Language Selection

"ஆலைக் கழிவுகளை அகற்ற முடியாது'' என்கிறது டௌ கெமிக்கல்ஸ்.
"நாங்களே செய்கிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

"ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய முடியாது'' என்கிறது டௌ.
"அரசே ஏற்று நடத்தும்'' என்கிறது அமைச்சர் குழு.

"கூடுதல் நிவாரணம் தர முடியாது'' என்கிறது டௌ.
"அதையும் நாங்களே தருகிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

‘‘அவர்கள் துப்பாக்கியைத்
தூக்கியிருந்தால், இவையெல்லாம்
நன்றாக நடந்திருக்காதா?"
- ரஷிதா பீ,
போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரோடு இருக்கும் துர்பாக்கியசாலிகள், அரசால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இந்தச் சொற்களுக்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைத்து விடாமல் தடுத்து வந்த காங்கிரசு கட்சி, இப்பொழுது தனது பழைய பாவத்திற்கெல்லாம் பரிகாரம் தேடுவது போல, கூடுதல் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்திருக்கிறது. காங்கிரசின் 1,500 கோடி ரூபாய் பெறுமான இந்தத் திடீர்க் கருணையைக் கீறிப் பார்த்தால்தான், அதன் நயவஞ்சக முகம் புலப்படும்.

விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஏற்கெனவே அரசு நடத்திய கணக்கெடுப்பும்; அவர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என வகைப்படுத்தியிருப்பதும்; அதற்கேற்ப அரசு அவர்களுக்கு அளித்த ஈட்டுத் தொகையும் அநீதியானது எனப் பல ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போராடி வரும் அமைப்புகள் கூறிவருகின்றன.

உதாரணத்திற்குச் சொன்னால், போபாலில் உள்ள ஜே.பி. நகர் யூனியன் கார்பைடு ஆலையை ஒட்டி அமைந்துள்ள பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுள் ஒரேயொருவர்தான் விஷவாயுவால் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அரசு வகைப்படுத்தியிருக்கிறது.

இவ்விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலோர் ஏழை முசுலீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர். பாதிப்பை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் அவர்கள் தலையில் சுமத்தப்பட்டது. இவற்றிலிருந்தே பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்துவதில் அரசு எந்தளவிற்கு நியாயமாக நடந்து கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அவ்விஷவாயுவால் பாதிக்கப்பட்டு உடனடியாகவும், அடுத்த சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகளில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 22,146 எனப் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிவரும் அமைப்புகள் தக்க ஆதாரங்களோடு கூறி வருகின்றன. ஆனால், ம.பி. மாநில அரசோ இறந்து போனவர்களின் எண்ணிக்கை 15,274 தான் எனக் கூறி, மற்ற இறப்புகளைப் பதிவு செய்யாமல் புறக்கணித்து விட்டது.

1996-ஆம் ஆண்டு முடிவில் 10,29,515 பேர் விஷவாயுவால் தாமோ அல்லது தமது குடும்பத்தோரோ பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிப் பதிவுக்காக விண்ணப்பம் செய்ததில், 5,72,029 விண்ணப்பங்கள் மட்டும்தான் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றிலும் 90 சதவீதப் பேர் விஷவாயுவால் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளதாக வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ரூ.25,000/- மட்டுமே நட்ட ஈடாக வழங்கப்பட்டது. இந்த அற்பமான நட்ட ஈட்டுத் தொகையைப் பெறுவதற்கே பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோ சயனேட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரக்கூடியது. ஆனால், ம.பி. மாநில அரசு பாதிப்புகள் பற்றிப் பதிவு செய்வதை 1996-ஆம் ஆண்டோடு நிறுத்திக் கொண்டது; அதன் பிறகு அவ்விஷவாயு பாதிப்பால் புற்று நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுக்கு ஆளானவர்கள், ஊனமாகப் பிறந்த குழந்தைகள், கண்பார்வை இழந்தவர்கள் எவ்வித நிவாரண உதவிக்கும் வழியின்றி அரசால் அம்போ என்று கைவிடப்பட்டனர். 1996-க்குப் பிறகு விஷவாயு பாதிப்பால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 10,000-ஐத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. அதனால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகள் பாதிப்பு பற்றிப் புதிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றன.

