09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.

இதை தொகுத்து எழுத, நான் தப்பிய பின் 21.8.1987 பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில்; ஆற்றிய எனது உரை என்முன் இருந்தது. அத்துடன் நான் தப்பிய அடுத்த நாள் முதலே (17.7.1987 முதல் 19.7.1987 வரை), சிறைச் சம்பவங்கள் பற்றிய 269 குறிப்புகளை நான் கூற, விமலேஸ்வரன் தனது சொந்தக்கையெழுத்துடன் எழுதிய கையெழுத்துப் பிரதி தற்போது என்முன் இருக்கின்றது. இதுபோல் இது தொடர்பாக அன்று வெளிவந்த பத்திரிகைச் செய்திகளும் கூட, என் முன் இருந்தது.

இந்த உரை மற்றும் சிறைக் குறிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் முழுமையாக, அதை  ஆதாரபூர்வமாக இந்த நினைவுக் குறிப்பின் தொடர்ச்சியில் இணைத்துள்ளேன். அன்று புலிகளின் கொலை மிரட்டலில் இருந்து தப்பி தலைமறைவான விமலேஸ்வரன், மக்களின் உதவியுடன் தாழ்த்தப்பட்ட கிராமத்திலேயே அரசியல் வேலை செய்து கொண்டிருந்தான். புலிகளிடமிருந்து தப்பிய நான், நேரடியாக விமலேஸ்வரன் இருந்த இடத்திற்கு சென்று அங்கு அடைக்கலம் புகுந்திருந்தேன். அங்குதான் இந்தக் குறிப்பை நான் கூற, விமலேஸ்வரன் எழுதினான். இதை எழுதிய விமலேஸ்வரனை சரியாக ஒருவருடம் கழித்து, 18.07.1888 அன்று கோழைத்தனமாக விடுதலைப் புலிகள் உரிமை கோராது வீதியில் வைத்து படுகொலை செய்தனர். அத்துடன் அவரின் சடலத்தை புலி ஆதரவு உறவினர் ஊடாகவே அவர்கள் கைப்பற்றியதன் மூலம், இதற்கெதிரான யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களையும் நடவடிக்கைகளையும் மிரட்டித் தடுத்தனர். இருந்தபோதும் எனது சொந்த முயற்சியால் இந்த ஈவிரக்கமற்ற மனிதவிரோத படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை 19.7.1988 பகிஸ்கரிக்க வைத்ததுடன், படுகொலைக்கு எதிரான  கண்டன அறிக்கையை வெளியிட முடிந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியை, அன்றைய உதயன் பத்திரிகை வெளியிட்டது. 

கலைப்பீட மாணவர்கள் கவலை தெரிவித்து அறிக்கை
(உதயன் யாழ்ப்பாணம் சூலை 21.1988)

~~யாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவனும் முன்னாள் பல்கலைக்கழக அமைப்புக் குழு உறுப்பினருமாகிய விமலேஸ்வரன் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையிட்டு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழாமல் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கலைப்பீட மாணவர்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.||

நல்லுரில் இளைஞர் சுட்டுக் கொலை
(உதயன் யாழ்ப்பாணம் சூலை 19 1988)

~~நல்லுர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்றுப் பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் எஸ்.விமலேஸ்வரன் என அறிய வந்தது.||

எந்த சூழலில் இந்த நூலுக்கான முயற்சி

விமலேஸ்வரன் படுகொலையின் பின் 19.7.1988 மதியமே என் மீதான படுகொலைக்கு புலிகள்  முயன்றனர். இரு புலிகள் இதற்காக முயன்றபோதும், எனது தற்காப்புணர்வின் மிகுதியால் அவர்கள் கிட்ட நெருங்குவதை நான் அனுமதிக்கவில்லை. என் மீதான கொலை முயற்சியில் போது, என் தற்காப்பு உணர்வு சார்ந்த எச்சரிக்கை உணர்வு மூலம், அன்று அதிஸ்டவசமாக நான் உயிர் தப்பியிருந்தேன். அன்று இதிலிருந்து தப்பி தலைமறைவாகிய நான், அடுத்த நாள் கொழும்பு சென்றேன்;. இதன் பின்பாக என்னைக் கடத்தி வைத்து சித்திரவதை செய்த முகாமில் இருந்த இரு புலி உறுப்பினர்களை, அடிக்கடி கொழும்பிலும் நான் தங்கி இருந்த இடத்தின் அருகிலும், நான் போய் வரும் இடங்களிலும் காணத் தொடங்கினேன்.

