Language Selection

புதிய ஜனநாயகம் 2010

இந்திய நாடு மறுகாலனியாவது என்ற போக்கு போபால் படுகொலைகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் நாடும் மக்களும் போபாலைவிடக் கொடிய கார்ப்போரேட் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுத் தாக்குதல், சோவியத் ஒன்றியம் - செர்னோபிலில் அணுஉலை விபத்து ஆகியவற்றுக்கு இணையானது இந்த போபால் நச்சுவாயு கோரம் - பேரழிவு என்று கல்நெஞ்சர்கள் தவிர ஒப்புக் கொள்ளாதவர்கள் எவருமில்லை.

அரசியல் நோக்கத்துக்காக அரசப் படைகளை மட்டுமல்லாது, சீருடையணியாத சிவிலியன் மக்களையும் பெரும் எண்ணிக்கையில் கொன்று, ஒட்டு மொத்த சமூகத்தையே பயபீதியில் மூழ்கடிப்பதும், அதற்காகத் திட்டமிடுவதும் தயாரிப்புச் செய்வதும் பயங்கரவாதக் குற்றச் செயல் என்று உலக அதிகாரபீடங்கள் அனைத்தும் ஒரு பொதுப் புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால், அரசியல் நோக்கத்துக்காக, அரசப்படைகளை ஏவி, அரசே கட்டவிழ்த்துவிடும் அரசப் பயங்கரவாதம்; மதவெறி நோக்கத்துக்காக, மத அடிப்படை பயங்கரவாதிகள் ஏவிவிடும் மதவெறி பயங்கரவாதம்; அரசப் படைகள் தவிர சல்வாஜுடும், ‘கிரே ஹவுண்ட்’ இலங்கையின் ‘வெள்ளை வேன்’ போன்ற இரகசிய, கிரிமினல் கொலைக் குழுக்களை வைத்து அரசே நடத்தும் வெள்ளைப் பயங்கரவாதம்; அதற்கு எதிராக கம்யூனிச விடுதலைப் புரட்சிப் படைகள் நடத்தும் சிகப்புப் பயங்கரவாதம் - இவ்வாறு வெவ்வேறு நோக்கத்துக்காக வெவ்வேறு பயங்கரவாதங்கள் உள்ளன.

நைஜீரியா, ஈகுவடார் போன்ற நாடுகளில் பெட்ரோலிய எண்ணெ வளங்களை வேட்டையாடுவதற்காகப் பன்னாட்டு தொழில் கழகங்கள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இயற்கை கனிம வளங்களை சூறையாடுவதற்காக பல கூட்டுப் பங்கு பெருந்தொழிற் கழகங்கள் வேறொரு வகையான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. இதை "கார்ப்போரேட் பயங்கரவாதம்" எனலாம்.

அதாவது பின்தங்கிய, ஏழை நாடுகள் மீது இலாப நோக்கத்துக்காக பன்னாட்டுத் தொழில் கழகங்கள் கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதம். இயற்கை-கனிம வளங்களை எவ்வித வரைமுறையுமின்றிச் சூறையாடுவது, காற்று-நீர்-நிலம் ஆகியவற்றை நச்சுப்படுத்தி சுற்றுச் சூழலை நாசப்படுத்துவது, விவசாயம் முதலிய பாரம்பரியத் தொழில்களை அழித்து மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பது, இவற்றின் மூலம் மக்களை கொத்துக் கொத்தாக சாகடிப்பது, நிரந்தர நோய்களில் மூழ்கடிப்பது, இதற்காக அரசியல்- பொருளாதார கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவது, தொழிற்சங்க உரிமைகளை மறுத்துத் தொழிலாளர்கள் அனைவரையும் கொத்தடிமைகளாக மாற்றுவதோடு, கொலைக் குழுக்களை ஏவிப் படுகொலைகளையும் செய்வது. இதுதான் கூட்டுப் பங்கு பெருந்தொழில் நிறுவனங்களின் (கார்ப்போரேட்) பயங்கரவாதம்.

