தமிழ்மக்களும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்றாக பயணிக்கவில்லை. பிளவுபட்ட தளத்தில், மக்களின் எதிரிகளுடன் தான் அரசியல் பிரதிநிதிகள் கூடிநிற்கின்றனர்.    ஏகாதிபத்தியங்களும், அன்னிய சக்திகளும் நடத்துகின்ற தங்கள் நலன் சார்ந்த தலையீடுகளினூடு தான், அரசியல் பிரதிநிதிகள் கூடி மக்களை காட்டிக்கொடுக்கின்றனர். அன்று இந்தியா வழங்கிய பயிற்சி முதல் இன்று சர்வதேச நாடுகள் மனிதவுரிமை பற்றி வடிக்கும் முதலைக் கண்ணீர் வரை, இவை அனைத்தும் அவர்களின் சொந்த நலன் சார்ந்ததுதான். மக்கள் நலன் சார்ந்ததல்ல. தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் இதன் மூலம் தமிழ் மக்களின் விடிவைக் காட்டுவதன் பின்னணியில், தங்கள் சொந்த நலனை அடைய முனைகின்றனர்.

இலங்கையின் இன்றைய எதார்த்தம் என்ன? இலங்கையில் புலிகள் மட்டும் தோற்கவில்லை. மேற்கும் கூடத்தான், தன் நலன்களை இழந்தது. இது புலியின் அழிவினால் ஏற்பட்டதல்ல. மாறாக புலியின் அழிவுக்கு காரணமான யுத்தத்துக்கு உதவிய தரப்பால் தோற்கடிக்கப்பட்டது. மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் தன் அரசியல் பொருளாதார பிடியை இன்று இழந்துள்ளது. மேற்குநாடுகள் தன்னார்வ நிறுவனங்கள் உட்பட, அவர்களுக்காக கண்காணிப்பு அரசியல் செய்யும் மனிதவுரிமை அமைப்புகள் கூட, இலங்கையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது அல்லது வெளியேற்றப்பட்டருக்கின்றது. இந்திய மற்றும் சீன பொருளாதார நலன்கள் மட்டுமின்றி, அரசியல் இராணுவ செல்வாக்குக்கு உட்பட்டு அதன் சர்வதேச ஒழுங்குக்குள் இலங்கை வென்று உள்ளது. 

மேற்கத்தைய நலன் புறக்கணிப்பும், தன்னார்வ நிறுவனங்கள் வெளியேற்றம் என்பதுவும், இலங்கை மக்களின் நன்மை கருதியல்ல. இலங்கை தேசத்தின் தேசிய இறைமை கருதியோ, மக்களின் உரிமைகளுக்காகவோ அல்ல. மாறாக யுத்தம் மூலம் குவித்த செல்வத்தையும், புலிகளிடம்; அபகரித்த பாரிய மூலதனத்தையும் சட்டபூர்வமான மூலதனமாக்கவும், இந்த கொலைகார கொள்ளைக்கார கூட்டம் போரில் இழைத்த பாரிய போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும், சிறு குழுவை அடிப்படையாக கொண்ட குடும்ப சர்வாதிகார பாசிச ஆட்சியை தக்க வைக்கவும், சர்வதேச முரண்பாட்டை சார்ந்த மேற்கு நாடுகளை தன் எதிர் முகாமுக்குள் தள்ளினர்.

மாறாக சர்வதேச ரீதியாக பாசிச கட்டமைப்பை அதிகம் சார்ந்த ஆளும் ஆட்சியாளர்களின் நாடுகளை சார்ந்தும், மேற்கின் பொருளாதார இராணுவ முரண்பாடுகள் கொண்ட நாடுகளை சார்ந்து நின்றும், மேற்கை இலங்கை எதிர் கொள்கின்றது.

மொத்தத்தில் இலங்கை சர்வதேச நாடுகளுக்கு இடையிலான, உலக முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டது. இலங்கையை ஆளும் பாசிசக் கும்பல் தன்னைத் தக்கவைக்க, படுபிற்போக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லுகின்றது. மேற்குக்கு எதிரான நாடுகளைச் சார்ந்து, அவர்களும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் நாட்டையும் மக்களையும் விற்கின்றது.

இதற்கு போட்டியாக, இதன் மேல் மேற்கு தன் தலையீட்டை தொடங்கியுள்ளது. போர்க்குற்ற மீறல்கள் பற்றி அறிக்கைகளும், விசாரணைக் கோரிக்கைகளும், மேல் எழும் உடனடி அரசியல் நிகழ்ச்சியாக மாறி வருகின்றது.

இலங்கையை ஒரு சர்வதேச நிர்ப்பந்தத்துக்குள் கொண்டு வருவதன் மூலம், தங்களுக்கு அமைவான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை இலங்கையில் அமுல்படுத்தக் கோருகின்றது. இது வெளிப்படையானதும், ராஜதந்திரரீதியான அணுகுமுறை மூலம், மேற்கு இலங்கையில் தன் பிடியை உருவாக்க முனைகின்றது.

