எமது கருத்துகள் உட்பட, நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையானது. மக்களுக்கு வெளியில், எமக்கு என்று வேறு எந்த இரகசிய திட்டமோ, வேலைமுறையோ கிடையாது. அனைத்தும் பகிரங்கமானது. பிரச்சாரம், கிளர்ச்சி என்ற வகையில் எமது வெளிப்படையான செயல்பாட்டுக்கு அப்பால், தனியான இரகசியமான எந்தவொரு செயல் திட்டமும் கிடையாது.
இப்படி இருக்க எமக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் சில கருதுகோள்கள் அனைத்தும், எமது திட்டம் மற்றும் எமது நடைமுறைக்கு முரணானது. எமது கருத்துகளில் இருந்து, அதற்கான ஆதாரத்தை முன்வைக்காத விசமப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். நாம் செயலை முன்னிறுத்தி, அமைப்பாக்கலை வலியுறுத்தியது முதல், எல்லா பிற்போக்கு சக்திகளும் விழிப்போடு எமக்கு எதிரான இட்டுக்கட்டிய விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வகையில்
1. நாங்கள் ஜக்கிய இலங்கைக்காக போராடுவதாக கூறுகின்றனர்.
2. நாம் தமிழீழத்துக்காக போராடுவதாக கூறுகின்றனர்.
3. நாம் ஒரு கட்சியைக் கட்டுவதாக கூறுகின்றனர்.
4. நாம் அன்னிய சக்திக்காக செயல்படுவதாக கூறுகின்றனர்.
இப்படி எம்மீது திட்டமிட்டு கட்டமைக்கப்படும் அவதூறுகள், எந்த அடிப்படையும் ஆதாரமுமற்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது. எமது செயலையும், அமைப்பாக்கலையும் முறியடிக்க விரும்பும் சக்திகளின், குறுகிய அவர்களின் அரசியலாக இவை மாறி நிற்கின்றது.
இக் குற்றச்சாட்டுகள் பற்றியும், அதன் மீதான எமது அரசியல் நிலைப்பாடு பற்றியும் தெளிவுபடுத்துவதன் மூலம், எமக்கு எதிரான விசமப் பிரச்சாரத்தின் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்துவதுடன் அதை முறியடிக்கவும் முடியும்.
நாம் யார்?
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு கட்சியல்ல. அதுவொரு முன்னணி. அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான முன்னணி. இது புலம்பெயர் சமூகம் சார்ந்த முன்னணி.
இது இலங்கைக்கான கட்சியோ, முன்னணியோ அல்ல. இங்கிருந்து அங்கு புரட்சி ஏற்றுமதி செய்யும் கனவுகளில், நாம் மிதக்கவில்லை. இலங்கையின் புரட்சிக்கான கட்சியும் சரி, முன்னணியும் சரி, அவை அங்கிருந்துதான் உருவாக முடியும். அந்த வகையில் நாம் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இதைப்பற்றி தெளிவுடன் தான், முன்னணி சர்வதேசிய கண்ணோட்டத்தில் தான் தன்னை ஒருங்கிணைக்கின்றது.
நாம் என்ன செய்ய விரும்புகின்றோம்
1. இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் சமூகத்தின் எதிர்ப்பு அரசியலை, சர்வதேசிய எதிர்ப்பு அரசியலுக்குள் இணைத்து அதை வழி நடத்திச் செல்ல முனைகின்றோம்.
2. புலம்பெயர் சமூகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக காணப்படும் எதிர்ப்பு அரசியலை, வலதுசாரிய தன்மையில் இருந்து மீட்டு, இடதுசாரி தன்மை கொண்ட எதிர்ப்பு அரசியலாக மாற்றப் போராடுகின்றோம்.
3. இலங்கையில் பாசிசம் கூர்மையாகி அடக்குமுறைகளை தீவிரமாக்கி வரும் இன்றைய நிலையில், நாம் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற வகையில் அதற்கு எதிரான பிரச்சாரம் கிளர்ச்சியை சர்வதேச மட்டத்துக்கு (ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்) எடுத்துச் செல்லும் அரசியல் கடமையை முன்னெடுக்கின்றோம்.
4. இலங்கை வாழ் மக்களின் ஒடுக்கப்பட்ட குரல்களை, இந்த சர்வதேசிய எல்லைக்குள் எம்முடன் ஒன்றிணைக்கும் வண்ணம், இது பரஸ்பரம் வினையாற்றும் வண்ணம், சர்வதேசிய கடமையை மையப்படுத்தி முன்னிறுத்துகின்றோம்.
5. சர்வதேசரீதியாக உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசிய போராட்டத்தின் ஒரு அங்கமாகவே, புலம்பெயர் சமூகத்தையும் இணைக்க முற்படுகின்றோம்.
6. எமது தாய் நாட்டில் நடக்கும் அன்னிய தலையீடுகள் முதல் பொருளாதார சூறையாடல்கள் வரையான அனைத்தையும், சர்வதேசிய கண்ணோட்டத்தில் முன்வைத்து அதை எதிர்த்து போராடுகின்றோம்.
7. புலம்பெயர் சமூகம் இந்த சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்வதுடன், புலம்பெயர் சமூகங்கள் சந்திக்கின்ற ஒடுக்குமுறைகளையும், மற்றைய புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து போராடும் வண்ணம் இடது தன்மை கொண்ட ஒன்றாக அதை மாற்றியமைக்க போராடுகின்றோம்.
