Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். அவன் மனைவி, தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றினை பார்த்து அழுது கொண்டிருந்தாள். தன்னுடன் வேறு எவராவது வீட்டிற்கு வந்திருந்தால் மனைவியை அறுவைதாசன் கொடுமைப்படுத்துவதால் தான் தனியே இருக்கும் போது அழுகின்றாள் என்றல்லவா நினைத்திருப்பார்கள், என்று மனைவி மேல் கோபம் கோபமாக வந்தது. அத்தோடு தொடரில் நடிப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அழுகின்றார்கள், இவளோ பணத்தை கொடுத்து விட்டு அழுகின்றாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யாமுத்து வந்து சேர்ந்தான்.

அய்யாமுத்து: மற்றவர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் என்று சொல்கின்றாய். அப்படி ஏமாறுவதற்கு தமிழர்கள் என்ன ஏமாளிகளா?

அறுவைதாசன்: இனங்களுக்கென தனியே ஒரு குணம் கிடையாது. எல்லா இனங்களிலும் எல்லா விதமான மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழும் சூழலே, அவர்களின் குண இயல்புகளில் பிரதிபலிக்கின்றது. தமிழர்கள் அன்றைக்கு இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்வை வாழ்ந்தார்கள். அதனால் பெரிதான ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கவில்லை. ஆனால் பிராமணர்கள் ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏற்றத்தாழ்வுகளை கற்பித்தார்கள். இன்றும் கற்பிக்கின்றார்கள். எல்லா மனிதர்களும் உழைப்பினை கொண்டாடுகையில், இவர்கள் உழைப்பினை கேவலப்படுத்துகிறார்கள். வயலில் உழைப்பவனையும், கடலில் மீன் பிடிப்பவனையும், கைவினைஞர்களையும், துப்பரவுத் தொழிலாளர்களையும் கீழ் சாதியினர் என ஏளனம் செய்கின்றனர். இவர்கள் இப்படி எமது சமுதாயத்தினை பிளவுபடுத்தி தனித் தனி தீவுகளாக வைத்திருந்தமையால் தான் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை சுலபமாக தமது காலனி நாடுகளாக்கி பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ய முடிந்தது.


அய்யாமுத்து: கல்வியறிவு பெற்ற இன்றைய தமிழனை அப்படி ஏமாற்ற முடியாது தானே?

அறுவைதாசன்: இன்றைய தமிழனை ஏமாற்ற மற்றவர்கள் தேவையில்லை. நமது தமிழ்த் தலைவர்களே போதும். ஊழலிலும், மக்களை ஏமாற்றுவதிலும் ஒருவரை ஒருவர் விஞ்சிய கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள். இந்தியாவை ஒட்டு மொத்தமாக விற்பதற்கு தடையாகவுள்ள மாவோயிஸ்ட்டுக்களையும், மலைவாழ் மக்களையும் கொன்று குவிக்க துடிக்கும் மந்திரி சிதம்பரம். தமிழ் நாட்டுத் தமிழர்கள், தம் ஈழத்தமிழ் சகோதரர்களிற்காக குரல் கொடுக்கக் கூடாது என தமிழ் நாட்டிலேயே தைரியமாக மேடை போட்டு கூக்குரலிடும் காங்கிரஸ் கோமாளிக் குட்டித் தலைவர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுபவனும், கட்டை பஞ்சாயத்து செய்பவனும் இன்று தமிழர்களின் தலைவர்கள்.

மலையகத் தமிழர்களின் குடியுரிமையினை சிங்கள பேரினவாதிகள் பறித்த போது, மந்திரி பதவிக்காக சேர்ந்து கை உயர்த்திய பொன்னம்பலம், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தனிநாட்டுக் கோசம் எழுப்பி அதன் ழூலம் பெருமளவு பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றி பதவி சுகம் அனுபவித்த கூட்டணியினர், போராட்டத்தினை கொலைக்களமாக்கிய மேதகுகள், பெரியய்யாக்கள், கொலை கொள்ளையே எமது கொள்கை என மகிந்தாவின் காலடியில் கிடக்கும் கருணா, பிள்ளையான், டக்ளஸ் என்று இந்த கயவாளிகள் தமிழ் சமுதாயத்தினை சடமாக்கி சாகடித்து விட்டார்கள்.

அய்யாமுத்து: சரி. சமயத்திற்கே திரும்பிப் போவோம். முருகன் தமிழ் கடவுள். அவனை தமிழர்கள் வழிபட்டுக் கொண்டு வரும் போது பிறகு வந்த சிவன் எப்படி தகப்பனாக முடியும?

அறுவைதாசன்: ஒரு பூங்காவில் அண்ணாத்துரையோடு சேர்ந்து திராவிடமுன்னேற்ற கழகத்தினை தொடங்கிய ஜந்து பேரில் நெடுஞ்செழியனும் ஒருவர். அண்ணாவால் தலைமையினை ஏற்க வா என கழக மகாநாட்டிலேயே அழைக்கப்பட்டவர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் தலைமையேற்க தகுதியானவராக இருந்தவரை, கருணாநிதி பின்னுக்கு தள்ளிவிட்டு தான் எல்லாவற்றினையும் எடுத்துக் கொண்டார். பின்பு நெடுஞ்செழியன் ஜெயலலிதாவிற்கு கீழ் இருக்கும் அளவிற்கு சீரழிந்து போனார்.

