08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

வலதுசாரிய (புலி) ஏகாதிபத்திய சார்பு அரசியலை மறுக்கும் "மார்க்சிய" சண்முகரத்தினம்

நடந்த போராட்டம் என்ன என்று கூறாது, "மார்க்சியம்;" மூலம் அதை "தமிழ் மக்களின் போராட்டம்" என்கின்றார். "மார்க்சியம்" பேசிய பேராசிரியர் சண்முகரத்தினம். புலியிசம் பேசுகின்ற அரசியல்தளத்தில் நின்று தான் இதை இன்று உரைக்கின்றார். புலியையும், இதன் வலதுசாரிய அரசியல் அடித்தளத்தையும், அதன் ஏகாதிபத்திய ஓட்டுண்ணித்தனத்தையும் காப்பாற்ற, சண்முகரத்தினம் என்ற "மார்க்சிய" சந்தர்ப்பவாதி தன் முற்போக்கு வேட்டியை கோமணமாக்கிக் கொண்டு புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்.

அவர் கூறுகின்றார் "சில உலக இடதுசாரிகள் தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதென தவறாய் கருத்துரைக்கின்றார்கள்." என்கின்றார். மிக நுட்பமாக மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியல். இங்கு "தமிழ் மக்களின் போராட்டம்" என்ற அரசியல் உள்ளடகத்தைப் பயன்படுத்தி, இதை முடிச்சுமாற்றியாக மாறி அதன் மூலம் சொல்லுகின்றார். அதையும் கூட புலியின் வலதுசாரிய தமிழ்நெற்றில் கூறுகின்றார்.

"தமிழ் மக்களின் போராட்டம்" என்று கூறிதான், கடந்த 30 வருடமாக புலிப் பாசிசமும், ஏகாதிபத்திய எடுபிடித்தனமும் தமிழ் தேசியமாகியது. இப்படியிருக்க பேராசிரியர் சண்முகரத்தினம் தன் "மார்க்சிய" அறிவால், உண்மை புதைத்து சமூகத்தைக் காயடிக்க முனைகின்றார். முதலில் "மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையது" அல்ல என்று அவர் கருதினால், அவர் என்ன செய்யவேண்டும்? நிச்சயமாக கடந்தகால போராட்டம் ஏகாதிபத்திய சார்பு கொண்டு இருந்ததையும், இன்று அப்படி இருப்பதையும், அது மக்கள் விரோதத்தன்மை கொண்டு செயற்பட்டதையும் அம்பலப்படுத்த வேண்டும். அதாவது "தமிழ் மக்களின் போராட்டம்" மக்கள் விரோதத்தையே அடிப்படையாக கொண்டு செயற்பட்டதையும், அதன் அரசியல் வழிமுறை ஏகாதிபத்திய சார்புத்தனத்தைக் கொண்டு செயல்பட்டதை அம்பலமாக்கவேண்டும். இந்த உண்மையின் மேல் நின்று, மாற்று அமைப்பைக் கட்டவேண்டும். இதை மறுப்பது தான் சண்முகரத்தினத்தின் இழிவான அரசியலாகும்.

"தமிழ் மக்களின் போராட்டம்" ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதாக இருந்தால் மட்டும்தான், இது தேசிய விடுதலைப் போராட்டம். அதுமட்டும் தான் தமிழ்மக்களின் நலனை கொண்டிருக்க முடியும். இதையல்லவா இன்று சொல்ல வேண்டும்? இந்த வகையில் எமது எம்மைச் சுற்றிய கடந்த போராட்டம் சரி, நிகழ்கால போராட்டமும் சரி முன்னெடுக்கப்படவில்லை. அதனால் அது இன்னமும் ஏகாதிபத்திய சார்புப் போக்குடையதாக தொடர்ந்து இருக்கின்றது. இதைத்தான் இடதுசாரிகளாகிய நாங்கள் சரியாக சுட்டிக் காட்டுகின்றோம். இதைத்தான் புலியிசத்தின் பின் நிற்கும் பேராசிரியர் சண்முகரத்தினம் மறுக்கின்றார்.