கொலம்பியாவில் கோகோ-கோலா நிறுவனம் தொழிலாளர்களுக்கு எதிராக 179 பெரிய மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளது. பலரை படுகொலைகள் செய்ததோடு, தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கடத்திச் சித்திரவதைகளும் புரிந்துள்ளது. பிரிரைட் ஸ்பார்க்கிள்ஸ் என்ற பன்னாட்டுத் தொழில் கழகம் வானவேடிக்கை வெடி பொருட்களை மலேசியாவில் உற்பத்தி செய்கிறது. 1991-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் 22 பேர்கள் மாண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு உயிரிழப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடு தர மறுத்துவிட்டது.

தாய்லாந்தில், தாய் பாலிகார்ப்பனேட் மற்றும் உலகின் பல நாடுகளிலும் இயங்கும் ஷெல், எக்ஸோன், செவ்ரோன், டெக்சோ போன்ற பன்னாட்டு பெட்ரோலியத் தொழிற்கழகங்கள் அந்நாடுகளின் எண்ணெ வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, எண்ணெக் கசிவு, கழிவுப் பொருட்களைக் கொட்டுவது மற்றும் ஆலை விபத்துக்கள் மூலம் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, மனித உயிர்களைப் பறித்து வருகின்றன. இத்தகைய பன்னாட்டு கார்ப்போரேட் பயங்கரவாதக் குற்றச் செயல்களின் வரிசையில், போபால் நச்சுப் புகை படுகொலை முதலாவதும் மிகப் பெரியதும் ஆகும்.

பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் - உலகெங்கும் அடுத்தடுத்துப் பல கார்ப்போரேட் கிரிமினல் பயங்கரவாதக் குற்றச் செயல்களில் துணிந்து ஈடுபடுவதற்கு மிக முக்கியக் காரணங்கள் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்று, மிகப் பெரும்பாலானவற்றின் தலைமையகங்கள் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ளன; முக்கியமாக, அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அரசியல்-இராணுவ மேலாதிக்கத்தின் பாதுகாப்பில் அவை உள்ளன. இன்னொன்று, கடந்த சில பத்தாண்டுகளில் உலகைக் கொள்ளையடித்து, எந்த நாட்டின் ஆட்சியாளர்களையும் விலைக்கு வாங்கி விடும் அளவுக்கு செல்வவளம் மிக்கவையாக அவை உள்ளன.

உலகின் 500 பணக்கார பன்னாட்டு தொழிற்கழகங்களில் 10 மட்டும், வளரும் நாடுகளில் பெரிதான இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஈடாக, அல்லது பெட்ரோலிய எண்ணெ ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஆறு வளைகுடா நாடுகளின் அந்நிய செலாவணிக் கையிருப்புக்கு ஈடாக செல்வங்களைக் குவித்து வைத்துள்ளன. அதனால்தான் அவை அப்பட்டமாகவே பொறுப்பற்ற முறையில், இலாபவெறியோடு, மக்களின் நலன்களில் துளியும் அக்கறையின்றி, சுற்றுச் சூழலை நாசப்படுத்தும் ஆலை விபத்துக்கள் வடிவிலான பிணந்திண்ணிகளாக செயல்படுகின்றன.

கார்ப்போரேட் பயங்கரவாதம் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. "பிரிட்டிஷ் பெட்ரோலியம்" அமெரிக்காவின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எட்டாவது பெரிய நிறுவனமாகும். 2005-ம் ஆண்டு டெக்சாஸ் நகரில் உள்ள அதன் மிகப் பெரிய எண்ணெ சுத்திகரிப்பு ஆலையில் ஒரு கோர வெடிவிபத்து நடந்தது. ஆலையின் மூன்று மைல் சுற்றளவுக்கு வசிக்கும் 30,000 பேரின் உடல் நலனை பாதிக்கும் கார்சினோஜன் உட்பட பல நச்சுப்புகைகளோடு 51 இலட்சம் டன் மாசுப் பொருட்களை அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவில் கொட்டியது. அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. (FBI) புலனாவு, கடும் சட்டம் மற்றும் அபராதத் தண்டனைகளையும் மீறி மோசமான அளவுக்கு சுற்றுச்சூழலை நாசப்படுத்தியது.

