Language Selection

புதிய ஜனநாயகம் 2010

மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை "குரல்வளையில் மிதிப்பேன்'' என்று சீறினார், ஒபாமா. ஆண்டர்சன் பாதுகாப்பாக இருக்கிறார் - -நியூயார்க்கில்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் கருப்பாகி நிற்கிறது. பெட்ரோலிய எண்ணெய் கடலெங்கும் விரவி, மெக்சிகோ வளைகுடாப் பகுதி முழுவதும் படர்ந்திருக்கிறது. கடற்பறவைகள் அந்த எண்ணெயின் பிசுபிசுப்பில் பறக்கமுடியாமல் மூச்சுத் திணறி கரையொதுங்கி செத்துக் கிடக்கின்றன. பலவகையான மீன்கள், திமிங்கிலங்கள், ஆமைகள் என கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் செத்து மிதக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பேரழிவு தொடர்கிறது.

மெக்சிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியன்று கடலில் அமைந்துள்ள துரப்பண மேடையின் அடியில், 5000 அடி ஆழத்தில், குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் 11 தொழிலாளிகள் மாண்டு போயினர். 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிப்பினால் எண்ணெயும் வாயுவும் பீறிட்டுக் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 15 முதல் 25 இலட்சம் காலன் (ஒரு காலன் 3.8 லிட்டர்) வெளியேறிய எண்ணெய், அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் பரப்பளவுக்கு இணையான அளவு கடலில் தேங்கி நிற்கிறது .

இதை எப்படித் தூய்மைப்படுத்துவது, வெளியேறும் எண்ணெய் கசிவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. இந்த எண்ணெய் கசிவினால், மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் மீன்பிடித் தொழிலும் படகுப் போக்குவரத்தும் வணிகமும் சுற்றுச்சூழலும் நிலைகுலைந்துள்ளன.

"பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் ஏற்படுத்திய மிகக் கொடிய சுற்றுச்சூழல் கேட்டிற்கும் பொருளாதார இழப்புக்கும் தண்டத் தொகைக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை குரல்வளையில் மிதிப்பேன்" என்று சீறினார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் கசிவு மூலம் சுற்றுச் சூழலை நாசப்படுத்திய குற்றத்துக்காக 2000 கோடி டாலர் தொகையும், விபத்தில் பலியான மற்றும் படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கும், அந்த நிறுவனத்தில் தற்போது வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கும் 10 கோடி டாலர் தொகையும் இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மெக்சிகோ வளைகுடாவில் குழாய் வெடித்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோது மாண்டுபோன தொழிலாளர்கள் 11 பேர். ஆனால் போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் மேல். மெக்சிகோவில் நடந்ததைவிட மிகக் கொடிய பேரழிவு போபாலில் நடந்துள்ளது. மெக்சிகோ விபத்துக்குக் கிடைத்த இழப்பீடு 2000 கோடி டாலர்கள். இன்னமும் பலரை முடமாக்கிக் கொண்டிருக்கும் போபால் நச்சுவாயுப் படுகொலைக்குக் கிடைத்த இழப்பீடும் நிவாரணமும் வெறும் வெறும் 47 கோடி டாலர்கள்தான்.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால், வழங்கப்படும் தீர்ப்பும் இழப்பீடு தொகையும் வேறு. இந்திய நீதிமன்றத்தில் அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக வழக்கு நடந்தால், வழங்கப்படும் தீர்ப்பும் இழப்பீடும் வேறானது. இதுதான் அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை. அமெரிக்காவில் நடந்தால் அது பேரழிவு. அதுவே இந்தியாவில் நடந்தால் சாதாரணமானதொரு ஆலை விபத்து. ஏனென்றால், அமெரிக்கா ஒரு வல்லரசு. இந்தியாவோ ஒரு ஏழை நாடு. ஏழை நாடுகளைப் பொருத்தவரை அமெரிக்காவின் அணுகுமுறை எப்போதுமே அலாதியானது.

சுற்றுச்சூழலை நாசமாக்கிய இப்பேரழிவுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும் அதன் தலைமை நிர்வாகியான டோனி ஹேவர்டும்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறது, அமெரிக்க வல்லரசு. ஆனால், அதே அமெரிக்க வல்லரசு போபால் படுகொலைக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவருமான வாரன் ஆண்டர்சன் இதற்குப் பொறுப்பல்ல என்று கூறி, அவனைப் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து அனுப்ப நிர்பந்தித்தது. எந்த நாட்டில் வேண்டுமானாலும் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளைக் கைது செய்து கொண்டுவர அமெரிக்கப் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளிக்கிறது, அமெரிக்க நீதிமன்றம். ஆனால், பயங்கரவாதக் கிழவன் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் உல்லாசமாக அமர்ந்திருக்க முடிகிறதே, அது எப்படி? ஏனென்றால், அமெரிக்கா என்பது ஒரு பேரரசு. அதன் நாகரிமும் நீதியும் அலாதியானது.

