அறிவு, நாணயம், உண்மை என அனைத்தையும் அடகுவைத்த பின், இருவர் பேசிக்கொண்டது தான் தேசம்நெற்றில் வெளிவந்துள்ளது. என்னவோ தெரியவில்லை, தேசம்நெற்  எமக்குள் பரிமாறிய ஈமெயிலை எப்படி பெற்று வெளியிட்டதோ, அதே வழியில் இப் பேட்டியும் வெளிவந்துள்ளது ஆச்சரியமானதல்ல. அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாது தேசம்நெற் என் பெயரில் கூட ஈமெயில் தயாரித்து, அதை வெளியிட்டு அம்பலமானது பழைய கதை.

இந்த வகையில் பேராசிரியர், "ஊடகவியலாளர்" என இருவர் சேர்ந்து, எம்மை எதிர் கொள்ளுகின்றனர். சம்பவத்தை திரித்து புரட்டுவதன் மூலம், கதை சொல்லுகின்றனர். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் இணைந்து நேராவது போல், இங்கு கேள்விகள்  பதில்கள் மூலம் தங்களை நேராக்கிக் காட்ட முனைகின்றனர்.    

சண்முகரத்தினம் தன்னை ஒரு மார்க்சியவாதியாக கூறுவதும், தன் அறிவு மூலம் மற்றவர்களை ஏமாற்றியபடி ஏகாதிபத்திய எடுபிடியாக இருப்பதுவும், வலதுசாரிகளுடன் கூடிக் கும்மியடிப்பதுதான் அவரின் கடந்தகால நிகழ்கால அரசியல் நடைமுறை. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகின்றார். கடந்த காலத்தில் அவர்கள் தமிழ்மக்களுடன் சரி, இலங்கை மக்களுடன் சரி, மார்க்சிய வழியில் நின்று போராடியிருந்தால், அதை எமக்கு வழிகாட்டியிருந்தால் நாங்கள் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இங்கு கிடையாது. மக்கள்பட்ட துன்பங்கள், துயரங்கள் மேல் பாசிட்டுகள் ஆடிய ஆட்டங்கள் ஒருபுறம், மறுபுறத்தில் நேர்மையற்ற உங்கள் அழுகுண்ணி மூன்றாம் தரமான அரசியல் பித்தலாட்டங்கள் மட்டுமே, உங்கள் பின்னணியில் பின்புலத்தில் அரங்கேறியது. நோர்வே ஓஸ்லோவில் முன்பு மக்கள் பற்றிப் பேசிய பலரை, உங்கள் மூன்றாம்தரமான இழிவரசியலுக்குள் வழிநடத்திய பெருமை உங்களைச் சேரும்.

நிச்சயமாக நீங்கள் மக்களை மார்க்சிய வழியில் அணுகவில்லை. புலிப்பாசிசத்தின் நிழலின் கீழ், சுவடுகள் உள்ளடங்கிய நோர்வே முற்போக்கு வட்டம் செபம்செய்து கொண்டு இருந்தது என்பது மட்டும் தான், கடந்தகால உண்மை. அதன் குருதான் நீங்கள். இந்த மூன்றாம்தரமான அரசியலை, நாம் மார்க்சியமாக பார்க்கவில்லை. இதுதான் எமக்கும் உங்களுக்குமான முரண்பாடு. 

