நீதி, சட்டம் முதல் ஜனநாயகம் வரையான அனைத்தும், ஆளும் வர்க்கத்துக்கு விபச்சாரம் செய்வது தான் அதன் தார்மீக ஒழுக்கமாகும். உண்மைக்கும், மக்களின் உரிமைக்கும், மக்களின் வாழ்வுக்கும் இடமில்லை என்பதைத்தான், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வரலாறாக மனிதகுலத்தின் முன் சொல்லி வந்துள்ளனர். மக்கள் போராடினால் தான் அவர்களுக்கு விடிவும், ஏதாவது கிடைக்கும் என்பதையும் மக்களின் வரலாறு புகட்டி வந்துள்ளது.

இப்படி இருக்கின்றது கடந்தகால உண்மைகள். ஆனால் நாங்கள் பொய்மைக்குள் வாழ முற்படுகின்றோம். கற்பனையில் தீர்வு காண முனைகின்றோம். எம்மைச் சுற்றிய மனித குலத்தை நம்பி, நாம் போராடுவதில்லை. இலங்கை மக்களின் சாபக்கேடு இது.

இப்படியிருக்க மனிதர்களைக் கொன்றும், அவர்கள் சொத்துகளைத் திருடிய கூட்டம், இன்று அதைப் பாதுகாக்க போராடுகின்றனர். வேடிக்கையான, ஆனால் திமிர்தனமான பாசிச கும்பல்களின் வக்கிரமான போராட்டம்;. எங்கள் மக்களை நாங்கள் கொல்வது எங்கள் உரிமை, இதை தடுக்கவோ கேட்கவோ முடியாது என்று கூச்சல் போடும் போராட்டம். மகிந்த தலைமையில், பாசிசப் பரிவாரங்கள் நடத்தும் வேள்வி. இப்படி தங்கள் மனிதவிரோத நடத்தைகளை மூடி பாதுகாக்கப் போராடுவதைத் தான் ஜனநாயகம் என்று, இலங்கை அரசு விளக்கம் கொடுத்து தன் நாய்க்கு மனிதத் தசையை ஊணாகப் போடுகின்றது.

ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான்;. இதுதான் ஜனநாயகம் பற்றிய அடிப்படையான அரசியல் விளக்கம். ஆளும் வர்க்கம் தன்னை பாதுகாக்க ஜனநாயகத்தின் உள்ளார்ந்த வர்க்கத்தின் அடிப்படையான கூறுகளை, வெளிப்படையாக முன்னிறுத்தும் போது அது அம்பலமாகத் தொடங்குகின்றது. மக்களின் மேலான ஓடுக்குமுறையே, அப்பழுக்கற்ற ஜனநாயகமாகி விடுகின்றது.

இதுவே பாசிசமாக வெளிப்படுகின்றது. இலங்கையில் அண்மைய போர்க்குற்றங்கள் என்பது, வெளிப்படையான ஒரு உண்மை. மக்கள் இனவழிப்பு வடிவில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதும், சரணடைந்தவர்களையும் கைது செய்தவர்களையும் கொன்றதும் கூட, மனித சமூகத்தின் முன் உள்ள ஒரு உண்மையாகும். ஆனால் உண்மை பொய்யாகின்றது, கேலிக்குரியதாகின்றது.

இப்படியிருக்க இதையே தங்கள் அரசியல் காய்களாக, தங்கள் ஆடுகளத்தில் வைத்து  இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரை காய் நகர்த்துகின்றது. இதன் பின்னணியில் தங்கள் நலன் சார்ந்த, அருவருக்கத்தக்க, மனித விரோதக் கூறுகளே முதன்மை பெற்று நிற்கின்றது. போர்க்குற்றம் பற்றிய மறுப்புகள், விசாரணைகள், அனைத்தும் தொடர்ந்து மக்களை ஓடுக்குவதற்கான, அவர்களின் சொந்த நலன் சார்ந்த குறுகிய முயற்சிதான்.

இலங்கையில் மக்களை கொல்வது என்பதும், அதற்காக அவர்களைத் தண்டிக்காமல் இருத்தல் என்பதும், புலிகளின் இறுதிப்போரில் மட்டும் நடக்கவில்லை. 1971 ல் ஜே.வி.பி, மீண்டும் 1989-1990 இல் ஜே.வி.பி, 1977 முதல் 2009 வரை தமிழ்தேசியம் மீதான அழித்தொழிப்பிலும் தொடர்சியாக பாரிய மனித படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியே வந்துள்ளது. இப்படி கடந்த 40 வருடத்தில், 5 லட்சம் பேரை அரசு திட்டமிட்டு இலங்கையில் படுகொலை செய்தது. ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை.

இங்கு தமிழன் சிங்களவன் என்று எந்த இனப் பாகுபாட்டையும், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க நோக்க படுகொலையின் போது கையாளவில்லை. ஆனால் இக்காலகட்டத்தின் குறித்த எல்லைக்குள் மட்டும், இனப்பாகுபாடுகள் சார்ந்த படுகொலைகளை அரங்கேற்றின.