8. புலம்பெயர் சமூகத்தில் நிலவும் வலதுசாரியக் கூறு, அந்தந்த நாட்டு தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்ந்து போராடுவதை மறுக்கின்றது. இதை மாற்றி, அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து போராடுவதற்காகவும் நாம் போராடுகின்றோம்.
9. எம்மோடு புலம்பெயர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ பண்பாடுகளையும், அதன் சமூக பிற்போக்கு கூறுகளையும் எதிர்த்து போராடுவதை உள்ளடக்கியதே எமது போராட்டம்.
10. இங்கு உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் எம்மை இணைக்கவும், அதேநேரம் புலம்பெயர்ந்த சமூகத்தின் குறிப்பான முரண்பாடுகளை புலம்பெயர்ந்த சமூகங்களுடன் இணைக்கவும், தாய் நாட்டின் பாசிசத்துக்கு எதிரான எதிர்ப்பு அரசியலை சர்வதேசியத்திற்குள் ஒருங்கிணைப்பதே எமது பணி.
இந்த வகையில் உதிரியாக சிந்தித்தவர்களை ஒன்றிணைந்து போராடும், ஒரு அமைப்பாக்கலை நாம் செய்கின்றோம். இந்த வகையில் நாம் எம்மை அமைப்பாக்குகின்றோம். இது இங்கிருந்து இலங்கைகான கட்சியையோ, புரட்சியையோ ஏற்றுமதி செய்வதில்லை. அதுவொரு கற்பனை. கட்சி என்பதும், இலங்கை புரட்சி என்பதும், அது இலங்கையில் மட்டும் சாத்தியமானது.
எமது செயல்பாடுகள், அங்கு ஓரு கட்சி அல்லது முன்னணி இருக்கும் பட்சத்தில், பரஸ்பரம் அவையுடன் வினையாற்றக் கூடியவை. கட்சி இல்லாத இன்றைய நிலையில், அதற்கான ஒரு அரசியல் தூண்டுதலை கொடுக்கக் கூடியது. சர்வதேசியத்தின் ஒரு அரசியல் அங்கமாக நாம் இருப்பதால், இது சாத்தியமானது.
இலங்கை இனப்பிரச்சனை பற்றி எமது நிலைப்பாடு
இது பற்றிய எமது நிலைப்பாடு, மேலுள்ள சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து உருவாகின்றது. இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வோ, சுயநிர்ணயத்தின் அடிப்படையிலானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின், சர்வதேசிய அரசியல் கடமைக்கு உட்பட்டது.
இனவொடுக்குமுறையை செய்யும் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட தேசியம் பிரிந்து செல்வதை தங்கள் பிரச்சாரமாகவும் கிளர்ச்சியாகவும் முன்வைக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசியம், ஐக்கியப்பட்டு வாழும் பிரச்சாரத்தை கிளர்ச்சியை செய்ய வேண்டும். இந்த சர்வதேசிய அடிப்படையில் நின்றுதான், நாம் எந்த இன சமூகப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு, எந்த சமூகப் பிரிவில் நாம் செயல்படுகின்றோம் என்பதை அடிப்படையாக கொண்டு, எமது அரசியல் கடமையைச் செய்யவேண்டும்.
இது ஒடுக்கப்பட்ட இனம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை, தடுத்து நிறுத்திவிடவில்லை. பிரிவினையை முன்வைக்கும் இனவாதிகளை விடவும், ஒடுக்டுமுறைக்கு எதிராக தீவிரமாக போராட முடியும். சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக அவை அமையும்.
இந்த வகையில் பிரிவினையை முன்வைக்கும் குறுந்தேசிய இனவாதமான தமிழீழத்துக்கு எதிராக நாம் போராடுகின்றோம். ஐக்கியத்தை முன்வைக்கும் பெரும் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் நாம் போராடுகின்றோம். இவ்விரண்டும் மக்களை ஒடுக்கும் வர்க்கத்தினது, தெளிவான குறுகிய அரசியல் நிலை. இவ்விரண்டும், எமது அரசியல் நிலையல்ல. எமது அரசியல் நிலை என்பது, சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேசிய அரசியல் கடமையை அடிப்படையாகக் கொண்டது.
ஐக்கியம், பிரிவினை என்பது, எதிரான இரண்டு சுரண்டும் வர்க்கத்தினதும் கருத்தியலும் நடைமுறையும் கூட. இதுவல்ல எமது நிலை. இவ்விரண்டுக்கும் நாம் எதிரானவர்கள். நாம் சுயநிர்ணயத்தை முன்னிறுத்துகின்றோம். இதுதான் தேசியத்தை பொருளாதார அடிப்படையிலும், பண்பாட்டு கலாச்சார கூறுகளிலும் கூட மக்களைச் சார்ந்து நின்று முன்நிறுத்துகின்றது. நாம் மட்டும் இதை இன்று முன்னிறுத்துவது, இன்று வரையான அரசியல் எதார்த்தமாக உள்ளது. பிரிவினை, ஐக்கியம் என்பது ஆளும் வர்க்கத்தின் கோசங்கள். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின், ஓடுக்கப்பட்ட சமூகத்தின் கோசங்கள், சுயநிர்ணயத்தினை அடிப்படையாகக் கொண்டது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
01.07.2010