நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம். நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும் ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர் சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….” கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில் பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட. வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து பின்னர் செய்யும் மணம் நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது. கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்? அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ, அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன? “

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன? இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? “

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான் நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லைஎன்றும் அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.


சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும் அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும் கண்டிச ன் ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும் சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில் இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ அந்தக்காதலை விட்டார். கதிர் விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள், தயவு செஞ்சு “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் . அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில் கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத் துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா? இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது? இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில் மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான் தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல் அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும்.கதிர் என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான். மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

 http://kalagam.wordpress.com/