புலிகளின் அழிவின் பின், சமூகத்தில் புரட்சிகரமான அரசியல் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில்,  இலங்கை, இந்தியா முதல் ஏகாதிபத்தியங்கள் வரை குறிப்பாக கவனம் செலுத்துகின்றது. இதுதான் இன்றைய எதிர்ப்புரட்சி அரசியல். இந்த வகையில் தான் கடந்தகாலத்தில் மக்களுக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக மறுத்தல் முதல், தன்னார்வ செயல்பாடுகளை முன்னிறுத்துவது வரையான, ஒரு விரிந்த அரசியல் தளத்தில் இந்த எதிர்ப்புரட்சி கூறுகள் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அரசியல் கருத்துத் தளத்திலும், செயல்தளத்திலும் இது முனைப்பாக வெளிப்படுகின்றது. இதன் பின்னணி என்பது  வெளிப்படையற்றதும், சமூக நோக்கமுமற்றதுமாகும். இது தன்னை  மூடிமறைத்த ஒரு அரசியல் சதித்தளத்தில் தான் செயல்படுகின்றது. இலங்கை, இந்தியா, ஏகாதிபத்திய நலன்களையே தங்கள் அரசியலாகக் கொண்டு, இவை பெருமளவில் வெளிப்படுகின்றது. இது எந்த சமூக மாற்றத்தையும், அதன் அரசியலையும் முன்னிறுத்தி, மக்களைச் சார்ந்து நின்று செயல்படுவது கிடையாது.

இந்த வகையில் "சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே!" என்று தேசம்நெற்றைச் சேர்ந்த ஜெயபாலன், எந்த சமூக மாற்றத்தையும் கோராத மூடிமறைத்த தன் அரசியல் பின்னணியில், சமூகத்துக்கான அன்றைய அரசியல் போராட்டத்தை திரித்துப் புரட்டிக் காட்டுகின்றார். 

விஜிதரனை மறுக்க விமலேஸ்வரன், விமலேஸ்வரனை மறுத்துத் திரிக்க நாவலன், இதன் மூலம் இரயாகரனை சிறுமைப்படுத்திக் காட்டுவதன் மூலம் தொடர்ச்சியான மக்களுக்கான அரசியலை எதுவுமற்றதாக மறுக்கின்றனர். மக்களுக்கான கடந்தகாலப் போராட்டங்களை அரசியல் ரீதியாக மறுப்பதைத்தான், இன்று பலரும் தம் திடீர் அரசியலில் செய்கின்றனர். இங்கு தேசம்நெற் ஜெயபாலன் ஒரு குள்ளநரிப் புத்தியுடன், பல இடைச்செருகல்கள் மூலம், தவறான தகவல்களைக் கொண்டு அன்றைய போராட்ட வரலாற்றை திரித்து காட்டுகின்றார். இந்த கட்டுரையை எழுதிய ஜெயபாலனுக்கு, நாவலன் ஏதோ ஒரு வகையில் உதவியுள்ளார். தன்னை முன்னிலைப்படுத்திய நாவலனின் திரிபுகள் மூலம், அவர் இதற்கு உதவியுள்ளார். இந்த வகையில் இவை அனைத்தையும் ஆதாரபூர்வமாக மறுத்து, அதை அம்பலப்படுத்தி நாம் நிறுவ வேண்டியுள்ளது. வரலாற்றின் சோகமே இதுதான்.      

யாழ் பல்கலைக்கழக விஜிதரன் போராட்டத்தில் நாவலனின் அன்றைய பங்கு என்பது, யாராலும் மறுக்கப்பட்டதல்ல, மறுக்கப்பட முடியாததும் கூட. அதை நாம் கடந்தகாலத்தில் உறுதி செய்துள்ளோம். இப்படியிருக்க, நாவலன் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்ட, உண்மைகளை திரித்திருக்கின்றார். இந்தக் கட்டுரையை ஜெயபாலன் எழுதிய போது, விஜிதரன் பற்றிய பகுதி தெளிவாக நாவலனுடைய கூற்றுகளையும் உள்ளடக்கியது தான். இந்த திரிப்புக்கான பொறுப்பு அவருக்கும் உண்டு. இன்று நாவலனால் இது கூறப்பட்டதா அல்லது முன்பு நாவலன் கூறியதை வைத்து ஜெயபாலன் திட்டமிட்டு எழுதியுள்ளாரா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் இன்று தன் சமூக நோக்கற்ற, சதி அரசியலுக்கு ஏற்ப, ஜெயபாலன் இதை முன்வைக்கின்றார். இதற்கு நாவலன் ஏதோ ஒருவகையில் உடந்தையாக இருந்துள்ளார், இருக்கின்றார்.    