ஆனால், மைய அரசோ பழைய கணக்கெடுப்பு மற்றும் வகைப்படுத்தலின்படிதான் கூடுதல் நிவாரணம் வழங்கவுள்ளது. அதிலும் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளானவர்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட 5,72,029 பேருக்கும் கூடுதல் நிவாரண உதவி கிடைக்காது. இவர்களுள் வெறும் 15 சதவீதப் பேருக்குத்தான் - 42,208 பேருக்குத்தான் கூடுதல் நிவாரண உதவி கிடைக்கும் வாய்ப்புண்டு. அதிலும் ஏற்கெனவே ஈடாக அளிக்கப்பட்ட தொகை கழித்துக் கொள்ளப்படும் என்ற நிபந்தனை வேறு.

ம.பி. மாநில அரசு ஆகஸ்டு 2004-இல் நீதிமன்றத்திற்கு அளித்த ஒரு அறிக்கையில், 5,72,029 பேருக்கு ஈட்டுத் தொகை வழங்கியது போக, யூனியன் கார்பைடு வழங்கிய நிவாரணத் தொகையில் 1,574 கோடி ரூபாய் மிச்சமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கையிருப்பைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என இவ்வமைப்புகள் கோரி வந்தபொழுதெல்லாம், அதனைத் தனது கஜானாவில் இருந்து வெளியே எடுக்க மறுத்து வந்த காங்கிரசு அரசு, இப்பொழுது தனது துரோகங்களை மூடிமறைத்துக் கொள்ளும் உள்நோக்கத்தோடு வழங்க முன்வந்திருக்கிறது.

இந்தப் புதிய நிவாரண நாடகத்தை அறிவித்திருக்கும் அமைச்சர்கள் குழு, "கூடுதல் நட்ட ஈடு அளிப்பது, போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள இடத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தப்படுத்துவது ஆகிய பொறுப்புகளில் இருந்து டௌ கெமிக்கல்ஸைக் கழட்டிவிடுவதையும், அப்பொறுப்புகளை இந்திய அரசின் தலையில் சுமத்துவதையும், ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்ததில் ராஜீவுக்கு உள்ள பங்கை மூடிமறைப்பதையும்" நோக்கங்களாகக் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கேற்றபடி, இந்தப் புதிய அமைச்சர்கள் குழு கைதேர்ந்த அமெரிக்க அடிவருடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டௌ கெமிக்கல்ஸ் 2001-ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனைக் கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி வரும் அமைப்பைச் சேர்ந்த அலோக் பிரதாப் சிங் என்பவர் போபால் ஆலையையும் அதன் சுற்றவட்டாரப் பகுதிகளையும் சுத்தப்படுத்த டௌ கெமிக்கல்ஸுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ம.பி. மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்திய அரசின் இரசாயனத் துறை அமைச்சகம் 2005-ஆம் ஆண்டு இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, மாசு நீக்கும் பணிகளுக்காக டௌ கெமிக்கல்ஸ் முதல் கட்டமாக நூறு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என மனு தாக்கல் செய்தது. அன்றிலிருந்தே டௌ கெமிக்கல்ஸ் இந்திய அரசின் மூலமே இந்த வழக்கைக் காயடித்து விடுவதற்குப் பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.

2005-ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த டௌ கெமிக்கல்ஸ் தலைவர் ஆண்ட்ரூ லீவரிஸ் இவ்வழக்கைக் கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய-அமெரிக்க முதலாளிகளின் மன்றம் 2006-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கூடியபொழுது, அக்கூட்டத்தில் இவ்வழக்கு அமெரிக்க முதலீட்டிற்குத் தடை ஏற்படுத்துவதாக வலியுறுத்திய ஆண்ட்ரூ லீவரிஸ், "இந்திய அரசின் இரசாயனத் துறை இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டால், தமது நிறுவனம் இந்தியாவில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக’’ப் பேரம் நடத்தினார்.

இதனடிப்படையில், இந்திய அரசு அமைத்துள்ள முதலீட்டுக் கழகத்தின் தலைவரான ரத்தன் டாடா, "டௌ கெமிக்கல்ஸை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டால், இந்திய முதலாளிகளே பணம் போட்டு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக" பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், திட்டக் கமிசனின் தலைவர் அலுவாலியாவிற்கும் கடிதம் எழுதினார். 2006-ஆம் ஆண்டில், அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆண்ட்ரூ லீவரிஸ் மற்றும் ரத்தன் டாடாவின் திட்டங்களை ஆதரித்துத் தனது அமைச்சகத்தின் சார்பில் அரசுக்குக் கடிதம் எழுதினார். 2007-ஆம் ஆண்டில் அப்பொழுது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த கமல் நாத்தும் இதே போன்ற ஆதரவுக் கடிதத்தை அரசுக்கு அனுப்பினார்.

