வர்க்க அரசியலை மூடிமறைக்க கடந்தகால போராட்டத்தினை "தன்னியல்பானது" என்று திரித்து காட்டுகின்ற "மே18" அரசியல். கடந்தகால போராட்டங்களை மறுப்பதுடன், நடந்தவைகளை தன்னியல்பானதாகவும் காட்ட முனைகின்றது. இந்த அரசியலின் எடுபிடியாக தன்னை மூடிமறைத்து இயங்கும் தேசம்நெற், தன்னை முனைப்பாக்கி காட்ட வரலாற்றை திரிக்கும் நாவலனின் துணையுடன், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தை "யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது." என்கின்றது.

இப்படி நடந்த "மாபெரும்" போராட்டத்தை திரிக்கின்றதும், அதன் அரசியல் அடிப்படையை மறுக்கவும், அதை தன்னெழுச்சியானது என்று காட்டுகின்ற அரசியலை இங்கு அரங்;கேற்ற முனைகின்றனர். இதற்கமைய உருவான அரசியல் அணி திரட்சியையும், அந்த வரலாற்று கூறுகளையும் இருட்டடிப்பு செய்து மறுக்கின்றனர். அன்று இந்தப் போராட்டம் மக்களை தழுவிய, ஒழு அரசியல் போராட்டமாக இருந்தது. இந்த வகையில், அரசியல் ரீதியாக மக்கள் தளுவி முன்வைத்த கோசமென்ன.

1. மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகை சுதந்திரம் வேண்டும்.

2. மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ, அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும் 

இந்தக் கோசத்தை அனைத்து இயக்கங்களிடமும் முன்வைத்த மாணவர்கள், தங்களுக்கு நடந்ததை உள்ளடக்கிய மேலதிக ஐந்து  கோசங்களை முன்வைத்தனர். இந்தப் போராட்டம் தான் பல்கலைக்கழகத்தை தாண்டி, பரந்துபட்ட மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி அரசியல் போராட்டத்தை நடத்தியது. மக்கள் இந்தப் போராட்டத்தை ஆதரித்து, நூற்றுக்கணக்காண துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். இது போன்று அன்று இயங்கிய பொது அமைப்புகள், இதற்கு ஆதரவாக பல பத்து அறிக்கைகளை வெளியிட்;டனர். மாணவர்கள் மக்களிடம் சென்றது போல், மக்கள் பல்கலைக்கழகம் வரத் தொடங்கினர். இந்த போராட்டம் முன்னிறுத்தி கோசம் முதல், மக்களிடம் மாணவர்கள் செல்லவைத்தது எவையும் தன்னியல்பானதல்ல. ஓரு தொடர்ச்சியான அரசியல் வேலை முறைக்கூடாகவே இவை எல்லாம் சாத்தியமானது.  அரசியல் ரீதியான "மாபெரும்" போராட்டம் தற்செயலானதோ தன்னெழுச்சியானதுமல்ல.

நீண்டகால நோக்கில் மக்களை அணிதிரட்டுவதில் நம்பிக்கை அற்றவர்கள், வெளியில் நின்றவர்கள், இந்த போராட்டத்துடன் திடீரென தம்மை இணைத்தவர்களுக்கு .. எல்லாம், இது ஏதோ மாயமந்திரம் போலவும், இதனைத் தன்னெழுச்சியாகவும் காட்டுவதன் மூலம், இதுவே அரசியலற்ற வரட்டுவாதமாகி விடுகின்றது. இப்படி இவர்கள் வரலாறு சொன்னால், மாணவர்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட்ட நிகழ்வுகள் இன்றி, இப்படி திடீர் அரசியல் போராட்டம் நடக்கும் என்று கற்பனை அரசியலை போராட்டமாக புகுத்திவிடும்.    

இது அன்று தன்னனெழுச்சியாக நடக்கவில்லை. புலிகளின் பாசிசமயமாக்கல், இந்திய கைக் கூலித்தனமான அரசியல், இயக்கங்களின் அராஜகங்கள் என்று, எதிர்ப்புரட்சி அரசியல் மக்களுக்கு எதிராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் இயக்கங்களுக்குள்ளான போராட்டங்கள் முதல் இயக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வரை உருவாகி வந்தது. மறுதளத்தில் என்.எல்.எவ்.ரி., இதில் இருந்து பிரிந்த பி.எல்.எவ்.ரி., பாதுகாப்புப் பேரவை, பாசறை, தீப்பொறி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஜச் சேர்ந்த செழியன்- தாஸ் குழு, புளட் மாணவர் அமைப்பான ரெசோ… போன்றன, அமைப்பு வடிவம் பெற்ற தளத்தில் இயக்க அராஜகத்தை எதிர்த்த அரசியல் போராட்டத்தில் முன்னிலையான அரசியல் பாத்திரத்தை எடுத்தன. அவர்கள் பரஸ்பரம் இணைந்து வேலை செய்ததுடன், ஒன்றுபட்ட அமைப்பாகாவிட்டாலும் ஒரு அமைப்பு போல் செயல்பட முனைந்தனர்.

