இந்தியா ஒரு பெரிய நாடு உலகம் இதைவிடப் பன்மடங்கு பெரியது. போபால் நச்சுப் படுகொலைகள் ஏற்படுத்திய கோரம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊடகத் தலைப்புச் செய்திகளாக வந்து, ஒரு சில நாட்களே நீடித்திருந்தன. அதற்குள்ளாகவே காஷ்மீரில் அரசப் படைகளின் படுகொலைகள் ஒரிசாவில் பழங்குடி மக்கள் மீது போலீசின் தாக்குதல் வடகிழக்கு இந்தியாவில் நாகா மாணவர்கள் நடத்தும் நீண்ட முற்றுகைப் போராட்டம், மத்திய இந்தியாவில் நடக்கும் காட்டுவேட்டை மற்றும் போலி மோதல் கொலைகள் என்று பலவும் முன்னணிக்கு வந்து விடுகின்றன. இல்லையானாலும் , உலகக் கால்பந்துப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினாவின் அதிர்ச்சித் தோல்வி, தோனியின் திடீர் திருமணம், ராவணன் திரைப்படம் வெளியீடு என்று முதலாளித்துவ செய்தி ஊடகம் முன்தள்ளும் செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்ன்றன.
ஆனால், இந்தியா மறுகாலனியாக்கப்படுவதன் தொடக்கத்தை ஒரு பேரிடர்-பேரழிவின் மூலம் கூட்டுப்பங்கு நிறுவன கார்பொரேட் பயங்கரவாதத்தாக்குதலோடு அறிவித்தன. போபால் நச்சுவாயுப் படுகொலைகள். நமது மக்கள் மனதிலிருந்து அகலக்கூடாத இக்கோர நிகழ்வை ஆவணப்படுத்தும் முகமாக, சிறப்பிதழாக வெளியிடுவது என்று முடிவு செய்தோம். வழக்கமான பக்கங்களுக்குள் அடக்க முடியவில்லை. மேலும் 500 பக்கங்கள் ஆனாலும் அடக்கிவிட முடியாது. சொல்லவேண்டிய சோகக்கதைகள், அச்சிட வேண்டிய நெஞ்சைப் பிளக்கும் புகைப்படங்கள், ஆத்திரமூட்டும் துரோக ஒப்பந்தங்கள்,தரவுகள் ஏராளமாகக் குவிந்துள்ளன. அவற்றை முடிந்த அளவு தொகுத்து, சுருக்கி இந்த இதழில் வழங்கியுள்ளோம்.
போபால் நச்சுவாயுப் படுகொலை சம்பவத்தில் நீதி செத்துக் கிடப்பதைச் சித்தரிக்கும் நீதியின் பிணம்; போபால்: துரோகத்தின் இரத்தச்சுவடுகள்; மரணம் துரத்திய அந்த நள்ளிரவில் நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்; அன்று நடந்தது எதிர்பாராத விபத்து அல்ல, திட்டமிட்ட படுகொலை; உயிர்பிழைத்தவர்களும் நிரந்தர நோயாளிகளாகிவிட்டவர்கள்; தப்பிப் பிழைத்தவர்கள் தொடரும் போராட்டம் தங்களுக்காக நடத்தப்படவில்லை; இந்திரா, ராஜீவ், சோனியா என்று தொடரும் பரம்பரை துரோகிகளும் உடந்தையாக நிற்கும் உச்சநீதிமன்றமும்... இத்தோடு போபால் பயங்கரம் நின்றுவிடவில்லை.
போபால் மண்ணில் கிடக்கும் நச்சுக்கழிவுகள் போதாதென்று மேலை நாடுகளிலிருந்து இரும்புப் பெட்டகங்களில் நச்சுக்கழிவுகள் நாள்தோறும் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. கொலைகார யூனியன் கார்பைடின் இடத்தில் உலகிலேயே பெரிய இரசாயண-உயிரியல் ஆயுத உற்பத்தி செய்யும் டௌ கெமிக்கல்ஸ் வந்திறங்கியுள்ளது. இவையும் போதாதென்று அமெரிக்காவிலிருந்து காலாவதியான அணு உலைகளும், இறக்குமதி செய்யப்படுகின்றன.
தனது ஆட்சிக்காலத்திலேயே நாட்டை மறுகாலனியாக்கும் துரோகச் செயலை நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆவேசத்துடன் மன்மோகன்-சோனியாக கும்பலும் சிதம்பரம்-மான்டேக்சிங் முதலிய எடுபிடிகளும் செயல்படுகிறார்கள். இது வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் இச்சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்!