற்றி...கத்திகளாலும், துப்பாக்கிகளாலும் கொலை செய்யப்பட்டதைப் பற்றி...கம்புகளாலும், இரும்புக் கம்பிகளாலும் அடித்துக் கொல்லப்பட்டது பற்றி...பக்கத்து வீட்டுக்காரர்களின் துரோகத்தைப் பற்றி... கண்மூடித்தனமான, இரக்கமற்ற வெறுப்பைப் பற்றி...

திலக் விகார் விதவைகள் காலனியின் இந்தக் காற்றோட்டமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில்தான் எழுத்தறிவற்ற, வயதான லட்சுமி கௌர், தனது வாழ்க்கையின் சரிபாதி காலத்தை வாழ்ந்து வருகின்றார். இந்த வீட்டின் இடுகலான அறைகளுக்குள்தான், தான் நேசிக்கும் அனைவரையும் தீவிரமான, அணையாத உறுதியுடன் அவர் வளர்த்தெடுத்தார். 1984 படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கிடையில், அவரது வாழ்க்கையை சிதைத்த அனைத்திற்கும் மத்தியில் அவரது உறுதி நிலைத்து நின்றது.

...

ஆல்வார் எனும் பஞ்சாப் கிராமத்தில் பிறந்த லட்சுமி கௌருக்கு பதின்மூன்று வயதான போது சுந்தர் சிங் எனும் இளைஞரைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சுந்தர் சிங் பிழைக்க வழி தேடி டெல்லியை நோக்கிப் பயணமானார்.

மங்கோல்புரியில் உள்ள "சேரிமக்கள் மறுவாழ்வு காலனி'யில், தனது குடும்பத்துக்கென ஒரு குடிசையைக் கட்டினார். துவக்கத்தில் கைவண்டியில் காய்கறிகள் விற்றார். பின்னர் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன், தனது இளம்மனைவி லட்சுமி கௌரை டெல்லிக்கு அழைத்துக் கொண்டு வந்தார். இருவருமாக ஒரு கறிக்கடையைத் துவக்கினார்கள். தமது கணவரை சர்தார்ஜி (பஞ்சாபியரை மரியாதையோடு குறிக்கும்சொல்) என்று லட்சுமி கௌர் அழைத்து வந்தார். சிறு மார்க்கெட்டில் உள்ள தனது கடையில் இறைச்சியைத் தொங்கவிட்டு, எடைபார்த்து நாள்முழுவதும் விற்று, வேலை செய்வார் சர்தார்ஜி.

சிறிது காலத்தில் தொழில் வளரவளர, லட்சுமியும் சர்தார்ஜிக்கு துணையாக ஆடுகளைத் தோலுரிக்கக் கற்றுக்கொண்டார். இந்த வேலை செய்த அனுபவம் 1984ல் மனிதர்கள் தோலுரிக்கப்பட்ட பொழுது, தன்னை நிலை குலையவிடாமல் தடுத்ததில் ஒரு வகையில் உதவி செய்தது என அவர் நினைவுகூர்கின்றார். ஏனெனில் தனது கணவரும், சகோதரர்களும் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் கூட அவர் ஏழு சீக்கியர்களை மறைத்து வைத்து, அவர்களது உயிரைக் காப்பாற்றினார். குறைந்தபட்சம் இரத்தம் அவருக்கு பழகிப் போயிருந்தது.

ஒரு மதிய நேரத்தில் "இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டு விட்டார்!" எனக் கூக்குரலிட்டவாறு காலனிக்குள் மக்கள் ஓடி வந்த பொழுது, அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. அந்தநாள் அக்டோபர் 31, 1984. பல சேரிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு, மங்கோல்புரியில் பட்டாவோடு வீடு கட்டிக்கொள்ள வழி ஏற்படுத்தித் தந்த பிரதமர் கொல்லப்பட்டதை எண்ணி லட்சுமி போன்றோர் வருந்தினர். அன்று மாலை இறந்து போன தலைவரை எண்ணி லட்சுமி தனது வீட்டில் அடுப்பைக் கூட பற்ற வைக்கவில்லை. சர்தார்ஜிக்கோ இப்படுகொலையை எத்தகைய உணர்வால் எதிர்கொள்ளவேண்டுமென்றே புரியவில்லை. ஏனெனில், அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் பொற்கோவிலில் படைகளை அனுப்பி அதன் புனிதத்தை கெடுத்ததில் இந்திராகாந்திக்கும் பங்குண்டு என்பதை அவர் அறிவார்.

