Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்று தொடர்ச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த இனவாத நாற்று பிரித்தாளும் தந்திரம் மூலம் ஊன்றப்பட்டது. தேசிய வளங்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்வை பறித்தவர்கள், மக்களின் கோபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. கோபம் போராட்டமாக வளர்ச்சி பெற்றபோது, அதற்கு தலைமை தாங்கிய பிரிவுகள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களுடன் நின்று போராடுவதற்கு தயாராகவிருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை நடத்துவதாக காட்டியபடி, பிரிட்டிஸ் அரசுடன் கூடிக்குலாவியபடி நக்கித் திரிந்தனர்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பவும், உழைக்கும் மக்களின் போராட்டங்கள் சுயமாக வளர்ச்சி பெறுவதை தடுக்கவும், இனவாதத்தை பிரிட்டிஸ் காலனித்துவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மக்கள் முன் திணித்தனர். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை, பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் வழங்கிய கதகதப்பான கம்பளங்களில் வசதியாக உறங்கியபடியே வளர்த்தெடுத்தனர். இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டையே, தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையகம்  என அனைத்து இனப் பிரிவுகளையும், தமது சொந்த வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு மக்களைப் பிரித்துப் பிளந்தும் மோத விட்டனர். இதன் மூலம் பிரிட்டிஸ் காலனித்துவவாதிகளுடன் ஒரு முரண்பாடற்ற நட்புறவுகளை, இனம் கடந்து தமக்குள் பேணினர். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் வகையில், இனமுரண்பாட்டை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளையும், இனக் கலவரங்களையும் காலத்துக்கு காலம் நடத்தினர்.

இந்த வகையில் உருவானவை இனம் சார்ந்த பிரிட்டிஸ் ஆதரவு இனவாத தலைமைகள். இவர்களை அடிப்படையாகக் கொண்டே, இலங்கைக்கு போலிச் சுதந்திரத்தை தங்கத் தட்டில் வைத்து பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் கையளித்தனர். இந்த சுதந்திரம் பெற்றுப்போட்ட கள்ளக் குழந்தைதான் "ஜனநாயகம்" என்கின்றனர். பெற்ற போலிச்சுதந்திரம் மூலம், பிரிட்டிஸ் காலனித்துவ நலன்களை பாதுகாக்க சபதம் ஏற்றனர். போலிச் சுதந்திரத்தின் மூலம் ஆட்சி ஏறிய ஏகாதிபத்திய இனக் கைக்கூலிகள், ஆரம்பம் முதலே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே ஆட்சி அமைப்பை நிறுவினர். இனவாத நடவடிக்கைகளே, மக்களுக்கான அரசியல் வாக்குறுதியாகியது. அதுவே அரசியல் கொள்கைகளாகின.

பாட்டாளி வர்க்கத்தின் கூர்மையான வர்க்கப் போராட்டங்களைத் தடுக்க, இனவாதத்தை அடிப்படையாக கொண்டு சமூகத்தை பிளப்பது அவசியமானதாகவும் நிபந்தனையானதாகவும் இருந்தது. இதுவே ஆளும் வர்க்கத்துக்குரிய அரசியல் தெரிவாக இருந்தது. ஆளும் வர்க்கம் மக்களை மோதவிட்டனர். இந்த இனவாதத்தில் யார் அதிகமாக இனவாதத்தை தம் அரசியலாகக் கொள்கின்றார்களோ, அவர்களே அரசு அமைக்க முடியும் என்றளவுக்கு இலங்கை சமூகங்களிடையே இனவாத கருத்தும் கண்ணோட்டமும் புகுத்தப்பட்டது. ஒரு இனத்தை ஒடுக்கி, மற்றைய இனத்துக்கு நிபந்தனையின்றி வழங்கும் சலுகைகள் "ஜனநாயகமாக", அதுவே தேர்தல் வெற்றியாகியது.

