இலங்கையில் அன்னிய நாடுகளின் யுத்தம் மெதுவாக, ஆனால் மிக நுட்பமாகவே தீவிரமடைகின்றது. உலக நாடுகளின் முரண்பட்ட நலன்கள், இந்த மோதலின் அரசியல் அடைப்படையாகும். இலங்கை ஆளும் குடும்பத்தின் குறுகிய நலனும், மேற்கின் நலனும் முரண்பட்டு அவை எதிராக பயணிக்கின்றது. இந்த இடத்தில் மகிந்த குடும்பமல்லாத எந்த ஆட்சி அமையினும், இந்த தீவிரமான முரண்பாடு பொதுத்தளத்தில் அற்றுவிடும். மகிந்த குடும்ப ஆட்சி நீடித்து நிலைக்கும் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்பதை, மேற்குநலன் மிகத்தெளிவாக இனம் கண்டுள்ளது. தனது போட்டி நாடுகளை சார்ந்து, ஜனநாயகத்தை பாசிசமாக்கி நீடித்து நிற்க முடியும் என்பதையும் இனம் கண்டுள்ளது. இதை முறியடிக்கும் காய் நகர்த்தல் தான், இன்றைய சர்வதேச அழுத்தங்கள். மேற்கின் நலன் இலங்கையில் நிறுவப்படும் வரை, முரண்பாடு தீவிரமடையும். இதற்கு சார்பான ஒரு அரசியல் நிகழ்ச்சிக் போக்கும் வளர்ச்சியுறும்.     

இந்த முரண்பாட்டின் பின்னணியில், பரஸ்பரம் முன்னிறுத்துவது "மக்கள் நலன்".  இருதரப்பும் மக்களின் நலன் சார்ந்த கோரிக்கையை முன்னிறுத்தித்தான், இதன் பின்னணியில் வெளிப்படையாக மோதுகின்றனர். ராஜதந்திர ரீதியில் இருந்த மோதலும் முரண்பாடும் இன்று வெளிப்டையாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அரசு நாட்டின் இறைமை பற்றிப் பேசுகின்றது. மேற்குநாடுகள் மனிதவுரிமை பற்றிப் பேசுகின்றது. இதுதான் வெளிப்படையான தோற்றம். உண்மை இதற்கு எதிர்மறையானது. அரசு நாட்டின் இறைமையை மேற்கு அல்லாத நாடுகளுக்கு விற்றபடிதான், மேற்கு எழுப்பும் மனிதவுரிமைக்கு எதிராக தன்னை தக்கவைக்கின்றது. மேற்கு உலகளவில் தன்நலன் சார்ந்த மனிதவுரிமைகளை மறுத்தபடி, தன் போட்டியாளனை அடக்க மனிதவுரிமையைப் பேசுகின்றது, எழுப்புகின்றது.

உண்மையில் மக்கள் நலன் சார்ந்த, நாட்டின் இறைமை சார்ந்த பின்னணியில் இவை முன்வைக்கப்படவில்லை, எழுப்பப்படவில்லை. அன்று புலிகளை இலங்கை அரசு தடைசெய்த போது, அது முன்னிறுத்தியது என்ன என்பதை இன்று பொருத்திப் பார்ப்பது அவசியம்;. அன்று மேற்கு புலிக்கு எதிராக, புலிகள் மக்களுக்கு எதிரான அதன் மனித விரோத நடத்ததைகளையே எடுத்துக்காட்டி தடைசெய்தது. இதன் பின்னணியில் இலங்கை அரசுக்கு உதவியதன் மூலம், தன் நலனை இலங்கையில் தக்கவைக்க முனைந்தது. அதே அடிப்படையில் தான், இன்று இலங்கை அரசுக்கு எதிராக மேற்கு காய் நகர்த்துகின்றது.