இனி இதை நாம் ஆராய்வோம்.

"ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டு ஆறு மாதங்களில் 1986 நவம்பரில் அப்போதைய புலிகளின் யாழ் மாவட்டத்தளபதி கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்)வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மாணவன் விஜிதரன்  கடத்திச் செல்லப்பட்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழகத்தில் செயற்பட்டு வந்த மறுமலர்ச்சிக் கழகத்தை விமலேஸ்வரன் போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் அணுகினர். ஆனால் பின்னாளில் புலிகளின் ஐபிசி வானொலிக்கு பொறுப்பாக இருந்த பல்கலைக்கழக மாணவர்களான சர்வேஸ்வரன், சிவரஞ்சித் ஆகியோர் அன்று அவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் விமலேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களைக் கூட்டி ‘விஜிதரன் போராட்டத்திற்கான "மாணவர் அமைப்புக்குழு" வை உருவாக்கினார். இக்குழுவினுள் விரைவில் சபாநாவலனும் உள்வாங்கப்பட்டார். அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன் சபாநாவலனின் அழுத்தத்தினால் விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக் குழுவினுள் இணைத்துக் கொள்ளப்பட்டார். ஒன்பது பேர் கொண்ட குழுவே விஜிதரனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பல்வேறு போராட்டங்களையும் சகமாணவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்தது. குடாநாட்டுப் பாடசாலைகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்போராட்டத்தின் மையமானது. இதுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது."

இப்படி மாணவர் போராட்டத்தை அரசியலற்ற ஒன்றாக, தன்னெழுச்சியான ஒன்றாக திரித்து புரட்டிய அவதூறுகள் தான், ஜெயபாலனின் "ஜேனலிசமாக" இன்று வெளிப்படுகின்றது. "மாணவர் அமைப்புப் குழு" உருவாக்கப்பட்ட விதம் பற்றி, அடிப்படைத் திரிபுடன் இது தொடங்குகின்றது. விஜிதரன் போராட்டம் முன்னிறுத்திய சமூகமாற்றத்துக்கான அரசியலைக் கொச்சைப்படுத்த, இதை எதுவுமற்றதாக காட்ட, தன்னெழுச்சியான ஒன்றாக காட்ட இந்த திரிபு அவசியமாகின்றது. தேசம்நெற் ஜெயபாலனுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்ட மே 18 அரசியலும் கூட, கடந்த போராட்டத்தை மறுப்பதையே தன் அரசியல் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. கடந்த போராட்டத்தை மறுத்தல் தான், இவர்களின் மைய அரசியலாகும். இவர்களின் திடீர் அரசியலின், அரசியல் உள்ளடக்கம் கூட இதுவாகும்.

இந்த வகையில் அன்றைய போராட்டத்தை தன்னிச்சையான போராட்டமாக, அது சார்ந்த கோசங்களைக் கொண்டதாக காட்டவும், அதை வெறும் "பெரிய பள்ளிக்கூட" அரசியலாக இட்டுக் காட்டவும், இந்த திரிபை இன்று திட்டமிட்டு முன்தள்ளுகின்றனர். 

புலிகள் சார்ந்த மாணவர் அமைப்பு விஜிதரன் போராட்டத்துக்கு முன்பாக, அதாவது நாலு மாதத்துக்கு முன்பாகவே ஒரு போராட்டம் மூலம் தூக்கியெறியப்பட்டிருந்தது.  இந்த வகையில் "மாணவர் அமைப்புக் குழு", ஜெயபாலன் திரிப்பது போல் விஜிதரன் போராட்டத்துடன் தொடங்கப்பட்டதல்ல. இது அப்பட்டமான பொய் மட்டுமின்றி, அந்த அரசியல் ரீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் சொந்த அரசியல் சார்ந்த நயவஞ்சகமாகும்.

இதற்கு மாறாக விஜிதரன் முன்னின்று உருவாக்கியது தான், "மாணவர் அமைப்புப் குழு"வாகும். விஜிதரன் கடத்தப்பட்டதற்கும், இதுதான் காரணமாகும். இப்படியிருக்க அதைத் திரித்துப் புரட்டி கூறுவதைப் பாருங்கள்.

"யாழ் மாவட்டத்தளபதி கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்)வின் தனிப்பட்ட பிரச்சினைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மாணவன் விஜிதரன்  கடத்திச் செல்லப்பட்டு புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்." என்கின்றார்.

இப்படி விஜிதரனின் அரசியலை மறுக்க, ஒரு பச்சைப் பொய்யைச் சொல்ல முடிகின்றது. புலியின் மக்கள் விரோத அரசியலை இதன் மூலம் பாதுகாக்க முடிகின்றது. ஏதோ தனிப்பட்ட பிரச்சனையாம்! விஜிதரனின் போராட்டத்தை இப்படியும், காலம் கடந்து இழிவுபடுத்த முடிகின்றது.   