ஆட்சியில் தொடர்ந்து இருந்த பேரினவாத சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து, சிறுபான்மை இனங்கள் தமது நலன்களை தக்க வைக்கும் வகையில் தன்னை நிலைநிறுத்தியது. அதேநேரம் சிங்கள இனவாதத்தை எதிர்த்தும், சிங்கள மக்களுடன் ஜக்கியத்தை முன்னிறுத்தியும் போராட வேண்டிய நிலையில், அதைத் தவிர்த்து தமிழ் குறுந்தேசிய இனவாதத்தை சிறுபான்மை தலைமைகள் முன்வைத்தன. இங்கும் முஸ்லிம் மற்றும் மலையக மக்களை, தமிழ் குறுந்தேசிய இனவாத பெரும் ப+ர்சுவா தரகுமுதலாளித்துவ வர்க்க கண்ணோட்டத்தில் நின்று ஒடுக்கியபடியே தேசியத்தை முன்வைத்தனர். இதன் மூலம் இலங்கையில் இனவாதத் தலைவர்கள், இனம் கடந்த நிலையில் தமது வர்க்க நலன்களை பெறுவதில் ஒன்றுபட்டனர். இவர்களின் இந்த ஒன்றுபடுதல் என்பது, சுரண்டும் வர்க்க கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டே இருந்தது. அந்த வகையில்

1. சொந்த தனிப்பட்ட வர்க்க நலன்கள் மற்றும் தமக்கு சார்பானவர்களின் வர்க்க நலன்களை அடைவதில் இனவாத எல்லையை கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

2. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும் ஒடுக்குவதில், இனவாதம் கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

3. சிறுபான்மை தேசிய இனங்கள் தொடங்கி படிநிலை சாதியப் பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையைச் செய்வதில் இனவாதம் கடந்து தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

4. மற்றைய இனத்துக்கு எதிரான இனவாத கண்ணோட்டத்தை உருவாக்குவதில் தமக்கு இடையில் ஒன்றுபட்டு நின்றனர். மற்றைய இனத்துடன் ஜக்கியப்படும் அனைத்து போக்கையும் எதிர்த்து நின்றதுடன், அதை ஒடுக்குவதில் இவர்கள் இனம் கடந்த வகையில் ஜக்கியப்பட்டு நின்றனர்.

5. இவர்கள் இனம் கடந்த வகையில், கட்சி முரண்பாடு கடந்த நிலையில், காலனிய நலன்களை பேணுவதிலும், ஏகாதிபத்திய நலன்களை விரிவாக்குவதிலும் தமக்குள் ஒன்றுபட்டு நின்றனர்.

6. இனவாதத்தை தமது அரசியலாகவும் நடைமுறையாகவும் கொண்டு இருப்பதில், கோட்பாட்டு ரீதியாக ஒன்றுபட்டு நின்றனர். இந்த இனவாதமே, பரஸ்பரம் அவர்களின் இருப்பை பாதுகாக்கும் ஒரே அரசியல் அடிப்படையாக இருப்பது இதன் வெட்டுமுகத் தோற்றமாகும்.

7. இனவாதத்தை பரஸ்பரம் எதிர்நிலையில் முன் வைப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்காக காவடி எடுப்பதில் தமக்குள் ஜக்கியப்பட்டு நின்றனர்.

இனவாதத்தை தொடர்ச்சியாக விதைத்தபடி பல்வேறு இனப்பிரிவுகள் தமக்கிடையில் முரண்பாட்டுடன் தம்மையும், தமது நலன்களையும் பேணியபடி ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருந்தனர், இருக்கின்றனர். இலங்கை தேசிய பொருளாதாரத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக அழித்து, அதை ஏகாதிபத்தியத்துக்கு தாரைவார்த்துக் கொடுப்பது இவர்களிள் வர்க்க நலனாக இருந்தது. இது உள்நாட்டில் வர்க்க நெருக்கடியாகி வந்தது. வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படும் வர்க்கக் கொந்தளிப்பு ஒரு வர்க்கப் போராட்டமாக மாறிவிடுகின்ற நிலையில், அதை சிதைப்பது ஆளும் வர்க்க மற்றும் ஏகாதிபத்திய நலனுக்கு அவசியமான நிபந்தனையுமாக இருந்தது. இனவாதத்தை விரிவாக்குவதன் மூலம், மக்களுக்கிடையில் இன மோதலை தூண்டினர். அதையே பிரதான சமூக முரண்பாடாக்குவது, இனவாதிகளின் கருத்தும் கண்ணோட்டமாகவும் இருந்தது. இதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெற்றன. இனவாதமே வர்க்கங்களை அடக்கியாளும் ஒரு சுரண்டும் கருவியாகியது.

