சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் இந்த கேள்வி மிக முக்கியமானதாகின்றது. வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் அவசியமானதாகின்றது. ஆனால் இது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகவுமுள்ளது. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் கடினமாக்கி, அதை ஆழ்ந்த சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது.
ஆனால் நாம் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும். ஆரியம், வருணம், சாதியம், பார்ப்பனியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், அதன் வாழ்வியல் கூறுகள், யார் ஆரியர்?, யார் பார்ப்பனர்? என்பதை தெளிவாக்குகின்றது.
1.நிற வருணத்தை முதன்மைப்படுத்திய ஆரியன்
தாம் அல்லாத மற்றவனை, கறுப்பனாக அடையாளப்படுத்தி நிற வருண பிரிவினர் தான் ஆரியர்கள்;. அப்படியாயின் இவர்கள் யார்? இவர்கள் வெளியில் இருந்து வந்த நாடோடிக் கொள்ளைக்காரர்கள். இன்றைய இந்திய மண்ணில், இவர்களின் மூதாதையர்கள் வாழவில்லை. மாறாக இவர்கள் கி.மு 700 க்கும் கி.மு 1500 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள். இப்படி வந்தவர்கள் தம்மை, தம் நிற வருணத்தின் மூலம் அடையாளப்படுத்தியவர்கள். அதாவது அவர்களின் சடங்குகள் யுத்தத்தை மையப்படுத்திய போது, தாம் அல்லாத கறுப்பர்களை அழிக்கவும் வெல்லவும் கோருகின்றது. இப்படித் தான் வருண சமூகம் தோற்றம் பெற்றது. இப்படி ஆரியர் கறுப்பு இன மக்களுக்கு அன்னியராக, வந்தேறிகளாக, கொள்ளைக்காரர்களாக, யுத்தவெறியர்களாக, வெளிறிய வெள்ளை நிறத்தவராகவே, காட்டுமிராண்டிகளாக, உழைப்பை அறியாதவராகவே இந்திய மக்களுக்கு அறிமுகமானவர்கள்.
2.இந்திய மக்களுடன் தொடர்பற்ற சடங்கே வேதம்
ரிக்வேதம் ஆரியருடையது. இது ஆரியரால் பின்பற்றப்பட்டது. அது அவர்களின் வாழ்வியல் முறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை, அடிப்படையாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று. அதன் வாழ்வியல் முறையும், அதன் பண்பாடும், இந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்வுக்கு நேர்மாறானது. அதாவது ஆரியரோ கொள்ளை அடித்து வாழ்ந்த அரைக் காட்டுமிராண்டி நாடோடிகள். இந்தியாவில் வாழ்ந்தோர் உழைத்து வாழ்ந்த, உழைப்புச் சமூகங்கள். குறைந்தபட்சம் உழைப்பில் ஈடுபட்டு வாழ்ந்த நாகரீக சமூகங்கள். ஆரியரோ உழைப்பை அறியாதவர்கள்.
3.ஆரியரில் இருந்து சிதைந்த பூசாரிகளில் இருந்துதான், பார்ப்பனர்கள் உருவானவர்கள்
ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரில் இருந்து பிரிந்து சிதைந்த ஒரு சிறிய பூசாரிப் பிரிவு தான், ஆரிய சடங்கு வடிவங்களுடன் பார்ப்பனர்களானர்கள். இவர்களும் கூட, நேரடியான ஆரிய இரத்த வாரிசுகள் அல்ல.
மாறாக இவர்கள் இந்திய சமுதாயத்தில் கலந்ததன் ஊடாக, முதலில் தம் நிற வர்ணத்தையும், பின் தம் வர்க்க வருணத்தையும் இழந்தனர். இதை அவர்கள் தக்கவைக்க முனைந்த முறை தான், சமூகத்தை சாதியாகத் திரித்தது. ஆரிய அடையாளத்தை இழந்து, இந்தியக் கலப்பைக் கொண்ட ஆரியர்கள் தான், பார்ப்பனர்களானார்கள். ஆரியரில் பெரும்பான்மையானவர்கள் (வருணத்தின் நிறம் மற்றும் பாரம்பரியமான அவர்களின் வாழ்வுமுறையையே இழந்தவர்கள்), இந்திய சமூகத்துடனான உழைப்பில் ஒன்று கலந்து சிதைந்துவிட்டனர். அதாவது இனம் காணமுடியாத வகையில், அவர்கள் இந்தியச் சமூகமாக கலந்து போய்விட்டார்கள்.