என்னவாக இருந்த போதிலும், தங்களுக்கு வீடு தந்த தலைவருக்கு நன்றிசெலுத்தும் விதமாக அன்று ஒரு நாள் கடையை அடைக்க வேண்டும் என லட்சுமி கண்ணீரோடு கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு தானும் கண்ணீர் வடித்த சர்தார்ஜி, ஆச்சரியத்தோடும், அன்போடும் கூறினார். ""எழுதப் படிக்கத் தெரியாத இந்தப்பெண் எல்லா விசயங்களையும் எனக்கு எப்படி புரிய வைக்கிறாள்!'' எல்லோரும் வீட்டிலிருக்க, கும்பல்கள் மங்கோல்புரிக்குள் நுழைந்தன.

பெரும்பாலும் ஆயுதமேந்திய வெளியாட்கள்தான் கும்பல்களில் இருந்தனர். ஆனால், காலனியில் உள்ள பலரும் கூட இவர்களோடு இணைந்துகொண்டனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சீக்கிய ஆண்களையும், இளைஞர்கள், சிறுவர்களையும் வெளியே இழுத்துப் போட்டு தாக்கத் துவங்கினர். அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, காலனியிலிருந்து வெளியேறுவதற்கான அனைத்து வழிகளிலும் தீ வைத்தனர்.

மொத்தக் குடும்பமும் பாதிப்புக்குள்ளாவதை சர்தார்ஜி தடுக்க விரும்பினார். எனவே அலை அலையாக கும்பல்கள் தனது வீட்டை நெருங்கத் துவங்கியவுடன், அருகிலிருந்த காவல் நிலையத்தை நோக்கி ஓடுவதென முடிவெடுத்தார். ஆனால், பாதி வழியிலேயே அவரது தலையில் கட்டைகளால் ஒருகும்பல் அடிக்கவே அவர் கீழே விழுந்தார். இருந்த போதிலும் கூட்டத்தைநோக்கி கற்களை வீசியவாறு அவர் தப்பியோடினார்.

இந்த வேளையில்தான் மங்கோல்புரி காவல் நிலைய போலிஸ்காரர்கள் அவரை சுற்றி வளைத்து, எரியும் டயரை அவரது கழுத்தில் கட்டி விட்டனர். அவர் தனது கடைக்கு அருகில், காவல் நிலையத்தின் எதிரில் உடல் எரிய நிலைகுலைந்து விழுந்தார். மூன்று இரவுகளுக்கும், மூன்று பகல்களுக்கும் தொடர்ந்த வெறியாட்டத்தில், லட்சுமியின் ஏழு சகோதரர்களில் ஜவர் படுகொலை செய்யப்பட்டனர்.

சில வெறியர்கள் லட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மூத்த மகனை கட்டையால் அடிக்கத் துவங்கினர். அச்சிறுவனது தலையில் கடுமையாக அடித்தனர். லட்சுமி இடையில் புகுந்து அடிகளை வாங்கி, அவனைப் பாதுகாக்க முயன்றார். கலவரக்காரர்களிடம் அவனை விட்டு விடுமாறு கெஞ்சிமன்றாடினார். சிறுவன் மயங்கிச் சரிய, அவன் இறந்ததாக எண்ணி விட்டுச்சென்றனர்.

