ஆண்டு 1975 முதலாம் பகுதி

1975 களில் இலண்டனில் இருந்த இரத்தினசபாபதி, ஏற்கனவே 'ஈழவர் இடர்தீர' என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அப்பொழுது இலண்டனில் இயங்கிவந்த General Union of Palestinian Students (GUPS) உடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததுடன், அதன் மாதிரியாக (GUES) என்ற மாணவர் அமைப்பையும் இவர் உருவாக்கியும் இருந்தார். 

தமிழாராய்ச்சி தொடக்க நாளான தை 3ஆம் நாளின் ஒரு வருட நிறைவன்று (03.01.1975), அதிகாரபூர்வமாக 'ஈரோஸ்' என்ற அமைப்பு இரத்தினசபாபதியால் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுமிருந்தது.

 

கடந்தவருடம் சிவகுமாரனின் மரணத்துக்குப் பின்னர்...

'இளைஞர் பேரவையில்' இருந்து பிரிந்த ஒருபகுதி இளைஞர்கள் தம்மை ''ஈழ விடுதலை இயக்கம்'' (ELO) என அடையாளப்படுத்தியபடி, கூட்டணித்தலைமையை பகிரங்கமாக நிராகரித்து அதை பிற்போக்குத் தலைமையெனக் கண்டித்தனர். இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்த தீவிரவாத இளைஞர்களுக்குள் இவர்களே முதன்முதலில் ''சோசலிச தமிழீழம்'' என்ற கருத்தை முன்வைத்து கூட்டணியினரை பகிரங்கமாக மக்கள்முன் அம்பலப்படுத்த முற்பட்ட முதலாவது விழிப்புணர்வு இளைஞர் சக்தியாகும்!

இவர்களுக்குச் சரியான தலைமைத்துவ வழிகாட்டல் இல்லாமையாலும், சுலபமான கூட்டணியின் ஊடுருவலாலும், இவ்விளைஞர்களின் துடிப்பான வருகை வரலாற்றில் அழிந்து சிதைந்து போனது. தேசிய இன முரண்பாடு தொடர்பாக இக்காலத்தில் தொழிற்பட்ட 'இடதுசாரிகள்' யதார்த்தத்தில் பிற்போக்குக்கு எதிரான இளைஞர்களை உள்வாங்கத் தவறி இருந்தனர். மறுபுறத்தில் இடதுசாரி அமைப்பிலிருந்த பல வாலிபர்கள் இப்போராட்டத்தால் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பதும் மறுதலையான நடைமுறையாகவே இருந்தது.....

இவ்வருடத்தின் ஆரம்ப நாட்களில் இளைஞர் பேரவையின் முக்கிய நபர்களாகக் கருத்தப்பட்ட 'மாவை', 'காசியானந்தன்' .... போன்றவர்கள் கொழும்புச்சிறையில் இருந்தனர்.

காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருக்கும் சிறைக்கைதிகளை விடுவிக்குமாறு கூட்டணி அரசிடம் ஓர் கோரிக்கையை முன்வைத்தது.

இத்தேர்தலில் கூட்டணி தந்தை செல்வாவை எதிர்த்து தமது 'கூட்டுமுன்னணி' கம்யூனிசக் கட்சியின் வி.பொன்னம்பலம் நிற்பதும், 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி' யின் மாவிட்டபுரம் கோவில் பிரவேசத்தின் (ஆலயப்பிரவேசத்தின்) போது எதிரணியில் நின்ற முக்கிய 'தமிழ்காங்கிரஸ்' பிரமுகர்களும், இப்பொழுது கூட்டணியுடன் ஓரணிக்குள் பக்கபலமாக வந்திருந்தனர்.

இவ்வேளையில்...

