Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மருத்துவமாதோ அதிகாரியோ
மாணவியோ சிறுமியோ கடித்துக் குதறவும்
எதிர்த்தெழுந்தால் கழுத்தை நெரித்து
கட்டித்தொங்கவிட வெட்டிப்புதைக்கவும்
காப்பதற்கு சட்டமே துணைநிற்கும்……

கத்தும் வயிற்றுக்கு கஞ்சி ஊத்த
கொழுந்தெடுக்கப் போனால்
கூட்டித்துடைக்க வீட்டு வேலைக்குப் போனால்
வேலைக் கழைப்பில்
வியர்வையில் தோயும் உடம்பிலும்……

போர்விமான இரைச்சலிலும்
புழுதிசிவந்த தெருக்களிலும்
வேர்பிளந்து கருகி எஞ்சிய வீட்டினுள்ளும்
விடுதலைத் தீ வீழ்த்திய
புனர்வாழ்வு பொறிக்குள்ளும்……

அவலத்துள் மடிந்த பிள்ளைகள் உடலிலும்
அல்லலுற்று சிறைப்பட்ட அகதிமுகாமிலும்
நோய் காக்கும் மருத்துவ மனையிலும்
நொந்து துணையிழந்து
மகவுடன் தூங்கும் தாயிடமும்
காமக் கழுகுகள் வட்டமிடுகிறது ……….

விடிய விழிக்க தலையே வெடிக்கும்
அடுப்புப் புகையும் நெருப்புமாய்
குடும்பப் பொறுப்பு அழுத்தும்
கொடிய விலங்குகள் வேலைத்தளத்தில்
இடிக்கும் உரசும் பல்லை இழிக்கும்
முகத்தில் அறைந்தால் வேலைபறக்கும்
அடக்கமில்லாப் பெண்ணாம்……

மடியில் எரியும் கொதிப்பை எடுத்து
கை முஸ்டியில் ஏற்றுக–செங்
கொடியை உயர்த்தி தெருவினில் இறங்கி—பெண்
அடிமைத்தழை உடையும் வரைக்கும்
அடங்கோமென்று உரக்கச் சொல்லுவோம்.