உலகின் அனைத்து நாடுகளும் இத்தகைய கார்ப்போரேட் பயங்கரவாதக் குற்றச் செயல்களை ஒரே மாதிரி எதிர்கொள்வதில்லை. அமெரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி நடத்திய நாச வேலைக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்தார். உடனடியாகவே, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, நட்டஈடும் வழங்குவதாக ஒப்புக் கொண்டது.

ஆனால், இந்தியாவின் போபாலில் நடத்தப்பட்ட கார்ப்போரேட் பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு பொறுப்பேற்கவோ, நிவாரணம்-நட்டஈடு வழங்கவோ யூனியன் கார்பைடு நிறுவனம் அடாவடியாக மறுக்கிறது. அதற்குப் பின்பலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் நிற்கிறது. இந்தியாவிலோ எந்த அரசியல் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி நடந்தாலும் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதில் அதீத அக்கறை காட்டப்படுகிறது. நச்சுவாயுப் படுகொலையால் உயிரிழந்தவர்கள், நிரந்தர நோயாளிகளானவர்களுக்கு இந்திய அரசே நட்டஈடு தருவதாக முடிவானது. ஆலையில் எஞ்சியிருக்கும் பல ஆயிரம் டன் இரசாயனக் கழிவை அகற்றவும், அல்லது அந்த மண்ணுக்குள்ளேயே புதைப்பதற்கான செலவுகளையும் அரசே ஏற்கிறது. அதாவது பயங்கரவாதக் குற்றம் செய்தது, கூட்டுப் பங்கு கம்பெனி; அதுவும், பெரும்பான்மை பங்கு அந்நியர்களுக்கு. ஆனால், நட்டஈடும் செலவும் இந்திய அரசு செய்யும்; இதன் பொருள், இச்சுமை அனைத்தும் இந்திய மக்களின் தலையில் ஏற்றப்படும்.

இத்தகைய இழிசெயல் நமக்குத் தெரிய நேரடி காலனிய ஆட்சி காலத்தில் நடந்திருக்கிறது. இப்போது, நாடே அறிய இந்தத் துரோகச் செயல் நடக்கிறது. இனி இது சட்டபூர்வமாகவும் அப்பட்டமாகவும் தொடரும். அதற்குரிய துரோக ஒப்பந்தங்கள், சட்டங்கள் பலவும் கடந்த முப்பது ஆண்டுகளில் ஆட்சி புரிந்த அனைத்துக் கட்சி மற்றும் கூட்டணி அரசுகளால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முன்பு, ஆங்கிலேய ஏகாதிபத்தின் கீழிருந்த இந்தியக் காலனி ஆட்சியில் நடந்தன. இப்போதோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான மறுகாலனியாதிக்கத்தின் கீழ் நடக்கின்றன.

