Language Selection

புதிய ஜனநாயகம் 2010

"போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை அல்ல, எதிர்பாராமல் நடந்த விபத்து'' என்றுதான் யூனியன் கார்பைடும் அரசும் நீதிமன்றமும் சாதிக்கின்றன. இல்லை, இது கொள்ளை இலாபத்திற்காக அமெரிக்க முதலாளி வர்க்கம் நடத்தியிருக்கும் படுகொலை.

டிசம்பர் 2,1984. குளிர்ந்த இரவில் போபால் நகரம் உறங்கிக் கொண்டிருந்தது. அந்நகரிலுள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைடு ஆலையில் இரவு "ஷிப்டில்" தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

ஆலையின் மெத்தில் ஐசோ சயனேட் பிரிவில் "டி610" என்ற கலனில் அழுத்தம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே போனது. இந்தக் கலனில்தான் கொலைகாரத் திரவமான மெத்தில் ஐசோ சயனேட் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அத்திரவத்தின் அழுத்தம் அபாய எல்லையைத் தாண்டியது.

அந்தக் கலனில் ஏறத்தாழ 45 டன் அளவுக்கு மெத்தில் ஐசோ சயனேட் திரவம் இருந்தது. 0 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்க வேண்டிய அத்திரவம் 250 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் வெடித்து வெளியேவரத் துடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கலன் இருந்த பகுதியின் கான்கிரீட் தூண்கள் உடைந்தன. பாதுகாப்பு வால்வுகளும் உடைந்து, அந்த நச்சுவாயு இணைப்புக் குழாய் வழியாக வெளியேறத் தொடங்கியது.

பொதுவில் இரசாயன ஆலைகளில், இதுபோன்று எதிர்பாராமல் நச்சுவாயு வெளியேறுவதற்கான ஆபத்தை எதிர்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் யூனியன் கார்பைடு ஆலையில், அந்த இரவில் நான்கு வகையான பாதுகாப்புச் சாதனங்கள் அனைத்தும் வேலை செய்யவில்லை. காற்றைவிட இரண்டரை மடங்கு அதிக எடை கொண்ட இந்த வாயு ஆலையிலிருந்து வெளியேறி, அந்தக் குளிர்ந்த இரவில் போபால் நகரைக் கவ்வி பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று கோரத் தாண்டவமாடியது.

"போபாலில் நடந்தது மிகவும் எதிர்பாராதது. இது போல எதுவும் இந்த ஆலையில் நடந்ததேயில்லை. உலகிலேயே எங்களிடம்தான் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன" என்று யூனியன் கார்பைடு நிறுவனம் உடனே அறிக்கை வெளியிட்டது. சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும், ஏன் இந்த நச்சுவாயு வெளியேறியது, அதற்கு என்ன காரணம், யார் தவறு என்பதைப் பற்றி அந்நிறுவனம் வாய் திறக்க மறுத்தது. ஏதோ சதிச்செயல் - சீர்குலைவினால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக நிர்வாகம் இன்றுவரை கூறிவருகிறது.

வாகன விபத்து ஏற்பட்டால், அதற்கு அவ்வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரைத்தான் பொறுப்பாக்க முடியுமே தவிர, அவ்வாகனத்தின் "ஓனரை"க் குற்றவாளியாக்க முடியாது என்ற அடிப்படையில்தான், போபால் படுகொலையையும் பார்க்க வேண்டும். இதன்படி, அன்று அந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளிகளும் மேற்பார்வையிட்டு இயக்கிய தொழில்நுட்பநிபுணர்களும் கண்காணிப்பாளர்களுமே போபால் படுகொலைக்குக் காரணம்; அவர்கள் கவனக்குறைவாகவும் பொறுப்பின்றியும் எந்திரங்களை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது; இதற்கு அமெரிக்காவில் இருக்கும் அந்நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனையும் அவரது இந்தியத் தொழில் கூட்டாளிகளையும் குற்றம் சாட்ட முடியாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களது இந்திய எடுபிடிகளின் வாதம்.

பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள போதிலும், இது கொலை அல்ல என்கின்றனர். சட்டப்படி ஆண்டர்சன் குற்றவாளி அல்ல; யாரோ செய்த குற்றத்துக்காக இன்னொருவரைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்யவில்லை என்று நியாயவாதம் பேசுகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படாமல் ஆலையை இயக்கி அலட்சியமாக நடந்து கொண்டதாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டது என்று ஒப்புக்கொண்டாலும், போபால் படுகொலைக்கு யூனியன் கார்பைடு நிர்வாகம் பொறுப்பல்ல; ஆண்டர்சனும் குற்றவாளி அல்ல என்கின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாத இந்த அலட்சியம் என்பது இலாப நோக்கத்திலிருந்து வருகிறது. எனினும், ஒரு முதலாளி இலாப நோக்கத்துடன் செயல்படுவது எப்படிக் கொலைக் குற்றமாகும்? இலாப நோக்கம் என்பது தீய நோக்கம் அல்ல என்பதுதான் முதலாளித்துவ அறம்.

அந்த இலாப நோக்கத்துக்காக எத்தகைய படுபாதகத்தையும் செய்யலாம்; அது தவறில்லை. இதுதான் முதலாளித்துவ நியாயம். குண்டு போட்டு அழித்தால் அது கொலை. இலாப நோக்கத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறக்கணித்துவிட்டு ஆலையை இயக்கிப் பேரழிவை விளைவித்தால், அது கொலையல்ல என்பதுதான் முதலாளித்துவ நியாயம்.

இப்படித்தான் கடந்த 2004-ஆம் ஆண்டு குடந்தையில், பள்ளி எனும் கொள்ளிவாய்க்குள் 93 குழந்தைகள் சிக்கி எரிந்து கரிக்கட்டையாகியபோதும், கீற்றுக் கொட்டகைதான் தீ விபத்துக்குக் காரணம், விதிமுறைகளைப் பின்பற்றாததுதான் காரணம் என்று அரசும் பத்திரிகைகளும் கண்ணீர் வடித்தன. கல்வி முதலாளிகளின் இலாப வெறி எனும் தீயினால்தான் குடந்தையில் பள்ளிக் குழந்தைகள் கருகிப் போயினர் என்ற உண்மையை மூடிமறைத்தன.

கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் நடத்தியவனும் இலாப நோக்கத்துடன், விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்டு பச்சிளம் குழந்தைகளைத் தீக்கிரையாக்கினான். அது எதிர்பாராத தீ விபத்துதான்; திட்டமிட்ட கொலை அல்ல என்று நியாயப்படுத்த முடியுமா?

"நடந்தது நடந்துவிட்டது, நிவாரணம் தருகிறோம், எதற்கு ஆண்டர்சனை இழுக்கிறீர்கள்?" என்கின்றன அரசும் நீதித்துறையும். கொலை செய்த பிறகு நிவாரணம் தருவது மட்டுமே நியாயமாகுமா? குற்றம் இழைத்தவன் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா?

கவனக்குறைவால் நேர்ந்தால் அது விபத்து. அல்லது விதிமுறைகளின்படி முறையாக இயக்காமல் போனால் நேர்வது விபத்து. ஆனால் யூனியன் கார்பைடு ஆலையில், தொழிலாளிகளின் கவனக் குறைவாலோ அல்லது விதிமுறைகளைப் புறக்கணித்துத் தவறாக இயக்கியதாலோ இந்த விபரீதம் நேரவில்லை. யூனியன் கார்பைடு ஆலை முதலாளிகள் தமது லாபவெறிக்காகத் திட்டமிட்டே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறக்கணித்ததாலும்,முறையாகப் பராமரிப்புப் பணிகளைச் செய்யாததாலும், பழுதடைந்த இயந்திரங்களைக் கொண்டு இயக்கியதாலுமே இப்பேரழிவு நடந்துள்ளது. யூனியன் கார்பைடின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் எவரும் இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல; திட்டமிட்ட படுகொலை என்பதையும், அது ஒரு கிரிமினல் கொலைகார நிறுவனம் என்பதையும் அறிய முடியும்.

அமெரிக்காவிலுள்ள யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் (யு.சி.சி.) தாய் கம்பெனி என்றும், இந்தியாவிலுள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (யு.சி.ஐ.எல்.) அதன் துணை நிறுவனம் என்றும் இந்நிறுவனம் தொடங்கப்படும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்திய நிறுவனத்தில், அமெரிக்க நிறுவனம் பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. இந்த ஆலையானது காலாவதியான தொழில்நுட்பத்துடன், கழித்துக் கட்டப்பட்ட இயந்திரங்களுடன் அமெரிக்க நிறுவனத்தால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆலையின் ஆவணங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

இலாபவெறியோடு எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல்தான் இந்த ஆலை கட்டியமைக்கப்பட்டுள்ளது. பெயரளவுக்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செலவைக் குறைப்பது என்ற பெயரில் அல்லது பழுதடைந்து விட்டதால் சீரமைப்பு நடக்கிறது என்று சொல்லி அவற்றைக் கைகழுவி விட்டு விட்டு ஆலை இயக்கப்பட்டுள்ளது.

