Language Selection

"ஏதோ நடந்தது நடந்து போச்சு. யாரைக் குத்தம் சொல்ல முடியும்? ஏதோ பெரிய மனசு பண்ணி கொடுக்கிறாங்க. கொடுக்கிறத வாங்கிக்கிங்க. மத்ததை அரசாங்கம் பாத்து செய்யும்'' - இது நகைச்சுவையல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

"வாருங்கள்; தொழிற்சாலைகளை அமையுங்கள்; கொலை செய்யுங்கள்; எவ்விதத் தண்டனையுமின்றி இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுங்கள்."

- போபால் விஷவாயு படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பற்றி, அவ்விஷவாயுக் கசிவால் தனது மகனையும் மாமியாரையும் ஒருசேர பறிகொடுத்துவிட்டு நிற்கும் ஷம்ஷத் பேகம் வேதனையோடு சொன்ன வார்த்தைகள் இவை.

பல ஆயிரம் பேரைப் பலி கொண்ட, இன்னும் தினந்தோறும் பலரைப் பலி கொண்டுவரும் இவ்வழக்கில், பாசிச இட்லர் விஷவாயுவைப் பீச்சி யூதர்களைக் கொன்றதற்கு இணையான இவ்வழக்கில், 7 இந்தியக் குற்றவாளிகளுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனையளித்து, அதேசமயம் அவர்களை ஒரேயொரு மணி நேரம்கூட சிறையில் அடைக்காமல், ஒவ்வொரு குற்றவாளியிடமிருந்தும் ரூ.25,000/-ஐ வாங்கிக்கொண்டு அவர்களைப் பிணையிலும் விட்டுவிட்ட இத்தீர்ப்பிற்கு இதைவிட வேறு என்ன மாதிரி விளக்கம் அளிக்க முடியும்?

போபால் படுகொலை வழக்கில் 12 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இக்குற்றவாளிகளுள் வாரன் ஆண்டர்சன்; யூனியன் கார்பைடு, அமெரிக்கா; யூனியன் கார்பைடு, ஹாங்காங் ஆகிய 3 வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான வழக்கு தனியாகவும்; கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு நிர்வாகிகள், யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் ஆகிய 9 இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கு தனியாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. விசாரணை நடந்துகொண்டிருந்தபொழுதே இந்தியக் குற்றவாளிகளுள் ஒருவர் இறந்துவிட, எஞ்சியிருந்த எட்டு குற்றவாளிகளுள் யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தைத் தவிர்த்து 7 குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒவ்வொருவர் மீதும் ரூ.1,01,750 அபராதமும், யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மீது ஐந்து இலட்ச ரூபாய் அபராதமும் விதித்து போபால் பெருநகர தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இத்தீர்ப்பை எழுதிய போபால் தலைமைப் பெருநகர நீதிபதி மோகன் பி.திவாரி, "தனது கைகள் கட்டப்பட்டிருந்ததாக’’ப் புலம்பியிருக்கிறார். ஒருவகையில் இது உண்மைதான். பத்து ஆண்டுகள் தண்டனைத் தரக்கூடிய வகையில் இந்தியக் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கை (culpable homicide) உச்ச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை தரக்கூடிய குற்றமுறு கவனக்குறைவான வழக்காக (criminal negligence) நீர்த்துப் போகச் செய்த அன்றே, இந்தியக் குற்றவாளிகள் அனைவரும் மறைமுகமாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்பதுதான் உண்மை. அதன்பின், இந்தியக் குற்றவாளிகள் மீது நடந்துவந்த விசாரணை ஒரு வகையான கண்துடைப்புதான். வாரன் ஆண்டர்சன் மீதான கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கோ, 25 ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணையைக்கூட எட்டிப் பார்க்காமல் நிலுவையில் உள்ளது.

‘‘இந்தியக் குற்றவாளிகள் மீதான வழக்கு போபால் தலைமைப் பெருநகர நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் மற்றும் 9 இந்தியக் குற்றவாளிகளுக்கு எதிராகப் புதிதுபுதிதாகச் சாட்சியங்கள் கிடைத்து வந்தன. நீதிபதி மோகன் பி.திவாரி இச்சாட்சியங்களைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வழக்கின் போக்கையே மாற்றியிருக்க முடியும். இவ்வழக்கை, குற்றவாளிகளுக்கு மீண்டும் பத்து ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கக்கூடிய வழக்காகச் சட்டப்படியே உயர்த்தியிருக்க முடியும். நீதிமன்றம் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 216-இன் கீழ் இதற்கான உத்தரவை அளிக்க வேண்டும் எனக் கோரி நாங்கள் மனுச் செய்தோம், ஆனால் நீதிபதியோ, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படிதான் இவ்வழக்கை விசாரிப்பேன் எனக் கூறி, நாங்கள் அளித்த மனுவை தள்ளுபடி செய்து விட்டார்" என்ற உண்மையைப் புட்டு வைத்து, கீழமை நீதிமன்றத்தின் அநீதியை அம்பலப்படுத்தியிருக்கிறது, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மகளிர் அமைப்பு.

