அன்று ராக்கிங் ஒரு பண்பாட்டு அம்சமா என்று கேட்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை அடுத்து, நடந்த பொதுக் கூட்ட மேடையில் பேச முற்பட்டேன். ஒரு வரி பேசிய போதே கூச்சல்கள் எழுந்தது. என்னைத் தாக்க சிலர் முற்பட்டனர். என்னைப் பாதுகாக்க ஒரு மாணவர் கூட்டம் அணிதிரண்டது.

இப்படி ராக்கிங், அன்ரி ராக்கிங் என இரண்டுபட்ட அணிகள், பல்கலைக்கழகத்தில் தோன்றியது. பெரும்பான்மை எனது துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் முதன் முறையாக சிந்திக்கத் தொடங்கியது. தொடர்ச்சியான அடுத்தடுத்த நிகழ்வுகள், பெரும்பான்மையை அன்ரி ராக்கிங் பக்கத்துக்கு கொண்டுவந்தது.

1. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனது துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து, பகிரங்க அறிக்கை ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டது.

2. யாழ் ஊழியர் சங்கமும் இதே நிலையை எடுத்தது.

3. நான் அன்ரி ராக்கிங்கை தலைமை தாங்கி அதை முன்னெடுக்கும் வண்ணம் ஒரு குழுவை உருவாக்கினேன்.  

இப்படி தொடங்கியது போராட்டம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளிவந்தவுடன், அதை வாபஸ் வாங்கக் கோரி ராக்கிங் செய்யும் குழு வகுப்புகளை நடத்த அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழகம் வகுப்புகளை இழுத்துப் பூட்டியது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தன் அறிக்கையை வாபஸ் பெற மறுத்தது. நாங்கள் ஒரு அணியாகமாறி, சவால் விடும் வண்ணம் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டோம். வன்முறையை ஏவினால், பதில் தற்பாதுகாப்பு வன்முறை கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினோம். தொடர்ந்து ராக்கிங் செய்வதற்கு எதிராகவும், அதை தடுத்து நிறுத்துவோம் என்பதையும் அறிவித்தோம்.   

இப்படி பல்கலைக்கழகம் அமளிப்பட்டது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தன் அறிக்கையை வாபஸ் வாங்க மறுத்தது. இதை அடுத்து 3 நாட்களாகவே, அவர்கள் பல்கலைக்கழகத்தை நடத்த அனுமதிக்கவில்லை. எமது உறுதியான நிலை மற்றும் தொடர் பிரச்சாரம், அவர்களைத் தனிமைப்படுத்தியது. நாம் மேலும் பலம்பெற்றோம். இப்படி அவர்களின் வாபஸ் போராட்டம் பிசுபிசுத்து தோற்றது.

அந்நேரத்தில் எனது துண்டுப்பிரசுரத்துக்கு பதிலளிக்கும் வண்ணம், விஞ்ஞான பீட மாணவர்கள்  சிலர் "மனநோயாளி பல்கலைக்கழகத்தில்" என்ற ஒரு துண்டுப்பிரசுரத்தை அன்று வெளியிட்டனர், அதை அவர்கள் கட்டாயப்படுத்தி ஈழநாடு பத்திரிகையில் வெளியிட்டனர்.

இதேநேரம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனது துண்டுப்பிரசுரத்தை வரவேற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகநோக்கு கொண்ட முன்னோக்காக கூறி அதை வரவேற்று, தனது அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இதையும், எனது துண்டுப்பிரசுரத்தையும் ஈழநாடு பத்திரிகை அன்று வெளியிட்டது.

இப்படி பல்கலைக்கழகம் இரண்டாகி அன்ரி ராக்கிங் பெரும்பான்மை நிலையாக மாறியது. புலிகள் தடுமாறினர். அரசியல் ரீதியான இந்த அரசியல் அணுகுமுறையை, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தும் அவர்களை மீறிச் சென்றது. எமது போராட்டத்தால்  ராக்கிங் அந்த வருடம் அற்றுப் போனது. இந்த அரசியல் வழிமுறையை முறியடிக்க, புலிகள் காத்திருந்தனர். ஒரு திட்டமிட்ட நிகழ்வை அவர்கள் உருவாக்க வேண்டியிருந்தது. 

அடுத்த கல்வி ஆண்டில்தான், அதைப் புலிகள் அரங்கேற்றினர். 1986 இல் புதிய மாணவர்களின் வரவின் முதல் நாளன்று, புலிக்கும் எமக்குமான இருவழி போராட்டம் தொடங்குகின்றது. நாம் எமது மாணவர் அமைப்பு சார்பாக, ராக்கிங் என்றால் என்ன என்ற விளக்கத்துடன் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தோம். மறுதளத்தில் புலிகள் ராக்கிங் செய்தால் தண்டனை என்று மிரட்டல் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டனர். இப்படி பல்கலைக்கழகத்தில் இரண்டு எதிர்நிலையான, இரண்டு வழிப் போராட்டம் ராக்கிங் சார்ந்து தொடங்கியது. இதுவோ புலிகளின் ரெலோ அழிப்பின் பின் நிகழ்கின்றது. 