தம்முடன் உடன்படாதவர்களை, இலங்கை அரசின்; மறைமுகத் துணையுடன் (இந்திய ஆக்கிரமிப்பு காலம்) புலிகள் கொழும்பிலும் அழித்த காலம். பிரேமதாச ஆட்சிக்கு வந்த பின்பு, புலிகளுக்கும் பிரமேதாசவுக்கும் இடையில் நிலவிய தேன்நிலவு காலத்தின் போது, கொழும்பில் இருந்தும் தமக்கு எதிரானவர்களை புலிகள் கடத்திச் செல்வது தீவிரமான போக்காகியது. கொழும்பில் இருந்தே புலிகள் கடத்திச் சென்று, சித்திரவதை மற்றும் படுகொலைகளை செய்யும் புதிய ஒரு நிலை ஆரம்பமாகியது. இந்த நிலையில் தான், நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இக்காலத்தில் எனது அமைப்பான என்.எல்.எப்.ரியின் அரசியல் கையாலாகாத்தனத்துடன் கூடிய அரசியல் முரண்பாடும், அதைத் தொடர்ந்து என் மீதான தனிப்பட்ட அவதூறுகளும், நாட்டை விட்டு வெளியேறுவதை மேலும் துரிதமாக தூண்டியது.

நான் பல கட்டுரைகளையும் ஒரு சில நூல்களையும் எழுதிய பின், காலம் கடந்த இந்த நூலின் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இரண்டாவதாக இந்த நூல் என் மரணத்தின் பின்பே பிரசுரிக்க விட்டுச் செல்லும் வண்ணம் 2001 இல் எழுதியிருந்தேன்;. ஆனால் காலமும், சூழலும்; இன்று தொடராக பிரசுரிக்க வைத்துள்ளது.

புலிகளின் பாசிசம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவிதமான கருத்துச் சுதந்திரத்தையும் மறுத்து, ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் பதிலளித்து வந்தது. இந்த பாசிசப் படுகொலைகள் எல்லைகள் அற்று, தேசம்; கடந்து விரிவாகிவந்தது. இது கண்காணிப்பு மற்றும் படுகொலை மூலம் நாடு கடந்தும் தன்னை நிலை நிறுத்தியிருந்தது. புலிகளின் சிந்தனைத் தளத்தில் ஜனநாயக மறுப்பு, கண்காணிப்பு, மிரட்டல், படுகொலை என்பனவே அவர்களின் ஜனநாயகமாகவும், அதுவே அவர்களின் போராட்ட நடைமுறையாகவும் இருந்தது. இந்த நிலையில், எழுதிய காலத்தில் வெளியிடவில்லை. அன்று இந்த நூலை வெளியிடுவதை தவிர்த்ததன் மூலம், உடனடியாக என் மீதான படுகொலை முயற்சியை பின் போடுவது அவசியமாக இருந்தது. இதன் மூலம் மலடாகிப் போன மந்தைக் குணம் கொண்ட சமுதாயத்தில், பல்துறைகளைச் சார்ந்த புரட்சிகர அரசியலை முன்வைப்பதன் மூலம், மாற்று அரசியலுக்காக போராட வேண்டியிருந்தது.

மாற்றுக் கருத்துகளை தடுக்க, அரசியல் ரீதியான தனிநபர் படுகொலைகளை புலிகள் செய்துவந்தனர். இது மட்டும் தான், புலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரேயொரு அரசியல் மார்க்கமாக இருந்தது. தமிழ்மக்களின் போராட்டத்தின் ஊடான அரசியல்; தலைமையை நிறுவுவதற்கு பதில், படுகொலை அரசியலையே ஆணையில் வைத்திருந்தனர். இதன் மூலம், தமது சர்வாதிகார மக்கள்விரோத தலைமையை தக்கவைத்திருந்தனர். 

புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்து என்பது, தன்னை அரசியல் சந்தர்ப்பவாதமாக மாற்றி புரட்சிகர அரசியலை சிதைத்துவந்தது. புலிகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாத, பூர்சுவா ஊசலாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புரட்சிகர அரசியலை மறுத்தது. அரசியல் ரீதியாக முதுகெலும்பற்ற போக்கு, மாற்றுக் கருத்தை மறுதளத்தில் வக்கிரமாகச் சிதைத்து வந்துள்ளது.

இதைவிட துரொகக் குழுக்கள், இனவாத அரசினதும்; ஏகாதிபத்தியத்தினதும் நேரடி கைக் கூலிகளாக புலிக்கு வெளியில் ஸ்தாபன ரீதியாக அணிதிரண்டு இருந்தது. இது தனக்கென்று ஒரு அரசியல் அடித்தளத்தைப் பெற்றது. புலிகளால் பாதிக்கப்பட்டவர்களினதும், போராட்டத்தில் இருந்து விலகி வாழும் பூர்சுவா வர்க்கத்தினதும் அடித்தளத்ததை எப்போதும் தக்கவைத்துக் கொண்டது. 