4.ஆரிய கலப்பற்ற இந்தியரும் பார்ப்பனர்களானார்கள்
இன்றைய பார்ப்;பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள்;. அதாவது இந்தியர்கள். வேத பார்ப்பன மதத்தின் ஊடாக, ஆரிய வழி பார்ப்பனர்களைப் பின்பற்றி பார்ப்பனர்களானவர்கள். ஆரியர் வடக்கில் இருந்து தெற்கு வந்தது போல், தெற்கில் இருந்து வடக்கு சென்று ஆரிய பார்ப்பனரைப் பின்பற்றி பார்ப்பனர்களானவர்கள்;. அதாவது ஆரியர் வழிவராத பூசாரிகள், வேதத்தை பின்பற்றி பார்ப்பனர்களாவர்கள். இவை எல்லாம் சேர்ந்து ஆரிய நிற வருணத்தின் தனித்தன்மை, வருண வர்க்கத்தின் தனித்தன்மையை இல்லாதாக்கியது. இது வருணத்தின் வர்க்கத் தன்மையை முன்னிலைக்கு கொண்டுவந்தது. இதை தம் பரம்பரை உரிமையாக்கிய போது, பார்ப்பன பூசாரிகள் அனைவரும் பார்ப்பன சாதியத் தன்மையைப் பெற்றனர்.
5.பார்ப்பனரின் மூலமோ, ஆரிய வழி வந்த பூசாரித் தன்மைதான்
ஆரியரில் எந்த பிரிவு பெருமளவில் பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அதாவது கொள்ளையடித்து வாழ்ந்த ஆரிய நாடோடிகளுக்கு தலைமை தாங்கிய பூசாரிகள்தான், பார்ப்பனர்களானார்கள். ஆரியரை கொள்ளையிட்டு வாழ, யுத்தம் மூலம் வழிகாட்டியவர்கள் தான் இந்த ஆரிய பூசாரிகள். இப்படி அவர்கள் யுத்தத்தை வழிகாட்டியதன் மூலம், சலுகையூடாக சுரண்டிக் குவித்த செல்வத்தை (இங்கு செல்வம் என்பது பொருள் முதல் சடங்குக் கல்வி வரை) கொண்டு வாழ்ந்த பூசாரிகள், தம் வாழ்வியல் முறையை இழந்து, இந்தியக் கலப்பின் ஊடாகவே பார்ப்பனர்கள் ஆனார்கள்.
இந்தச் சமூக சிதைவின்றி, ஆரிய வழிபாட்டு சடங்கு நஞ்சை சமூகத்தில் இட்டுவிட முடியாது. அதேநேரம் வந்தேறிகளான அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.
6.ஆரியச் சிதைவு, அவர்கள் தம் மொழியை இழக்குமளவுக்கு நடந்தது
ஆரியம் பார்ப்பனியமாக திரிந்து போகுமளவுக்கு, ஆரிய-வேத மக்களின் சிதைவு இந்திய சமூகத்தில் நிகழ்ந்துள்ளது. கொள்ளையடித்து வாழ்ந்த ஆரியர், இந்தியாவில் ஒரு தனிச் சமூகமாக, தனித்து ஒரு பகுதியில் நிலைத்து வாழ முடியவில்லை. அதாவது தொடர்ந்தும் கொள்ளையடித்தபடி, ஆரியராக நிலைக்கவும் நீடிக்கவும் முன்னேறவும் முடியவில்லை. இதனால் உழைத்து வாழ்ந்த சமூகத்தில் சிதைந்தனர். இதனால் ஆரியர் தமது மொழியை இழந்து போகுமளவுக்கு, ஆரிய சிதைவு நிகழ்ந்துள்ளது. அதாவது உழைத்து வாழ்ந்த இந்திய சமூகத்தில், அவர்களும் உழைப்பில் ஈடுபட்டதால் சிதைந்தனர். இதனால் தம் பாரம்பரிய சடங்குமுறையை புதிய வாழ்வின் ஊடாக இழந்தனர். இதனால் தம் பழைய வாழ்வை இழந்தனர். தம் மொழியையே இழந்தனர். ஆரிய பூசாரிகள் இதில் ஒரு பகுதியை பார்ப்பனச் சடங்கு ஊடாக மீட்ட போது, அதை தம் புதிய மொழி ஊடாகத் தான் மீட்டனர். இதனால்தான் அந்த புதிய மொழியாக, சமஸ்கிருதம் தோற்றம் பெற்றது.