இவர் மடடுமல்ல, இவரைச் சுற்றி பலர் அரோகரா போடுகின்றனர். இப்படி முன்னாள் சுவடுகளைச் சேர்ந்த சிலர், புலியை நக்கிப் பிழைக்க சண்முகரத்தினம் தமக்கு அரசியல் வழிகாட்டுவார் என்று நம்பும் இடதுசாரி பிரமுகர்களும் கூடத்தான் குரு பக்தியோடு அலைகின்றனர். அன்று யுத்தம் நடந்த போதும், இன்றைய புலி அரசியலுக்கும் கூடி கும்மியடித்து மாமா வேலை பார்க்கின்றனர்.

மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிய அரசியலை முன்வைத்து, வலதுசாரியத்துக்கு மாற்றாக மக்களிடம் செல்ல அரசியல் ரீதியாக வக்கற்றவர்கள் இவர்கள். இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியத்தின் பெயரில், புலியிசத்துக்கும் வலதுசாரியத்துக்கும் கொடிபிடிக்க தொடங்குகின்றனர். 09.06.2010 அன்று  ஏகாதிபத்தியம் - புலி - இடதுசாரியக் கூட்டாக கூடி கலந்துரையாடும் அளவுக்கு, அரசியல் விபச்சாரம் நடக்கின்றது. இதைத் தொடர்ந்து மாநாடுகளும், அதையடுத்து 17.06.2010 அன்று சண்முகரத்தினத்தின் கருத்துகள் தமிழ்நெற்றில் வருகின்றது. அதில் கடந்த மற்றும் நிகழ்கால புலிப்போராட்டம் ஏகாதிபத்திய தன்மை கொண்டதல்ல என்று, அதை "தமிழ் மக்களின் போராட்டம்" மாக காட்டிவிடுகின்றார். புலி வலதுசாரிய தமிழ்நெற், அதை தன் அரசியல் நிலைப்பாட்டுடன் பெருமையுடன் வெளியிடுகின்றது. அவர் மட்டுமா, மே 18 இயக்கத்தை சேர்ந்த அவரின் தங்கையும், நோர்வே முற்போக்கு அணியில் உள்ளவரும் சேர்ந்து எமக்கு எதிராக வாளை சுழற்றிக்கொண்டு எழுதிய ஆளைத் தேடுகின்றனர். என்ன போட்டுத்தள்ளவா!? வேறு எதற்குத்தான் தேட வேண்டும்? கருத்துக்கு பதிலளிக்க வக்கில்லாமல் ஆளைத்தேடுகின்றனர். இதுதான் கடந்தகாலத்தில் ஆளைத் தேடி போட்டுத்தள்ளிய அரசியல். இதைத்தான் நோர்வே முற்போக்கு குஞ்சுகள் செய்தனர். சண்முகரத்தினத்தின் தங்கை கொண்டுள்ள  மே 18 அரசியலும் இதுவா! அல்லது அண்ணன் பாசமோ! அல்லது நோர்வே முற்போக்கு முகமூடி பாதுகாக்கும் போராட்டமோ! எதுவென்று புரியாதயளவுக்கு, அதில் வேறுபாடில்லை.

இப்படி ஒருபுறம் இருக்க சண்முகரத்தினத்தின் துதிபாடும் நோர்வே முற்போக்குகளில் ஒருவர், தொடர்ச்சியாக (நாமல்லாத) மற்றவர்கள் மீதும் (குறிப்பாக தமயந்தி மீது) அவதூறுகளை அள்ளிதெளித்தார். அதனால் அதை பின்னூட்டமாக நாம் அனுமதிக்கவில்லை. இதில்  எனக்கு எதிராக எழுதிய வரிகளை எடுப்போம். "உங்களைப் போன்ற சிலருக்கு மூளையில் பிரச்சனை உண்டென்பதும் அதற்காக சதா தனிநபர் வசைபாடுகிறீர்கள் என்பதும், எமது கருத்துக்களை இங்கே அனுமதிக்காமல் உங்களை நீங்களே விபச்சாரம் செய்கிறீர்கள் என்பதும் யாமறிவோம். ஏகாதிபத்திய நாட்டில் வாழ்ந்து மற்றவர்களை ஏகாதிபத்தியவாதிகளாக்கும் உங்களைப் போன்ற புத்தி பேதலித்தோரை நாமும் மக்களும் அறிவோம்" என்கின்றார். இப்படி ஏகாதிபத்தியம் பற்றி, சண்முகரத்தினத்தின் "மார்க்சியத்தை" உள்வாங்கிய முற்போக்கு அறிவு புத்தி பேதலிக்காது கூறுகின்றது.