லட்சுமி அவனை அவசர அவசரமாக கையிலேந்தி கழிவறைக்குள் மறைத்து வைத்தார். பின்னர் அவனுக்கு உணவெடுத்துச் சென்ற பொழுது, அவன் தலை வலிக்கிறதென அழத் துவங்கினான். நான்கு நாட்கள் கழித்து பஞ்சாபி பாக் எனும் இடத்திலுள்ள நிவாரண முகாமிற்கு அவர்கள் சென்றடைந்த பொழுது, அவனுக்கு காய்ச்சல் வந்து, ஒரு கை செயலிழந்தது. அவனது வாழ்நாள் முழுதும் அவன் ஊனமான கையுடன் தத்தி தத்தி நடக்கிறான்.

லட்சுமியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் அவரது உதவிக்கு வரவில்லை. அந்த இரவில் தாழ்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர் ஒருவர் மாத்திரம் உணவோடு வந்து அவரது குழந்தைகளுக்கு அதனை வழங்கினார். ""கவலைப்படாதீர்கள் லட்சுமிஜி, நீங்கள் என் சகோதரி போன்றவர்'' என லட்சுமியைத் தேற்றினார்.

லட்சுமி நினைவு கூர்கிறார்: "அவர் எங்கிருந்தோ தெய்வம் போல வந்தார். எங்களுக்கு உணவு தந்து, ஆறுதல்சொல்லி விட்டு மறைந்து விட்டார். அவரது பெயரோ, முகவரியோ எதையும் அவர் சொல்லவில்லை...' அதற்கு முன்பும், பின்பும் ஒருபோதும் அவரை மீண்டும் அவர்கள் சந்திக்கவில்லை.

மூன்று நாட்களுக்கு தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்த நிலையில், காலனிக்குள்ளாகவே, அவர்கள் மறைந்திருந்தனர். 1984 நவம்பர் 3ஆம் தேதியன்று அதிகாலை நேரத்தில் ராணுவம் காலனிக்குள் நுழைந்தது. ஏறத்தாழ எல்லா சீக்கியர்களது வீடுகளும் சாம்பலாகிக் கிடந்தன. தப்பிபிழைத்த பெண்களையும், குழந்தைகளையும் தமது பச்சை நிற வாகனங்களில் ஏற்றி நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றனர். ஒன்றரை மாதம் அவர்கள் அங்கே தங்கியிருந்தனர். பின்னர் பிறர் தயவில் வாழ்வது அலுத்து, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினார்கள். லட்சுமி தனது குழந்தைகளோடு தனது கிராமத்திற்கு சென்றார்.

ஆல்வாரில் இருந்த பொழுது, 1984 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படுவதாக கேள்விப்பட்டார். வயதான பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல், இரண்டே மாதங்களில் மீண்டும் டெல்லி திரும்பினார். வேறு சில முகாம்களில் தற்காலிகமாகத் தங்கியபின்னால், 1985 துவக்கத்தில் நான்குமாதங்கள் கழித்து, திலக் விகாரில் அவருக்கு ஒரு தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. அக்கட்டிடம் 1984 படுகொலைக்குமுன்பே, சேரிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை குடியமர்த்துவதற்காக கட்டப்பட்டது. எனினும், தற்பொழுது அதிகாரிகள் சீக்கியப் படுகொலைகளில் கணவனை இழந்த சில பெண்களுக்கும் இங்கே வீடுகளை அளித்தார்கள்.

லட்சுமி தனது கணவரின் கொலைக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு தனது குழந்தைகளுக்கு உணவளித்து, உடையளித்து தனது குடும்பத்தைப் பராமரிக்க துவங்கினார். மாதம் 250 ரூபாய்க்கு மிளகாய் பொடி, உப்பு மற்றும் பிறபொடிகள் பாக்கெட் செய்யும் வேலையை லட்சுமி செய்தார். 1986ல் அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கல்வியறிவில்லாத நிலையில், உள்ளூர் அரசு பள்ளியில் பியூன்வேலை மாத்திரமே கிடைத்தது. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, பள்ளியிலிருந்து கிடைக்கும் வருவாய்தான் அவரது மொத்த குடும்பத்திற்கும் சோறு போட்டு வருகிறது.