நேரடியாக புலிகள் மற்றும் துரோகக் குழு அல்லாத பிரிவில் ஏற்பட்ட அரசியல் சிதைவால் ஏற்பட்ட சேதம், புலிகளின் படுகொலை அழிப்பை போன்ற மற்றொரு கோர வடிவமே. உதாரணமாக கம்யூனிசத்தை வெளியில் இருந்து அழிப்பது ஒருவகை. உள்ளிருந்து கோட்பாட்டு ரீதியாக அழிப்பது இன்னொரு வகை. இவை இரண்டும் சாராம்சத்தில் ஒரே தன்மை கொண்டவை.

இந்த நிலையில் குறைந்தபட்சம் சமூகத்தை பகுத்தாயும் முறை, சமூகத்தை நேர்மையாக நேசிப்பது, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிடுவது, அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவது என்ற தளத்தில், எனது தனிப்பட்ட அரசியல் பணியை ஒருங்கிணைத்தேன்;;. இந்த நிலையில் புலிகளின் முக்கியமான அனைத்து நடவடிக்கை மீதும் விமர்சனம் ஊடாக, கருத்துகளை நான் மட்டுமே சமகாலத்தில் முன்வைத்து வந்திருக்கின்றேன். விமர்சன ரீதியாக போராட்டத்தின் தவறுகளை யாரும் இன்று அரசியல் ரீதியாக செய்வதில்லை.

நாம் கூட இங்கும் விமர்சனத்தை முழுமையாக சொல்ல முடியாத, படுகொலைப் பாசிசம் சமூக கட்டமைப்பு நிலவியது. பாசிசச் சூழலுக்குள், நெளிவு சுழிவுடன் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த நிலையிலும், எந்த இடத்திலும் இதை சந்தர்ப்பவாதமாக கையாள்வதற்கு எதிராக இருந்தேன். வடிவத்தில் சில மாற்றங்களுடன்;, விடையத்தை மறைமுகமாக அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. நேரடியான கடுமையான விமர்சனம் என்பது, உடனடியான படுகொலைக்கு நானே எனக்கு கம்பளம் விரிப்பதாக இருந்தது. இதுவே புறநிலையானதும், அடிப்படையானதுமான பொதுவான பாசிச அரசியல் நிலையாக இருந்தது.

ஒரு போராட்டத்தில் மரணம் என்பது தற்காப்பை மீறியும் இயற்கையானது தான்;. இங்கு தனிமனிதனாக நேரடியாக முட்டி மோதி, போராட்டத்தில் ஈடுபட்டு தனி மனிதனாகவே இறந்து போவதா? அல்லது மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வகையில் நேரடியாக முட்டி மோதுவதை தவிர்த்து, படுகொலையை தவிர்ப்பது அவசியமா? என்ற அரசியல் கேள்வி எம் முன் இருந்தது.  

இங்கு அரசியல் ரீதியாக ஒரு ஸ்தாபனத்தின் முக்கியத்துவமும், அதை தலைமை தாங்கிச் செல்லும் ஒரு அமைப்பு உருவாகும் வரை, நேரடியாக முட்டி மோதி மரணிப்பதை தவிர்க்க கோருகின்றது. அதேநேரம் இதை சந்தர்ப்பவாதமாகவோ அல்லது மௌனம் மூலமோ சாதிக்க முடியாது. போராட்டத்தின் புற அக நிலைமையைக் கவனத்தில் கொண்டே, எதை எந்தளவில் எப்படிச் செய்யவேண்டும் என்பதை அரசியல் ரீதியாக சூழலை புரிந்து கொள்ள நிலைமை கோரியது.

