Language Selection

புதிய ஜனநாயகம் 2010

ரத்தக் கவிச்சி வீசும் யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் யார்? வியத்நாமில் வீசப்பட்ட நாபாம் குண்டுகள், இட்லரின் விசவாயு, சதாமின் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இந்த அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் கம்யூனிஸ்டு கொரில்லாப் படையை எதிர்கொள்ள இயலாததால், ஏஜென்ட் ஆரஞ்சு என்ற கொடிய இரசாயனத்தை 210 இலட்சம் காலன் அளவிற்கு விமானப்படை மூலம் காடுகள் மீது பொழிந்து, அனைத்தையும் கருக்கிப் பொட்டலாக்கியது, அமெரிக்க இராணுவம். கடுமையான நச்சுப்பொருளான ஏஜெண்ட் ஆரஞ்சுடன், டையாக்சின் என்ற ஆகக் கொடிய நஞ்சையும் கலந்து அமெரிக்க இராணுவத்துக்கு வழங்கிய நிறுவனங்களில் முக்கியமானது டௌ கெமிக்கல்ஸ். 48 இலட்சம் வியத்நாம் மக்கள் அந்த நஞ்சால் பாதிக்கப்பட்டனர். 5 இலட்சம் குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறந்தன. விமானத்திலிருந்து இதனைத் தெளித்த அமெரிக்க சிப்பாய்களும் கடுமையான நோய்களுக்கு ஆளாயினர். 1984-இல் இவர்களுக்கு 18 கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது, அமெரிக்க நீதிமன்றம். அதேநேரத்தில், ஏஜெண்டு ஆரஞ்சால் பாதிக்கப்பட்ட வியத்நாம் மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எதிர்த்து நிவாரணம் தரமுடியாதென்று மறுத்துக் கொண்டிருக்கிறது, டௌ கெமிக்கல்ஸ்.

ஜெல்லியைப் போல கொழகொழப்பானதும் தோலில் பட்டவுடன் தீயா எரியக் கூடியதுமான நாபாம் குண்டுகளும்கூட டௌ கெமிக்கல்ஸின் கண்டுபிடிப்புதான். வியத்நாமில் வீசப்பட்ட இந்த குண்டைத் தயாரித்த டௌ நிறுவனத்தை சிலாகித்து, ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி அன்று கூறியது இதோ: "டௌ கெமிக்கல்ஸ் பசங்க கில்லாடிகள்தான். முதல்ல அவுங்க தயாரித்து அனுப்புன குண்டுக்கு சூடு பத்தல. அப்புறம் பசங்க அதில் பாலைஸ்டைரின் கலந்து அனுப்பிவிட்டாங்க. இப்போ போர்வையில பீ ஒட்ற மாதிரி, அவனுங்க (வியத்நாம் மக்கள்) தோல்ல இது ஒட்டிகிச்சு. இருந்தாலும் அவனுக தண்ணில குதிச்சு தப்பிச்சுகிட்டாங்க. அப்புறம் டௌ பசங்க வெள்ளை பாஸ்பரஸ் கலந்து அனுப்பி விட்டாங்க. இது தண்ணிக்குள்ள போனாலும் எரியும். ஒரு சொட்டு பட்டா போதும். எலும்பு வரைக்கும் போகும். அப்புறம் மவனே, சாவுதான்." இந்த நாபாம் குண்டைப் பற்றி அதனைத் தயாரித்த டௌ கெமிக்கல்ஸின் அன்றைய தலைவர் ஹெர்பர்ட் டி டோன், சொன்னார்: "இது ஒரு உயிர் காக்கும் ஆயுதம் - அமெரிக்கர்களுக்கு"

முதல் உலகப் போரின் போதே விசவாயுக் குண்டுகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை டௌ தயாரித்து விற்றது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் மீது அணுகுண்டு வீசப்பட்ட பின், குண்டு தயாரிப்புக்கான ஆராச்சியில் அமெரிக்க இராணுவத்துடன் யூனியன் கார்பைடு, டூ பான்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயங்கின.

டௌ கெமிக்கல்ஸின் ஜெர்மன் கூட்டாளியான ஐ.ஜி பார்பென் நிறுவனம்தான், ஆஸ்விட்ஸ் கொலைக்கூடத்துக்குத் தேவையான ஹைட்ரஜன் சயனைடு என்ற விசவாயுவைத் தயாரித்து இட்லருக்கு கொடுத்தது. போபால் மக்களின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டதும் இதே ஹைட்ரஜன் சயனைடுதான் என்பது குறிப்பிடத்தக்கது. போர் முடிந்தபின் இட்லருக்கு இந்த நச்சுவாயுவைத் தயாரித்துக் கொடுத்த ஓட்டோ அம்புரோஸ் என்ற அதிகாரி, இனப்படுகொலைக்காக 8 ஆண்டு சிறை வைக்கப்பட்டான். தண்டனைக் காலம் முடிந்தவுடனேயே, அம்புரோஸை தனது நிறுவனத்தில் பணியாற்ற அழைத்துக் கொண்டது, டௌ கெமிக்கல்ஸ். 1988-இல் சதாம் உசேனுக்கு பூச்சி மருந்து என்ற பெயரில் இரசாயன ஆயுதங்களை விற்பனை செய்ததும் டௌ கெமிக்கல்ஸ்தான்.