இப்படி உண்மை இருக்க, தாம் சார்ந்து உருவான மனிதப் படுகொலைக்கு எதிரான போராட்டத்தை, ஜே.வி.பி முதல் புலிகள் வரை முன்னிறுத்திப் போராடவில்லை. தங்கள் குறுகிய மக்கள் விரோத அரசியலையும், சுயநலம் சார்ந்த குறுகிய எல்லையில் மக்களை வழிநடத்திய வக்கிரங்களுக்குள் தான், மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர்.

இன்று புலிகளுடனான இறுதி யுத்தம் மூலம் நிகழ்த்திய பாரிய மனிதப் படுகொலை பற்றிய விவாதங்கள், விசாரணை நாடகங்கள், அக்கறைகள் அனைத்தும் இதை மூடிமறைத்து தங்கள் சுயலாபங்களை பாதுகாக்கவும், அதை அடைவதற்காகத்தான் குலைக்கின்றனர். மக்கள் பற்றிய அக்கறையின் பாலானதல்ல.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களில் இந்தியாவின் குறிப்பான பங்கே முதன்மையான அரசியல் கூறாக இருப்பதும், அதன் குடையின் கீழ் இலங்கை நிற்பது வெளித் தெரியாத ஒரு அரசியல் உண்மை. இலங்கையில் ஏகாதிபத்திய நலன் சார்ந்த போர்க்குற்றக் கூச்சல்கள், தங்கள் நலனை அடைவதற்கு அப்பால் இந்தியாவை மீறியதுமல்ல.

வரையறுக்கப்பட்ட இந்த நாடகம் தான், ஐ.நா ஊடாக பான்கீமூன் காட்சிப்படுத்துகின்றார். இது கடந்தகால போர்க்குற்றத்தை விசாரிக்கவோ, குற்றவாளிகளைக் கூண்டிலோ நிறுத்தப்போவது கிடையாது. மாறாக இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்து, அதற்குள் தன் நலனைப் புகுத்திய, அதற்கு எதிரான மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியாக இல்லாமல் செய்கின்ற அரசியல் சதியாகும். தமிழ்மக்கள் மத்தியில் ஆதிக்கம் பெற்ற தமிழ் வலதுசாரியமோ, போர்க்குற்றத்தை ஐ.நா ஊடாக குழிதோண்டிப் புதைக்கின்றது.

உலக மக்களை நம்பி, அவர்கள் மூலம் இதை முன்னெடுத்துப் போராடுவதற்கு பதில், தங்கள் வலதுசாரி பாசிசப் புதைகுழியில் இதையும் சேர்த்து இன்று புதைக்கின்றனர்.

மறுபக்கத்தில் அரசு நாம் விசாரணை செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு, போர்க் குற்றத்தின் எச்ச சொச்சங்களை இனம் கண்டு புதைக்கவே விசாரணைக் குழு அமைத்திருக்கின்றது. இதை மூடிப் பாதுகாக்க மகிந்தா குடும்பம், தன் நாயான விமல் வீரவன்சாவை அவிழ்த்து விட்டிருக்கின்றது. இது ஐ.நா முன்னின்று வள்ளென்று குலைக்கின்றது. முன்பு ஜே.வி.பி.யின் இனவாதத்தை கக்கிக் குலைத்த நாயல்லவா இது. இன்று நாயின் சொந்தக்காரன் மாறியவுடன், அதற்கு ஏற்ப இது குலைக்கின்றது. ஜே.வி.பி.யோ புலியைப்போல், அரசியலில் காணாமல் போகின்றது.

இப்படி குலைப்பதையே ஜனநாயகம் என்றும், போராடும் உரிமை என்றும், ஐ.நாவுக்கும் அதை இயக்கும் ஏகாதிபத்தியதுக்கும் இலங்கை திருப்பி வகுப்பெடுக்கின்றது. உலகில் நிலவும் ஏகாதிபத்திய முரண்பாடுகள், இலங்கையில் வெடித்துக் கிளம்புகின்றது.

மகிந்தாவின் நாய் ஐ.நா அலுவலகத்தின் முன் நின்ற குலைத்த அதேநேரம், ரூசியா தூதரகத்துக்கு முன் வாலை ஆட்டி நக்கியும் காட்டியது. மேற்குக்கு கல்லெடுத்து எறிந்ததன் மூலம், இந்த ஏகாதிபத்திய சண்டையோ இலங்கையில் வெளிப்படையான மோதலாக வெளிப்பட்டு வருகின்றது.

இது இலங்கை மக்களை மேலும் ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் தாண்டி, இலங்கை மக்கள் எதையும் அடையப்போவதில்லை. மக்கள் தமக்காக தாம் போராடாமல், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவோ, உரிமைகளைப் பெறவோ, தமக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கவோ முடியாது. இதுதான் மனித வரலாறாகும். இதை நாம் கற்றுக் கொண்டால் தான், கற்றுக் கொடுத்தால் தான், உண்மையும் நீதியும் மக்கள் வரலாறாக மாறும்.

பி.இரயாகரன்
10.07.2010