தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம் தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகின்றது அப்பத்திரிகை. இசுலாமியர்களைத ;தீவிரவாதிகளாகச் சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆர்.எஸ்.எஸ{க்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான்.

ஈழ ஆதரவாளர்களைப் புலி ஆதரவாளர்களென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி, விவசாயிகளது உரிமைக்காகப் போராடுவோரை நக்சலைட்டுக்கள் எனப் பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகள் கணக்கிலடங்காதவை. தங்களது வாசகர்களில் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து, நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்த பத்திரிகை, தினமலர். இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் துணைத்தூதர் அம்சாவை, "பெருந்தன்மையானவர்'எனச் சொன்ன ஒரே தமிழ் ஊடகமும் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கெல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிகையைப் போல ஒரு மாயபிம்பத்தைத் தோற்றுவிக்கின்றது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோவில், குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிகையாகப் பலருக்கும் தோன்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பனசிந்தனை, வாரமலரின் கதைகளில் கூட பிரதிபலிக்கின்றது. "டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப் போட்டி' ஒன்று ஆண்டுதோறும் வாரமலரில் நடத்தப்படுகின்றது. அதில் சாதிக் கொடுமை, இட ஒதுக்கீடுபற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இட ஒதுக்கீட்டால் பயனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றித் தங்களது குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கின்றார்கள்(மதிப்பெண் எதிர்பார்த்த அளவுகிடைக்காமல் இருப்பினும், தனக்கு இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகின்றது). குடும்ப நண்பரோ, தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இட ஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கும் அந்தவாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகின்றார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்தக் குடும்பத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர், தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதைப்படிக்கப் போவதாகச் சொல்வதுடன் கதை சுபமாக முடிகின்றது. (2008இல் முதல் பரிசு பெற்ற கதை இது).

2. ஒரு கிராமப்புறப் பள்ளியில், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களைத ;தொடர்ந்து கழிவறையைச் சுத்தம்செய்யச் சொல்கின்றார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்களது வீட்டில் இதுபற்றி முறையிடுகின்றார்கள். பெற்றோர்கள் திரண்டுவந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கின்றார்கள். மாணவர்களுடைய படிப்பு பாழாகி விடுமோ என்று அஞ்சி, ஊருக்குப் போய் பதில்நடவடிக்கையை முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகின்றார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தனது அலுவலகத்தைத் திறக்கும்போது சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசுகின்றது. எல்லாவகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை யார் செய்திருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்லக் கிளம்புகின்றார்.

முந்தைய நாட்களில் கழிவறையைச்சுத்தம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட மாணவர்கள், தாமாகவே முன்வந்து பள்ளியைச் சுத்தம் செய்வதாகக் கூறுகின்றார்கள். பின்னர், (இளகிய மனம்படைத்தவர்கள் தமது கண்களைத் துடைத்துக்கொள்ளத் தயாராக இருக்கவும்) இந்தச் செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டு, பள்ளியைச் சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரைப் பணிக்கிறார். (கடந்த ஆண்டு இரண்டாம் பரிசுபெற்ற கதை இது).

3. ஒரு கிராமத்தின் சலவைத் தொழிலாளியின் குடும்பத்தில், தனது மகளை சலவைக்கான அழுக்குத் துணிகளை ஊராரிடம் வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணிவாங்கச் செல்லும் மகள் (பள்ளியிறுதி ஆண்டு படிக்கும் மாணவி), போகும்வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையைப் பற்றி சிந்தித்தபடியே செல்கின்றாள். துணி வாங்கும் வீட்டிலும் அவளது சுயமரியாதையைப் பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. (சலவைக்காரப் பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும், மீதமான உணவைத் தங்களது தலையில் கட்டும் தந்திரம் எனச் சரியாக கணிக்கிறாள் அப்பெண்).

வீட்டுக்கு திரும்பியவளிடம் அவளது அம்மா, இன்று உன் அத்தைவீட்டிலிருந்து உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொல்கின்றாள். மன வளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை (அவ்வூர் சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்) மணந்து கொண்டு அந்த ஊரிலேயே வசிக்கிறாள் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப் பற்றி மேலதிகத் தகவல்கள் இல்லாமல் முடிகின்றது கதை. (கடந்த ஆண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல்பரிசு பெற்ற கதை இது).