இன்று உலகெங்கும் தடை செய்யப்பட்டுள்ள டி.டி.டி எனும் பூச்சி கொல்லி மருந்தை, "மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கானதல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது, டௌ.

டர்ஸ்பன் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக பூச்சிக்கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயையும் உருவாக்குவது கண்டறியப்பட்டு, அமெரிக்காவில் 1999-இல் தடை செய்யப்பட்டது. ஆனால் 1998-இல் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கு தலா 460 டாலர்கள் கொடுத்து அவர்கள் மீது இந்த மருந்தை சோதனை செய்திருந்தது, டௌ. இதனை ‘பாதுகாப்பான பூச்சி கொல்லி’ என்று பொய்யாக விளம்பரம் செய்து ஏமாற்றியதற்காக 2003-ஆம் ஆண்டில் நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது, டௌ கெமிக்கல்ஸ். இருப்பினும், இதே மருந்தை ‘பாதுகாப்பானது’ என்று விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

1979-இல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட, டி.பி.சி.பி என்ற அபாயகரமான பூச்சி கொல்லி மருந்தை, நெமகான், ப்யூமாசோன் என்ற பெயர்களில் மத்திய அமெரிக்க நாடுகளின் விவசாயிகளுக்கு டௌ விற்றது. வாழைத்தோப்புக்கு இந்தப் பூச்சிமருந்தை தெளித்ததால் கோஸ்டா ரிகா நாட்டின் 25% ஆண்களுக்கு ஆண்மையிழப்பு ஏற்பட்டது. நிகராகுவாவில் 22,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு டௌ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் சுமார் 49 கோடி டாலர் இழப்பீடாகத் தரவேண்டும் என்று 2002-இல் தீர்ப்பளித்தது, நிகராகுவாவின் நீதிமன்றம். டௌ கெமிக்கல்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காலின் பாவெல் மூலம் நிகராகுவா அரசை மிரட்டியது மட்டுமின்றி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாகக் கூறி வழக்கு தொடுத்தவர்கள் மீது 1700 கோடி டாலர் கேட்டு மான நட்ட வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால், "டி.பி.சி.பி என்ற இந்தப் பூச்சி கொல்லிமருந்து, விரைவீக்கத்தையும், ஆண்மை இழப்பையும் ஏற்படுத்தும்" என்று ஜூலை 23, 1958 தேதியிட்ட டௌ கெமிக்கல்ஸின் ரகசிய ஆவணத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பது, இப்போது அம்பலமாகியிருக்கிறது.

அபாயகரமான இரசாயனக் கழிவுகள், அணுக்கழிவுகளை அமெரிக்காவிலேயே 136 இடங்களில் குவித்திருக்கிறது டௌ. இதற்காக விதிக்கப்பட்ட 40 கோடி டாலர் அபராதத்தை அமெரிக்க அரசுக்கு டௌ கடன் வைத்திருக்கிறது. டௌ வெளியேற்றிய அணுக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தை சேர்ந்த 50,000 மக்கள் 55 கோடி டாலர் இழப்பீடு கேட்டு டௌ மீது வழக்கு தொடுத்துள்ளனர். 1940- களில் 50 மில்லியன் காலன் கதிர்வீச்சுக் கழிவுநீரை நயாகரா ஆற்றில் இறக்கி விட்டதுடன், 1970-களில் யுரேனியம் ஆக்சைடு, தோரியம் ஆக்சைடு போன்றவை அடங்கிய 505 டன் கழிவுகளை, நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே பூமிக்கு அடியில் புதைத்தது.

1996 - இல் டௌ கெமிக்கல்ஸ் இந்திய அதிகாரிகளுக்கு 2 இலட்சம் டாலர் இலஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க அரசின் கடனீட்டு பரிமாற்றக் கழகம் கண்டுபிடித்தது. தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை இந்தியாவில் விற்பதற்காக இந்திய அதிகாரிகளுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்த டௌ-வுக்கு பிப், 2007 - இல் 3,25,000 டாலர் அபராதம் விதித்தது, அமெரிக்காவின் கடனீட்டு பரிமாற்றக் கழகம். இருப்பினும், இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை கொலைகார டௌ நிறுவனத்தின் வரலாற்றிலிருந்து சில துளிகள் மட்டுமே. யூனியன் கார்பைடின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருக்கின்ற இந்த டௌ நிறுவனத்துக்கு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்விதான் வழக்குரைஞர். போபால் வழக்கை அரசு வாபஸ் பெற்றால்தான் டௌ இந்தியாவில் முதலீடு செய்யும் என்று கூறி அமைச்சர் கமல்நாத்தும், ப.சிதம்பரமும் டாடாவும் சிபாரிசு செய்கின்றனர்.

*இரணியன்