கொழும்புச் சிறையில் இருந்த கூட்டணியினரின் அதிமுக்கியமான 'பொறுக்கி எடுக்கப்பட்ட' ஆதரவு இளைஞர்களை, அரசு  இவ் இடைக்காலத் தேர்தலுக்கு முன் விடுதலையும் செய்திருந்தது.... (இது நெருங்கிவரும் அணிசேரா மாநாட்டையும் கருத்தில் கொண்டு செயலாற்றியும் இருந்தது)

விடுதலை செய்யப்பட்ட இந்த இளைஞர்களுக்கு....

இதுவரைகால வரலாற்றில் நடக்காத, சிவகுமாரனின் மரணத்தின் பின் அறிமுகமான, 'இரத்தத்திலகமிடும்' நடைமுறை> ''சிறைமீண்ட செம்மல்கள்'' என்ற கோசத்தோடும், அன்றைய இளைஞர் பேரவையால், கூட்டணியின் சால்வை போர்த்து, இரத்தத்திலகமிட்டு வரவேற்புப் 'படையல்' வரலாற்றில் நாடகமாக நடந்தும் முடிந்தது.....

இந்தக்கூத்துக்கள் நடப்பதற்கு முதல்...

இளைஞர் பேரவைக்குள், கூட்டணிக்கு எதிரான இளைஞர் பிரிவு - மற்றும் வி.பொன்னம்பலத்தின் கருத்தை எதிர்க்கும் (மாவை மற்றும் காசி போன்றோரின் ) வெற்றிடத்தை ஈடுசெய்யும் முகமாக....

சந்ததியார் போன்ற பேச்சுத்திறன் மற்றும் இயங்கும் திறன் கொண்ட சக்திகளை, கூட்டணி முன்னுக்குத் தள்ளியது!

காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலின் இறுதிநாட் கூட்டத்தின் போது....

சந்ததியார் தனது தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்துக்கொண்டு உரும்பிராய் வேம்பன் மயானத்துக்கு (கால்நடையாக), சிவகுமாரனின் மயானக்கல்லறைக்குச் சென்றனர். அங்கு சத்தியப்பிரமாணம் எடுத்தபிறகு இவ்விளைஞர்கள் கால்நடையாகவே 'முற்றவெளி' இறுதிக்கூட்டத்துக்குச் சென்றும் இருந்தனர்.

இவர்களின் இந்த நடவடிக்கையை வழிமறித்த அரச இயந்திரப் பொலீசார், இவ்வூர்வலம் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு  இடைஞ்சலாக இருப்பதாக வாதாடினர். ''கையில் காசில்லாததால், இறுதிக்கூட்டத்துக்கு தாம் நடந்து செல்வதாக'' சந்ததியார் வாதிட்டார்...

விலகிய பொலீசார், அமீருடன் தொடர்புகொண்டதை அடுத்து, அமீரின் வருகை அங்கு சாத்தியமானது. இதையடுத்து அமீரால் வீதியில் சென்ற வாகனத்தில் இவ் இளைஞர்கள் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

'பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடைஞ்சல் இல்லாதவாறு' தேர்தல் பிரச்சார நடைமுறைகள் நடைபெறவேண்டும் என்பது சட்டமாகவே இருந்தது!..

தேர்தலுக்கு நாலுநாள் முன்னதாகவே இருந்த சுதந்திரதினத்துக்கு முன்னர்.. கூட்டணியினர், சதந்திரதினத்தன்று, ''பாராளுமன்றத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை பிரேரணையாகக் கொண்டுவருவதற்றகு முன்னறிவித்தல் கொடுத்ததாக  'கூட்டணி' அறிவித்தும் இருந்தது!

இந்தக்காலத்தில்.. 'எரிமலை' என்ற பத்திரிகை ''தமிழீழக் கோரிக்கையை'' ஜனரஞ்சகப்படும் முயற்சியில் பெரும் பங்கெடுத்திருந்தது.

