தனிமனிதன் விரும்பியவாறு வழிபடும் உரிமையை மறுத்து, இப்படித்தான் நீ வழிபட வேண்டும் என்பது பாசிசம். அதன் போது இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதும் கூட பாசிசம். இப்படி பாசிசத்துக்கு பல முகமுண்டு. பாசிசம் தன்னை மூடிமறைக்க இந்து தமிழ் கலாச்சாரம், அதன் ஒழுக்கம் என்று வேசம் போட்டுத்தான், தன்னை மக்கள் முன் இட்டுச்செல்லும். மகிந்த பாசிசமோ இன்று தன்னை தமிழ்மக்கள் மத்தியிலும் அரசியல் நிறுவனமாக்க, இந்துப் பாசிட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

மகிந்தவும் – ஈ.பி.டி.பி கும்பலும் தங்கள் அதிகாரம் மூலம் வென்ற யாழ் மாநகர சபையின் துணையுடன், யாழ் இந்து பாசிட்டுகளும் கூட்டாக இணைந்து மக்களுக்கு விதிகள் போடுகின்றனர். இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் உடை பற்றிய, புதிய நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புலிகள் முதல் கூட்டமைப்பு வரை உடன்பாடு கொண்ட, இந்து பாசிச தமிழ் ஒழுக்கவாதிகளின் வக்கிரத்தை, மகிந்தா தன் கையில் ஒரு ஆயுதமாக  எடுத்துள்ளார். சமூகத்தை மகிந்த சிந்தனை, இப்படியும் தன் பின்னால் பாசிசமயமாக்குகின்றது.  

இந்து பண்பாடு மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் பெயரில், இந்துப் பாசிசத்தை சமூகம் மீது ஏவியுள்ளது. யாழ் நல்லூர் திருவிழாவை ஓட்டி வரவுள்ள இந்த நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனத்தை, இந்துத்துவவாதியான நாவலர் வழியில் மகிந்த பாசிச சிந்தனை சமூகம் மீது மறைமுகமாக திணிக்கின்றது.

சமூகத்தின் பிற்போக்கான பழைமைவாத சிந்தனையை இப்படி தன்கையில் எடுத்து, அதை கொண்டு சமூகத்தை தனக்கு கீழ் அடிபணிய வைக்கின்றது.

கலாச்சாரம், பண்பாடு என்று பார்த்தால், நல்லூர் முருகக் கந்தனின் கோமணத்தைத்தானே, ஆண்களின் ஆடையாக அணிய வேண்டும். மேலாடை அணியாத வள்ளி, தெய்வானை போல்,   பெண்கள் மேலாடையின்றித் தான் கோயில் செல்லவேண்டும். அல்லது குறுக்குக்கட்டுடன் தான் செல்லவேண்டும். 100, 150 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகத்தின் இந்துப் பண்பாடும் கலாச்சாரமும் இப்படித்தான் இருந்தது. ஏன் இந்த கடவுள்கள், எந்த உடுப்பைத்தான் அணிந்தனர்!? நிர்வாணமாக இருந்த மனிதன் உருவாக்கிய கடவுள்களும் கூட, நிர்வாணமாகவே இருந்தனர். அதையா இன்று செய்யக் கோருகின்றீர்கள்! இல்லை. இந்துத்துவவாதியான பழமைவாத நிலப்பிரபுத்துவ ஆறுமுகநாவலனின் சாதி வெறிபிடித்த காட்டுமிராண்டித் தனத்தையே, தங்கள் வியாபாரத்துக்கு ஏற்ப மகிந்த சிந்தனை சேர்ந்து சமூகம் மீது திணிக்கின்றனர்.  