நீதிபதி மோகன் பி.திவாரி மட்டுமல்ல, இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அநீதி இழைத்த ஒவ்வொரு நீதிபதியும், ஒவ்வொரு அதிகாரியும் சட்டப்படி எங்களால் என்ன செய்யமுடியுமோ அதைத்தான் நாங்கள் செய்தோம் எனக் கூறி, தங்களின் துரோகத்தை நியாயப்படுத்திக் கொள்ள முயலுகிறார்கள். போபால் விஷவாயு படுகொலை நடந்த நாள்தொட்டே, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் மற்றும் அவரது இந்தியக் கூட்டாளிகளைச் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்பது, ஒரு கட்டைப் பஞ்சாயத்தின் மூலம் இவ்வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவது என்று திட்டமிட்டுக் கொண்டு, அதன்படியே இந்திய அரசும், அதிகார வர்க்கமும், நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இதற்கேற்ப புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன; பழைய சட்டங்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

ராஜீவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு மார்ச் 29, 1985 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் போபால் வாயுக் கசிவு பேரழிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டம், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்காக தாங்களே வாதாடவும், நீதி பெறவும்; தங்களுக்கென ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த உரிமைகளைத் தட்டிப் பறித்தது; மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் மறுத்தது.

விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடத்திய வழக்கில் உச்ச நீதிமன்றம், "ஒரு பெரிய நல்ல காரியத்தைச் செய்யும்பொழுது, அதில் சிறிய தவறுகள் செய்வது அனுமதிக்கத்தக்கதுதான்; சூழ்நிலைக்கான தேவையையொட்டி (Doctrine of Necessity) இயற்கை நீதியை (Natural Justice) மறுதலிக்கலாம்; இந்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்தையாக இருந்து இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது" என்ற தத்துவ வாதங்களை அடுக்கி, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. இச்சட்டம் நடைமுறையில் யூனியன் கார்பைடுக்குத் தந்தையாகவும், பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் முதுகில் குத்திய எட்டப்பனாகவும் அமைந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் யூனியன் கார்பைடு மீது அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுத்திருந்த நட்ட ஈடு கோரும் வழக்குகள் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதையடுத்து, போபால் மாவட்ட நீதிமன்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் இடைக்கால நட்ட ஈடாக 350 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. "இவ்விபத்துக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படாத நிலையில், தான் இடைக்கால நட்ட ஈடு எதுவும் வழங்க முடியாது" என்ற வாதத்தை முன்வைத்து, இத்தீர்ப்புக்கு எதிராக ம.பி. மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, யூனியன் கார்பைடு. அவ்வுயர் நீதிமன்றம் இவ்வாதத்தை ஏற்றுக்கொண்ட அதேசமயம், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இடைக்கால நிவாரணமாக 250 கோடி ரூபாய் வழங்குங்கள் என யூனியன் கார்பைடைக் கேட்டுக் கொண்டது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, யூனியன் கார்பைடு.

இவ்வழக்கை விசாரிப்பது என்ற போர்வையில், உச்ச நீதிமன்றம், இந்திய அரசு, யூனியன் கார்பைடு ஆகிய மூன்று அமைப்புகளும் ஒரு இரகசியமான பேரத்தை நடத்தி, அதன் அடிப்படையில் யூனியன் கார்பைடிடம் இருந்து 47 கோடி அமெரிக்க டாலர்களை ஆயுட்கால நட்ட ஈடாக ஒரே தவணையில் பெறுவது என்ற முடிவுக்கு வந்தன.

