09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்……

தொட்டில் அற்று தூக்கம் அற்று
தோள்கிடத்தித் தட்டித் தூங்க வைக்க நாதியற்று
வெட்டியபதுங்கு குழியும் விழும்குண்டால் இடியும்
மடியில் பொத்திய மழலைகள் வீரிட்டு அலறும்
கத்திடும் அவலக் குரல் ஜயோ என்று
காத்திடும் எந்தமீட்பன் காதையும் எட்டவில்லை

வெற்றிலை கொண்டு வந்தான்–வாக்குப்
பிச்சைக்கு இரந்து பேசி கொச்சைத் தமிழிலும்
கும்பிட்டுத் தாய் பிள்ளை உறவு என்றான்
வெற்றி முழக்கிடும் வீம்பு கொண்டு–இராணுவ
வீறுடன் ஏறி நின்று துட்ட கைமுனு நான் என்கிறான்

 

சுற்றிய வேலி மீளாத் துயரினுள் தமிழன் வாழ்வு
புலத்துக் கற்றவர் அறிவிழந்தார்—அந்நியப்பதரினுள்
புதையல் தேடும் அழிவினை மகிமையென்றார்
முந்தைய கொள்கையெலாம் முடிச்சாக்கிக் கட்டி
வலதுசாரிக் கோட்டைக்குள் முழ்கினர் போ……

மகிந்தவின் இராச்சியத்தில் மழலையும் புலியாய் போச்சு
மக்கள் ஏதும் மடியாப்போரென மார்தட்டி பொய்உரை
மாத்தளனில் சூழநின்று மனித உயிர் தின்றது போய்
சத்தியத்தின் சீலரென சவாலுரைக்கும் துணிவேது
இந்தியத்து இறுமாப்பும் சீனத்துச் செருக்குமிது…..

மனித உயிர் தின்றுரைக்கும் மன்னவரே
மனம்வெதும்பும் மக்கள்அணி தெருக்களிலே இறங்கும்
தினம் நொந்து நெருப்பான இதயங்கள் சேரும்
சினம் கொள்வர் சேர்ந்தெழுவர் கொடுமரசு வீழும்…….

-கங்கா


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்