உங்கள் தொடர்ச்சியான முன்றாம் தரமான அரசியல் நிகழ்வுதான் 09.06.2010 அன்றும் அரங்கேறியது. அன்றைய நிகழ்வில் புலிகள் (நெடியவன் குழு) உள்ளிட்ட பினாமிகளும், மார்க்சியம் பேசும் சண்முகரத்தினம் வரையும் ஒன்றாக கலந்து கொண்டனர். இது ஓரு உண்மை. இந்த உண்மையின் பின்னணியில், இதை யார் ஒழுங்கு செய்தனர்? வெளிப்படையாக நோர்வே தன்னார்வ நிறுவனம் தான். இதுவும் ஒரு உண்மை. அதை தீவான் தன் கட்டுரையில் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அதைப் பாருங்கள். "இது இவ்வாறிருக்க புலம்பெயர் புலிப்பினாமிகள் வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் முந்தானையில் மறைந்து, தேசத்தில் திரும்பவும் கால் வைக்க முயற்சிகளை  மேற்கொண்டுள்ளனர். இதன் முதல் முயற்சி சாட்சாத் நோர்வேயிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. இதன்பால் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால்  வழிகாட்டியும், நோர்வேயின் சூழலியல் மந்திரியுமான எறிக் சூல்கெய்ம் இன் தலைமை உரையுடன் புலிப் பினாமிகளின் அமைப்பான நோர்வே ஈழத் தமிழர் பேரவையினால் (NCET), "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", Norwegian peacebuilding center (NOREF) என்ற அமைப்பின்  வழிகாட்டலுடன் கருத்தரங்கு ஒன்று ஒஸ்லோவில் நடத்தப்பட்டது" இங்கு தீவான் இதன் பின்னணியில் புலிகள் பணம் கொடுத்துத் தான், அந்த தன்னார்வ நிறுவனம் இந்தக் கூட்டத்தை நடத்தியதாக குறிப்பிடுகின்றார். இதைத்தான் சண்முகரத்தினம் இங்கு மறுக்கின்றார். இப்படி மறுக்கின்ற சண்முகரத்தினம், எதை இதன் மூலம் பாதுகாக்கின்றார்? 

1. தன்னார்வ நிறுவனங்களின் தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியல் யோக்கியத்தை பாதுகாக்கின்றார். தன்னார்வ நிறுவனங்கள் பணம் வாங்கித்தான், மற்றவர்களுக்காக செயல்படுகின்றது என்பதை மறுக்கின்றார். தன்னார்வ நிறுவனங்கள் மூலம், மக்களை குழிபறிப்பது சரியானது என்கின்றார். எதிர்காலத்தில் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் ஆடப்போகும் மூன்றாம்தரமான தன் அழுகுண்ணி ஆட்டத்தை நியாயப்படுத்துகின்றார். தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து செய்வது தான் மார்க்சியம் என்கின்றார். தன்னார்வ நிறுவனங்களுக்கு யார் பணம் கொடுத்தது என்பதில், எமக்கு கவலை கிடையாது என்கின்றார். புலி கொடுக்காவிட்டாலும், அது சரியானது என்கின்றார்.   

2. புலிகளின் இது போன்ற தொடர்ச்சியாக பணம்கொடுத்த செயல்பாட்டை அரசியல் ரீதியாகவே  மூடிமறைகின்றார்.

இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் விபச்சார கருத்தரங்கை தன்னார்வ நிறுவனம் தான் சுயமாக (புலியல்லாத மற்றொருவரின் பணத்தில்) நடத்தியது என்றால், இது மக்கள் நலன் சார்ந்ததா? தன்னார்வ நிறுவனம் யாருடைய பணத்தில் இதை நடத்தியது? புலிகளின் பணமல்ல என்று அடித்துக் கூறும் சண்முகரத்தினம், சரி யாருடைய பணத்தில் அதை நடத்தியது என்பது மறுபுறத்தில் வெளிப்படையாகின்றது.   இங்கு முக்கியமான மற்றொரு விடையம் உள்ளது. புலியல்லாத தன்னார்வ நிகழ்ச்சி தான் என்றால், உங்களை உள்ளடக்கிய இடதுகளையும் வலதுகளையும் தமிழில் கலந்துரையாட வைத்தது யார்? சரி ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? அதற்கு துணைபோன உங்களின் நடத்தைதான் என்ன? சரி தமிழில் கதைத்து எடுத்த முடிவை யார் எப்படி அமுல் செய்வது? நீங்களா அவர்களா? சொல்லுங்கள் எப்படி? மாணவர்களை ஏமாற்றும் பேராசிரியத்தனத்தை காட்டாதீர்கள். நீங்கள் அறியாமல் இதில் கலந்து கொண்டு இருந்தால், அதை தவறு என்று சொல்லுங்கள். அறிந்துதான் செய்திருந்தால், தமிழ் மக்களுக்கு எதிரான ஏகாதிபத்தியம் - புலி - இடதுகள் நடத்திய கூட்டுச் சதி. 

இங்கு தமிழ் கலந்துரையாடல் நிச்சயமாக, தமிழர் தரப்பின் (புலி) குறிப்பான அரசியல் நலனாக இருந்தது. கருத்தரங்கு அந்த எல்லைக்குள்தான் நடத்தப்பட்டது. தன்னார்வ நிறுவனங்கள் எப்போதும் பணத்தை வாங்கி கொண்டுதான் இயங்குபவர்கள். இந்த வகையில் நிகழ்சிகளை ஏற்பாடு செய்வது தான், அவர்களின் நிகழ்ச்சி நிரல்.        