சரி அப்படி என்னதான் தனிப்பட்ட காரணம் இருந்தது? அதையும் சொல்லவேண்டியது தானே. நாவலனும் இதைத்தான், இப்படித் தான் சொன்னாரா!? இவை அதிர்ச்சியளிக்கின்றது.

இங்கு எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. இப்படிக் கூறுவது, விஜிதரனின் அன்றைய சமூக அரசியல் பாத்திரத்தை மறுப்பதாகும்;. அன்று விஜிதரனின் பங்கு என்ன என்பதை, பல்கலைக்கழக மாணவர்கள் அவர் காணாமல் போன பின், தம் சொந்த துண்டுப்பிரசுரத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். அதை அவர்கள்

"நாம் பேசவேண்டும்! எழுதவேண்டும்!! வாழ வேண்டும்!!"

என்ற தங்கள் துண்டுப்பிரசுரத்தில், மிகத் தெளிவாகவே கூறியுள்ளனர். (பார்க்க)

அதில்

"..ஜனநாயகத்தின் பெயரில் அவன் கொண்டிருந்த கருத்துக்கள், மாணவர்களின்  ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் அவன் ஆற்றிய பங்கு ….போன்ற விடையங்கள் இவனது கடத்தலின் பின்னணியில் இருக்கின்றது…."

என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். அன்று தேசம்நெற் போன்ற அரசியல் அடிப்படையையும் பின்னணியையும் கொண்டவர்களின் விசமப் பிரச்சாரத்துக்கு எதிராக, அவர்கள் இதை முன்வைத்தனர். காலம் கடந்து, இன்று நாம் விஜிதரனுக்காக போராட வேண்டிய, சொல்ல வேண்டிய மனித அவலம். அன்று புலிகள் எதைப் பிரச்சாரம் செய்தனரோ, அதையே தேசம்நெற் இன்று செய்கின்றது. இதன் பின்னணியில் நாவலனின் பாத்திரம் ஏதோ ஒரு வகையில் இருப்பது, எம்மை மேலும் அதிர வைக்கின்றது.   

"மாணவர் அமைப்புக் குழு" விஜிதரன் கடத்தப்பட முன், அதாவது 4 மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. ராக்கிங் செய்ததாக கூறி, புலிகள் 3 பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்து கடுமையாக தாக்கி காயப்படுத்தியதை அடுத்து எழுந்த தன்னிச்சையான போராட்டத்தை, அரசியல் ரீதியாக ஒழுங்குபடுத்தும் போராட்டத்தின் ஒரு அங்கமாக இது உருவானது.

பல்கலைக்கழக மாணவர் அமைப்பில் இருந்த புலி சார்பானவர்கள், புலியின் வன்முறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க மறுத்தனர். அதேநேரம் தன்னிச்சையான ஒரு போராட்டம் வெடித்தது. அது சில கோரிக்கைகளை முன்வைத்தது. இதைப் புலிகள் தேசவிடுதலைக்கு எதிரானது என்று கூறி, பிரச்சாரத்தை எடுத்துச் சென்றனர்.

இதை அடுத்து சமூக அக்கறையுள்ள மாணவர்களின் குறிப்பான தீவிர  முன்முயற்சியுடன், முன்னைய மாணவர் அமைப்பில் இருந்த புலியல்லாத மாணவர்களும், குறிப்பாக கலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (முன்னாள் கமிட்டியில் விமலேஸ்வரன் இருந்தவர்) தனியாக கூடி, என்ன செய்வது என்ற விவாதத்தை நடத்தினோம். இதன் போது மாணவர்களைக் கூட்டி, அதன் மூலம் புதிய மாணவர் கமிட்டியை அமைக்கும் புரட்சிகரமான யோசனையை முன்வைத்தவர் விஜிதரன். இவரைத் தான் தேசம்நெற் தனிப்பட்ட காரணத்துக்காக புலிகள் கடத்திக் கொன்றதாக, புலிகள் பாணியில் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றார். தமிழ்ச்செல்வன் பாணியில் புலுடா "ஜேனலிசம்" செய்கின்றார். விஜிதரன் உள்ளிட்ட சமூக முன்னணியாளர்களின் முயற்சியால் "மாணவர் அமைப்புக் குழு" அன்று உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியிருக்க, புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். இது அன்று ரெலோ அழிப்பின் பின் புரட்சிகரமான வழியில் நிகழ்ந்தது. இப்படி விஜிதரன் கடத்தலுக்கு முன் "மாணவர் அமைப்புக் குழு" உருவாகி இருந்ததை, நாம் இன்று எப்படி நிறுவுவது?