இந்திய நாடு மறுகாலனியாவது என்ற இந்தப் போக்கு போபால் நச்சுவாயுப் படுகொலைகள் மூலம் யூனியன் கார்பைடால் தொடங்கி வைக்கப்பட்டது; விவசாயத் தொழில் பன்னாட்டு கழகமான மான்சாண்டோவால் நிறைவு செய்யப்படும். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த நாட்டில் விவசாய உற்பத்திக்கு அவசியமான பூச்சிக் கொல்லி தயாரிப்பு என்ற பெயரில் இந்தப் படுகொலைகள் நடந்தன. விவசாய உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கும் நவீன அறிவியல் புரட்சி என்ற பெயரில், நாசகார உயிரித் தொழில்நுட்ப விதைகளைச் சந்தைப்படுத்தி இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியது மான்சாண்டோவின் பன்னாட்டு நிறுவனத்தின் பயங்கரவாதம்.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் ஆலை, இந்திராவின் அவசரநிலைக் கால பாசிச ஆட்சியில் உரிமம் பெற்றது. ஜனதா கூட்டணி ஆட்சியில் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் அதன் நச்சுவாயுப் படுகொலை என்ற கார்ப்போரேட் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சமயம் முக்கியமானது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களைக் கொன்று, தலைநகர் டில்லியில் ஓடிய இரத்த ஆறில் நீந்தி பாசிச ராஜீவ் பிரதமர் பதவியில் அமர்ந்த சில வாரங்களில் அக்கோர சம்பவம் நடந்தது.

சோசலிச, முற்போக்கு நாடகமாடிய நேரு-இந்திரா பரம்பரையில் வந்திருந்தாலும், இனி தனக்கு சித்தாந்தம் எதுவும் முக்கியமில்லை; பொருளாதார-தொழில் முன்னேற்றம், நவீனமயமாக்கம்தான் தனது இலட்சியம் என்று பாசிச ராஜீவ் கும்பல் தம்பட்டமடித்துக் கொண்டிருந்த காலம். அதே சமயம் சோவியத் ஒன்றிய சார்பு நிலையை மாற்றிக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் நாட்டை அவரது தாயார் இந்திரா திருப்பிவிட்டிருந்த காலம். அதையொட்டி தனியார்மயம் - தாராளமயம் - உலகமயமாக்கப் போக்கைப் புகுத்துவதற்கான தீவிர முயற்சியில் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டிருந்தன. காட் (GATT) பேச்சுவார்த்தைகளை முடித்து, உலக வர்த்தகக் கழகத்தை நிறுவுவதற்கான வேலைகளை அவை முடுக்கி விட்டிருந்தன.

இந்திராவின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக உலக வங்கியின், சர்வதேச நிதி நிறுவனத்தின் கட்டளைகளையும் நிபந்தனைகளையும் ஏற்று ஏராளமாகக் கடன் வாங்கத் தொடங்கியிருந்தார்கள். ஏகபோகத் தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றை தளர்த்தவோ, நீக்கவோ ஒப்புக் கொண்டிருந்தார்கள். 49 சதவீத அந்நியப்பங்கு மற்றும் 51 சதவீத இந்தியப் பங்கு என்றிருந்த தொழில் முதலீட்டை மாற்றி 51/49 என்ற விகிதமாக்குவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்கள். யூனியன் கார்பைடு ஆலையே இப்படியானதுதான். பன்னாட்டுத் தொழில் கழகங்களின் நிபந்தனைகளை ஏற்பதோடு, காட் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் காலத்திலேயே ஏகாதிபத்திய நிபந்தனைகளைத் தானே முன்வந்து ஒப்புக் கொள்வது என்று ராஜீவ் கும்பல் முன்னறிவித்து விட்டிருந்தது.

இந்தச் சூழலில் நடந்த போபால் நச்சுவாயுப் படுகொலை நிகழ்வில் ராஜீவ் கும்பலின் நடத்தை என்பது ஏகாதிபத்திய, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அதன் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சோதனையாக அமைந்தது. அதை ராஜீவ் கும்பல், அவர்களின் எதிர்பார்ப்பின்படியே வெற்றிகரமாக செய்து முடித்தது. யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர், வாரன் ஆண்டர்சன் இந்தியா வந்து, பாதுகாப்பாகத் திருப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் திறமையாகச் செய்ததோடு, உச்சநீதி மன்றத்தில் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்து, நட்டஈடு மற்றும் கழிவுகள் அகற்றுவதைக் கிடப்பில் போடுவது ஆகியவற்றையும் சதித்தனமாகச் செய்து முடித்தது.