இந்த வகையில் இனவாதத்தை சிங்கள பேரினவாதமாக விரிவாக்கிய வரலாற்றில், சிறுபான்மை தலைமைகளும் அக்கம் பக்கமாக அதே இனவாதத்தை ஆதாரமாக கொண்டனர். சிங்கள பேரினவாத அரசு அன்னிய ஏகாதிபத்திய சூறையாடலை பாதுகாத்தபடி, தனது தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ நலன்களையும் பேணினர். இந்த இனவாத தலைமைகளின் இனவாத கண்ணோட்டம் மீதான எதிர்ப்பும் ஜக்கியமும், தவிர்க்கமுடியாதபடி இனவாத வடிவத்துக்குள்ளேயே வெடிப்பை ஏற்படுத்தியது. சொந்த இனவாத சக்திகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், மற்றைய இன சுரண்டும் வர்க்கத்துடனான மோதலாகியது. அதாவது வர்க்க நலன்களின் அடிப்படையில் மற்றைய இனவாத வர்க்க தலைமையுடன் கூடிக் குலாவி, தங்கள் வர்க்க நலன்களை அடைவதை, அடைய முயல்வதையும் எதிர் நிலைக்கு கொண்டு வந்தது. இனவாதத்தை பேணவும், தீவிரமாகவும் முன்னெடுக்கத் தவறியவர்களையும், இனத் துரோக சக்தியாக இனவாதம் வரையறை செய்தது. பெரும்பான்மை இனமும், சிறுபான்மை இனமும், தமது இனவாதத்தின் உள் முரண்பாட்டால் தமக்குள் தொடர்ச்சியாக பிளவுக்குள்ளாகியது. புதிய தீவிர இனவாத கட்சிகளையும், அரசியல் சட்ட அமைப்புகளையும், இனவாத நடைமுறைகளையும் தொடர்ச்சியாக மாறிமாறி கொண்டுவந்தது, வருகின்றது. இது இனவாதத்தை நவீனமாக்கி, ஒடுக்கு முறையை தீவிரமாக்கியது.

மறுதளத்தில் சிறுபான்மை இனவாதத் தலைமை வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு, பெரும்பான்மை இனத்துடன் கூடிக் கூலாவுவதை, புதிய தீவிர இனவாத சக்திகள் துரோகமாக வரையறுத்தது. அதே நேரத்தில் சமூகத்தில் எந்த வகையில் போராடிக் கொண்டிருக்கின்றதோ, அதன் எல்லைக்குள் அதன் போக்கில் முத்திரை குத்தப்பட்ட துரோகத்தை பழி தீர்த்துக் கொள்கின்றது. இது தனிநபர் படுகொலை வரை நீண்டு கிடக்கின்றது. இந்த இனவாதம் ஆழமான தீவிர குறுந்தேசிய இனவாதத்தை, ஆணையில் வைத்தது. இந்த குறுந்தேசிய இனவாதத்தின் வளர்ச்சி என்பது, தன்னைத்தான் தூய்மையானதாக பிரகடனம் செய்தபடி, மற்றைய அனைத்தையும் துரோகமாக வரையறுத்து அழித்தொழித்தது. அதேநேரம் தனது கருத்துக்கு மாற்றான அனைத்து கருத்தையும், சிந்தனையையும், நடைமுறையையும் கூட, துரோகமாக காட்டி அழித்தொழிக்கின்றது. மக்களின் நேரடி கருத்துச் சுதந்திரத்தை, தனது குறுந்தேசிய இனவாதத்துக்குள் துரோகமாக வரையறை செய்து அழித்தொழிப்பது என்பது இதன் பொதுப்பண்பாகியது.

இனவாத கட்டமைப்பு என்பது சமுதாய பிளவை ஆழமாக்கிச் சென்றது. மூலதனச் சுரண்டல் அமைப்பின் வர்க்க நலன்களை பாதுகாக்கவும், தனிப்பட்ட ரீதியில் சொகுசாக வாழும் வர்க்க நலன்களை பாதுகாக்கவும், இனவாதமே அடிப்படையான பாதுகாவலனாக இருந்துள்ளது. மூலதனத்தை பாதுகாக்கும் இனவாத "தேசிய" அரசியல் வாதிகளால், எண்ணெய் ஊற்றி வளர்த்த இனவாத தீ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இதற்குள் தள்ளிவிட்டு குளிர்காய்ந்தது. சிங்கள பேரினவாத பாசிசம், தமிழ் பேசும் மக்களையே தனது எதிரியாக காட்டியது. தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தின் மீதும், அதன் அடையாளங்கள் மீதும் கூட, தனது இனவாதத் தீயை பாய்ச்சியது. அதாவது இலங்கையின் இன முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக தள்ளி, அதற்குள் அனைத்தையும் திட்டமிட்டே அடக்கியொடுக்கியது. இனவாதத்தை அடைப்படையாக கொண்டு உருவாக்கிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டே, சிங்கள மக்களையும் ஒடுக்கியது. இயல்பாக எழுகின்ற இயற்கையான தொழிலாளர் போராட்டத்தைக் கூட, இந்த இனவாத அடக்குமுறைச் சட்டத்துக்குள் ஒடுக்கி சிறையில் தள்ளிவிடுகின்றனர். ஏன் தொழிலாளர்களின் வருடாந்த பொது விடுமுறைகளை கூட, இனவாத அடிப்படையிலும், மத அடிப்படையிலும் பிளந்து அதைக் குறைத்தது. இப்படி சுரண்டும் மூலதன விருத்திக்கு சாதகமாக, அனைத்தையும்  பயன்படுத்த தவறவில்லை.