லட்சுமி தமது கணவரின் மறைவுக்குப் பின் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது கணவரின் மரணச்சான்றிதழ் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவரது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் சர்தார்ஜியை படுகொலை செய்த போலிஸ்காரர்கள் மீது வழக்கு தொடுக்கவோ, கும்பல்களோடு இணைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு உதவவோ முன் வரவில்லை. அவர் வருத்தத்தோடு கேட்கிறார்: "இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. பின்னர், ஏன் எங்களைப் போன்ற அப்பாவி ஏழை சீக்கியர்கள் இன்னும் வதைபடவேண்டும்?

ஆனால், இன்னமும் அவருக்கு யார்மீதும் எந்தக் காழ்ப்புணர்வுமில்லை. "நான் ஒரு எழுதப் படிக்கத் தெரியாதவள். ஆனால் எல்லோர் உடலிலும் அதே இரத்தம்தான் ஓடுகிறதென நம்புகிறேன். நான் யாரையும் வெறுப்பதில்லை. ஆனால், அக்கொலைகாரர்கள் அப்பாவிகளைக் கொல்வதற்கு ஏன் வெட்கப்படவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.

2002ல் குஜராத்தில் இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அவர் கேள்விப்பட்டார். "சீக்கியரோ இசுலாமியரோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் மக்களைக் குறிவைப்பது சரி என நான் கருதவில்லை. அடிப்படையில் எல்லோரும் மனிதர்கள்தான். ஏன் ஒருவர் தாக்கப்பட வேண்டும்? இந்தவிசயங்களுக்காக ஏன் ஏழை மக்கள் கொலை செய்யப்பட வேண்டும்? குண்டுவெடிப்பில் செத்தாலும் சரி, கலவரங்களில் செத்தாலும் சரி, எந்த ஒருமனிதரின் வலியையும் என்னால் உணரமுடிகின்றது. அவர்களது பயத்தையும், அதிர்ச்சியையும் உணர முடிகின்றது.

திலக் விகாரில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தனது குழந்தைகளை வளர்த்து நல்ல மனிதர்களாக உருவாக்கும் ஒரே இலட்சியத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார். தன்னைப் போல எழுத்தறிவற்றவர்களாக அவர்கள் உருவாகி விடக் கூடாதென உறுதியோடிருந்தார்.

உடல் ஊனமும், துயரார்ந்த நினைவுகளும் வாட்டி வதைக்க, அவரது மூத்தமகனால் ஒருபோதும் படிக்க முடியவில்லை. தனது இளைய மகனையும், மகளையும் அவர் அருகிலிருந்த அரசுப்பள்ளிக்கு அனுப்பினார். ஒரு தகப்பன் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையில் நிலை தடுமாறி விழுந்து விடுவார்கள் என எப்போதும் கவலை கொண்டார். அதனால், ஒரே நேரத்தில் அவர்களுக்கு தந்தையாகவும், தாயாகவும் வாழ்ந்தார்.

காலம் செல்லச் செல்ல அவமானத்தினாலும், இயலாமையினாலும் உருவான ஒரு இரகசியம் கணவனை இழந்த அப்பெண்களின் காலனியைச் சுற்றிவளைக்கத் துவங்கியது. மிகப் பெரும்பாலானோர் கல்வியறிவில்லாத நிலையில், உலகைத் தனியாக எதிர்கொண்டு பழக்கமில்லாத நிலையில், தமது குழந்தைகளைத் தன்னந்தனியாக வளர்ப்பது சாத்தியமற்றதாயிருந்த நிலையில், தனித்து நின்ற அப்பெண்களுக்கு வாழ்க்கை கடுமையானதாக இருந்தது. சிலருக்கு அரசு வேலை கிடைத்தது. சிலர் வீட்டு வேலைகளுக்குச் சென்றார்கள். ஆனால், செலவுகள் கூடிக்கொண்டே சென்றன.

எங்கே, எப்பொழுது தொடங்கியதென யாருக்கும் தெரியாது. ஆனால், காலப்போக்கில் போதை மருந்து விநியோகத்திற்கு மெல்ல மெல்ல பெயர்போன இடமாக அக்காலனி மாறிப்போனது.