அது எப்படி அன்று புரட்சிகரமாக உருவானதோ, அதேபோல் அது தன் போராட்டத்தால் தன்னை பதிவு செய்தது. கடந்த போராட்டத்தையும், அதன் அரசியலையும் மறுக்கும் திடீர் புரட்சி அரசியல் பேர்வழிகள், கடந்த எல்லாப் போராட்டக் குறிப்புகளும் அழிந்து விட்டதாக நம்புகின்றனர். கண் மூடிக்கொண்டு இயங்கும் மூடர்கள். இதனால் துணிந்து கடந்த போராட்டத்தை அவதூறு செய்கின்றனர்.

திரிபு மற்றும் புரட்டுக்கு மாறாக "மாணவர் அமைப்புக் குழு", தன் போராட்டத்தை  வரலாற்றில் பதிவு செய்தது. அதை தெளிவுபடுத்தும் துண்டுபிரசுரங்களையும் கூட அன்று வெளியிட்டது. விஜிதரன் கடத்தப்பட முன், வெளியான துண்டுப்பிரசுரம் எம்மிடம் உள்ளது.

"மக்களே சிந்தியுங்கள் உண்மை நிலையினை புரிந்து கொள்ளுங்கள்"  என்று, அன்று மாணவர்களுக்கு எதிரான புலிகளின் அரசியல் திரிபை அவர்கள் அம்பலமாக்கினர். இதைத்தான் இன்று தேசம்நெற்றும், திடீர் புரட்சிவாதிகளும் திரிக்கின்றனர், கேவலமாக புரட்டுகின்றனர். அன்று அப்படி ஒரு போராட்டம் நடக்கவில்லை என்கின்றனர். "மாணவர் அமைப்புக் குழு", இந்தப் போராட்டத்தின் பின்பாக, அதாவது 4 மாதத்தின் பின் உருவானதாக குறளி வித்தை காட்டுகின்றனர்.

அன்று  இதையொட்டி வெளியான, வேறு பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைகள் கூட, இதை சரியாக தெளிவுபடுத்துகின்றது. அதையும் நீங்கள் பாருங்கள். வரலாறும், உண்மைகளும் இன்று எப்படிப்பட்டவர்களால், எந்த அரசியல் நோக்கத்துக்காக அன்றும், இன்றும் திரிக்கப்படுகின்றது என்பதை நீங்களே சுயமாக தெரிந்து கொள்ளுங்கள்.

1."மாணவர்களும் ராக்கிங்கும் விடுதலைப் புலிகளின் அறிக்கையும்"

2."விடுதலைப்புலிகளின் ராக்கிங் வர்ணனையும் மாணவர்களின் நிலைப்பாடும்"

இப்படி அன்று அமைப்புக் குழு உருவான கதையுடன், விஜிதரனின் அரசியல் பாத்திரம் மிகத்தெளிவானது. இங்கு இவர்கள் திரித்து புரட்டியது போல், "மாணவர் அமைப்புக் குழு" விஜிதரன் போராட்டத்துக்காக உருவானதல்ல. இதில் நாவலன் எப்படித்தான் இருந்திருக்க முடியும்? 

இதை உருவாக்கும் போராட்டத்தில் நாவலன் ஈடுபட்டிருக்கவில்லை. விஜிதரன் போராட்டத்தின் பின்னணியில்; தீவிரமாக (வெளிப்படையாகவல்ல) ஈடுபட்ட நாவலன், அதற்கு முந்தைய போராட்டத்தில் பங்கு பற்றியிருக்கவில்லை. குறிப்பாக ராக்கிங் போராட்டம், பல அரசியல் தளத்தில் நடந்தது. கட்டுரையில் எனக்கு எதிராக முன்வைத்த என்னைப்பற்றிய குறிப்பில் உள்ளது போல், "அன்ரி ராக்கிங்" சார்ந்த எனது போராட்டகள்தான், விரிவான போராட்டத்துக்கும் விவாதத்துக்கும் இட்டுச்சென்றது. இதில் நாவலன் ஈடுபடவில்லை. "அன்ரி ராக்கிங்" போராட்டத்தில் நான் முன்னோடியானேன். பல்கலைக்கழகத்தில் அரசியல் சக்திகள் மத்தியில், சமூக அக்கறையுள்ளவர்கள் மத்தியில், என் "அன்ரி ராக்கிங்" போராட்ட வழிமுறை பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு போராட்டமாக நடைமுறையாக மாறியது.

தொடரும்

பி.இரயாகரன்
03.07.2010