நான்
அழுவதற்கு வரவில்லை – அவர்கள்
விழுந்த இடத்தில்
இன்னும்
உயிரோடு இருப்பவர்களே!
உங்களிடம் பேசத்தான்…
உங்களை நோக்கியும்
என்னை நோக்கியும்
நான்
வேண்டுவது இதுதான்…
இறந்து கிடக்கும்
நம்மவர்கள் பேராலே
கேட்கிறேன்…
தண்டனை அளியுங்கள்!
நமது
தந்தையர் நாட்டு மண் மீது
சிவப்பு ரத்தத்தை
சிதற வைத்தவர்களுக்கு
தண்டனை அளியுங்கள்!
யாருடைய
ஆணையின் பேரில் இந்த
அக்கிரமங்கள் நடந்தனவோ
அந்த துரோகிகளுக்கு
தண்டனை அளியுங்கள்!
இந்த சவங்களின் மீது
சிம்மாசனம் ஏறிய
அந்த துரோகிகளுக்கு
தண்டனை அளியுங்கள்!
மறப்பவர்களுக்கும்
இந்தக் கொடுமைகளை
மன்னிக்கச் சொல்பவர்களுக்கும்
தண்டனை கொடுங்கள் !
நான்
எல்லோருடனும்
கை குலுக்க விரும்பில்லை
ரத்தக் கறை படிந்த
கரங்களைத்
தொடுவதற்கே விரும்பவில்லை
நான்
தண்டனை கோருகின்றேன்…!
தூர தேசங்களுக்கு
அவர்களை
தூதுவராய் அனுப்புவதை
அமைதி வரும் வரை
அவர்களை
அறைகளில் அடைப்பதை
நான்
அடியோடு விரும்பவில்லை.
இங்கேயே…
இப்பொழுதே…
திறந்த வெளியிலே
நீதி வழங்குங்கள்!
அவர்களுக்குரிய தண்டனையை
என்
கண் முன்னே
நிறைவேற்றுங்கள்..!