இன்று இதை இலங்கையின் இறையாண்மைக்கு விட்ட சவாலாக அரசு கூச்சல் எழுப்பிய போதும், உண்மையில் இலங்கை இந்தியாவின் காலனியாக (மாநிலமாக) மாறிவருகின்றது. இந்தியாவில் புதிதாக உருவாகிவரும் பன்னாட்டு மூதலீட்டாளர்கள் சூறையாடும், ஒரு பகுதியாக இலங்கை மாறிவருகின்றது.

இலங்கை அரசின் குடும்ப சர்வாதிகார பாசிசம் கட்டமைக்கும் தனிச் சிறப்பான அதன் முரண்பாடுகள், இந்தியாவை மட்டும் சாhந்து நிற்க முடியாததால் உலக முரண்பாட்டுக்குள் தன்னை நகர்த்தி உள்ளது. உலகப் பொருளாதாரத்தை கைப்பற்றப் போட்டியிடும் புதிய நாடுகளான சீனா, ருசியாவைச் சார்ந்து, மேற்குடன் முரண்படும் ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் துணையுடன் தன்னை முன்னிறுத்துகின்றது.

இந்த வகையில் மகிந்த குடும்ப சர்வாதிகாரம் ஏற்படுத்தும் பாசிசம், தனிச்சிறப்பான முரண்பாட்டைக் கொண்டது. இது வேறு எந்த ஆட்சியாளருக்கும் இல்லாதது.

1. அது யுத்தகாலத்தில் தன் கஜானாவையே கொள்ளை அடித்து சொத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இது அந்தக் குடும்ப ஆட்சியின் தனி சிறப்பு முரண்பாடாக மாறியுள்ளது.

2. புலிகள் மக்களை வறுத்துத் திரட்டிய பல ஆயிரம் கோடி செல்வத்தை, மகிந்த குடும்பம் தன் சொத்தாக்கியுள்ளது. புலிகளின் ஆயுதங்களைக் கூட விற்று, தன் குடும்ப சொத்தை பல ஆயிரம் கோடியாக்கியுள்ளது. இதை பாதுகாக்கும் போராட்டம், அந்த சர்வாதிகார குடும்பத்தின் தனிச்சிறப்பான முரண்பாடாகியுள்ளது.   

3. புலிச் சொத்தைக் கொள்ளையடிக்கும் தனது இனவழிப்பு யுத்தத்தின் போது, போர்க்குற்றத்தை மூலதனமாக்கினர். இப்படித்தான் அவர்கள் பணத்தை குவித்தனர். அந்த போர்க்குற்றத்தினை மகிந்த குடும்பம் சிறப்பாக முன்னின்று வழிநடத்தியது. இன்று அதை குடும்ப சர்வாதிகாரம் மூலம், மூடிமறைக்க வேண்டிய தனிச்சிறப்பான முரண்பாடாக மாறிவிட்டது.

மொத்தத்தில் மகிந்த குடும்பமோ பொதுமக்களின் செல்வதை திருடி பல ஆயிரம் கோடியை தன் பின்னால் திருட்டுத்தனமாக குவித்துள்ளது. அதைப் பாதுகாக்க தனிச்சிறப்பான முரண்பாட்டை தீவிரமாக்கியுள்ளது. இப்படி மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்கள், தங்களை பொதுச் சட்ட அமைப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய தனிச்சிறப்பான சூழ் நிலையில் உள்ளனர். இதை பொது உலகதளத்தில் வைத்து பாதுகாக்க முடியாது போயுள்ளது. உலக பொதுநலன்களை, பொதுத்தளத்தில் வைத்து கையாளும் அணுகுமுறையில் இலங்கை அரசு தோற்றுப்போனது. மேற்கை பகைத்தது. குறிப்பாக மேற்கின் நலனை பகைத்துத்தான், புலிச்சொத்தை தான் கொள்ளையடிக்கும் தன் இறுதியுத்தத்தை நடத்த வேண்டியிருந்தது.