ராஜீவ் கும்பலைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் அதே பாதையில் இன்னமும் விசுவாசமான அமெரிக்க ஏகாதிபத்திய மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் அடிவருடிகளாகச் செயல்பட்டனர். நாட்டை மறுகாலனியாக்கும் வேலையில் கண்ணை மூடிக் கொண்டு ஈடுபட்டனர். பொருளாதாரம் - தொழில் முன்னேற்றத்துக்காக, அந்நிய நேரடி, மறைமுக முதலீடுகளை ஈர்ப்பது; அதற்காக உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் கட்டளைகளைத் தட்டாமல் நிறைவேற்றுவது, உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளைத் துளியும் பிசகாமல் கடைபிடிப்பது என்று செயல்பட்டார்கள். இவற்றுக்கு வசதியாக பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி, மக்கள்விரோதச் செயல்களிலும் ஈடுபட்டனர்.

ஏகாதிபத்தியங்களோடும், பன்னாட்டு தொழில் கழகங்களோடும் நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான பல இராணுவ மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் போட்டார்கள். முன்பு நாட்டுக்குச் சட்டத்துக்கும் எதிரானவை, குற்றமானவை, விரோதமானவை என்று கருதப்பட்டவைகள் எல்லாம் சட்டபூர்வமாக்கப்பட்டன. அந்நியத் தொழில்கள் மற்றும் முதலீட்டுக்கான வரம்புகள் நிபந்தனைகள் எல்லாம் அகற்றப்பட்டன. அந்நிய முதலீடு வரம்பு, தொழில் நுட்பப் பகிர்வு, வெளியில் அனுப்பக் கூடிய இலாப விகிதம், அந்நியப் பொருள் குவிப்பு ஆகியவற்றுக்கு இருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டன. இப்போது ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டுத் தொழில் கழகங்களும் எதிர்ப்பின்றி நிபந்தனைகள் விதிக்கின்றன.

அவர்களின் தொழில், உற்பத்தி, சந்தை ஆகியவற்றை மேற்பார்வையிடும் அதிகாரம் இந்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கிடையாது. யூனியன் கார்பைடு போன்ற காலாவதியாகிப் போன தொழில்நுட்பங்களையும் இயந்திரங்களையும், ஆலைகளையும் இறக்குமதி செய்து, நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அமெரிக்க அதிகாரிகளால் அப்பட்டமாகவே அறிவிக்கப்பட்டு இன்று நிறைவேற்றப்படுகின்றன. அத்தகைய நோக்கத்தோடுதான் உலகின் மிகப் பிரபலமான, கிரிமினல் குற்றச் செயல்களின் கூடாரமாகத் திகழும் டௌ கெமிக்கல்ஸ் என்ற இரசாயன-உயிரியல் ஆயுதத் தயாரிப்பு பன்னாட்டு தொழில்கழகம், யூனியன் கார்பைடு கம்பெனியை விலைக்கு வாங்கியிருக்கிறது. அதன் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு சிதம்பரம் மற்றும் கமல்நாத் ஆகிய மத்திய அமைச்சர்கள் அதற்குப் பரிந்துரை வழங்கி, போபால் நச்சுப் புகை படுகொலை குற்றங்களுக்கான பொறுப்பில் இருந்து அந்நிறுவனத்தை விடுவித்துள்ளனர்.

இந்திய மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவுடன் பல்வேறு இராணுவ, ஆயுத ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டதுடன், இறுதியாக அணுசக்தி ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டு, அதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு எவ்வித நட்டஈடும் உரிமையும் கோர மாட்டோம் என்று சட்டமியற்றவும் எத்தணிக்கிறது, மன்மோகன் சிங் கும்பல். இவ்வாறு நாட்டை மறுகாலனிஎன்னும் சவப்பெட்டிக்குள் அடைத்து, அடுத்தடுத்து ஆணிகளை இந்திய அரசு அறைவதற்கு இன்னொரு காரணமும் அவசியமும் உள்ளது. இந்தியாவின் டாடா, அம்பானி, மிட்டல் போன்ற நாடு கடந்த தரகு அதிகார முதலாளிகளின் நலன்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மற்றும் அந்நியப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் நலன்களோடு பின்னிப் பினைந்துள்ளன.

