உணர்ச்சிகளைத் தூண்டும் வாசகங்களுடன், ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை (15 லட்சம் பேர் (…?…) கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு சென்னை தீவுத்திடலில் ஜூலை நாலாம் தேதி நடத்தவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் உரிமையுடன்(!) அழைக்கும் குழும மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கக் கோரி நடப்படவிருக்கும் மாநாடு என்பதாக அனுப்பப்பட்ட விளம்பரங்கள் கூறுகின்றன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சியிலிருப்பவர்களே அது வன்னியர்களின் முன்னேற்றத்திற்கு என்று நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு இடஒதுக்கீடு போராட்டத்தினால் முஸ்லீம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்து விடும் அல்லது முன்னேறுவதற்கு உதவிகரமாய் இருக்கும் என நம்பவைக்கப்படும் இந்த மாநாடு குறித்து அதாவது இட ஒதுக்கீடு குறித்து சில தெளிதல்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்பது மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மட்டுமல்லாது அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை வெற்றிகரமாக குத்தப்பட்டுவருகிறது. அரசு எந்திரம் முழுமையும் பார்ப்பனீயத்திற்கு, சங்பரிவார செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் சங்பரிவாரங்களின் செயல்திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே தெளிவாகச் சொன்னால் முஸ்லீம்கள் எந்தத்திசையில் பயணித்தால் தங்களுக்கு நல்லது என சங் பரிவாரங்கள் எண்ணுகின்றனவோ அதே பாட்டையில் இஸ்லாமிய இயக்கங்கள் பயணிக்கின்றன என்பதும் மறுக்கவியலாத உண்மையாகிவருகிறது.
அறுதியான அரசியல் வெற்றி எனும் குறிக்கோளுடன் தனது செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கும் சங்கப் பரிவாரங்கள் அதற்கான நடைமுறையாக ஒரு பொது எதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்து எனும் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்கிறது. இன்றைக்கு அந்த பொது எதிரியாக இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாம் எனும் மதத்தை முஸ்லீம்களிடையே பலங்குன்றச்செய்யவேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்திருந்தால் அது கைக்கொண்டிருக்கும் அரசு எந்திரத்தைக் கொண்டு வெகு சுலபமாக அதை செய்திருக்க முடியும். இஸ்லாத்தின் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சலுகைகள் கொடுத்து வேறு பிரிவினரை புறக்கணித்திருந்தால் எந்தச் சிரமமுமில்லாமலேயே முஸ்லீம்களுக்குள் இஸ்லாமிய ஐக்கியத்தை சிதறடித்திருக்கமுடியும். ஆனால் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டது தொடங்கி இன்று எந்தப் பேதமுமில்லாமல் விசாரணைக்கைதியாக முடக்கி வைத்திருப்பது ஈறாக மிகக் கவனமாக அதை தவிர்த்திருக்கிறார்கள். 47க்கு முன்னிருந்த இந்தியாவில் முஸ்லீம்களின் பெரும்பான்மையை திட்டமிட்டு தனி நாடாக பிரித்துவிட்டு, பின்னர் முஸ்லீம்களை ஓரணியில் திரள வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அடிமையாய் தீண்டத்தகாதவனாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கிவைத்திருக்கும் மக்களை முஸ்லீம்களின் ஒற்றுமையை காட்டித்தான் இந்து எனும் பட்டிக்குள் அடைக்க முடியும். அதற்கு முஸ்லீம்கள் ஒற்றுமையாய் ஓரணியில் நிற்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.
இடஒதுக்கீடு என்பது ஒரு இடைக்கால ஆறுதலாக இருக்கலாமேயன்றி அது ஒரு தீர்வாக அமையாது. எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் இதுவரையில் எட்டப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் எனும் திசையில் வந்த இடஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்களல்ல பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் பெயரால் ஒடுக்கியவர்களே பலனடந்தார்கள். இடஒதுக்கீட்டின் பலனால் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறிவிடவில்லை. மாறாக பலனடைந்த வெகுசிலரும் ஒடுக்குபவர்களாக பரிணாமமடைந்தார்கள். அதேநேரம் ஒடுக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே பெற்றிருக்கும் எழுச்சி இடஒதுக்கீட்டின் விளைவல்ல, அரசியல் விழிப்புணர்வினால் ஏற்பட்ட எழுச்சி. அரசியல் அறியாமையைக் களையாமல், விழிப்புணர்வு பெறாமல் இடஒதுக்கீட்டினால் ஏழை உழைக்கும் வர்க்க முஸ்லீம்கள் எந்தப் பலனையும் அடைந்துவிட முடியாது.
பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்த மாநாட்டின் மூலம் மைய அரசிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்த மைய அரசு தொடக்கம் முதலே இஸ்லாமியர்களை திட்டமிட்டே புறக்கணித்து வந்துள்ளது என்பதை, குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வேளைகளில் குயுக்தியுடன் செயல்பட்டு முஸ்லீம்களை சிக்கவைத்தார்கள் என்பதை, நாடெங்கும் விசாரணைக் கைதிகளாக முஸ்லீம்களை எந்தவித உரிமையும் கிடைக்கவிடாமல் வதைத்தார்கள் என்பதை வீரியத்துடன் பேசிவருகிறார்கள். அதாவது எந்த மைய அரசு முஸ்லீம்களை புறக்கணிக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்களோ, எந்த அரசு எந்திரத்தின் மனோ நிலை முஸ்லீகளுக்கு விரோதமாக இருக்கிறது என எண்ணுகிறார்களோ அந்த மைய அரசு (எந்தக் கட்சி அரசாக இருந்தாலும்) பத்து விழுக்காடு இடஒதுக்கீடு தந்துவிட்டால் முஸ்லீம்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறி விடுவார்கள் அல்லது முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று எந்த அடிப்படையில் எண்ணுகிறார்கள்? முஸ்லீம்களை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்குவதை திட்டமாக கொண்டு செயல்படும் அரசு எந்திரம் பத்து விழுக்காடல்ல ஐம்பது விழுக்காடு தந்தாலும் அதனால் பலன் ஒன்றும் விளையாது.
முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டாலும் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் என்ன நிகழ்ந்ததோ அதுவே முஸ்லீம்களுக்கும் ஏற்படும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்று சத்தமாக மேடையேற்றினாலும், குரான் ஹதீஸில் (ஒருவேளை) இல்லை என்று எடுத்துக்காட்ட முடிந்தாலும், இந்தியாவில் முஸ்லீம்களுக்குள் ஜாதி இருக்கிறது என்பது தெளிவு. பிற்படுத்தப்பட்டோர் எனும் அடையாளத்துடன் அடக்குமுறைச் சாதியினரே ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலனை அறுவடை செய்ததுபோல் முஸ்லீம்களிலும் அடைவார்களே தவிர பக்கிரிஷாக்கள், நாவிதர்கள் போன்றோருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்காது. ஏனென்றால் ஜாதிகள் இருக்கிறது என்பதை ஒருக்காலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. காயம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாலல்லவா மருந்திடுவது குறித்து சிந்திக்கமுடியும். காயம் என்ற ஒன்று இல்லை என குரானை தடவிப்பார்த்துச் சொல்லும்போது அதை குணமாக்குவது குறித்து எப்படி யோசிப்பது?
இன்றைய நிலையில் இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் கல்விக்கூடங்கள் எத்தனை? ஒரு முஸ்லீமுக்கு பணம் இல்லாமல் கல்லூரியில் இடம் வாங்க முடியுமா? அடிமையாய் வேலைவாங்க முடியும் என்பதால் அடித்தட்டு முஸ்லீமாகப் பார்த்து தன் நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுக்கும் ஒரு முஸ்லீம் முதலாளி தொழிலாளர்கள் முஸ்லீம் என்பதால் சலுகை எதுவும் கொடுத்துவிடுவானா? பின் யாருக்கு பலனளிப்பதற்காக இடஒதுக்கீடு?
ஓட்டுப்பொருக்கி அரசியல் நடத்துபவர்கள் தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டி பலம் காட்டுவதைப்போல 15 லட்சம்பேர் என்று முன்கூட்டியே கணக்கிட்டு இடஒதுக்கீடு கேட்கும் இந்தப் போராட்டம் எந்த அடிப்படையில் நிற்கிறது? தமிழகத்தில் கடந்த ஒராண்டில் அரசில் வேலை பெற்றவர்கள் எத்தனை பேர்? பத்தாயிரம் கூட இருக்காது என்கிறது ஒரு நாளிதழ் செய்தி. பத்தாயிரம் கூட இல்லாத வேலைவாய்ப்பில் பத்து விழுக்காடு ஒதுக்கீட்டுக்கா 15 லட்சம் பேர் திரண்டு போராடப் போகிறீர்கள்? கல்வி, மருத்துவம், பொதுத்துறை, உணவு வழங்கல், பொதுவிநியோகம், உள்கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அரசு தனியாரிடம் கைமாற்றிக்கொண்டிருக்கிறதே அதை கண்டு கொள்ளாமல் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டுப்போராடுவது, கோமணமே பறிபோய்க் கொண்டிருக்கையில் அதில் ஒரு நூல் பச்சை நூலாக இருக்கவேண்டும் எனக்கோரிப் போராடுவது போலில்லையா? தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினால் கூட அதில் பொருளிருப்பதாக கொள்ளமுடியும். அரசு எல்லா வேலைவாய்ப்புகளையும் தனியாரிடம் மடைமாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டமா?
போராட்டம் என்பது மகிழ்ச்சி அது தனக்கு மட்டும் என குறுக்கிக் கொள்வது கடைந்தெடுத்த சுயநலம். எல்லோருக்குமாக போராடுவோம். ஒரு ஜாதியினர் தங்களுக்கான உரிமை என்று போராடினால் அது ஜாதிக் கட்சி. ஒரு மதத்தினர் தனக்கான உரிமை என்றாலும் அதன் பொருள் மாறுவதில்லை. வர்க்கக் கோடு வெகு அழுத்தமானது, மதம் எனும் அழிப்பானால் அதை அழித்துவிட முடியாது. நாடே மறு காலனியாதிக்கத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுகளிலிருந்து முஸ்லீம் மட்டும் தப்பித்துவிட இயலுமா? தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளால் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மட்டும் விடப்பட்டுவிடுவார்களா? ஏகாதிபத்திய மூலதனக் குவிப்பால் எட்டமுடியாத உயரத்தில் விலைவாசிகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு மட்டும் அது எட்டிவிடுமா? எனவே, கல்வியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல கல்வி ஒரு அடிப்படை உரிமை அதை அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கு என்று போராடுவோம். வேலைவாய்ப்பில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றல்ல, வேலை வாய்ப்பு என்பது அனைவருக்குமான வாழ்வாதார உரிமை, அதை அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமை என்று போராடுவோம். அரசு என்பது முதலாளிகளின் கருவியாக இருக்கிறது, அதை பாட்டாளிகளுடையதாய் மாற்றுவோம். அதற்கான போராட்டங்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அது தான் காலத்தின் தேவையாக இருக்கிறது.