மேற்கு நலன் புலியின் சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான தன் இறுதியான தீவிர யுத்தத்தை, முடக்குவதாக கண்ட மகிந்த குடும்ப அரசு மேற்குடனான தன் நலன் சார்ந்த முரண்பாட்டை முன்னிறுத்தியது. விளைவு இலங்கை தன் இறையாண்மை சார்ந்த சமச்சீர் போக்கை இழந்தது. மேற்குடன் முரண்படும் சீனா - ருசியாவிற்கு நாட்டை தாரைவார்த்து தன் நலனை முன்னிறுத்தியது. சீனாவுடன் முரண்பாடு கொண்ட இந்தியா தன் அண்டைநாடாக இருந்தாலும், முன்பு இலங்கையில் இராணுவம் மூலம் இந்தியா தலையிட்டதாலும், இந்தியாவுக்கு தனிச் சலுகைகள் மூலம் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்கி வருகின்றது. இந்தியாவுக்குள் சீனா எப்படி உள்ளதோ, அப்படித்தான் இலங்கையில் சீனாவின் நலன்கள் உள்ளது. இது இந்தியாவை மீறியல்ல. இதை மீறினால் மகிந்தாவின் குடும்பநலன் சார்ந்த, ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். இந்தியாவின் நலன், மகிந்த குடும்பத்தின் நலனாகிவிட்டது.
  
இப்படியிருக்க இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் உள்ள முரண்பாட்டின் எல்லைக்குள் தான், இலங்கையுடனான உலக நாடுகளின் முரண்பாடுகள் வரையறுக்கப்பட்டு கையாளப் படுகின்றது. இது ஒருபுறம்.

மறுபுறம் இலங்கையில் வேறு எந்த ஆட்சியாளருக்கும் இல்லாத மகிந்த குடும்பத்தின் முரண்பாடுகள் கூர்மையாகின்றது. இது ஆட்சி அமைப்பு சார்ந்து, தன் சர்வாதிகார வடிவத்தில் அது நீடிப்பதால், தன்னுடனான உலக முரண்பாட்டை அது தீவிரமாக்குகின்றது. தான் அல்லாத ஒரு ஆட்சியை எதிர்காலத்தில் இலங்கையில் வரவிடாமல் தடுப்பது உட்பட, தன் மீதான எதிர்ப்பை ஓடுக்குவதற்கு பாசிசத்தை சார்ந்து நிற்பதைத் தவிர, அதனிடம் ஜனநாயக வடிவங்கள் எதுவும் கிடையாது.

இதனால் எதிர்ப்பும், ஓடுக்குமுறையும் மிகத் தீவிரமாகின்றது. எதிர்ப்பு உலக முரண்பாடு சார்ந்து செல்லும் போக்கு வளர்ச்சியுறுகின்றது. இதனால் எதிர்ப்புரட்சி அரசியலும், இலங்கை அரசுக்கு சமாந்தரமாக, ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரலாக மாறுகின்றது. இவ்விரண்டையும் இனம் கண்டு முறியடிக்காமல், புரட்சிகர சக்திகள் மக்களை அணிதிரட்ட முடியாது.

மேற்கின் நிகழ்ச்சி நிரலும், இலங்கை அரசு சார்பான இந்தியா உள்ளடங்கிய நிகழ்ச்சி நிரலும், எம்மைச் சுற்றிய எதிர்ப்புரட்சி அரசியலின் அரசியல் சாரமாக மாறியுள்ளது. அபிவிருத்தி, உதவி, கருத்தரங்குகள், உரையாடல்கள், விவாதங்கள், அரசியல் செயல்பாடுகள் என்று,  எங்கும் இந்த எதிர்ப்புரட்சி அரசியற்கூறும் புரையோடி வருகின்றது. இதைப் புரட்சியாளர்கள் இனம் கண்டு அரசியல் ரீதியாக முறியடிக்காத வரை, இலங்கையில் நீடித்து நிலவும் பலமுனை கொண்ட எதிர்ப்புரட்சி வரலாற்றை மாற்ற முடியாது.         

பி.இரயாகரன்
25.06.2010