இக்கடிதங்களின் அடிப்படையில் அர்ஜுன் சிங் தலைமையில் செயல்பட்டு வந்த அமைச்சர்கள் குழுவைக் கலைத்துவிட்டுப் புதிதாக அமைப்பதென்றும்; நிவாரணப் பணிகளை மட்டும் மேற்பார்வையிட்டு வந்த அமைச்சர்கள் குழுவின் வரம்பை சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்பார்வையிடுவதாக உயர்த்துவதென்றும் போபால் தீர்ப்புக்கு முன்பே மன்மோகன் சிங் அரசு முடிவெடுத்துவிட்டது.

சுத்தப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடுவது என்பதன் பொருள் டௌ கெமிக்கல்ஸை அப்பொறுப்புகளில் இருந்து கழட்டிவிடுவது என்பது தவிர வேறில்லை. அதனால்தான் இதற்குப் பொருத்தமான ப.சிதம்பரம், கமல் நாத் போன்ற டௌ கெமிக்கல்ஸின் அடிவருடிகளைக் கொண்டு இந்தப் புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது; அமைச்சர்கள் குழுவின் தலைவர் ப.சிதம்பரமும் இந்திய அமெரிக்க முதலாளிகள் மன்றத்தின் கூட்டம் ஜூன் 22, 2010 அன்று தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே, சுத்தப்படுத்தும் பணிகளுக்காக இந்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவித்து, அமெரிக்க முதலாளிகளின் மனதைக் குளிர வைத்து விட்டார்.

இன்னொருபுறமோ, தனது இந்தத் துரோகத்தை மறைத்துக் கொள்ளும்விதமாக, டௌ கெமிக்கல்ஸுக்கு எதிரான வழக்கைத் தொடரப் போவதாக அறிவித்திருக்கிறது, அமைச்சர்கள் குழு. இப்படி அறிவித்திருக்கும் காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்விதான் டௌ கெமிக்கல்ஸுக்குச் சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார்.

உச்ச நீதிமன்றம் இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கை நீர்த்துப் போகச் செய்து உத்தரவிட்டபொழுது வாயை மூடிக் கொண்டிருந்த காங்கிரசு, இப்பொழுது அவ்வழக்கின் தகுதியை உயர்த்தக் கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யப் போவதாக மார் தட்டி வருகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது காங்கிரசின் வரலாற்றில் புதியதல்லவே!

காங்கிரசில் மட்டுமல்ல, எதிர்க்கட்சியான பா.ஜ.க-விலும் டௌ கெமிக்கல்ஸுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லி 2006-ஆம் ஆண்டில் டௌ கெமிக்கல்ஸின் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்கிறார். "யூனியன் கார்பைடு ஆலைக்குள் பெட்ரோல்-டீசல் கழிவுகள்தான் கொட்டிக்கிடக்கிறதேயொழிய, இரசாயனக் கழிவுகள் எதுவும் கிடையாது" என அறிக்கைவிட்ட புண்ணியவான்தான் பாபுலால் கௌர். இவர் மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசில் போபால் நிவாரணப் பணிகளுக்கான அமைச்சராக இருந்தபொழுதுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சி டௌ கெமிக்கல்ஸிடமிருந்து எவ்விதக் கூச்சமுமின்றித் தேர்தல் நன்கொடையும் பெற்று வந்துள்ளது.

இந்த அடிவருடிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, டௌ கெமிக்கல்ஸுக்கு எதிராகப் போராடி வரும் மக்களிடம், "ஆலையை யார் சுத்தப்படுத்தினால் என்ன?" என்ற கேள்வியை எழுப்பி, அதன் மூலம் அவர்களின் போராட்டத்தைத் தேவையற்ற ஒன்றாகச் சித்தரிக்க முயலுகிறார்கள். "யார் சுற்றுச்சூழலை நாசப்படுத்தினார்களோ, அவர்கள்தான் அதனைச் சுத்தப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற இயற்கை நீதிக்கு எதிரானது இந்தக் கேள்வி. டௌ கெமிக்கல்ஸைப் பொறுப்பில் இருந்து கழட்டிவிடும் இந்தக் கேள்விதான், சுற்றுச்சுழலையும், இந்திய மக்களின் வாழ்க்கையையும் எவ்விதத் தண்டனையுமின்றி நாசப்படுத்தும் உரிமையை அமெரிக்க முதலாளிகளுக்கு வாரிவழங்கும் அணுசக்தி கடப்பாடு சட்டமாக உருவெடுத்து வருகிறது.

* ரஹீம்