பேராசிரியர் சண்முகரட்னம் தடாலடியாக விடையத்தை முழுக்க திரிக்கின்றார். எப்படி "இந்த இரண்டிலும் நான் உரையாற்றியது தான் குற்றம்சாட்டுபவர்களுக்கு இரண்டு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக ஒன்றாகத் தெரியக் காரணம். அதைவிட அவர்களுக்கு எதுவும் தெரியாது." இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றாக்கியதாக கூறுவது, அவரின் பேராசிரியர்தனத்துக்கு அழகல்ல. இதை தவறாக சொன்னதை திருத்த மறுப்பது ஊடகவியலுக்கும் அழகல்ல. இரண்டாவது மாநாடு 11-15 நடந்தது. தீவானின் கட்டுரை 12ம் திகதி காலை 7 மணியளவில் வெளியாகியிருந்தது. "இரண்டு நிகழ்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக ஒன்றாகத் தெரியக் காரணம்" என்று கதையே திரிப்பதுதான், இதை பூசி மெழுக உதவுகின்றது. 

உங்களை நீங்கள் மூடிமறைக்க, விடையங்களை முடிச்சுப் போடக் கூடாது. இரண்டும் வேறானது என்பதும், தீவான் 9ம் திகதி பற்றி மட்டும் தான் கதைத்துள்ளார். இதற்காக மற்றது சரியானது என்று அர்த்தமல்ல. நீங்கள் கூறுகின்றீர்கள் "அதைவிட அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்று. இதுவும் உண்மையாக இருக்கலாம். கடந்தகாலத்தில் உங்கள் முன்றாம் தரமான "மார்க்சிய" செயல்பாடுகள், என்றும் வெளிப்படையாக மக்களுடன் இருந்ததில்லை என்பது உண்மை. அப்படியிருக்கும் போது நோர்வே முற்போக்கு முகாமுடன் சேர்ந்து செய்த முன்றாம் தரமான அரசியல், மூடுமந்திரமாக இருப்பது என்வோ உண்மைதான்.

பேராசிரியர் சண்முகரட்னம் கூறுகின்றார். "தீவான் யூன் 9 கருத்தரங்கை நோரெப் ஏற்பாடு செய்வதற்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவை நோரெப்க்கு நிதி வழங்கியதாக மிகமோசமான ஆதாரமற்ற தகவலை வெளியிட்டுள்ளார். மிகவும் அறியப்பட்ட அமைப்புக்கு எதிராக மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு இது." நல்லது. கேள்விக்கு வருவோம். அப்படியானால், யார் பணம் கொடுத்தது? சொல்லுங்கள்!

1.இது போன்ற அமைப்புக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது. இவர்களின் அரசியல் நோக்கம் தான் என்ன? புலிகள் போன்ற அமைப்பிடம் பணம் வாங்கி, அவர்களுக்கு வேலை செய்யமாட்டார்களா? ஆக ஏகாதிபத்தியத்துக்கு மட்டும்தான் பணத்தை வாங்கிக் கொண்டு உங்களைப் போன்றவர்களின் மூன்றாம்தரமானவர்களின் துணையுடன் செயல்படுவார்களா?

2.புலிகள் பணத்தைக் கொடுத்து இது போன்ற அரசியல் ஏற்பாட்டை செய்யமாட்டர்களா? ஏகாதிபத்தியம் கொடுத்து ஏற்பாடு செய்தால் மட்டும்தான் நீங்கள் செல்வீர்கள், புலி கொடுத்தால் செல்லமாட்டீர்கள்! அது தான் உங்கள் அரசியல் வரையறை!

இதற்கெல்லாம்  பதில் சொல்லிக் கொண்டு, தன்னார்வ நிறுவனங்கள் பற்றி பேச வாருங்கள்.