இன்று இலங்கையில் மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள நடைமுறையைக் கோரியது. மார்க்சியத்தின் உள்ளடகத்தையும் அதன் உண்மையையும் முன்னிறுத்தும் அரசியல் முன்னெடுப்பைக் கோரியது. நான் அறிந்த வகையில், இதை தனிமனிதனாக நான் மட்டும் முன்னெடுத்து நின்றதைக் காணமுடிந்தது. இந்த நிலையில் அதை ஒரு சமூக இயக்கமாக மாற்றும் பொறுப்பு, என்முன்னுள்ள சமூகக் கடமையாக நான் கருதினேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உயிரோட்டத்துடன் நடைமுறையில் இல்லாத ஒரு நிலையில், அதை உருவாக்கும் பணியை மையமாக வைத்தேன். எனது பாதுகாப்புக்கு நானே பொறுப்பாக இருக்க வேண்டியிருந்தது. இது எந்த விதத்திலும் இந்த சமூகத்துக்கு புறம்பாக, எனது தனித்தன்மையை குறிக்கவில்லை. நான் இல்லாமல் கூட, எதிர்காலத்தில் புரட்சி நடக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் நிகழ்காலத்தில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதில் ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பு எந்தளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவர்கள் தமது பொறுப்புள்ள கடமையை செய்வதும் இதற்காக தம்மைப் பாதுகாப்பதும் அவசியமானதும் நிபந்தனையானதுமாகும்.

புலிகளின் வதைமுகாம் படுகொலை முயற்சியில் இருந்து 1987 இல் நான் தப்பியிருக்காது விட்டால், சமர் முதல் எனது நூல் கருத்துகள் எதுவும் இருந்திருக்கப் போவதில்லை. அரசியல் மேலும் சூனியமாகியிருக்கும் என்பது, இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மையாக உள்ளது. இலக்கியப் பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், இலங்கை அரசுடன் கூடிப்பிழைக்கும் அரசியலும், புலிகளுக்கு மாற்றாக இருந்திருக்கும்.

இதற்கு மாறாக மார்க்சியத்தின் சரியான புரட்சிகரத் தன்மையை உயர்த்தி போராடியதன் மூலம், புலிகளை தனித்து எதிர் கொண்டோம். பாசிசத்தை மார்க்சியம் மட்டுமே அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டு வரும் என்ற உண்மையை, நிறுவ முடிந்தது, முடிகின்றது.

புலிகள் உருவாகியது முதலே, அது தனிமனிதப் படுகொலையை அடிப்படையாக கொண்டது. சொந்த இயக்கத்துக்குள் வைத்தே தனது சக போராளியை கொன்ற ~மேதகு| தலைவர் பிரபாகரனின் கோழைத்தனமான படுகொலை முதல் வீதியில் உயிருடன் கொழுத்தி தனிச் சர்வாதிகாரத்தை நிறுவிய அனைத்து வரலாற்றையும் தெளிவுபட வெளிக்கொண்டு வரவேண்டிய வரலாற்றுக் கடமையும் தேவையும் எம்முன் உள்ளது. புலிகள் தம்மைத் தாம் புனிதர்களாகவும், அதன் தலைவரின் கொலைகார கொள்ளைக்கார கோரமுகத்தை மூடிமறைத்தபடி, வீசுகின்ற சாமரையை வெட்ட வெளிச்சமாக்குவது அவசியமாக இருந்திருக்கின்றது. தொடர்ச்சியான மக்களின் நியாயமான போராட்டத்தை, தமது சொந்த தனிப்பட்ட நலன்களில் இருந்து எப்படி கேவலமாக பயன்படுத்தி வாழ்ந்தனர் என்பதை அம்பலம் செய்யவேண்டியுள்ளது. படுகொலைகளை செய்வதில் அவர்களுக்கேயுரிய தனியான தாகத்தையும், மோகத்தையும், வரலாற்று ரீதியாக அம்பலம் செய்து விமர்சிப்பதன் மூலம், மக்களின் அறியாமையையும் போராடுபவனின் தியாகத்தையும் எப்படிப் பயன்படுத்தினர் என்பதை அம்பலம் செய்ய வேண்டியது அவசியமானதாக உள்ளது. அத்துடன் புலிகளின் பாசிசத்தை நேரில் அனுபவித்த ஒவ்வொருவனும், அதை தெரிந்த ஒவ்வொருவனும், அதை ஏதோ ஒரு துறையில் உணர்ந்த ஒவ்வொருவனும், அவற்றை அம்பலப்படுத்தி எழுதுவதற்கு இந்த நூல் ஒரு முன்மாதிரியாகும்;.