7.பூசாரிகளின் சடங்காகவே, ஆரிய வாழ்வு எஞ்சியது.
ஆரிய மக்களின் சடங்காக, இந்திய சமூகத்தின் ஒரு பகுதியில் அறிமுகமாகவில்லை. மாறாக வந்தேறிகளின் எச்சமாக, சமூகத்தின் மேல் இருந்து இடப்பட்டது.
ஆரிய-வேத சமூக அமைப்போ, உழைத்து வாழ்ந்த ஒரு சமூகமல்ல. கொள்ளையடிக்கும் யுத்த நாடோடிகளாக வாழ்ந்த, அரைக்காட்டுமிராண்டிகள். இதை முன்நின்று வழிநடத்திய பூசாரிகளை அடிப்படையாக கொண்ட, ஒரு சமூகம். இந்த ஆரிய பூசாரிகள், ஆரிய சமுதாயத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையினர். ஆனால் பொருளாதார ரீதியாக, அதிகார ரீதியாகவும் ஆரியரை ஆட்டிப்படைக்கும் வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். அவர்கள் தமது தனிப் பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட, ஒரு சலுகைக்குரிய சுரண்டல் பிரிவு.
ஆரிய-வேத சமூகச் சிதைவின் போது அவர்கள் தனிமைப்படுமளவுக்கு, தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு சிறிய குழுவாகத்தான் சிதைந்து எஞ்சினர். அவர்கள் தமது தனித் தன்மையை பேணியபடி, தனிச்சலுகையையுடன் தான், இந்திய சமுதாயத்தினுள் சிதைந்தனர். இப்படி அவர்கள் மொத்தமாக சிதைந்ததன் மூலம், கொள்ளையடித்து தனி சமூகமாக வாழும் வாழ்வை இழந்தனர் இதனால் தமது வேத - ஆரிய மொழியையும் கூட இழந்தனர். இந்த சிறிய பிரிவு பின்பற்றிய சடங்குகளால், புதிய சமுதாயத்தில் தம் மொழியைக் கூட பாதுகாக்க முடியவில்லை. சடங்கு புதிய மொழியில், ஒரு எச்சமாக வெளிப்பட்டது. ஆரிய வழிவந்த பார்ப்பனன், தன் ஆரிய மொழியையே இழந்தான்.
இதன் சிறிய பகுதி ஆரிய சமூகத்தில் அதிகாரத்தையும் செல்வத்தையும் கொண்டிருந்ததால் தான், தொடர்ந்தும் தனிச் சலுகை பெற்;ற ஒரு ப+சாரிக் குழுவாக தம்மை நிலைநாட்ட முடிந்தது. அதாவது தம் வாழ்வியல் வழியில் இந்தியாவை வெல்ல முடியாது சிதைந்தவர்கள், தனிச் சலுகையுடன் தம்மை தாம் புதிய நிலைமைக்கு ஏற்ப திரித்தனர். மதங்களின் தோற்றத்துடன், தனித்துவமாக தம்மை சமூகத்தில் நிலைநிறுத்திக் கொண்டனர். இதன் மூலம் தமது வழிபாட்டு முறைகளை மற்றவர்கள் மீது திணிக்க முடிந்தது. தமது பழைய சடங்கை புதிய சூழலுக்கு ஏற்ப திரித்தனர். இதன் மூலம் அவர்கள் தம் ஆரிய எச்சத்தை பாதுகாக்க முடிந்தது.
8.ஆரிய நாடோடித்தனம் தான், ஆரிய-வேத சடங்கைப் பரப்பியது
எஞ்சிய இந்த ஆரிய நாடோடித் தன்மையும், சடங்குகளுமே பார்ப்பனியமாக மீள் உருவாக்கம் பெற்றது. அது இந்தியாவெங்கும் உதிரி வடிவிலான நாடோடித்தன்மையுடன், சலுகை கொண்ட சுரண்டும் பிரிவாக மாறி அதை படிப்படியாக நகர்த்தியது. தொடர்ந்தும் உழைப்பில் ஈடுபடாது வாழும் தனது சொந்த வழிமுறைக்கு ஏற்ப, இது பொருந்திப் போனது. இதை சாதிய பார்ப்பனிய வடிவில், மதம் ஊடாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு நகர்ந்தது.