பேராசிரியர் சண்முகரட்னம் கூறுகின்றார். "வஇச ஜெயபாலன், ரவிக்குமார், இளவாலை விஜேயேந்திரன் ஆகியோர் யூன் 9 நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் - சமாதானத்தில் நோர்வே - மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. தம்பா யூன் 9 கருத்தரங்கில் மட்டும் கலந்துகொண்டார்." என்கின்றார். அவர்கள் இதில் கலந்து கொண்டதாக தீவான் கூறி உள்ளாரா? இல்லையே. தீவான் கூறியது என்ன? "நோர்வேயை பொறுத்தமட்டில் இடதுசாரி அரசியல் சார்ந்த புத்திஜீவிகளாகவும், இடதுசாரிகளாகவும்; பெண்ணியவாதிகளாகவும், இலக்கியவாதிகளாகவும் காட்டிக் கொள்வோர் வெகுசிலரே. இவர்களில் பிரபலமானவர்கள் கவிஞர் ஜெயபாலன், கலாநிதி முனைவர் சண்முகரத்தினம், இசையமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் சுவடுகள் குழுவென இயங்கும் தம்பா மற்றும் இளவாலை விஜேந்திரனை குறிப்பிடலாம். இவர்களில் ஜெயபாலனும், இசையமைப்பாளர் ரவிக்குமாரும் பல வருடங்களுக்கு முன்பே புலிகளால் கொடுப்பதைக் கொடுத்து உள்வாங்கப்பட்டவர்கள். இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்." இங்கு முக்கியமான நபர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அவர்கள் தங்கள் பிரபல்யங்கள் மூலம் என்ன செய்கின்றனர் என்பதையே,  அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குகின்றார். இது போன்ற நடத்தைகளை கண்டிக்கின்றனரா! அல்லது சோரம் போகின்றனரா? என்பதை இதன் மூலம் சரியாகவே அம்பலப்படுத்துகின்றார்.  இதில் முன்பே புலிக்கு விலைபோனவர் பற்றி குறிப்பாக பேசுகின்றார். அப்படி அவர்கள் விலை போகவில்லை என்று பேராசிரியர் சண்முகரட்னத்தால் கூறத்தான் முடியுமா? நீங்கள் அரசியலைத் துறந்து வலதுசாரிகளுடன் கூடி கலந்துரையாட முடிகின்ற போது, வெளிப்படையான அரசியல் நடைமுறைசார்ந்த விளைவில் இருந்து நாம் அணுக முடியும். உங்களிடம் கேட்டு அணுக முடியாது. 

நீங்கள் மந்திரமாக பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்ற பேசும் உங்கள் "மார்க்சியத்தில்" இருந்தும் அணுக முடியாது. அரசியல் பேசும் ஊடகவியலாளர் ஜெயபாலன் ஒருபடி மேலே போய் ".. வஇச ஜெயபாலன், இசையமைப்பாளர் ரவிக்குமார், சுவடுகள் தம்பா, இளவாலை விஜேயேந்திரன் போன்ற உங்களுடைய நண்பர்கள் பற்றியும் அவர்கள் எல்ரிரிஈ க்கு விலைபோய்விட்டதாகவும் கட்டுரையாளர் குற்றம்சாட்டி உள்ளார்." என்கின்றார். அசல் திரிபு.  தீவான் கூறியது தெளிவானது. "இவர்களில் ஜெயபாலனும், இசையமைப்பாளர் ரவிக்குமாரும் பல வருடங்களுக்கு முன்பே புலிகளால் கொடுப்பதைக் கொடுத்து உள்வாங்கப்பட்டவர்கள்." என்று குறிப்பிடுகின்றார். மற்றவர்களை "பிரபலமானவர்கள்" என்கின்றார். இங்கு யார் யார் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடவில்லை. இவர்கள் எப்படி வலதுசாரி புலியுடன் கூடி கலந்துரையாடினர் என்ற அதிர்ச்சியை வெளியிட்டவர், தன் பின் குறிப்பில் "வேறு சில இடது  புத்திஜீவிகள் இக்கருத்தரங்கில் பங்கு பற்றினாலும், அவர்கள் தம்மை மக்கள் மத்தியில் தம்பட்டம் அடித்து தம்மை முன் நிறுத்தாததால்" அவர்கள் பற்றி குறிப்பிடவில்லை என்கின்றார்.
      