மறுதளத்தில் இரகசியமாக தங்கள் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வண்ணம், இலங்கை அரசின் எதிரிகளை கையாள்வதில் தொடங்கியுள்ளது. பொது அரசியல் தளத்தில், இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் பிரிவுகளை, தன் நிகழ்ச்சி நிரலுக்குள் கையாளத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசுக்கு எதிரான வலதுசாரி புலிகள் முதல் இடதுசாரி வேடமிட்ட பிரமுகர்கள் வரையான அனைவரையும், இலங்கைக்கு எதிரான தங்கள் நோக்கத்தை அடையும் ஒரு அணியில் அணிதிரட்ட முனைகின்றது.

09.06.2010 நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இரகசியமாகவும், தனிப்பட்ட சிறப்பு அழைப்புடனும் அரங்கேறிய கூட்டம் இந்த நோக்கிலானது. வலதுசாரிய புலிகள் உள்ளிட்ட இடதுசாரிய பிரமுகர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக கொண்டு வந்தனர். அவர்களை தமக்குள் தமிழில் கலந்துரையாடவும் வைத்தனர். இந்த நிகழ்சிக்கு முத்தாய்ப்பாக, நோர்வே சார்பாக இலங்கை சமாதானத்தில் ஈடுபட்ட எரிக்சூல்கெயிம் உரையுடன் தான் இது ஆரம்பமானது. அவர் இன்று நோர்வே அமைச்சர் கூட.

இலங்கையில் நோர்வே மற்றும் மேற்கு நலன்கள் அடைவதை குறிக்கோளாகக் கொண்ட, இலங்கை அரசுக்கு எதிரான பிரிவுகளை கையாள்வது தொடங்கியுள்ளது. வலது - இடது குழுக்களை, நபர்களை ஒன்று இணைப்பது முதல் அவர்களுக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேற்குநாட்டின் நலனுக்கு உட்பட்ட வகையில், வலது இடதுகளின் அரசியல் நலன்களை  இணைப்பதில் இருந்து இது தொடங்கியுள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான இலங்கையர்களின் அரசியல் போக்குகளையும், முரண்பாடுகளையும் நோர்வே உள்ளிட்ட மேற்கு தனக்கு ஏற்ப கையாளத் தொடங்கியுள்ளது. தன்னார்வ நிறுவனங்கள் மூலமும், தனிமனித பிரமுகர்த்தனங்கள் மூலமும், பரந்த விரிந்த தளத்தில் மூடிமறைக்கப்பட்டு இவை இன்று கையாளப்படுகின்றது.

1980 களில் இலங்கையில் நிலவிய மேற்கின் செல்வாக்கை முறியடிக்கவும், தனது கட்டுபாட்டுக்குள் இலங்கையைக் கொண்டு வரவும், இந்தியா கையாண்ட அதே அரசியல் வழிமுறையை இன்று மேற்கு செய்கின்றது. அன்று  இந்தியா போராளிக் குழுக்களுக்கு பயிற்சி பணம் உட்பட அரசியல் ரீதியான ஆதரவும் வழங்கி, தன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் இடது வலது என்று அனைவரையும் ஒன்றாக்கி, போராட்டத்தை சீரழித்து அவர்களை அழித்த அதே தளத்தில் இலங்கை மேலான தங்கள் சொந்த நலனையும் இந்தியா இன்று அடைந்துள்ளது. இந்த இடத்தில் இந்த இயக்கத்துக்குள் புலியைக் கையாண்ட அமெரிக்கா, தங்கள் மேற்கு நலனை புலிகள் ஊடாக பேண முனைந்தனர். புலிகள் மூலம் இந்திய நலன் சார்ந்த குழுக்களை வெற்றிகரமாக அழித்தனர். இந்திய நலனை புலிகள் ஊடாக தோற்கடித்த மேற்குக்கு எதிராக இலங்கை ஊடாக மேற்கை இந்தியா தோற்கடித்தது. இன்றைய நிலை இது. மேற்கு இந்த வகையில், தன் நலனை அடைய மீண்டும் தீவிரமாக தலையிடுகின்றது.                

அன்று இந்தியா செய்ததை, மேற்கு மறுபடியம் செய்ய முனைகின்றது. அதை முறியடிக்க, இந்தியா ஒரு அரசியல் தீர்வை வழங்கி அதை முறியடிக்க முனைகின்றது. இப்படி எதிரும் புதிருமான அரசியல் ராஜதந்திர சதி நாடகங்கள் நடக்கின்றது. எல்லாம் தமிழ் மக்களின் பெயரில் தான்.

இந்த வகையில்தான் நோர்வே கூட்டமும் நடந்தது. வலது மற்றும் இடது பிரமுகர்களை ஒரே இடத்தில் அவர்கள் கொண்டு வந்ததுடன், அவர்களுக்கு இடையிலான ஒரு இணக்கத்தை உடன்பாட்டை உருவாக்கும் வண்ணம், ஒரு விவாதத்தை அவர்களுக்கு இடையில் நடத்தினர்.