இந்தக் குழுக்கள் மக்களைச் சார்ந்து நின்று செயல்படல் என்பதில், ஒரு தெளிவான அரசியல் நிலையை தெளிவாக கொண்டிராத நிலைமை இருந்தபோதும், மக்களின் அதிருப்தியை பிரதிபலிக்க முனைந்தனர். இதை இரண்டு தளத்தில் எதிர் கொண்டு போராட வேண்டியிருந்தது.

1.மக்களை சார்ந்து நின்று இதற்கு எதிரான வெகுஞான போராட்டத்தை நடத்துவது. இதற்காக மக்களை அணிதிரட்டுவது.

2.வெள்ளைப் பயங்கரவாதம் மீது ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்தல். (இது பற்றி விரிவாக விளக்கமாகவும் சொல்ல வேண்டியுள்ளது. இதை செய்யத் தவறியதன் மூலம் மக்களை பாசிசத்தின் முன் தோற்கடித்தோம்)

அமைப்பு ரீதியாக இயங்கியவர்கள், மக்கள் திரள் வேலை செய்வதையும் சரி, ஆயுதமேந்தி போராட்டத்தை முன்னெடுப்பதிலும் கூட சரியாக தம்மை ஒருங்கிணைத்து இருக்கவில்லை.   இந்தச் சூழலில் உதிரியாக இயக்கங்களில் இருந்து விலகிய பலர், அரசியல் ரீதியாக மாற்றுக்களைத் தேடினர். இந்தப் பொதுச் சூழலை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ரீதியான முன்முயற்சி கிளர்ச்சிப் பிரச்சாரம் தான், இந்த மாபெரும் போராட்டத்தை நடத்த நெம்புகோலகியது.

1985ம் ஆண்டு ராக்கிங்குக்கு எதிராக, துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு நான் நடத்திய போராட்டம், இதற்கான அரசியல் அத்திவாரத்தையிட்டது. பல்கலைக்கழகத்தில் புளட்டில் இருந்து ஒதுங்கியிருந்த பலரை, மீண்டும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்தது. விமலேஸ்வரன் முதல் பலரை மீளவும், அரசியல் ரீதியாக என்னுடைய இந்த வெகுசன அரசியலில் இணைத்தது. இந்த வகையில் யாழ்பல்கலைக்கழகத்தில் இருந்த மூன்று வருடத்திலும், நான் படித்தது கிடையாது. மாறாக ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் பலதளத்தில் பலருடன் அரசியல் விவாதங்களையே நடத்திவந்தேன். நான் விஞ்ஞானபீட மாணவனாக இருந்த போதும், கலைப்பீடமே எனது அரசியல் மையமாகியது. அன்றாடம் அரசியலை அவர்களுடன் தொடர்ச்சியாக விவாதித்தேன். விஜிதரன் போராட்டத்தில் தன்னை திடீரென இணைத்துக்கொண்ட நாவலன் உட்பட எல்லோரும், பல்கலைக்கழக பட்டத்தைப் பெறும் பட்டப்படிப்பில் ஈடுபட்ட போது, நான் (நான் என்.எல்.எவ்.ரி மத்திய குழு உறுப்பினர்) அங்கு முழுநேரமாக அரசியலில் ஈடுபட்டேன். எல்லோரும் பட்டம் பெற்ற போது, நான் மூன்று வருடமாக முதலாம் ஆண்டில் தொடர்ந்து இருந்தேன். நான் படிக்கவில்லை, அங்கு அரசியல் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். ஆம் இந்தப் போராட்டம் நடக்க முந்தைய 18 மாதமாக, முழு நேரமாக என்.எல்.எவ்.ரி. அமைப்புக்காக நான் பிரச்சாரம் கிளர்ச்சியை செய்து வந்தேன். வேறு யாரும், இந்த அரசியல் வேலையை அன்று பல்கலைக்கழகத்தில் செய்யவில்லை. இந்தத் தீவிரமான தொடர்ச்சியான அரசியல் வேலைதான், இந்த போராட்டத்தை அரசியல்மயமாக்கியது.

அதனால் இது என்.எல்.எவ்.ரி. போராட்டமல்ல. உண்ணாவிரதம் இருந்தவர்களில் நால்வர் என்.எல்.எவ்.ரி. உறுப்பினர்கள் அல்லது ஏதோ வகையில் தொடர்புடையவர்களாக இருந்தபோதும் கூட, ஊர்வலத்தை நான் தலைமை தாங்கிச் சென்றபோது என்னுடன் முன்னின்றவர்கள் என்.எல்.எவ்.ரி. யாக இருந்த போதும் கூட, விமலேஸ்வரன் மாணவர்கள் சார்பாக வெளியிட்ட பொது அறிக்கையை என்.எல்.எவ்.ரி. எழுதிய போதும் கூட, என்.எல்.எவ்.ரி. யின் தலைமையில் நடந்த போராட்டமல்ல. என்.எல்.எவ்.ரி.யின் அரசியல் தான், இங்கு இந்தப் போராட்டத்தை அரசியல் மயமாக்கி அதை வழிநடத்தியது. 

தொடரும்

பி.இரயாகரன்
13.07.2010     

7. சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)     

6. போராடினால் மரணம், இதுதான் புலியின் மொழியாக நாம் தொடர்ந்து போராடினோம்; (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 06)

5. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)