Language Selection

போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டி காங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அவரது கூட்டணி அரசு இந்தியத் தலைமை வழக்குரைஞராக இருந்த சோலி சோரப்ஜியிடம், "இந்திய-அமெரிக்கக் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வாரன் ஆண்டர்சனை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்க முடியுமா?" என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. இதற்கு சோலி சோரப்ஜி, "யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பில்லை; எனவே, இந்த நடவடிக்கைகள் தொடருவதைக் கைகழுவி விடலாம்" எனக் கருத்துத் தெரிவித்தார்.

‘‘அமெரிக்கச் சட்டத்தின்படி வாரன் ஆண்டர்சனுக்கு எதிராக இந்தியா அளித்துள்ள சாட்சியங்கள் போதுமானதல்ல; எனவே, அமெரிக்க அரசு ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்காது" என்பது சோலி சோரப்ஜி தரப்பு வாதம். இதுகூட அவரது சொந்த வாதமல்ல; வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கு தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனங்கள் முன்வைத்து வரும் வாதங்களையே, சோரப்ஜி கிளிப்பிள்ளைப் போலக் கூறினார்.

அக்கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி 2001- ஆம் ஆண்டு அரசுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில், "யூனியன் கார்பைடின் போபால் ஆலையில் தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து வந்ததை அந்நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் அறிந்திருந்தார் என்பதற்கும், அக்குறைபாடுகளைச் சரி செய்ய அவர் தவறிவிட்டார் என்பதற்கும் எவ்விதச் சாட்சியமும் கிடையாது. போபால் ஆலையின் அன்றாட செயல்பாடுகளை அமெரிக்காவிலுள்ள தாய் கம்பெனிதான் நடத்திவந்தது என்பதற்கும் சாட்சியம் கிடையாது. எனவே, போபால் ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவிற்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் வாரன் ஆண்டர்சனைப் பொறுப்பாக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார்.

வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உறுதியாக இருந்திருந்தால், ஆண்டர்சனுக்கு எதிராக இன்னும் என்னென்ன சாட்சியங்கள் தேவை என்பதை ஆராய்ந்து, சேகரித்து அமெரிக்காவிடம் அளித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க.வோ நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதுதான் சாக்கு என்ற கதையாக, சோலி சோரப்ஜியும் அருண் ஜெட்லியும் தந்த ஆலோசனைகளின்படி அவ்வழக்கைக் கிடப்பில் போட்டது.

உச்ச நீதிமன்றம் போபால் விஷவாயு படுகொலை தொடர்பாக செப்.13, 1996-இல் அளித்த தீர்ப்பில், கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கை வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கக்கூடிய வழக்காக நீர்த்துப் போகச் செய்தது. இதனையே காரணமாக வைத்து, வாரன் ஆண்டர்சனைக் கைது செய்து அழைத்து வரக் கோரி போபால் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருக்கும் பிடி வாரண்டை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு மாற்றி புதிய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மே 2002-இல் சி.பி.ஐ. போபால் பெரு நகரத் தலைமை நீதிபதி முன் வைத்தது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல, வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கையும் நீர்த்துப் போக வைக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். நீதிமன்றம் சி.பி.ஐ-இன் கோரிக்கையை நிராகரித்துவிட்டதெனினும், போபால் வழக்கில் பா.ஜ.க. ஆட்சி யார் பக்கம் நின்றது என்பதற்கு இதுவுமொரு சான்று.

பா.ஜ.க. கூட்டணி அரசு போபால் குற்றவாளிகளுள் ஒருவரான கேஷுப் மஹிந்திராவிற்கு "பத்ம" விருது கொடுக்க முடிவெடுத்து, பின் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய போராட்டங்களையடுத்து அம்முடிவைக் கைவிட்டது.

பா.ஜ.க.வின் விசுவாசம் என்றுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம்தான் என்பதற்கு யூனியன் கார்பைடு மட்டுமல்ல, என்ரான் விவகாரமும் நம் கண் முன்னே சாட்சியங்களாக உள்ளன.

*குப்பன்