அடுத்து பேராசிரியர் சண்முகரத்தினம் எதை பாரதூரமானது என்கின்றார். "இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான விசமத்தனமான குற்றச்சாட்டுக்கள். எல்ரிரிஈ இன் சர்வதேச உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் வேண்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதாக எவ்வித ஆதாரமும் இன்றிக் குற்றம்சாட்டுவது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும். ஆதாரத்தை வைக்க வேண்டிய பொறுப்பு குற்றச்சாட்டை வைப்பவருக்கே உண்டு." ஆதாரம் என்பது வெளிப்படையானது. புலிகளின் பினாமி அமைப்பாக கலந்து கொண்ட புலிசார்பு அமைப்பின் பிரதிநிதிகள் நெடியவன்  குழுவைச் சேர்ந்தவர்கள். இது வெளிப்படையான உண்மை. நோர்வே மக்களுக்கு தெரியாது. தமிழ்மக்களுக்கு நன்கு தெரியும். பேராசிரியர் சண்முகரத்தினம் நோர்வே மக்களை  ஏமாற்றி அவிப்பது போல, எங்களுக்கும் கதை சொல்லுகின்றார். இல்லை அவர்கள் புலிகள் தான் என்று நாம் நோர்வே மொழியில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போது, அவர்கள் ஆடிய அழுகுண்ணி ஆட்டம் அந்த கூட்டம் நடக்க முன்பே அம்பலமானது. அதே நபர்களுடன் தான் தமிழில் கூடி கலந்துரையாடினீர்கள். அவர்கள் நெடியவன் புலிகள் அல்ல என்கின்றீர்களா? சொல்லுங்கள். நீங்கள் தமிழில் கலந்துரையாடியது, அவர்களின் அரசியல் நிகழ்ச்சிக்கு உட்பட்டதுதான். எப்படி ஒன்றாக வேலை செய்வது உட்பட, நிச்சயமாக முரண்பாடுகளுடன் தான். ஆக மொத்தத்தில் தன்னார்வ ஏற்பாட்டுடன் நெடியவனின் பினாமிகளுடன்; தமிழில் இலங்கை அரசியல் பற்றி உங்களுடன் கலந்துரையாடினார்கள். இப்படியிருக்க தேசம் நெற் ஜெயபாலன் "இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் நீங்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்படும் நெடியவனுடன் செயற்படுவதாகவும் வந்துள்ள குற்றச்சாட்டுக்கள்….. ?" பற்றி கேட்கின்றார். அதற்கு பேராசிரியர் சண்முகரத்தினம்  "இந்தக் குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான விசமத்தனமான குற்றச்சாட்டுக்கள். எல்ரிரிஈ இன் சர்வதேச உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் வேண்டப்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதாக எவ்வித ஆதாரமும் இன்றிக் குற்றம்சாட்டுவது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும். ஆதாரத்தை வைக்க வேண்டிய பொறுப்பு குற்றச்சாட்டை வைப்பவருக்கே உண்டு." என்கின்றார். இதன் மூலம் அவை புலிகளின் பினாமி அமைப்பல்ல என்று கூறி, புலியைப் பாதுகாக்கின்றார். புலிகள் எதற்காக பினாமி அமைப்பை வைத்திருக்கின்றதோ, அந்த நோக்கத்தை பாதுகாத்து அவர்களுடன் கூடி செயல்பட உள்ளதை நாசுக்காக இங்கு சொல்லுகின்றார். இதன் மூலம் புலிகளின் பினாமி அமைப்பின் நோக்கம் வெற்றிபெற்றதையும், அவர்கள் தாங்கள் பினாமி அமைப்பல்ல என்று கூறும் அரசியல் வண்டவாளத்தை தண்டவாளத்தில் பேராசிரியர் சண்முகரத்தினம் ஏற்றி வைக்கின்றார்.    

பேராசிரியர் சண்முகரத்தினத்தின் அடுத்த வாதத்தைப் பார்ப்போம்; "… அதனை வைத்துக் கொண்டு தமிழ்நெற் ஒரு கட்டுரையை எழுதி யூன் 17ல் வெளியிட்டு இருந்தது. தமிழ்நெற் எனது ஒளித்திரைக் குறிப்புக்கள் இல் இருந்து சில பகுதிகளைத் தெரிவு செய்து கட்டுரை எழுதியுள்ளது. எனது ஒளித்திரைக் குறிப்புக்களைப் பார்ப்பவர்கள், நான் எல்ரிரிஈ மீதும் விமர்சனம் கொண்டுள்ளதை காணலாம். அதே கட்டுரையில் தமிழ்நெற் ‘‘Tamil Circles’ - ‘தமிழ் வட்டங்கள்’ இனுடைய கருத்துக்களையும்  சேர்த்துக் கொண்டுள்ளது.
 
