Language Selection

புதிய ஜனநாயகம் 2010

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3,828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த்திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக்குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல்வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டிசம்பர் 7, 1984: தொழிற்சாலையைப் பார்வையிட வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு, விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கப்படுகிறார். இந்திய அரசு வாக்களித்திருந்தபடி, ஆண்டர்சன் பிணையில் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ம.பி. முதலமைச்சர் அர்ஜுன்சிங்கின் சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைக்கப்படுகிறார்.

மார்ச் 29, 1985: பாதிக்கப்பட்டோர் சார்பில் அரசே நிவாரணம் கோர வகை செய்யும் "போபால் விஷவாயுக் கசிவு பேரழிவுச் சட்டம்-1985" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகும் உரிமை பறிபோதல்.

ஏப்ரல் 8, 1985: நிவாரணத் தொகை கேட்டு அமெரிக்காவில் கார்பைடு நிறுவனத்தின் மீது நடந்து வந்த வழக்கு விசாரணையில் இந்திய அரசும் இணைந்து கொண்டது.

மே 12, 1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அனைத்து போபால் வழக்குகளையும் இந்தியாவிற்கு மாற்றுகிறது. இதன் மூலம் அற்பமான நிவாரணத் தொகை தருவதை கார்பைடு உறுதி செய்கிறது.

டிசம்பர் 1, 1987: போபால் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் 12 குற்றவாளிகளின் மீதும் கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் பிரிவின் கீழ் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது.

பிப்ரவரி 14-15, 1989: யூனியன் கார்பைடும், ராஜீவ் அரசும் உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலோடு செய்த துரோக ஒப்பந்தம்; 47 கோடி டாலர் நிவாரணத் தொகைக்கு அரசு ஒப்புதல்.

மே 4, 1989: பாதிக்கப்பட்டோர் நடத்திய போராட்டங்களையடுத்து, நிவாரணத் தொகை ஒப்பந்தம் குறித்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதி மன்றம் ஒப்புக் கொள்கிறது.

பிப்ரவரி 1, 1992: ஆண்டர்சன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுதல்.

ஆகஸ்டு 19 , 1992: நிவாரணத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 200 ரூபாய் இடைக்கால நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது.

பிப்ரவரி 14, 1994: போபால் வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்த போதிலும், யூனியன் கார்பைடின் பங்குகளை விற்க அனுமதி.

செப்டம்பர் 13, 1996: இந்தியக் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கை (culpable homicide) குற்றமுறு கவனக்குறைவான (criminal negligence) வழக்காக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை.

அக்டோபர் 16, 1997: தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுநிறுவனம் (NEERI) தனது ஆய்வறிக்கையில் நிலத்தடி நீர் மாசுபடவில்லை என்று சான்று அளித்தது.

நவம்பர் 1999: போபாலில் நீரும் நிலமும் 60 லட்சம் மடங்குக்கும் அதிகமாக நஞ்சாக்கப்பட்டுள்ளதை பசுமை அமைதி இயக்கத்தின் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

பிப்ரவரி 5, 2001: டௌ கெமிக்கல்ஸ், யூனியன் கார்பைடைக் கையகப்படுத்தியது. போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பேற்காது என அறிவிப்பு.

மே 24, 2002: ஆண்டர்சன் மீதான பிடிவாரண்டை மாற்றக் கோரி நீதிமன்றத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை. நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்.

ஆகஸ்டு 28, 2002: சி.பி.ஐ-இன் கோரிக்கை நிராகரிப்பு. படுகொலை நடந்து 18 வருடங்களுக்குப் பிறகு ஆண்டர்சனுக்குக் கைது வாரண்ட். ஆண்டர்சனைத் தேட முடியவில்லை என சி.பி.ஐ. சாதிப்பு.

ஜனவரி 2002: நீர், நிலம் மற்றும் தாப்பாலில் காரீயம், பாதரசம் போன்ற அபாயகரமான வேதிப் பொருள்கள் கலந்துள்ளதை "சிரிஸ்டி" உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வுகள் உறுதி செய்தன.

நவம்பர் 2002: யூனியன் கார்பைடு நிறுவனம் 1989-இல் ஆய்வு செய்த போதே நீர், நிலம் மோசமாக நஞ்சானதைக் கண்டறிந்திருப்பது அமெரிக்காவில் ஒரு வழக்கு விசாரணையில் அம்பலமானது .

2003: ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் கோருவதென இந்தியா முடிவு.

மார்ச் 18, 2003: கார்பைடை அமெரிக்காவில் விசாரித்து தண்டனைக் கொடுக்கக் கோரும் வழக்கு மீண்டும் ஒரு முறை அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

ஜூன் 2004: ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா நிராகரிப்பு.

ஜூன் 30, 2004: பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் பொறுப்பை டௌ கெமிக்கல்ஸ் ஏற்றுக் கொள்ள அமெரிக்க நீதிமன்றம் கோரிக்கை. இந்தியா அரசும் ஒப்புக் கொள்ளுதல்.

ஜூலை 19, 2004: 5,72,029 பேருக்கு நிவாரணம் தருவதற்கு உச்சநீதிமன்றம் வற்புறுத்தல். அதாவது, 20 வருடங்களுக்குப் பிறகு தலைக்கு 25,000 ரூபாய்.

அக்டோபர் 25 , 2004: நிவாரணத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்.

அக்டோபர் 26, 2004: ஏப்ரல் 1, 2005-க்குள் நிவாரணத் தொகை முழுவதையும் வழங்க உச்ச நீதிமன்றம் கெடு.

2005: ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தொழிற்சாலையில் நச்சுக் கழிவுகளை அகற்ற மாநில அரசு முயற்சி. இதனால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

ஏப்ரல் 17, 2006: பாதிக்கப்பட்டவர்களின் குழு தில்லி நோக்கி பாதயாத்திரை. அவர்கள் டௌ கெமிக்கல்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியதை மன்மோகன் சிங் ஏற்க மறுப்பு.

2006: டௌ கெமிக்கல்ஸை போபால் ஆலையைச் சுத்தப்படுத்தும் பொறுப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் அரசின் சதித் திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.

ஜனவரி 10, 2007: டௌ கெமிக்கல்சின் கூட்டாளி டாடா அலுவலக வாயிலில் ரத்தன் டாடாவை எதிர்த்துப் போராட்டம். டாடா உப்பு முதலான நுகர்பொருட்களைப் புறக்கணிக்கக் கோரி இரண்டு நாட்கள் பேரணி.

2008: டௌ கெமிக்கல்ஸிடம் பா.ஜ.க. நிதி வாங்கியது அம்பலமானது.

மார்ச் 28, 2008: பாதிக்கப்பட்டவர்களின் குழு மீண்டும் தில்லிக்குப் பாத யாத்திரை.
ஜூன் 7, 2010: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 7 நிர்வாகிகளுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு. உடனடியாக பிணையில் விடுவிப்பு.