ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

எந்தவொரு விடையத்தையும் அறிவியல் பூர்வமான விளங்கி, அதை உணர்வுபூர்வமாக முன்னெடுத்தல் மூலம் தான் மாற்றங்கள் நிகழ்கின்றது. சமூக புரட்சிகள், சமூக மாற்றங்கள் கூட அப்படித்தான் நிகழ்கின்றது. அன்று நான் என்.எல்.எவ்.ரி. அமைப்பின் உறுப்பினராக, அதன் மத்திய குழு உறுப்பினராக இருந்தபடி இப்படித்தான் கருதி செயல்பட்டேன். பிரச்சாரம் கிளர்ச்சி என்று முனைப்பாக முன்னெடுக்கும் எனது தீவிர செயல்பாட்டில், தனிநபர்களின் குறிப்பான பாத்திரம் கூட யாழ்பல்கலைக்கழகப் போராட்டத்தில் வெளிப்பட்டது. அன்று ராக்கிங்கை எதிர்த்து போராடுவது என்ற எனது முடிவு, அமைப்பின் பொது அரசியலுடன் இணைந்ததுதான். அதை முன்னெடுப்பதை, நான் எனது பல்கலைக்கழக படிப்புடன் தேர்ந்தெடுத்தேன்.

இந்த அரசியல் வழிமுறை புலிகளின் அதிகாரம் சார்ந்த வன்முறைக்கும், அதன்  வடிவத்துக்கும் நேரெதிரானது. மாணவர்கள் செய்து வந்த  ராக்கிங்கையும், அதன் பண்பாட்டு கூறுகளையும், அரசியல் ரீதியாக புரிந்து அதை உணர்வுபூர்வமாக கைவிடுவதை புலிகள் தடுத்து நிறுத்த விரும்பினர். இதனால் வலிந்த வன்முறையை மாணவர்கள் மீது ஏவினர்.      

இப்படி மூன்று மாணவர்களைப் புலிகள் தாக்கிய நிகழ்வைத் தொடர்ந்து, தன்னெழுச்சியான போராட்டம் வெடித்தது. இதை ஒழுங்குபடுத்தி அதை வழி நடத்தும் வண்ணம், புதிய மாணவர் அமைப்புக் குழு உருவானது. பழைய புலி சார்பு அமைப்புக் குழு, தன்னைத்தான் சட்டப்படியான அமைப்பு என்று கூறியது. இருந்த போதும் சிறிது காலத்தில் அது முற்றாகவே புலி உறுப்பினராகவே எஞ்சியதால், தொடர்ந்தும்  உரிமை கோருவதைக் கைவிட்டது.

புதிய அமைப்புக்குழு முன்னெடுத்த போராட்டத்தை அடுத்து, அது முன்வைத்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக புலிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி அன்று அமைப்புக் குழுவின் போராட்டம், தற்காலிகமாக வெற்றிபெற்றது.

ஆனால் புலிகள் தங்கள் சொந்த வாக்குறுதிகளை பேணுபவர்கள் அல்ல. புலிகள் பழிவாங்குவார்கள் என்பதும், மீண்டும் மீண்டும் அதையே செய்பவர்கள் என்பதும்தான் அவர்களின் நடைமுறை அரசியல். சுயவிமர்சனம், விமர்சனம் அவர்களின் சொந்த அரசியல் அகராதியில் கிடையாது. தங்கள் சொந்த வாக்குறுதியைக் கூட, அவர்கள் என்றும் பேணுவது கிடையாது. மற்றவர்களை ஏமாற்றுவதுடன், அடிப்படையில் நேர்மையற்றவர்கள்.  அத்துடன் கடைந்தெடுத்த பொய்யர்கள். அன்று யாழ் பல்கலைக்கழத்தில் இவை அனைத்தையும் தான், புலிகள் தங்கள் சொந்த நடத்தையாக கொண்டிருந்தனர்.

புலிக்கு எதிரான புதிய அமைப்பு குழு நடத்திய போராட்டத்தின் போது, புலிகள் வழங்கிய வாக்குறுதியை மூன்று மாதத்துக்குள்ளாகவே மீறினர். ஆம், இந்த அமைப்புக் குழுவை அமைக்க முன்னின்று போராடிய  விஜிதரன் காணாமல் போனான். புலிகள் இம்முறை தந்திரமாக  இனம் தெரியாத நபர்கள் என்று கோழைகளாக மாறி, இந்த ஈனச்செயலை அன்று செய்தனர். இங்கு யார் செய்தது என்று தெரியாத மர்மத்தைக் கொண்டு, தங்கள் மக்கள்விரோதச் செயலை அரங்கேற்றினர். கேடுகெட்ட இழிவான நடத்தைகளை மக்கள் மேல் ஏவினர்.  