பரிசுக்கான கதைகளைக் கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு? என்ற தினமலரின் கருத்தை சொல்வதால்தான் முதல் கதை பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. மற்ற கதைகளும் "விதித்ததை ஏற்றுக்கொள்' என நமக்குப் பாடம் நடத்துகின்றன.

கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பது போல ஒருகருத்தைச் சொல்லி, தான் யார் என்பதை வெட்ட வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது தினமலர். 2009, நவம்பர் 8ம்தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் "எந்த ஒரு மனிதனும், தான் பிறந்தகுலத்திற்குத் தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா?' என நேரடியாக மனுதர்ம நஞ்சினைக் கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் இது.

ஒரு ஞானியைக் கைது செய்கின்றான் அரசன் (அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக). அவர் ஒரு பெரியஞானி என அறிந்து, அவரிடம் பலவிசயங்களைக் கேட்டு தெளிவு பெறுகின்றான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகின்றான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் எனச் சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி ""நீங்கள் ஒருசமையல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல'' என்கின்றார்.

இதைத் தனது தாயிடம் கேட்கிறான் அரசன். தாயும் நீ சமையல்காரனுக்கு பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறாள். அந்த ஞானியிடம் "இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்' எனக் கேட்கிறான் அரசன். "நீ ராஜ குலத்தில் பிறந்தவனெனில், எனக்கு பொன்னையும் பொருளையும் தரச் சொல்லியிருப்பாய். சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால், பட்டை சாதம் தரச் சொன்னாய்' என்கிறார் ஞானி. (சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்றும் எச்சரிக்கையாகச் சொல்லி வைக்கிறார் வைரம். ஜெயேந்திரனை பார்த்துவிட்டு, "எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ' என யாரும் நினைத்துவிடக் கூடாதில்லையா?)

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்ப்பனச் சிந்தனையை வாசகர்கள் மீது திணிப்பதில் தினமலர் ஓரளவுவெற்றியும் பெற்றிருக்கின்றது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் இனியும் இட ஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தர வேண்டும். சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இட ஒதுக்கீடு கொடு என்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக் காண முடிகின்றது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவள் எனப் புதியவர்களுடன் அறிமுகமாகும் போதே சொல்லிவிடுவேன் என்கிறாள் என் தோழி (அப்புறமாக அவர்கள் தெரிந்து கொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என்ற அச்சத்தினால்). தாழ்த்தப்பட்டவர் எனச் சுலபமாக அடையாளம் காட்டும் தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி.

இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதி வேறுபாட்டைக் களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்புறப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் சாதியம் நகர்ப்புறங்களில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகின்றது, அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர் தான், பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகின்றது. ""பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி'' என்றார் பெரியார். அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள்? ஆனால் பசு ஒரு தெய்வம் எனத் தொடர்ந்து செய்யப்பட்ட பிரச்சாரத்தால் வட மாநிலத்தில் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்டார்கள். வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றது.

ராஜ ராஜனுக்குப் பிறகு வந்த சோழஅரசர்கள், பார்ப்பனரல்லாத மக்களைப் படிப்படியாக தஞ்சை நகரைவிட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. ஆனால் இன்றைக்கும் எமது மக்களையும், எமது மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கி வைக்கும் வழக்கத்தை என்ன செய்வது? "போராடு!' என்றனர் பெரியாரும்,அம்பேத்கரும். ""அடுத்த ஜென்மம்வரை காத்திரு!'' என்கிறது தினமலர்.

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 'இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு ஆண்டு காத்திருக்க முடியாதா?!' என ஒரு நீதிபதியைக் கேட்க வைத்தது எது? மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலயநுழைவுப் போராட்டம் நடந்தபோது, மீனாட்சி செத்து விட்டாள் எனக் கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது? சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனைக் கொலை செய்ய சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன், சிறையில் தனக்கான சமையலுக்கு மட்டும் பிராமணனை நியமிக்கச் சொன்னது ஏன்?

எல்லோரும் சமம் என்றாகிவிட்டபிறகு (தினமலர் கணிப்பின்படி)அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பது எது? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரான போது, திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் பூர்ணகும்ப மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கின்றது?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த தினமலருடைய வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடை காணமுற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதற்படி. அதைவிட்டுவிட்டு வாரமலரின் கதை நாயகர்களைப் போல கையைக் கட்டிக்கொண்டு, ""நானே கக்கூசை கழுவுறேன் சாமி'' என்றால், நமது பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

வில்லவன்