நாங்கள் மாணவர்களுக்கு ராக்கிங்கை விளங்கப்படுத்தி, மாணவர்களை அணிதிரட்டி மாணவர்களே அதை தடுத்து நிறுத்துமாறு அழைப்பு விடுத்தோம். இதற்கு மாறாக புலிகள், ராக்கிங்கை செய்தால் தண்டனை என்றனர். இப்படி இரண்டு எதிரெதிரான வழிமுறைகள் அன்று பல்கலைக்கழகத்தில் முன்வைக்கப்பட்டது. மாணவர்களைச் சார்ந்து நாம் - வன்முறையைச் சார்ந்து புலிகள், இப்படி ராக்கிங் பற்றி இருவழிகளாக அது பிரிந்தது. எமது வழி, பல சமூக அக்கறையுள்ளவர்களால் முன்னிறுத்தப்பட்டதுடன், பரந்த மாணவர் ஆதரவைப் பெற்றது. அன்ரி ராக்கிங் பெரும்பான்மையின் கருத்தாகியது. புலிகளின் வன்முறை வழி நிராகரிக்கப்பட்டது. இப்படித்தான் புலிக்கு எதிராக, அன்று மாணவர்கள் அணிதிரட்டப்பட்டனர். இப்படி பல்கலைக்கழகத்தில் எனது (என்.எல்.எவ்.ரி.யின்) சரியான அன்ரி ராக்கிங் அரசியல் நிலை, பெரும்பான்மையின் நிலையாக மாறி அது முன்னிறுத்தப்பட்டது. புலிகளின் வழிமுறையை நான் தீவிரமாக எதிர்த்ததுடன், அதற்கு முன்மாதிரியாக வெளிப்படையாகவும் தலைமை தாங்கினேன்.

அந்த வருடம் ராக்கிங் சொல்லிக்கொள்ளும் அளவில் நடக்கவில்லை. அவை கூட பெரும்பாலும் நட்பு, அறிமுகம் என்ற எல்லைக்குள் நடந்தது. எனது (என்.எல்.எவ்.ரி.யின்) வழிமுறை, அங்கு பெரும்பான்மையின் நடைமுறையாக மாறியது. நாம் ராக்கிங்கிக்கு எதிரான மாணவர்களைச் சார்ந்தும், முன்னணி முற்போக்கு பிரிவை கொண்ட ஒரு ராக்கிங் எதிர்ப்பு குழுவை பல்கலைக்கழகத்தில் உருவாக்கியிருந்தோம். கலைப் பிரிவே, இதில் என்னுடன் முக்கிய பங்காற்றியது. பல்கலைக்கழகம் இப்படி ராக்கிங்குக்கு எதிராகவும், தங்கள் அரசியல் வழிக்கு மாறாகவும், அரசியல் மயமாவதை புலிகளால் சகிக்க முடியவில்லை.  தண்டனை மூலம் ராக்கிங்கை ஒழிப்பதாக கூறி துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டவர்கள், ராக்கிங் அற்ற சூழலைக் கண்டு திகைத்துப் போனார்கள்.

விஞ்ஞானபீடம், கலைப்பீடம், எனது வழிமுறையை தங்கள் வழிமுறையாக ஏற்று, புலிகளின் அணுகுமுறையைக் கண்டித்து சில துண்டுப்பிரசுரங்களைக் கூட  வெளியிட்டனர். இதில் இரண்டை மட்டும் தான் தற்போது உங்கள் தரவுக்காக தரமுடிகின்றது.  

1."மாணவர்களும் ராக்கிங்கும் விடுதலைப் புலிகளின் அறிக்கையும்"

2."விடுதலைப்புலிகளின் ராக்கிங் வர்ணனையும் மாணவர்களின் நிலைப்பாடும்" 
 
இப்படி தான் அன்று நடந்தது. இப்படியிருக்க தேசம்நெற் "அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன்" என்கின்றது. எனது அரசியலை மறுக்கவும், அவதூறு செய்யவும், தேசம்நெற் இட்டுக்கட்டிய பொய்களை நாவலனைச் சார்ந்து நின்று கூறுகின்றது. அத்துடன் "மற்றும் விடயங்களால்" என்று, இதில் நுட்பமாக புதிர் விடுகின்றது. அது சரி "மற்றும்" விடையங்கள்" தான் என்ன? கற்பனையில், இப்படி இட்டுக்கட்ட முடிகின்றது.

இப்படி பொய்களுக்கும் புரட்டுக்கும் மாறாக, அன்ரி ராக்கிங் பரந்த அரசியல் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களைக் கொண்டு ஒரு அரசியல் அடித்தளத்தை உருவாக்கினோம். இதைத்தான், "மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன்" வழி என்கின்றனர் தேசம்நெற். புலிகள் வழி சரியானது என்று, மறைமுகமாக இதை மறுக்கும் தங்கள் அரசியல் மூலம் கூற முற்படுகின்றனர். கடந்தகால மக்களுக்கான போராட்டத்தை ஏற்க மறுக்கின்ற, திடீர் புரட்சிவாதிகளின் அரசியலே இதுதான்.

அன்று மாணவர்கள் நிராகரித்த புலிகள் வழியையும், அதன் வன்முறையையும் அடுத்து உருவான மாணவர் அமைப்புக் குழுவும் கூட, எனது அன்ரி ராக்கிங் வழிமுறையை ஏற்றுகொண்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரம் தான்

"மக்களே சிந்தியுங்கள் உண்மை நிலையினை புரிந்து கொள்ளுங்கள்" 

என்று அறைகூவியது. முழு மாணவர்கள் சார்பாக எனது அரசியல் நிலையை, இது முன்னிறுத்தி அதை விளக்கி நின்றது. ஆம், மாணவர் அமைப்புக் குழு நிச்சயமாக அன்ரி ராக்கிங் அரசியல் நிலையெடுத்த குழுதான். இப்படி ராக்கிங் தொடர்பாக எனது நிலையெடுத்த, மாணவர்களின் அன்ரி ராக்கிங் நிலையை முறியடிக்க, புலிகள் தங்கள் வழியில் முடிவவெடுத்தனர். புலிகள் என்ன செய்தனர்?

தொடரும்
 
பி.இரயாகரன்
05.07.2010

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)