போபால் ஆலையில் முக்கியமாக கார்பரில் என்ற பூச்சி மருந்து தயாரிக்கப்பட்டு, "செவின்" என்ற பெயரில் விற்கப்பட்டது. கார்பரில் தயாரிக்க, மெத்தில் ஐசோ சயனேட் என்ற நச்சுவாயு இல்லாமல் வேறு முறையில் தயாரிக்க முடியும். ஆனால், அதற்கு செலவு அதிகமாகும் என்பதாலேயே காலாவதியான அபாயகரமான இந்த முறையைப் பின்பற்றியது நிர்வாகம். இந்த ஆலை தயாரிக்கும் "செவின்" என்ற பூச்சிக் கொல்லி மருந்து இந்திய விவசாயிகளிடம் ஆதரவைப் பெறவில்லை. மேலும், ’80-களில் அடுத்தடுத்து நிலவிய வறட்சியால் செவின் வியாபாரமும் குறைந்துவிட்டது. இதனால் இலாபம் குறைவதைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவுகளும் பராமரிப்புகளும் நிறுத்தப்பட்டன. 1980-களின் முன்னும் பின்னும் 30 சதவீத ஆபரேட்டர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் சூப்பிரவைசர்கள் நியமிக்கப்படாமல், ஜெனரல் ஷிப்ட்டில் மட்டும் சூப்பிரவைசர்களை நியமித்துள்ளனர். இவற்றின் விளைவாக,

* 1981 டிசம்பர் 26-ஆம் தேதியன்று முகம்மது அஷ்ரப் என்ற ஆபரேட்டர் போஸ்ஜீன் வாயு தாக்கி மரணமடைந்தார்.

* 1982 ஜனவரியில் மீண்டும் போஸ்ஜீன் வாயு தாக்கி 28 தொழிலாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்குப் போராடினர். அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கப்படாததாலேயே இந்த விபத்து நேர்ந்தது.

* பிப்ரவரி 1982-இல் மெத்தில் ஐசோ சயனேட் கசிவு ஏற்பட்டு, 18 தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.

* கட்டுப்பாட்டு கூடத்தில் 1982 ஏப்ரலில் 3 மின் ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உடலெங்கும் எரிந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 1982 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பொறியாளர் மீது மெத்தில் ஐசோ சயனேட் திரவம் பட்டதால் அவரது உடலின் பெரும்பகுதி கருகிப் போனது.

* 1982 அக்டோபர் 5-ஆம் தேதியன்று பழுதடைந்து உடைந்துவிட்ட வால்விலிருந்து மெத்தில் ஐசோசயனேட் வெளியேறி 4 தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அருகிலுள்ள தொழிலாளர் குடியிருப்பிலும் இந்த கொடிய வாயு தாக்கி பலர் கண்ணெரிச்சல், சுவாசக் கோளாறினால் பல மாதங்கள் அவதிப்பட்டனர். 1983-இல் இது போல இரண்டுமுறை நச்சுவாயு வெளியேறியுள்ளது.

* 1982-இல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பரிசீலிக்க அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு வந்தது. அது 30 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாகவும் பழுதடைந்தும் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. அதன் பின்னரும் ஆலை நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. போபால் படுகொலைக்குக் காரணமான கசிவு, இந்த பலவீனமான பகுதிகளிலிருந்தே ஏற்பட்டுள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது.

-இவையனைத்தும் ஒரு பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்கெனவே நிலவி வந்துள்ளதை நிரூபித்துக் காட்டுகின்றன.

போபாலைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளரான ராஜ்குமார் கேஸ்வானி என்பவர் "1982-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் நாளில் சிறிதளவு நச்சு வாயு ஆலையிலிருந்து வெளியேறி, மக்கள் பீதியுடன் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதன் பிறகும் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. செப்டம்பரில் ‘போபால் நகரைக் காப்பாற்றுங்கள்!’ என்று நான் பத்திரிகையில் கட்டுரை எழுதி நிர்வாகத்துக்கு எச்சரித்தேன். ஆனாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் மாதத்தில் ‘போபால் நகரம் ஒரு எரிமலை மீது உள்ளது!’ என்ற தலைப்பில் மீண்டும் கட்டுரை எழுதி எச்சரித்தேன்" என்கிறார். அவர் மாநில முதல்வருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அபாயகரமான இந்த ஆலையை மூடக் கோரிப் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கார்பன் டெட்ராகுளோரைடு, ஆல்ஃபா நாப்தால், போஸ்ஜீன், மெத்தில் ஐசோ சயனேட் முதலான நச்சு வாயுக்கள் அடிக்கடி கசிந்துள்ள போதிலும், அவை ஒன்றும் ஆபத்தில்லை என்று தொழிலாளிகளிடம் பொய் சொல்லி, நிர்வாகம் எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தட்டிக் கழித்தது. மெத்தில் ஐசோ சயனேட் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் பற்றியோ, நச்சு முறிவு மருந்து பற்றியோ தொழிலாளிகளுக்கோ போபால் மக்களுக்கோ எதுவும் தெரியாது. ஆலை நிர்வாகம் தொழில் இரகசியம் என்ற பெயரில் திட்டமிட்டே இதை மூடிமறைத்துள்ளது.

1981-இல் ஒரு தொழிலாளி நச்சுவாயு தாக்கி மரணமடைந்ததும், ஆலையைச் சுற்றியுள்ள 20,000 தொழிலாளர் குடும்பங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அந்த ஆலையில் 1975 முதல் 1982 வரை பணியாற்றிய கும்கும் சாக்சேனா என்ற பெண் மருத்துவர் எச்சரித்துள்ளார். நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டால், மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் முதலுதவிக்கான மருத்துவ நடவடிக்கைகள் பற்றிய செயல் திட்டம் வேண்டும் என்றும் அடிக்கடி கோரியுள்ளார். ஆனால் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால், அவர் அப்பதவியிலிருந்து 1982- இல் விலகிவிட்டார்.

மெத்தில் ஐசோ சயனேட் என்ற நச்சுவாயுத் திரவம் உறைநிலையில் அல்லது குளிர்ச்சியான நிலையில் வைக்கப்பட்டிருந்தால் அது வெளியேறாது. மாறாக, அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டுள்ள அந்த நச்சுவாயுவின் திரவத்தில் தண்ணீர் சேர்ந்தால், அதன் வெப்பநிலை உயர்ந்து, நச்சுவாயு அதிக அழுத்தத்துடன் கலனை உடைத்துக் கொண்டு வெளியேறும். இவ்வாறு திரவநிலையிலுள்ள அந்த நச்சுவாயு அடைக்கப்பட்டுள்ள கலனில் தண்ணீல் கசிந்துவிடாமலிருக்க பெயரளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், படுகொலை நடந்த நாளில் அந்தப் பாதுகாப்புச் சாதனங்களும் இயங்கவில்லை.

சம்பவம் நடந்த அன்று, ஆலையில் மெத்தில் ஐசோ சயனேட் 3 பெரிய கலன்களில் சேமித்து வைக்கப்படிருந்தது. மெத்தில் ஐசோ சயனேட் திரவத்தை அதிக அளவில் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, சிறிய கலன்களில் குறைந்த அளவுதான் சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையான விதிகள் பின்பற்றப்படவில்லை. கணினிமயமாக்கப்பட்ட நான்கு கட்ட அபாய எச்சரிக்கை முறை உருவாக்கப்படவில்லை. வலுவான எஃகு உலோகத்தால் குழாய்களும் வால்வுகளும் அமைக்கப்படாமல், அவை தரம் குறைந்த எஃகினால் உருவாக்கப்பட்டன.