9. திராவிடம் - ஆரியம் என்ற வரட்டுத்தத்துவம், பார்ப்பனியத்தை புரியவைக்காது
ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது, நிலவிய சமூகம் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற வாதம் முற்றிலும் தவறானாது. திராவிட மொழிக் கலப்பு சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், விவசாயம் தொடர்பான சொற்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், இந்த தர்க்கம் ஏற்படையதாகிவிடாது.
அங்கு உருவான பற்பல மொழிகள், திராவிட மற்றும் சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையல்ல. அங்கு வாழ்ந்த மக்கள் உழைப்பில் ஈடுபட்டதுடன், திராவிடமல்லாத வேறு மொழியையும் பேசி வாழ்ந்தவர்கள்.
பார்ப்பனியம் பற்றிய தெளிவுக்கு, திராவிடம் - ஆரியம் என்று எடுகோள் முற்றிலும் தவறானது. இரண்டு போக்கு, இரண்டு நாகரீகம் என்று, சமூகத்தை இதற்கு ஊடாக தோண்டிப் பார்ப்பது அறிவின் அபத்தமாகும்.
10.ஆரியர்-திராவிடர் அல்லாத ஒன்றாக, சிந்துவெளி நாகரீகம் இருக்க முடியாதா!?
இந்திய சமூகத்தில் இன்று எஞ்சியுள்ள மொழிகளின் எண்ணிக்கை பல நூறு. இவை எல்லாம் ஆரிய – திராவிடம் என்ற இருமொழிக் குடும்பத்தை அல்லது அதன் அடியைச் சேர்ந்தவையல்ல. அந்த மொழிகளின் அடி என்ன? இந்த கேள்விக்கு விடைதெரியாது.
ஆனால் மொழி ஆய்வாளர்கள், சமூக ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அனைத்தையும் இதற்குள் வைத்து தோண்டி பார்த்ததைத் தான், பார்ப்பதைத் தான் நாம் காண்கின்றோம். பார்ப்பனியம், பார்ப்பனிய எதிர்ப்பு என்ற இரண்டு சமூகப்போக்கின் பின், அனைத்தையும் குருட்டுக் கண் கொண்டு பார்ப்பது நிகழ்கின்றது. சிந்துவெளி மற்றும் ஹரப்பா நாகரீகத்தை இதற்குள் வைத்து கிண்டுவதுதான், மனித வரலாற்றை புரிந்து கொள்வதில் மற்றொரு மிக முக்கிய தடைக்கல்லாகும்.
11. ஆரியரை கால்நடை சமூகம் என்பதே ஒரு புனைவு
ஆரியரை கால்நடை வளர்ப்பு சமூகமாக காட்டி கட்டமைக்கின்ற புனைவுகள், அவர்களின் எடுகோளிலேயே தகர்ந்து போகின்றது.
1. கால்நடை வளர்த்தபடி வந்தவர்கள் என்றால், ஏன் இந்தியாவில் கால்நடை சமூகமாக நீடிக்க முடியாமல் அழிந்து போனார்கள்!
2. ஆற்றம் கரையூடாக வந்த ஆரியர், நீர்பிடிப்பும் அதன் அடிப்படையிலான புல்வளத்தையும் கொண்ட பிரதேசத்தை எல்லாம் ஏன் கைவிட்டு விட்டு வந்தனர்!? பல ஆறுகளை அண்டிய அந்த புல்வளங்கள் எல்லாம், ஆரியக் கொடுமைகளைக் கண்டு வற்றிவிட்டதா?
3. ஆரியன் தொடர்ச்சியாக முன்னேறி யுத்தத்தை ஏன் நடத்தினான்?
4. கால்நடை சமூகமும் விவசாயச் சமூகமும் பகைச் சமூகங்களல்ல. ஒன்றையொன்று சார்ந்து வாழும் சமூகங்கள். அப்படியிருக்க யுத்தத்தை எதற்காக ஆரியன் நடத்தினான்?
5.கால்நடை வளர்ப்பு சமூகம் தான் ஆரியன் என்றால், அவனின் பலியீடுகள் எப்படி? ஏன்? செம்மறி ஆட்டில் இருந்து எருமைமாடு வரை பலவாக மாறியது? அத்துடன் பலவித விலங்கு பலியீடாக மாறியது எப்படி? இது கால்நடை சமூகத்தின் அடிப்படைக்கே முற்றிலும் மாறானது.
தொடரும்
பி.இரயாகரன்
4.முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04
3.எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03 2.பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02