இது அனைத்து கோயில்களிலும், ஏன் படிப்படியாக முழு சமூக வாழ்வு மீதும் திணிக்கும் மறைமுகமான சமூக விதியாகிவிடும். இதைத் தொடர்ந்தால் இந்துப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பெயரில் உள்ள சாதிய காட்டுமிராண்டித்தனமும் மீண்டும் முழுமூச்சில் அமுலுக்கு வரும். சாதியக் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டது தான், இந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடாகும். சாறி, வேட்டி கூட, சாதிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது தான். எந்த பெண்ணும் சாறிக்கு முந்தைய கலாச்சாரமான குறுக்குக் கட்டுடனும், வேட்டிக்கு முந்தைய கோமணத்துடனும் செல்ல முடியாது அல்லவா. சாதிக்கு ஏற்ற கலாச்சாரம் தான், இங்கு இப்படிப் புளுக்கின்றது.      

இப்படி ஒருபுறம் இருக்க, இந்துக் கலாச்சாரக் காவலர்கள் தங்களைச் சுற்றிய வாழ்விலும், கோயிலைச் சுற்றிய ஆடம்பரமான வியாபார வக்கிரங்களையும், நவீன தொழில் நுட்பங்களுடன்  கையாள்வது தான் இந்து பாசிசத்தினை எடுப்பாக்குகின்றது. ஆண்கள் காற்சட்டை அணிவதையும், பெண்கள் சாறி அணிவதையும் கோருகின்ற இந்துக் கலாச்சார பாசிட்டுகள், மகிந்த பாசிசத்தின் துணையுடன் இன்று இதைத் திணிக்கின்றனர்.

1984களில் புலிகள் யாழ்பல்கலைக்கழகத்திலும் மற்றும் இடங்களிலும் விநியோகித்த ஒரு துண்டுப்பிரசுரத்தில், பெண்கள் சைக்கிள் ஓடத் தடையும், அரைப்பாவாடை சட்டை போட தடையும், காற்சட்டை போடுவதற்கு கூட தடையும் விதித்தனர். இப்படிப் பெண்கள் போடாமல் இருத்தல்தான், தமிழரின் கலாச்சாரம் என்றனர். இதை மீறினால் தண்டனை என்று எச்சரித்தனர். யாழ்பல்கலைக்கழகம் உட்பட பரந்த எதிர்ப்பின் காரணமாகவும் அவர்கள் அதை கைவிட்டாலும் வடமராட்சியில் இந்த தமிழ் "கலாச்சாரம்" அமுல்படுத்தப்பட்டது. பெண்கள் முழுப்பாவாடையுடன் தான், வடமராட்சி பிரதேசத்தில் வாழமுடிந்தது.

இப்படித்தான் புலிப் பாசிச சிந்தனை முதல் செயல்கள் அனைத்தும் அன்று பாசிச வடிவம் பெற்று வளர்ந்தது. இன்று மகிந்த சிந்தனை எங்கும் பாசிச வடிவமாகி வருகின்ற சூழலில், அது யாழ் இந்து பாசிட்டுகளுடன் கூடி தன்னை இந்து "கலாச்சாரத்தின்" பாதுகாவலனாக தன்னையும் சேர்த்து பிரகடனம் செய்கின்றது. இதைத்தான் யாழ் மாநகரசபையின் தீர்மானம்,  வெட்டவெளியாக இன்று வெளிப்படுத்தியுள்ளது.   

இப்படித்தான் வழிபட வேண்டும், இப்படித்தான் உடுப்பு போட வேண்டும் என்பது, தனிமனித வழிபாட்டு உரிமையில் தலையிட்டு அதை மறுக்கின்றது. மாறாக தனிமனித உரிமையை மறுத்து, அது மதப் பாசிசமாக வடிவமெடுக்கின்றது. அதை மகிந்தாவின் பாசிசத்துடன் கூட்டாக கூட்டுச் சேர்ந்து, அதை சமூகம் மீது இன்று பலாத்காரமாகத் திணிக்கின்றது. இந்தக் காட்டுமிராண்டித்தனம் எந்த எதிர்ப்புமின்றியே பாசிசமயமாகின்றது. 

பி.இரயாகரன்
18.07.2010