‘‘விபத்துக்கு யார் பொறுப்பு என்பது முடிவு செய்யப்படாத நிலையில் நட்ட ஈடு எதுவும் தர முடியாது" என்று கூறி வந்த யூனியன் கார்பைடு, உச்ச நீதிமன்றத்திலும் பொறுப்பு பற்றி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலும் 47 கோடி அமெரிக்க டாலர்களை நட்ட ஈடாகக் கொடுக்கச் சம்மதித்தது. யூனியன் கார்பைடின் இந்த மனமாற்றத்திற்குக் காரணம், இந்த நட்ட ஈட்டிற்கு ஈடாக யூனியன் கார்பைடின் மீது இந்தியாவில் நடந்துவந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்துவிட இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டன என்பதுதான். எனவே, படுகொலைக்கான பொறுப்பிலிருந்தும் தண்டனையிலிருந்தும் யூனியன் கார்பைடைத் தப்ப வைத்த இப்பேரத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி என்றே கூறலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி வரும் அமைப்புகள் இப்‘பேரத்தை’ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் நட்ட ஈட்டுத் தொகையை முடிவு செய்தது சரிதான்; போபால் வாயு கசிவு பேரிடர் சட்டம் இந்திய அரசுக்கு அந்த உரிமையை வழங்கியள்ளது" எனத் தடாலடியாகத் தீர்ப்பெழுதியதோடு, "வருங்காலத்தில் இந்த நட்ட ஈட்டுத் தொகை குறைவானது எனக் கோரிக்கை எழுந்தால், அதனைச் சேமநல அரசான இந்திய அரசே பரிசீலித்துக் கொடுக்கும்" எனக் கூறி, சிவில் வழக்குகளில் இருந்து யூனியன் கார்பைடை முழுவதுமாக கழட்டி விட்டனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக, யூனியன் கார்பைடு மீது தொடுக்கப்பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் நடத்த அனுமதி அளித்தது, உச்ச நீதிமன்றம்.

பல்வேறு விதமான நீதிமன்ற இழுத்தடிப்புகளுக்குப் பின், போபால் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிப்ரவரி 1, 1992 அன்று வாரன் ஆண்டர்சனைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தொடர்ந்து நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்தால் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருக்கும் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் பங்குகள் முடக்கப்படும் என்ற எச்சரிக்கையும் அந்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

தனது சொத்துக்கள் முடக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக, அப்பங்குகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போபால் மருத்துவமனையையும், அதனை நிர்வகிக்க இலண்டனைச் சேர்ந்த தனது வழக்குரைஞர் சர் இயான் பெர்சிவல் தலைமையில் ஒரு டிரஸ்டு ஒன்றை அமைக்கப் போவதாகவும் யூனியன் கார்பைடு அறிவித்தது. சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் இக்குறுக்கு வழியை ஏற்றுக் கொள்ள மறுத்த தலைமைப் பெருநகர நீதிமன்றம், ஏப்ரல் 30, 1992 அன்று யூனியன் கார்பைடின் பங்குகளை முடக்கும் நடவடிக்கைகளை எடுத்தது.

யூனியன் கார்பைடு நிறுவனம் இதனை எதிர்த்து ம.பி. மாநில உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அதற்கு எதிராகவே தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளியான யூனியன் கார்பைடின் நலனைக் காக்கும் ரட்சகனாக அவதாரமெடுத்தது. யூனியன் கார்பைடின் பங்குகளை விற்று மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கு அனுமதியளித்ததோடு, அப்பங்குளை விற்றுக் கிடைத்த மொத்த பணத்தையும் சிறுகச்சிறுக யூனியன் கார்பைடு உருவாக்கிய டிரஸ்டிடமே ஒப்படைத்து, அதன் சொத்துகள் முடக்கப்படுவதைத் தடுத்தது.

அமெரிக்காவின் யூனியன் கார்பைடை மட்டுமல்ல, அந்நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளிகளைக் காப்பதிலும் உச்ச நீதிமன்றம் எவ்விதக் குறையும் வைக்கவில்லை. கேஷுப் மஹிந்திரா உள்ளிட்ட ஒன்பது இந்தியக் குற்றவாளிகளும், "இந்த விபத்துக்குத் தாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பு கிடையாது; எனவே, பத்து ஆண்டுகள் தண்டனை தரக்கூடிய கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் தங்கள் மேல் வழக்குத் தொடர முடியாது" என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் இந்தியக் குற்றவாளிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதற்கு அளித்திருந்த விளக்கம் முதலாளித்துவ ஆணவத்தையும் பொறுப்பின்மையையும் பச்சையாக எடுத்துக் காட்டியது.

அவ்வாலை தொழில்நுட்பக் குறைபாடுடைய ஆலை என்பதையும், அவ்வாலையில் கொடிய நச்சுத் திரவமான மெதில் ஐசோ சயனடை அதிக அளவில் சேமித்து வைத்திருந்தனர் என்பதையெல்லாம் ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "சம்பவம் நடந்த அன்று நிர்வாகிகளா ஆலையை இயக்கினார்கள்? அன்று விபத்து நடக்கப் போவதை அவர்கள் அறிந்தா இருந்தார்கள்? பல பேரைப் பலி கொள்ளும் நோக்கத்தோடா நச்சுத் திரவத்தைச் சேமித்து வைத்திருந்தார்கள்?" என்ற திகைப்பூட்டும் கேள்விகளை எழுப்பி, 9 இந்தியக் குற்றவாளிகளின் மீதான கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கை, ஒரு சாதாரண சாலை விபத்தைப் போன்ற குற்றமுறு கவனக்குறைவான வழக்காக நீர்த்துப் போகச் செய்தனர்.

யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக இன்னொருவரைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், இப்படுகொலைக்கான பொறுப்பைத் தொழிலாளர்கள் மீது சுமத்தினர். சம்பவம் நடந்த அன்று அவ்விஷவாயுவைக் கடத்திச் சென்ற காற்றையும், பனியையும் குற்றத்திற்குப் பொறுப்பாக்கியிருந்தால், தீர்ப்பு இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்! பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இத்தீர்ப்பை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்குக்கூட அனுமதிக்காமல் தள்ளுபடி செய்தது.

இப்படித் தங்களுக்குச் சேவகம் செய்த நீதிபதிகளுக்கு முதலாளிகள் தக்க பரிசு வழங்கலாமா விட்டிருப்பார்கள்? யூனியன் கார்பைடு தனது சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கிய டிரஸ்டு மற்றும் மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பைத் தனது இலண்டன் வழக்குரைஞரிடமிருந்து மாற்றி, இந்திய உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றம், தனது முன்னாள் தலைமை நீதிபதி அகமதியை அந்த டிரஸ்டின் வாழ்நாள் தலைவராக நியமித்தது. போபால் படுகொலை வழக்கை வெறும் சாலை விபத்தாக நீர்த்துப் போகச் செய்து தீர்ப்பு எழுதிய அகமதியைத் தவிர, வேறு யார் இப்பதவிக்குத் தகுதியானவராக இருந்துவிட முடியும்?

போபால் படுகொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ததில் மையப் புலனாய்வுத் துறையின் பாத்திரத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. போபால் படுகொலைக்கு முன்பாகவே அவ்வாலையில் நடந்திருந்த பல்வேறு விபத்துக்களையும் மரணங்களையும் சி.பி.ஐ., ஒரு சாட்சியமாக முன்வைக்கவேயில்லை; போபால் ஆலையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருக்கும் இதே போன்றதொரு யூனியன் கார்பைடு ஆலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பிட்டு அறிக்கை தர வேண்டும் என போபால் பெருநகர தலைமை நீதிமன்றம் அளித்த உத்தரவை, சி.பி.ஐ., வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்தது.

போபால் நீதிமன்றம் வாரன் ஆண்டர்சனைக் கைது செய்து அழைத்து வரக் கோரும் பிடி வாரண்டை 1992-ஆம் அண்டு மார்ச் மாதமே பிறப்பித்துவிட்டாலும், அதனை நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சியிலும், தற்பொழுது நடைபெறும் காங்கிரசு கூட்டணி ஆட்சியிலும் வாரன் ஆண்டர்சனைத் தேடிப் போக் கொடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறது, சி.பி.ஐ. வாரன் ஆண்டர்சன் நியூயார்கின் புறநகர்ப் பகுதியில் தனது ஓய்வுக் காலத்தைச் சுகமாகக் கழித்துக் கொண்டிருக்கும்பொழுது, "வாரன் ஆண்டர்சன் தலைமறைவாகிவிட்டதாக’’க் கதைவிட்டுக் கொண்டு தனது அலட்சியப் போக்கை சி.பி.ஐ. மூடி மறைத்து வருகிறது.

யூனியன் கார்பைடு தனக்குச் சார்பாக வாதாட நானி பல்கிவாலா, ஃபாலி நாரிமன் உள்ளிட்ட திறமையான வழக்குரைஞர்களைக் கொண்ட ஒரு குழுவையே இறக்கியிருந்தது; ஆனால், சி.பி.ஐ., இவ்வளவு முக்கியமான வழக்கை ஒரேயொரு வழக்குரைஞரைக் கொண்டுதான் நடத்தியது; எல்லாவற்றுக்கும் மேலாக, போபால் படுகொலை வழக்கை நீர்த்துப்போக வைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., மேல்முறையீடு செய்யாமல், குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டது.

போபால் படுகொலை தொடர்பான ஒவ்வொரு தீர்ப்பும் அப்படுகொலைக்குப் பொறுப்பான குற்றவாளிகளுக்கு மட்டும் சாதகமானதல்ல; வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திற்கும் அவற்றின் இந்தியக் கூட்டாளிகளுக்கும் சாதகமானதாகும். இதுதான் இத்தீர்ப்புகளின் பின் மறைந்துள்ள அபாயம்!

* செல்வம்