மீண்டும் போராட்டம். இம்முறை அமைப்புக் குழு அதை முன்னெடுத்தது. ஆரம்பத்தில் ஒரு சில நாட்களில் விஜிதரனை விட்டுவிடுவார்கள் என்று கருதி, ஒரு அடையாள எதிர்ப்பு போராட்டமாகத்தான் தொடங்கியது. ஆனால் அது அப்படியல்ல என்பதும், ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் கடத்தவில்லை பிடிக்கவில்லை என்று கூறியதன் மூலம், அவர் நிரந்தரமாகவே காணாமல் போய்விட்டது படிப்படியாக தெளிவாகியது. 04.11.1996 கடத்தப்பட்ட விஜிதரனுக்காக 18.11.1996 அன்று தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. அதுவரை அடையாளப் போராட்டங்கள் தான் நடந்தன.

குறிப்பாக அன்று புலிகள் தான் கடத்தினர் என்பது தெரிந்தும், அதை நிறுவ எம்மிடம் சாட்சிகள் இருக்கவில்லை. இது அன்றுமட்டுமல்ல இன்றும் கூடத்தான். கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகளை மூடிமறைத்தும், அதன் மேல் குற்றம்சாட்டும் போது அதற்கு ஆதாரம் கேட்டும் இழிவாக மலிவாக மூடிமறைத்து இன்று அரசியல் செய்வது போல்தான், அன்றும் யாழ்பல்கலைக்கழகத்திடம் புலிகள் தாம் கடத்தியதுக்கு ஆதாரம் கேட்டனர். இந்த அசிங்கமான மக்கள் விரோத அரசியல் பின்னணியில், நாம் குற்றச்சாட்டை மறைமுகமாக வைக்க வேண்டியிருந்தது.

அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் பொதுக் கருத்தில் இணைக்க, நேரடிக் குற்றச்சாட்டு  தடையாக முன்னின்றது. ஆதாரமற்றது என்ற புலிகளின், பிரச்சாரத்தை எதிர்கொள்ள வேண்யிடிருந்திருக்கும். பல எதிர்ப்பிரச்சாரத்தை புலிகள் அன்று நடத்தினர். ஏன் இன்றும், வெளிப்படையற்ற கடந்தகால விடையங்களில் கூட இதுதான் இன்றைய நிலைமை. 

அன்று புலிகளை குறிப்பாக குற்றம் சாட்டினால், இதில் விரிசலை உருவாக்கும் வண்ணம் புலி தன் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. புலிகள் அமைப்புக் குழுவிலும், மாணவரிடையேயும் விரிசலையும்,  பிளவையும் உருவாக்க முனைந்தது.

இதனால் அமைப்புக் குழு தனியே புலியை நோக்கியல்ல, இயக்கங்களை நோக்கி, தன் கோசத்தை வைத்தது. புலிகள் விஜிதரன் தானாக காணாமல் போனதாக கூறி பிரச்சாரம் செய்ததை மறுத்து, அமைப்புக் குழு இயக்கமே கடத்தியதாக தன் கோசத்தை முன்னிறுத்தியது.

தொடர்ச்சியான புலிகளின் எதிர்ப்புரட்சி அரசியல் பிரச்சாரங்களை, வலதுசாரிய தந்திரங்களை, திட்டமிட்ட திசைதிருப்பல்களை, தொடர் அவதூறுகளை, இனம் தெரியாத அவதூறு துண்டுப்பிரசுரங்களை,  வன்முறைகளை இந்த போராட்டம் மேல் தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் நடத்தினர்.

இதை எல்லாம் எதிர்கொண்டு,  நாம் போராட வேண்டியிருந்தது. நாம் 7 கோரிக்கைளை,  (5 மாணவர்கள் சார்ந்தது, இரண்டு மக்களைச் சார்ந்தது) இயக்கங்களை நோக்கி முன்வைத்தோம். இதுதான் கடந்த 40 வருட போராட்டத்தில் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை உள்ளடக்கியதாக, பரந்துபட்ட மக்களின் ஆதரவுடன் முன்னெடுத்த ஒரு அரசியல்  போராட்டமாகியது. இதை வெளியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னெடுக்கவும் நகர்த்தவும், ஒரு கட்சியிருக்கவில்லை.

எப்போதும் போராடுவதற்கு தயாராக மக்கள் இருந்தார்கள். வலதுசாரி போராட்ட மரபை மட்டும், தமிழ்மக்கள் தங்கள் வரலாறாக கொண்டிருக்கவில்லை. 1960 இல் சண் தலைமையிலான கட்சி எடுத்த சாதிய எதிர்ப்புப்போராட்டம், இடதுசாரிய மாணவர் அமைப்புக் குழு முன்னனெடுத்த யாழ்பல்கலைக்கழகப் போராட்டம், தெளிவாக சில உண்மைகளை  எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் உண்மைக்காக, பரந்துபட்ட இடதுசாரிய தன்மையுடன் போராடும் மக்களின் உணர்வை, இவ்விரு போராட்டமும் குறிப்பாக எடுத்துக் காட்டியது. ஆனால் இங்கு சரியான ஒரு கட்சி இருக்கவில்லை என்ற உண்மைதான், தமிழனின் வரலாறு என்பது வலதுசாரி வரலாறாக திரித்துக் காட்ட உதவுகின்றது.  

தொடரும்

பி.இரயாகரன்
07.07.2010

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)