முருகனையும் இப்படித் தான் கீழே கொண்டு போனார்கள். தேனும், திணைமாவும் என காடுகளிலும் மலைகளிலும் விளையும் பொருட்களை கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களினால் வழிபட்டு வந்த முருகன், கார்த்திக் என்ற கடவுளோடு இணைக்கப்பட்டான். கள்ளும் ,கூழும் குடித்து வேலன் என்ற பூசாரியுடன் சேர்ந்து மக்கள் வேலாட்டம் ஆடி மகிழ்ந்த வழிபாட்டு முறையை, “வேலன் வந்து வெறியாடும் வெங்களம்” என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

வடநாட்டிலே சிவனின் குடும்பம் சிவன், பார்வதி, விநாயகர் என்று மட்டுமேயுள்ளது. முருகன் என்றால் யார் என்றே கேட்பார்கள். டப்பிங் படங்களிலே தமிழ் நடிகர்களைக் கொண்டு நகைச்சுவை காட்சிகளை எடுத்து இணைத்து, தமிழ் நாட்டிலே ஓடவைப்பது போல தமிழ் நாட்டினருக்கு முருகனையும் சிவனின் குடும்பத்துடன் சேர்த்து விட்டுள்ளனர். குறிஞ்சிக் கிழவன் என அழைக்கப்பட்டவன், பாணடடியர்களின் காலத்திலே அவர்களின் போர்த் தெய்வமான கொற்றவையின் மகன் என அழைக்கப்பட்டான். இந்த கொற்றவையையும் பார்வதியையும் ஒன்றாக்கி விட்டார்கள். இந்த கொற்றவை என்னும் பெண் தெய்வம் இருந்ததே இன்று பலருக்கு தெரியாது.

நெடுஞ்செழியனை பற்றி சொன்னதும் தனக்கு விடை தெரியாமல் தவித்த ஒரு நிகழ்ச்சி அறுவைதாசனின் நினைவுக்கு வந்தது. நெடுஞ்செழியன் ஒரு முறை ஜெயலலிதாவுடன் கோபித்துக் கொண்டு சிலருடன் கடசியினை விட்டு வெளியேறினார். அவர்கள் வெளியேற்றம் பற்றிய பேட்டியில் நெடுஞ்செழியனையும் ஏனையவர்களையும் தனது உடலில் இருந்து உதிர்ந்த முடிகள் என குறிப்பிடடிருந்தார் என கூறினாரே தவிர தனது உடலின் எந்தப் பாகத்திலிருந்து உதிர்ந்த முடிகள் என்று சொல்லியிருக்கவில்லை. இது குறித்து அறுவைதாசன் கவலைப்பட்டிருந்தான். இது தெரியாது போயின் எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் வரலாறு எழுதுபவர்கள் கஸ்டப்படுவார்களே என யோசித்து தனக்கு தெரிந்த அ.தி.மு.க. காரர்களிடம் கேட்டுப் பார்த்தான். முறுக்கேறிய மீசை கொண்ட அந்த வீச்சரிவாள் வீரர்கள் வீரத் தமிழ் மறவர்கள் சொன்னார்கள் , அந்த அம்மாவைக் கண்டால் காலிலே வீழ்ந்து கும்பிடும் எங்களிற்கு அம்மாவின் கால்கள் மட்டும்தான் தெரியும். இதையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கேட்கக் கூடாது என்றார்கள்.

அய்யாமுத்து: மனைவியும் துணைவியுமாக தெய்வானையையும் வள்ளியையும் எப்படி முருகன் மணந்து கொள்ளலாம்?.

அறுவைதாசன்: சைவம் முருகனை சிவனின் மகனாக்கியது. வைஸ்ணவம் தங்கள் பங்கிற்கு அவனை மால்மருகனாக்கியது. இந்த கதைகளில் கூட தங்களின் குலப்பெருமைகளைக் காட்டுவதற்காக தெய்வானையை முதல் மனைவியாகவும் வள்ளியை இரண்டாவதாக கள்ளத் திருமணம் செய்ததாகவும் கதை கட்டி விட்டார்கள். குறிஞ்சி நிலத்தவன், அந்த நிலத்திலேயே விளையும் வள்ளிக்கிழங்கை பெயராகக் கொண்ட வள்ளி என்ற பெண்ணை மணப்பது தானே இயல்பாக இருக்கும்.


அ.தி.மு.க. காரர்கள் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியை ஒதுக்கி விட்டு துணைவியான ஜெயலலிதாவினை தலைவியாக ஏற்றுக் கொண்டது போலத்தான் இந்தக் கதைகளும்.

இப்படியே கதை தொடர்ந்தால் விடுமுறையில் தமிழ் நாட்டிற்கு போகும் போது ஆட்டோவில் ஆட்கள் உருட்டுக் கட்டைகளுடன் வரச் செய்து விடுவான் என்று யோசித்த அய்யாமுத்து அத்துடன் கதையினை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றான்.

http://www.ndpfront.com/?p=8036