தமிழ்நெற் கட்டுரையின் ஒரு பந்தியை மொழிபெயர்த்த இரயாகரன் ‘‘ ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….. ’’ என்று நான் கூட்டிணைக்கும் ‘தமிழ் வட்டங்கள்’ கூறுவதாகக் கூறி என் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டி, தனிநபர் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
 
இரயாகரன் தனது கட்டுரையில் என் தரப்பில் இருந்து வந்ததாகக் கூறும் கருத்துக்கள் போன்று நான் ஓரிடத்திலும் எழுதவோ பேசவோ இல்லை. நான் கூறியதாக இரயாகரனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நெற்றில் ‘தமிழ் வட்டாரங்கள்’ (‘Tamil Circles’ - இது இரயாகரன் நடத்தும் இணையத்தைக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.) குறிப்பிட்டதாகவே குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தமிழ் வட்டங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு இரயாகரன் என்னைத் தாக்கி உள்ளார். எனக்கு அந்த தமிழ் வட்டாரங்கள் யார் என்ன என்பது தெரியாது.

இரயாகரன் தமிழ்நெற் இல் இருந்த கட்டுரையை சரியாகப் விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டார் (மொழிப் பிரச்சினையாகவும் இருக்கலாம்?) அல்லது வேண்டுமென்றே அடிப்படையற்று, தனது  வாசகர்களைத் திசை திருப்புவதற்காக நான் ஒருபோதும் சொல்லாத எழுதாத கருத்துக்களை, எனது கருத்துக்களாக்க முயன்றிருக்கிறார்."

எமக்கு மொழிப்பிரச்சனை இருப்பது உண்மை. ஆனால் உங்கள் இந்த விடையத்தில் அல்ல.

தமிழ் வட்டம் என்ற பகுதி எம்மை குறிக்கவில்லை என்பது எமக்கு சரியாகவும் துல்லியமாகவும் தெரியும். அப்படி குறிப்பதாக குறிப்பிட்டு நாம் எதையும் எழுதவில்லை. தமிழ் மொழியில் உங்களுக்கு பிரச்சனை இருக்காது என்று நம்புகின்றேன். இரண்டாவது " ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….. " என்ற அரசியல் நிலைப்பாடு அரசியல் ரீதியாக எம்முடையதல்ல. அந்த அரசியல் நிலைப்பாடு உங்களுடையது என்பதே, எமது விமர்சனத்தின் அரசியல் உள்ளடக்கம். தமிழ்நெற் கட்டுரை உங்கள் பெயரால் கூறி அது வெளிவந்துள்ளது. அதை நீங்கள் மறுத்து, அதன் அரசியலை அம்பலப்படுத்தாத உங்கள் சந்தர்ப்பவாத நடைமுறைகள் மீது நாம் எமது விமர்சனத்தை மையப்படுத்தியிருந்தோம். நீங்கள் முற்போக்கு வட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செய்யும் அரசியல் சீரழிவை தோலுரிக்கவும், இன்றைய உங்கள் மாமா வேலை செய்யும் அரசியல் சதிகளை முறியடிக்கவும் இதை எடுத்துக் காட்டினோம். " ….. சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள். கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும். ….." என்று இடதுசாரியம் மீது, அவர்கள் உங்கள் பெயரால் உங்கள் துணையுடன் அரச கைக்கூலிகள் என்று எம்மீது சேறடிக்கின்ற போது, உங்கள் அரசியல் நடத்தை எப்படிப்பட்டதாக இங்கு நீடிக்கின்றது? தேசம்நெற் பேட்டியில் இதைக் குறிப்பிட்டபோது கூட, இந்தக் கருத்தை மறுத்து போராடும் எந்த அரசியல் நேர்மையையும் யாரும் காணவில்லை. இதற்கு சோரம் போன, இதைப்பற்றியே பேசாத திசைதிருப்புகின்ற பேராசிரியத்தனத்தைத்தான் இங்கு மறுபடியம் காட்டுகின்றீர்கள். நீங்கள் சொல்லாமல் சொன்னதாக கூறும் தமிழ்நெற்றின் கருத்துதான், உங்கள் கருத்து என்பதைத் தாண்டி நீங்கள் இல்லை என்பதைத்தான், மூன்றாம்தரமான அரசியல் வழிகளில் மீளக் கூறியுள்ளீர்கள்.

24.06.2010
பி.இரயாகரன்