இவை மக்களை அமைப்பாக்கும், மக்களை அரசியலை முன்னிறுத்திய ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கவில்லை. வலது புலிகளுக்கும், இடது பெருச்சாளிப் பிரமுகர்களிற்கும் இடையிலானது. எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேலைத்திட்டமும் இதன் பின் கிடையாது. எந்த மக்கள் அரசியலும் கிடையாது. லும்பன்தனமான அறிவு சார்ந்த இடது அடையாள அரசியல் பிரமுகர்கள் முதல் பாசிச கட்டமைப்பை சார்ந்த புலியிசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நோர்வே அரசு உள்ளிட்ட தன்னார்வ நிறுவனங்களுடன் மக்களுக்கு எதிராக நடத்தும் அரசியல் சதி தான் இது. ஏகாதிபத்தியம் - புலி - இடதுசாரி பிரமுகர் உள்ளடங்கிய, மக்களுக்கு வெளியில் நடத்தும் கூட்டுச்சதி. இலங்கை அரசுக்கு எதிரான வௌ;வேறு நலன்களை, ஏகாதிபத்திய நலனாக ஒன்றிணைக்கும் அரசியல் சதி.

இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாது, ஏதோ ஒன்று என்று மந்தைகளாக வழமை போல் கலந்து கொண்டவர்கள் இங்கு அப்பாவிகள்தான். அவர்கள் இதை சுயவிமர்சனம் செய்வதன் மூலம், சொந்த மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் மக்கள் அரசியலை முன்னெடுக்க கோருகின்றோம். இது போன்ற சதி அரசியலுக்கு தொடர்ந்து துணை போகாது, அதை அம்பலப்படுத்தி மக்களுடன் சேர்ந்து நிற்கும் அரசியலுடன் இணைந்து போராட கோருகின்றோம்.

இலங்கையில் வௌ;வேறு நாடுகளின் நலன் சார்ந்த முரண்பாடுகளைக் கூர்மையாக்கி உள்ள இன்றைய நிலையில், அவர்களின் தலையீடும் ஊடுருவல்களும் பலமுனை கொண்டதாக பலதளத்தில் இருக்கும். அதன் தமிழ் அடையாளங்கள் மக்களை அணிதிரட்டாத அரசியல் கொண்ட, இடதுசாரி பிரமுகப் பெருச்சாளிகள் ஊடாக, உலகம் தளுவிய அளவில் இருப்பது என்பது தவிர்க்க முடியாதது.

இது மக்களை அணிதிரட்டும் அரசியலை எதிர்ப்பது, அதை குழிபறிப்பதன் மூலம், தன்னை அரசியல் ரீதியாக முன்நிறுத்த முனையும். ஆனால் தன்னை மூடிமறைக்கும்;. மக்களை அணிதிரட்டக் கோரும் அரசியலை சரியானவை என்று கூறிக்கொண்டு, முரண்பாடற்றதாக காட்டிக் கொண்டு, அதை செய்யாமலும் செய்ய முன்வராமலும் இரகசிய குழிபறிப்பில் எப்போதும் ஈடுபடும்;. அரசியல் என்பது, அவர்களைப் பொறுத்தவரையில் சதிதான். வெளிப்படையற்ற நிகழ்ச்சி நிரல். மக்களிடம் செல்வது என்பதை, அவர்கள் செய்வதில்லை.  இதில் சிலர் தங்கள் பிரிமுகர்தனத்தையும் பெருச்சாளித்தனத்தையும் முன்னிறுத்திய  அடையாள அரசியல் மூலம், அரசியல் அல்லாத சமூக சேவைக்குள் நின்றும் தம்மை மூடிமறைக்க முற்படுகின்றனர்.

மக்களை அணிதிரட்டும் அரசியலை முன்வைப்பதையும், அந்த நடைமுறையை மறுப்பதிலும் தான், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் இருப்பே வெளிப்படும். இதை மூடிமறைப்பதன் மூலம், தன்னை மக்கள் நலன் கொண்டதாக எப்போதும் காட்ட முனைகின்றது. புலம்பெயர் சமூகம் முதல் இலங்கை வரை, மக்கள் அரசியலை முன்னிறுத்தாத, அவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டாத அரசியல் போக்கு காணப்படுவதுடன், அது ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசியலுக்கு தானே கம்பளமாவது தான், புதிய எதிர்ப்புரட்சி அரசியல் போக்காக இன்று வெளிப்பட்டு வருகின்றது. மக்கள் அரசியலை கோருபவர்கள், அதை நடைமுறைப்படுத்த முனைபவர்கள், இந்தப் எதிர்ப்புரட்சி போக்கை அம்பலப்படுத்தி போராடுவதும், எமது உடனடியான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக உள்ளது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எம்மைச் சுற்றிய இன்றைய அரசியலில் போராட்டத்தில், இதை எதிர்த்து போராடுவது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் கூறாக மாறியுள்ளது.
        
பி.இரயாகரன்
17.06.2010