வாழ்வதற்கான தவிப்பினால், அங்கிருந்த சில பெண்கள்தான் அல்லது அவர்களது உறவினர்கள்தான் போதைமருந்து கும்பலுடன் இணைந்தனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களது பிள்ளைகள் வளர்ந்த பின்னால், அதே போதைமருந்துக்கு அடிமையாகவும் செய்தார்கள். போதை மருந்துடனான நெருக்கம் தமது பிள்ளைகளின் வாழ்க்கையை அழித்து விடும் என்பதை அப்பெண்களால் அப்பொழுது உணர முடியவில்லை.

இன்று அக்காலனியின் பெரும்பாலான பெண்கள் தங்கள் மகன்களைபற்றி கவலைப்படுகிறார்கள். பலர் தங்கள் தாயாரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். போதைமருந்துகளை உட்கொள்ளுகிறார்கள்; விற்கிறார்கள். சிலர் அதிகப்படியாக உட்கொண்டு இளம் வயதில் செத்தும் போகின்றார்கள்.

தனது மகன்களும், அவர்களது மகன்களும் கூட இந்த போதை மருந்துகளுக்கு பலியாகி விடுவார்களோ என்ற பயம்தான் லட்சுமியை கடுமையாக பிடித்தாட்டியது. வறுமையிலும், போராட்டத்திலும் கழிந்த இந்தக் கால்நூற்றாண்டு கால வாழ்வில் தனது ஒரே வெற்றியாக அவர் கருதுவது, தனது மகன்கள் அத்தகைய படுகுழியில் வீழவில்லை என்பதைத்தான்.

துவக்கத்தில், அவரது மூத்த மகன் தலையில் விழுந்த பலமான அடிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டான். ஆனால், அவ்வப்பொழுது கட்டுக்கடங்காத ஆத்திரத்திற்கும், மனச்சிதைவிற்கும் ஆளானான். ஆனால் இந்நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. லட்சுமி அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு ஆலையில் வேலையும் கிடைத்தது. ஆனால், 2002ல் நடந்த ஒரு சாலை விபத்தில் அவனது இளையமகனின் கால்கள் நொறுங்கிப் போயின. காயமுற்ற தனது மகனைக் கண்டதும், அவனது நிலையில்லாத மனநிலை அடியோடு புரண்டது.

அன்று வீட்டிலிருந்த அனைத்துப்பொருட்களையும் அவன் உடைத்து நொறுக்கினான். அதன் பின்னர் அவன் மீளவேயில்லை. அவன் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிறான். சமையலறைக்கும், மிஞ்சியிருக்கும் ஒரேஅறைக்கும் இடையே தத்தித் தத்தி நடந்த வண்ணமிருக்கிறான். சம்பந்தமில்லாமல் ஏதாவது பேசிய வண்ணமிருக்கிறான்.

லட்சுமியின் இளைய மகன் பொறுப்பற்றவனாகவும், சோகமானவனாகவும் இருக்கிறான். எப்பொழுதும் படுக்கையிலேயே கிடந்து, நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான். லட்சுமியின் வளர்ந்த மகளும், மருமகளும்தான் வீட்டு வேலை செய்து, சம்பாதித்து வருகிறார்கள். அவர்களது வருமானத்தில் தான் அவரது மகன்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் முதலான பெரிய குடும்பம் தனது வயிற்றைக்கழுவிக் கொள்கின்றது.

எல்லாவற்றையும் விட, லட்சுமி இன்னமும் தனது கணவர் சர்தார்ஜியை இழந்து தவிக்கிறார். "அவர் இருந்திருந்தால், நான் இன்று இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்க மாட்டேன். கண்பார்வை மங்கும் இந்த வயதில் போராடவும், சீரழிந்து போய் விட்ட எனது பிள்ளைகளின் வாழ்வைக் காணவும் நேர்ந்திருக்காது. சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்திருந்தால்...'

(ஹர்ஷ் மந்தேர், (நவம்பர் 22, 2009,தி இந்து) எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்)

மொழிபெயர்ப்பு:வாணன்