இது புலிக்குள் இருந்து அதிருப்தியுடன் இந்த பாசிசத்தை உணர்ந்து வாழ்ந்த ஒவ்வொருவனும் கட்டாயம் எழுதக் கூடியவைதான். புலிகளை மட்டுமல்ல, எல்லா இயக்கத்தினதும் எல்லாவிதமான அராஜகத்தையும் வெளியில் கொண்டு வரும் வகையில், ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்ததை தனது எல்லைக்குள் எழுதத் தூண்டுவது அவசியமாகின்றது. இனி இதை யாரும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தனிநபர் படுகொலைகளைக் கொண்டு உண்மையை மூடமுடியாது. பாசிசத்தை அம்பலப்படுத்துவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

புலிகளின் அரசியலோ மக்கள் விரோதமானதும், கோழைத்தனமானதுமாகும். அதைப் பாதுகாக்க பலரைக் கடத்தினர், பலரைக் கொன்றனர். இதற்காகவே என்னையும் கடத்திச் சென்றனர். மக்களுக்குப் பயந்து என்னை கோழைத்தனமாக இரகசியமாக கடத்தியவர்கள், தாம் அதை செய்யவில்லை என்று சொல்லியே புனிதப் பட்டங்களை தமக்கு தாமே சூடிக்கொண்டனர். அவர்களின் வால்கள் ஆலவட்டம் பிடித்தனர். எனது கடத்தலை உரிமை கோராத நிலையில், அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பியவன் என்ற வகையில், புலிகளின் பாசிசத்தை ஆதாரபூர்வமாக வெளியிடும் போது, அதற்கு என்று ஒரு அரசியல் பரிணாமம் உண்டு. இதை நான் செய்யத் தவறுவது அரசியல் ரீதியாக தவறு இழைத்ததாகவே இருக்கும். அத்துடன் புலிகளின் பாசிசத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு, அதை அணுகியும் விமர்சித்தும் வருபவர்களில் நான் முதன்மையானவன். இதற்கு வெளியில் அரசியல் ரீதியாக அணுகி முன்வைக்கும் விமர்சனப் பார்வை என்பது பொதுவில் இருக்கவில்லை என்பதால், இந்த நினைவுக் குறிப்புக்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த வதைமுகாமில் இருந்து தப்பிய எனது "மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை" என்ற குறிப்பு எந்த மக்கள் அரசியலுமற்ற, பேரினவாத ஒடுக்குமுறை கோட்பாட்டுக்கு சார்பு நிலையை கொண்டோருக்கும்;, இந்தக் குறிப்பு எதிரானது. இலங்கை அரசுடன் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இணைந்து செயற்படுவோருக்கு, இது திட்டவட்டமாக எதிரானது. அவர்கள் யாரும் இதில் இருந்து அரசியலை வெட்டியும் கழித்தும், திரித்தும், இந்த குறிப்பைப் பயன்படுத்துவதை, எந்தவிதத்திலும் எனது அரசியல் திட்டவட்டமாக அனுமதிக்கவி;ல்லை.

தமிழ் பேசும் மக்கள் சிங்களப் பெரும் தேசிய இன பாசிச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக சந்திக்கின்றார்கள்;. இதை எதிர்த்துப் போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது, பெரும்பான்மை சிங்கள மக்களின் தேசியக் கடமை. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது தேசியக் கடமை. இப்படி எமது நாட்டில் பல்வேறு ஜனநாயகக் கடமைகள் மறுக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயகத்தை உயர்த்திப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்துத் தரப்பின் அவசரக் கடமையாக உள்ளது.

இன ஒடுக்குமுறையை சிங்களப் பேரினவாத தேசியம் மூலம் முன்னெடுக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை தடுக்கும் எல்லைக்குள்ளும் தான், இனவாதத்தை உயிருள்ள நடைமுறையாக இனவாதிகள் வைத்துள்ளனர். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையை பெறப் போராடுவது, அவர்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். இந்த உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் எடுக்கும் அனைத்து வகையான போக்குக்கு எதிராகவும், கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் ஒரு போராட்டத்தை ஈவிரக்கமின்றி நடத்த வேண்டியிருந்தது, இனியும் நடத்த வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை எதிர்த்து அழிக்க முனைந்த போதெல்லாம், எந்தளவுக்கு அதை கடுமையாக எதிர்த்து போராட வேண்டியிருந்ததோ, அதேயளவுக்கு இந்த சுயநிர்ணயத்தை திரித்து பயன்படுத்திய பிரிவுகளையும் எதிர்த்து போராடுவதில் என்றும் பின்நின்றதில்லை, நிற்கப்போவதில்லை. இந்த இரு போக்கிலும் ஏற்பட்ட அனைத்து அரசியல் விலகல்களையும், அதை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக உருவாகிய, அரசியல் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து போராடுவதில் என்றும் நான் பின் நின்றதில்லை. இதில் இருந்தே எனது கடந்தகால மற்றும் நிகழ்கால போராட்டம் அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியிலேயே இந்த நினைவுக் குறிப்பு உங்கள் முன் உள்ளது.

தொடரும்
பி.இரயாகரன்

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

  

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)


பி.இரயாகரன் - சமர்