இக்காலத்தில் இலண்டனில் இருந்த ''ஈழ விடுதலை முன்னணியினர்'' இவ்வாறு தமது  'ஈழவிடுதலை' என்ற இலண்டன் வெளியீட்டில் வெளிப்படுத்தியும் இருந்தனர். மேலும் அவர்கள் அவ் வெளியீட்டில் வெளிவந்த ''ஈழத் தமிழினமே'' என்ற தொடரில் வரும் - ''உழுத்ததூண்கள் உடைக்கப்படவேண்டும்'' என்ற பகுதித் தலையங்கத்தின் கீழ் பின்வருமாறு எழுதியிருந்தனர்.

''ஈழத் தமிழினமே! ஈழ விடுதலை என்னும் இந்த இயக்கத்தில் வயதான அறிவாளிகள் யாரும் இல்லை, பெரிய பட்டதாரிகள் இல்லை, இளைஞர்கள்தானே இருக்கிறார்கள் என்று கூட  உன்வாயில் இருந்து சில சமயங்களில் ஊமைக்குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்கின்றனவே!  இயக்க நடவடிக்கைளையும் இயக்க அங்கத்தவர்கள் யார் யார் என்பது பற்றியும், இயக்கத்தின் நோக்கத்தைச் சிரமேற் கொண்டு எத்தனை வயதிலும் அறிவிலும் நிறைந்த பெரியவர்கள் உண்மையாக உழைக்கின்றார்கள் என்பதைப் பற்றியும் அறியாமல் வம்புபேச நினைக்கிறாயே!! சரி....''

(தொடர்ந்து முழுமையாக வாசிக்க: 'ஈழ விடுதலை' நான்காம் (04) பக்கம். இணையத் தொடர்புகளுக்கு:- 'தமிழ் தேசிய ஆவணச்சுவடிகள்'  http://www.tamilarangam.net/document/EelaViduthalai/eela01.pdf)

கூட்டணியின் கோரிக்கைக்காக விடுதலை செய்யப்பட்ட 'காசி' , 'மாவை' போன்றோருக்கு வெளியே இன்னும் விடுதலையாகாமல், பொ.சத்தியசீலன், பொ.திசைவீரசிங்கம், என்.அமரசிங்கம், ஞா.ஞானசேகரம், பி.நடேசானந்தம் போன்றவர்களை அடையாளப்படுத்தி, இவ் இளைஞர்பேரவையினரை விடுதலை செய்யக் கோரும்படி கூட்டணியினரை வலியுறுத்தும் எதிர்ப்பிரச்சாரத்தில் இலண்டனில் ஒரு பகுதியினர் ஈடுபட்டனர்.

இக்கோரிக்கைகள் பலம் பெறும் முன்னரே செல்வா இத்தேர்தலில் வெற்றி பெற்றும் இருந்தார்.

இத்தேர்தலுக்கு முன்னர் ஓராண்டு நினைவுக்கான பொதுமக்கள் தமது உறவினர்களின் படுகொலை நினைவாக (தமிழாராய்ச்சி -74) செவ்வரத்தம் பூக்களை இன்று கற்றூண் இருக்கும் இடத்தில் பரவி வைத்து அன்று சுயமாகவே அஞ்சலியைச் செலுத்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கூட்டணி தந்தை செல்வாவின் வெற்றியை அடுத்து 'சிறைமீண்ட செம்மல்' காசியானந்தன், தமிழீழத்தில் சாதிபேதங்களையும், தீண்டாமையையும், மத - பிரதேச வேறுபாடுகளையும் தகர்த்தெறிந்து தமிழினத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக தமிழீழம் அடங்கிலும் பாதயாத்திரை செல்ல இருப்பதாக செய்திகளை மேற்குலக இளஞர்களைக் குறிவைத்து வெளியிட்டும் இருந்தார்.

தொடரும்...

ரூபன்

06.07.10

1.ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...01

2.ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...02

3.ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...03

4.ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...04

5.ஜயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...05

6.ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...06