08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகள்சொன்ன இரண்டு கோரிக்கைகள்

அண்மைக் காலமாக புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் முறிந்து, தொங்கிக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைக் காலங்களில் புலிகள் செய்வதாகக் கூறிய இரண்டு முக்கிய விடயங்களான முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்துவது, மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்றவற்றை இதுவரை செய்யாது, காலத்தை இழுத்தடித்தும் வருகின்றது புலிகள்.

மேற்படி இரண்டு பிரச்சனைகளும் அரசு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் அல்ல. தமிழ் மக்கள சம்பந்தப்பட்டதும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை சம்பந்தப்பட்டதுமான பிரச்சனைகளே. பேச்சு வாத்தையில் யார் வெற்றிபெறுவது என்ற வகையில் இது தீர்மானிக்கப்பட முடியாது ஒரு விடயமாகும். எமது தேசிய விடுதலைப் போராட்டமானது அதன் சரியான திசை வழிகளில் பலமடைவதிலும் இப்பிரச்சனை சார்ந்துள்ளது.


சர்வதேச ரீதியில் பேச்சு வார்த்தையின் ஊடாக புலிகளை அம்பலப்படுத்துவதில் அரசானது தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அரசு வெற்றி பெறும் இந் நிலையானது எதிர்காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தையே பலவீனப்படுத்தும். பொதுவில் புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையே பிரதானப்படுத்தி அம்பலப்படுத்துவதில் அரசு முன்னே செல்கிறது. இதைக் கவனத்தில் எடுத்தோ என்னவோ புலிகள் சிங்கள யுத்தக் கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இங்கு புலிகள் சிங்கள யுத்தக் கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இங்கு புலிகள் மீண்டும் தமது ஜனநாயக விரோத நிலைப்பாட்டைத் தக்கவைப்பதற்கே முனைந்துள்ளனர்.


யுத்தக் கைதிகள் விடுதலை என்பது ஓர் ஜனநாயக செயற்பாடாக எந்நேரமும் இருந்த விடுவதில்லை. யுத்தக் கைதிகளை வைத்திருப்பது எந்நேரமும் ஜனநாயக விரோதமாக இருந்து விடுவதுமில்லை.


புலிகள் அவசரமாகச் செய்ய வேண்டியது தாம் சொன்னவைகளையே, தமது சொந்தப் பிரதேசங்களைக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வந்த யாழ். முஸ்லிம் மக்கள் இன்று, அநாதரவாக அகதிகளாக எந்தவித வசதிகளுமின்றி அல்லலுறுகின்றனர்.


அவர்கள் தம் வாழ்வு யாழ். மண்ணில் என்ற கனவுகளுடன், தேர்தலைப் பகிஸ்கரித்தும், புலிகளிடம் பல வேண்டுகோள்களை உருக்கமாக விடுத்தவண்ணமே உள்ளனர்.


இந்தக் கோரிக்கைகள் புலிகளின் மனதுகளை உறுத்தாமலில்லை. புலிகளின் பலதரப்புக்களில் இருந்தும் முஸ்லிம் மக்களை வெளியேற்றியது தவறு என கூறிவருகின்றனர். இக் கூற்றுக்களின் மூலம் ஜனநாயகததைப் பாதுகாக்க முனைவதாக ஒரு வெகுஜன அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைந்தனர்.


ஆனால் அது இன்ற வெறும் வாய்வீச்சாக மட்டுமே மாறிவிடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதையும் கவ்விவருகிறது. புலிகள் ஜனநாயகத்தையும், சர்வதேச ஆதரவையும் ஒருங்கு சேரப் பெறவும், தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை தேசிய விடுதலையின்பால் குவித்துக் கொள்ளவும், முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்துவதும், அவர்களின் நலன்களைக் கவனத்தில் எடுப்பதும் இன்று அவசரமானதும் அவசியமானதுமான பணிகளாகும்.


புலிகளின் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமென சில பேச்சு வார்த்தைகளின்போது புலிகள் கூறியிருந்தபோதிலும், அது நடைமுறையில் நடைபெறவில்லை. புலிகள் துரோகக் குழுக்களுடன் சில பேச்சு வார்த்தைகளை நடத்திவருகின்ற போதிலும், துரோகக் குழுக்கள் தாம் புலிகளின் பிரதேசத்தில் இயங்க அனுமதிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். துரோகக் குழுக்களுடன் மேலதிகமாக புலிகள் என்ன பேசினார்கள் என்பதை விடுத்து துரோகக் குழுக்களை புலிகள் தமது பிரதேசத்தில் இயங்க அனுமதியளிப்பது தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில் போய் முடியும்.


புலிகள் துரோகக் குழுக்களுடன் பேசுவதும், பேசாமல் விடுவதும் ஒரு முக்கியமான விடயமேயல்ல: மாறாக துரோகக் குழுக்களை எதிர்த்தும், ஜனநாயகத்திற்குக் குரல் கொடுப்பவர்களுக்கு ஜனநாயகத்தை வழங்க முன்வருவதே முக்கியமானதாகும். இந்தவகையில்

கடந்தகாலங்களில் ஜனநாயகத்தைக் கோரியவர்கள் என்ற அடிப்படையில் கோரியவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வது.

N.L.F.T, P.L.F.T,  தீப்பொறி, பாசறை, பேரவை… போன்ற உண்மையான தேசவிடுதலை சக்திகளை விடுதலை செய்வது.
விடுதலையை மட்டுமே நேசித்து துரோகக் குழுக்களுக்குள் இருந்தவர்களும், மற்றும் துரோகத்திற்கு துணை போகதவர்களையும் விடுதலை செய்வது.


கடந்த காலங்களில் இழைத்த தவறுகளை விமர்சனத்துடன் ஏற்றுக் கொள்வதும், ஜனநாயகத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களை இனம் காட்டுவதும்.


இந்தியா, இலங்கை மற்றும் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் அனைத்து சக்திகளுக்கும் ஜனநாயகத்தை வழங்கி இயங்க அனுமதிப்பதும்.


இவைகளின் மூலம் மட்டுமே தேசிய விடுதலை போராட்டம் பலமடையவும், வெற்றிபெறவும். பரந்துபட்ட மக்களின் ஆதரவையும் ஒன்று திரட்டி விடவும் முடியும்.


இன்னும் காலம் கடந்து விடவில்லை. தேசிய விடுதலையின்பால் இவற்றைக் கவனத்தில் எடுப்பதன் மூலம் இலங்கையும் அரசையும், அவற்றின் தொங்குதசைகளான துரோகக் குழுக்களையும் பலவீனமடையச் செய்வதுடன், தேசிய விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்கவும் முடியும். குறைந்தபட்சம் இந்த முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைகளை புலிகள் வழங்க முன்வர வேண்டும்.


பி.இரயாகரன் - சமர்