தண்ணீரும் நச்சு இரசாயனத் திரவமும் கலந்து வினையாற்றுவதைக் குளிரூட்டும் பாதுகாப்புச் சாதனம் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும். ஆனால், குளிர்காலம் என்பதால் செலவைக் குறைக்க குளிர்பதனச் சாதனம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒருவேளை நச்சுவாயு வெளியேறினால், அது வெளியேறும் குழாயில் காஸ்டிக் சோடா குழம்பு நிரப்பப்பட்டு நச்சுவாயுவைச் செயலிழக்கச் செய்யும் முறை பின்பற்றப்படவேண்டும். ஆலையில் இந்த "கேஸ் ஸ்கரப்பர்" என்ற சாதனமும் செயல்படவில்லை. இதையும் மீறி ஒருவேளை நச்சுவாயு வெளியேறிவிட்டால், அது வேறொரு பாதுகாப்புக் கலனுக்குள் சென்று அங்கு அது செயலிழக்கச் செய்யப்படும். இந்த "நாக் டவுன்" தொட்டி என்ற ஏற்பாடு அமெரிக்காவில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட பாதுகாப்புத் தொட்டி கட்டியமைக்கப்படவில்லை. அடுத்ததாக, "ஃப்ளேர் டவர்" என்ற பாதுகாப்புச் சாதனமும் பழுதடைந்திருந்ததால் வேலை செய்யவில்லை.

மேலும், இத்தகைய ஆலைகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கலன்களின் அழுத்தம் பற்றிய அளவீடுகள் சோதித்தறியப்பட வேண்டும். ஆனால் இந்த ஆலையில், ஒரு ஷிப்ட்டுக்கு ஒருமுறைதான் அளவீடுகள் சோதிக்கப்பட்டன. டிசம்பர் 2,1984 அன்று இரவு ஷிப்ட் தொடங்கும்போது, அனைத்தும் இயல்பாக இருப்பதாக இரவு 10.12 மணிக்கு எடுத்த அளவீடு காட்டியுள்ளது. அதன் பிறகு அளவீடு சோதிக்கப்படவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில், ஏறத்தாழ 11.30 மணியளவில்தான் மெத்தில் ஐசோ சயனேட் இருந்த கலனில் நீர்க்கசிவு ஏற்படத் தொடங்கி, அதன் வெப்பநிலை உயர்ந்து வாயுவாக வெளியேறி கோரத் தாண்டவமாடியது.

-இவையனைத்தும் "நியூ சயின்டிஸ்ட்" பத்திரிகை மற்றும் பி.பி.சி. வானொலி மேற்கொண்ட விசாரணைகளிலிருந்தும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அளித்த வாக்குமூலங்களிலிருந்தும் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. தொழிலாளிகளின் கவனக் குறைவாலோ, தவறாக இயக்கியதாலோ, சதிகள்-சீர்குலைவுகளாலோ இந்தப் பேரழிவு நிகழவில்லை. பிணந்திண்ணி யூனியன் கார்பைடின் இலாபவெறிக்காகவே உழைக்கும் மக்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பகுதியில், காலாவதியான தொழில்நுட்பத்துடன், எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல், பல்லாயிரக்கணக்கான மக்களை மரணவாயிலில் நிறுத்தி வைத்து தெரிந்தே விபரீதத்தை விளைவித்துள்ளது, யூனியன் கார்பைடு. எனில், தனது இலாப நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான அப்பாவி கூலித் தொழிலாளர்களது உயிரைப் பறித்தெடுத்த இந்தச் செயலை, படுகொலை எனக் கூற முடியாதா? இந்த நச்சுவாயு தாக்கினால் என்ன நச்சுமுறிவு மருந்து தரப்பட வேண்டும் என்பதைக்கூட தெரிவிக்காமல், அதையும் தொழில் இரகசியமாக வைத்திருப்பவனை முதலாளி என்பதா, அல்லது கொலைகாரன் என்பதா? ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலைப் போன்றதொரு பேரழிவை போபாலில் நடத்திவிட்டு, கொலைகாரர்களும் அவர்களின் கைக்கூலிகளும், இப்படுகொலையை இன்னமும் விபத்து என்று கூறித் துரோகமிழைத்து வருவதை இனியும் அனுமதிக்கத்தான் முடியுமா? பெருந்தொழில் கழகங்களின் கிரிமினல் பயங்கரவாதத்தை சாதாரணமான விபத்தாகத்தான் கருத முடியுமா?

படுகொலைகளுக்குரியது மரண தண்டனை. கொலைகாரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான இந்தியத் துரோகிகளின் கல்லறைகளில் "போபால் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் மரண தண்டனைக்குப் பிறகு இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று எழுதப்பட வேண்டும். நாட்டு மக்கள் அந்தக் கல்லறைகளின் மீது எட்டி உதைத்து, காறி உமிழ வேண்டும்.

*தனபால்