உலகமயமாதலின் விரிவாக்க நிபந்தனைகளை அமுல் செய்யும் போது, மொழி ரீதியாக கல்வி கற்பிக்கும் தமிழ் ஆசிரியர் எண்ணிக்கையை குறைப்பதை அடிப்படையாக கொண்டே உலகமயமாதலை இனவாதம் ஊடாக செயல்படுத்தியது. இப்படித்தான் பேரினவாதம் நாட்டில் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை கடைப்பிடித்தது. இனவாதத்தை அடிப்படையாக கொண்டு மக்களை பிளந்து சுரண்டும் வர்க்கத்தின் பொது நலன்களை உறுதி செய்வதிலும், புதிய அடக்கு முறைகளை உழைக்கும் மக்களுக்கு எதிராக இனம் கடந்து ஏவிவிடுவதும், தொழிலாளர் உரிமைகளை பறிப்பதும், இந்த பிரதான முரண்பாட்டின் உள்ளடக்கமாகவும் சாரமாகவும் இருந்தது. 

சிறிலங்கா பேரினவாத அரசு தனது சொந்த அதிகாரத்தை சிங்கள இனவெறி பாசிச கட்டமைப்பு சார்ந்து, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை வரைமுறையின்றி ஏவியது. அனைத்து தமிழ் மக்களையும் சிங்கள மக்களின் எதிரியாக காட்டியது, காட்டுகின்றது. தமிழ் மக்களின் பண்பாட்டு கலாச்சார அடையாளங்களை அடிப்படையாக கொண்டே, தமிழ் மக்களை எதிரியாக அடையாளப்படுத்தவும், தனது இனவெறி அடக்குமுறையை ஏவிவிடவும் அது தயங்கவில்லை. தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளம் சார்ந்து, தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தாராள மயமாக்கியது. ஏகாதிபத்தியங்களின் துணையுடன் உலகமயமாதலை விரிவாக்கும் கட்டமைப்பில், இன ஒடுக்குமுறையை ஆதாரமாக அச்சாகவும் அடிப்படையாகவும் கொண்டிருந்தது. இந்த வகையில் இன யுத்தத்துக்கு ஆதரவாக, ஏகாதிபத்தியங்கள் தூணாகி துணை நின்றன. இந்த இனவாத அடக்குமுறைக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி வந்ததுடன், நேரடி படை உதவி ஊடான ஆக்கிரமிப்பை செய்யவும் தயாராக இருந்தன. குறுந்தேசிய நலன்களுக்காக போராடியே சீரழிந்த பாசிப் புலிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து நின்று இலங்கை அரசை மிரட்டவும், தேவைப்பட்டால் ஆக்கிரமிக்கவும் ஏகாதிபத்தியங்கள் தயாராக இருந்தன.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்பாளன் சிங்கள இனவாத அரசு சார்ந்து தமிழ் மக்களை ஒடுக்கும் வகையில் நடத்திய விஸ்தரிப்புவாத ஆக்கிரமிப்பு போன்று, அடுத்த கட்ட ஆக்கிரமிப்புக்கான தயாரிப்பில் உலகம் தயராகவே இருந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் உலகமே ஒரு கரமாக இயங்கியது. இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில், நாம் ஊன்றி நிற்க சர்வதேசியத்தை அதன் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்ளும் வரலாற்று கட்டத்தில் நாங்கள் நின்றோம்.

தொடரும்

பி.இரயாகரன்

5. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)