நைஜீரியாவில், பன்னாட்டு ஏகபோக எண்ணெய் நிறுவனமான ஷெல் நடத்திய சூறையாடலால் நைஜீரியாவின் ஓகோனி பிராந்தியத்தின் நிலமும் நீரும் நாசமாகி பேரழிவுகளும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும் தொடர்ந்தது. ஷெல் மற்றும் பிற ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக எழுத்தாளரும் சுற்றுச்சூழலாளருமான கென் சாரோ விவா, ஓகோனி மக்களைத் திரட்டி அமைதி வழியில் போராடினார். நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசும் ஷெல் நிறுவனமும் கைகோர்த்துக் கொண்டு அந்த இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்கி, சாரோவைக் கைது செய்து சிறையில் அடைத்து, 1995-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாளன்று கென் சாரோ விவா உள்ளிட்ட ஒன்பது போராளிகளைத் தூக்கிலிட்டுக் கொன்றன.

இப்பயங்கரவாதத்தை எதிர்த்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் சுற்றுச்சூழல் இயக்கங்களும் ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை அனைத்துலக அரங்கில் மேற்கொண்டன. பிரிட்டிஷ்- டச்சு பன்னாட்டு நிறுவனமாக இருந்தபோதிலும், ஷெல் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் இருப்பதால், அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் நிறுவனத்துக்கு எதிராக ஓகோனி மக்கள் அனைவரின் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு, கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஷெல் நிறுவனத்தின் கொலை குற்றங்கள், இயற்கை வளங்களை அழித்து மாபெரும் சுற்றுச்சூழலை நாசமாக்கிய கொடுங்குற்றங்களுக்காகவும் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் ஒரு கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் டாலர் இழப்பீடு தொகை அளிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. ஷெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனித உரிமைகளைக் காத்து நிற்பதுபோல நாடகமாடிய அமெரிக்க வல்லரசு, போபாலில் மனிதநேயத்தையும் மனித உரிமைகளையும் தனது இரும்புக் கால்களில் போட்டு நசுக்கியது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமையகமும் அமெரிக்காவில்தான் இருக்கிறது. அன்று அமெரிக்காவில், போபால் வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்று வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு 1986-இல் தீர்ப்பு வழங்கினார், அமெரிக்க நீதிபதி ஜான் கீனன். "இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும், இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்குத் தேவையானதாக இருந்ததாலேயே, அவர்கள் இந்த ஆலையை இந்தியாவில் நிறுவ ஒப்புக் கொண்டனர்" என்றார் அந்த நீதிபதி. அதாவது ஏழை நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான நச்சு ஆலையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த நச்சு ஆலை ஏற்படுத்தும் ஆபத்துகளுக்கும் இழப்புகளுக்கும் இந்தியாவே பொறுப்பாகும் என்பதுதான் அவரது தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து.

பத்தாண்டுகளுக்கு முன்பு டபிள்யூ.ஆர்.கிரேஸ் என்ற அமெரிக்க நிறுவனம், பாஸ்டன் அருகே வோபர்ன் என்ற சிறுநகரத்தில் டிரைகுளோரோ எத்திலின் என்ற நச்சுக் கழிவைக் கொட்டி அதனால் குடிநீர் நஞ்சாகி பலர் பாதிக்கப்பட்டனர். இதற்கு அந்நிறுவனம் அளித்த இழப்பீடானது, போபால் படுகொலைக்கு வழங்கப்பட்ட இழப்பீடை விட பல மடங்கு அதிகம். இதேபோல ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அமெரிக்க ஆலை நிர்வாகங்கள் அளித்துள்ள இழப்பீடுகளும் போபால் பேரழிவுக்கு வழங்கப்பட்டதை விட மிக அதிகம். அமெரிக்காவில் இதே யூனியன் கார்பைடு நிறுவனம், தனது ஊழியர்கள் நச்சுத்தன்மை கொண்ட வேதியல் பொருட்களால் பாதிக்கப்பட்டபோது இரண்டாயிரத்து இருநூறு கோடி டாலர்கள் இழப்பீட்டுத் தொகை அளித்தது. அங்கே உயிர்ச்சேதமோ, போபாலில் நடந்ததைப் போன்ற பேரழிவோ இல்லை. ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? ஏனென்றால், இந்தியா ஒரு ஏழை நாடு. அதனால் இந்திய உயிர்கள் அவ்வளவு கேவலமானதாகிவிட்டது.

இதுவொருபுறமிருக்க, 1989-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எக்சான் எண்ணெய் நிறுவனத்தின் கப்பல் விபத்துக்குள்ளாகி, அலாஸ்கா அருகே கடலில் 10 மில்லியன் காலன் அளவுக்கு எண்ணெய் சிந்தி அப்பகுதியின் சுற்றுச்சூழல் நாசமாகியது. அந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மீன்கள் செத்து மிதந்தன, நீர்நாய்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டன. கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்த விபத்துக்கு இழப்பீடாக 50 கோடி டாலர்களை எக்சான் வழங்கியது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நீர்நாய்க்கும் ஏறத்தாழ 1000 டாலர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போபால் நச்சுவாயுவால், வாழ்க்கை முழுவதும் ஊனமாகிவிட்ட ஏழை இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகை, ஒவ்வொருவருக்கும் 500 டாலர்கள்தான். இந்திய ஏழைகள் அமெரிக்க நீர்நாய்களைவிடக் கேவலமாகிவிட்டார்கள்.

ஏழைநாடான - அடிமை நாடான இந்தியா, அமெரிக்கா அல்ல என்பதுதான் இதற்குக் காரணம். இதுதான் பேரரசின் நீதி! இதுதான் ஏகாதிபத்திய உலகின் நாகரிகம்!

*மனோகரன்