இலங்கையில் தீர்வு காண முடியாத பிரச்சினையாகத் தொடரும் தமிழ் தேசிய இனப்பிரிச்சினையை அதிகாரத்திலுள்ள பாசிச U.N.P பேரினவாத அரசு தமது ஆட்சியினைத் தொடர முழு மக்களையுமே மரணத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது. இன்று தென்கிழக்காசிய நாடுகளின் நிலையும் இதுதான்.

தென்கிழக்காசியாவின் பேட்டை ரௌடியாக செயற்படும் இந்திய மேலாதிக்க அரசு தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஒடுக்குவது மட்டுமில்லை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டத்திலும் தனது நேரடித் தலையீட்டினை மேற்கொண்டு தமிழ்;;;த் தேசிய விடுதலை அமைப்புகளை பாசிசப் போக்குடைய ரௌடிக் கும்பல்களாக்கிய தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்திய அரசு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்திய வல்லரசாக மாறுவதற்கு தனது ஆதிக்க வெளிப்பாடாக பாகிஸ்தானுடன் யுத்தம் நடாத்தியதும், சீனாவுடன் யுத்தம் நடாத்தி படுதோல்வியடைந்ததும், பங்களாதேசத்தைச் சுடுகாடாக்கியதும். நேபாளம் மீது பொருளாதாரத் தடையை மேற்கொண்டதும் உன் நாட்டிலேயே தெலுங்கானா விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டி விவசாயிகளைக் கொன்று குவித்ததும் என்று ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

சீக்கிய தேசிய இனப்பிரச்சினையில் மேற்கொள்ளப்ப்ட மிருகத்தனமான ஒடுக்குமுiயால் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை அவரின் மெய்க்காவலரான சீக்கியர் ஒருவரே சுட்டுக்கொலை செய்தார்.

இதன்பின் பதவிக்கு வந்த நேரு பரம்பரையின் வாரிசாக பரிசுத்த ராஜீவ் காந்தியும் அதிகார வெறியுடன் தனக்கு எதிரானவர்களைத் தீர்த்துக்கட்டுவதிலே குறியாக இருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தலையிட்ட ராஜீவ் “அமைதிப்” படையினை தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பி தமிழ்த் தேசிய இனத்தையே கடித்துக் குதறியது ஈழமக்களின் மனதில் இன்னும் வடுவாக உள்ளது.

இந்திய “அமைதிப்” படையினர் இழைத்த கொடூரங்களுக்குப் பழிவாங்கலாகவே உடலைக் கூட்டி அள்ளவே முடியாத அளவுக்கு வெடி குண்டால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ராஜீவ். இது இந்திய ஆளும்காங்கிரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

இது ஒருபுறமிருக்க, இந்தப் பழிவாங்கலைச் செய்து முடித்தவர்கள் தமிழ்மக்களின் சுதந்திரத்திற் சவாலாக இருக்கும் ஏதோ ஒரு சக்தியால் (?) வழிநடத்தப்படும் L.T.T.E இனர்தான்.

தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்தில் எமது இனத்தைச் சேர்ந்த இந்திய மக்களின் ஆதரவும் இயல்பானதே. இந்த ஆதரவை எந்தவகையில் பெறுவதென்பதே எம்மிடமுள்ள பிரச்சினையாகும்.

கடந்தகாலத்தில் “விடுதலை அமைப்பு: என்ற பெயரில் செயல்பட்ட அனைத்துக் கும்பல்களினதும் தலைமைகள் அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும், காங்கிரஸையும் மற்றயை ஓட்டுப் பொறுக்கும் கும்பல்களையுமே நம்பியிருந்தன.

உண்மையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்குக் கை கொடுப்பவர்கள் இந்தியாவில் தேசிய சுய நிர்ணய உரிமைக்;குப் போராடுபவர்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்களும், நக்ஸலைட்டுகளும் முற்போக்கு அமைப்புக்களுமே. இவர்களுடன் உறவினை வளர்த்து தென்கிழக்காசிய விடுதலையை நோக்கி நகர்வதே தமிழ்த் தேசிய விடுதலை அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ராஜீவ் மீது தமது கொலைக்கரங்களை நீட்டிய கொலையாளிகள் அம்பலப்பட்டதும் நட்டாற்று அகதிகளாக அல்லலுறும் ஈழத்தமிழரை இந்தியப் பொலிசார் துன்புறுத்துவதும், முற்போக்குவாதிகள், ஜனநாயகம் பற்றிப் பேசுபவர்கள் கைது செய்யப்படுவதும், ஏனைய பாசிசத் தலைமைகள் தம்மை பாதுகாக்க வலைப் பின்னலாக பாதுகாப்புப்படைகளுடன் பவனி வருவதும், அப்பாவி மக்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதும் ஈழத்தமிழரை சர்வதேச குண்டு வெடிப்பு வீரர்கள் என்ற நிலைக்குக் கொண்டுவரத்தான்.