இவர் இங்கு கூறும் "ஏகாதிபத்திய நாட்டில் வாழ்ந்து மற்றவர்களை ஏகாதிபத்தியவாதிகளாக்கும் உங்களைப் போன்ற புத்தி பேதலித்தோரை நாமும் மக்களும் அறிவோம்" என்ற அரசியல் தான், சண்முகரத்தினத்தினதும் கூட. ஏகாதிபத்திய நாட்டில் வாழ்ந்துகொண்டு, ஏகாதிபத்தியம் பற்றி பேசக் கூடாது என்பதும், மற்றவர்களை அப்படிக் கூறக் கூடாது என்பது, எமக்கு எதிராக  கத்தியைச் சுழட்டும் சண்முகரத்தினத்தின் சீடர்களின் அரசியலாக வெளிப்படுகின்றது. நாங்கள் ஏகாதிபத்திய நாட்டில் வாழ்வதற்காக குற்றம் சாட்டுவதாக கூறுவது, இந்த முற்போக்குத் தனத்தின அரசியல்; மூகமுடியைத்தான் தோலுரிக்கின்றது.                      

நாங்கள் ஏகாதிபத்தியத்தனமாக கூறுவது எதை

1. நோர்வே அரசு உள்ளிட்ட மேற்கத்தைய அரசுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்திய நலன் கொண்டது. இதை அம்பலப்படுத்தாமலும், அதனுடன் கூடி நின்று மக்கள் விரோத எதிர்ப்புரட்சி அரசியல் செய்வதுதான் ஏகாதிபத்தியத்தனம் என்கின்றோம்.    

2. கடந்த 30 வருட புலிகளின் போராட்டமும், நிகழ்கால புலிப்போராட்டமும் ஏகாதிபத்திய நலன் சார்ந்தும், ஏகாதிபத்தியதன்மை கொண்டதுமாகும். இதை மூடிமறைத்து, "தமிழ் மக்களின் போராட்டம்" என்று இதைக் கூறுவதும், காட்டுவதும் சுத்த ஏகாதிபத்திய அரசியல் மோசடித்தனமாகும்.

3. "தமிழ் மக்களின் போராட்ட"த்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக முன்வைத்து,  மக்களை வலதுசாரியத்துக்கு எதிராக அணிதிரட்ட மறுப்பதும் கூட, ஏகாதிபத்தியதனம் தான். இந்த அரசியல் கடமையை மறுத்த, மற்றைய வர்க்கங்களிள் (ஏகாதிபத்திய சார்பு வர்க்கத்தின்) கையில் மக்களை கொடுத்து அதை நியாயப்படுத்தி நிற்பது கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கித்தனம்;.

இதைத்தான் சண்முகரத்தினத்தின் தலைமையில் நோர்வே முற்போக்கு குஞ்சுகள் செய்கின்றனர். இதற்கு அரோகரா போட்டுக்கொண்டு துதிபாடுகின்றனர்.

இதுவல்ல தங்கள் அரசியல் நிலை என்று கருதும் எவரும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைப்பதும், இந்தப் போக்குக்கு எதிராக குரல் கொடுத்து போராடுவதும் மட்டும் தான் உண்மையானதும் நேர்மையானதுமான வெளிப்படையான அரசியல் வழிமுறையாகும்;. குறுக்கு வழியில் இதை நிறுவ முடியாது. ஆளைத் தேடுவதும், வழக்குப் போடுவதாக மிரட்டுவதும், "கொழும்புக்கு இது மிகவும் இலாபகரமானதும் உகந்ததுமாகும்" என்று கூறி மறைமுகமாக துரோகியாக காட்டுவதன் மூலம், புலி அரசியலைத்தான் செய்ய முடியும். இதுதான் புலி அரசியல்.

இதற்கு மாறாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, வலதுசாரியத்தை எதிர்த்து மக்கள் அரசியலை முன்வைத்து, இலங்கை அரசை (கொழும்பை எதிர்த்தல்ல) எதிர்த்து மக்களுக்காக மக்களுடன் நின்று போராடுங்கள். நாங்கள் உங்களுடன் கரங்கோர்த்து வருகின்றோம். இல்லையென்றால் எம்முடன் சேர்ந்து போராடுங்கள். இதைவிட மக்களுக்கான மாற்றுத் தெரிவு எதுவும் கிடையாது.

பி.இரயாகரன்
20.06.2010
          


பி.இரயாகரன் - சமர்