அதனால்தான், போபால் நச்சுப்புகைப் படுகொலைக்கான பொறுப்பை டௌ கெமிக்கல்ஸ் மீது தள்ளவோ, ஆலையின் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் அதன் பொறுப்பை வலியுறுத்தவோ கூடாது என்று ரத்தன் டாடா இந்திய அரசுக்கு தானே முன்வந்து பரிந்துரை அனுப்பினார். 1980-களில் இருந்து தனியார்மயம் - தாராளமயம் - உலகமயமாக்கக் கொள்கையைப் பின்பற்றும் இந்திய அரசு, கொள்ளை இலாபம் தரும் அரசுத் துறை தொழில்களைத் தனியார்மயமாக்கிய போது நாட்டின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு கொழுத்தவர்கள்தான், இந்தியாவின் இந்த நாடுகடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகள். இவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் இளைய பங்காளிகளாகி, நாட்டை மறுகாலனியாக்கி ஆதாயம் காண்பதற்குத் துடியா துடிக்கிறார்கள். போபால் நச்சுப் புகைப் படுகொலை விவகாரத்தால் நாடே அதிர்ச்சியில் கொந்தளித்துப் போயுள்ள நிலையிலும், அமெரிக்க-இந்திய கூட்டுப் பங்கு கம்பெனிகளின் தலைமை அதிகாரிகளின் கூட்டுப் பேரவை கூட்டத்தை மன்மோகன் முன்னிலையில் அமெரிக்காவில் கூட்டி, ரத்தன் டாடா தலைமையில் கூட்டுக் கமிட்டியும் நிறுவி, நாட்டை மறுகாலனியாக்கும் போக்கை முழுமையாக்கும் பல ஒப்பந்தங்களைப் போட்டுள்ளார்கள்.

தொழிற்சங்க உரிமைகளை முற்றாகப் பறித்துத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி, இந்தியத் தொழிலையும் விவசாயிகளின் வாழ்வையும் நாசமாக்கி, விவசாயத்தையும் தனது கோரப்பிடியின் கீழ் கொண்டுவந்து விட்ட ஏகாதிபத்தியங்களும் இந்திய நாடுகடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் இறுதியாக நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பையும் ஆக்கிரமித்து மீனவர்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் மீன்பிடி தடைச்சட்டங்களைக் கொண்டு வருகின்றனர். காடுகள் மலைகளையும் ஆக்கிரமித்து, கனிம வளங்களைச் சூறையாடி, பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் காட்டுவேட்டை என்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் அனைத்தும் இத்துரோகத்திற்கு துணை போவிட்ட நிலையில் இன்னமும் எதிர்ப்பு காட்டிவரும் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்குவதற்காகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதுதான் காட்டுவேட்டை. தரகு அதிகாரவர்க்க முதலாளிகளின் நேரடி வேண்டுகோளின் கீழ் இந்த காட்டுவேட்டை தொடங்கப்பட்டு முழுப்போராக நடத்தப்பட்டு வருகிறது. உயிரைப் பணயம் வைத்து இப்பயங்கரவாதக் காட்டுவேட்டையிலிருந்து நாட்டையும் மக்களையும் காக்கவில்லையெனில், பல போபால் படுகொலைகளும் மான்சாண்டோ தாக்குதல்களினால் நிகழும் தற்கொலைகளும் தொடரும், காட்டுவேட்டையில் இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படுவதும் நடக்கும்.

*ஆர்.கே.