1990 ஜுன் பிரச்சினைகளுக்குப் பிறகு முல்லைத்தீவில் வந்து குவிந்த அகதிகளுக்காக வழமைபோல பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களிடம் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிவாரண பொருட்களை LTTE தன்னுடைய பெயரில் மட்டுமே வழங்க வேண்டும் என்று கேட்டது. எரி பொருள் வாகனப் போக்குவரத்து போன்ற விடயங்கள் LTTE இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டியிருந்ததால் மாணவர்கள் இதற்கு விருப்பமின்றிச் சம்மதிக்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தங்களால் தலைமை தாங்கி நடத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று LTTE பொது அழைப்பு விட்டது. இது தொடர்பாக நடு நிலையான விமர்சன அறிக்கையொன்றை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது. ROOTE என்ற LTTE கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பு ஒன்றிலிருந்த சிலர் இந்த அறிக்கை தொடர்பாக மாணவர்களுடன் பேசினர். இந்தப் பேச்சுக்களின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்டது.
ROOTE என்ற LTTEஇன் அமைப்பிலுள்ளவர்கள் ப.மா.ஓ.வை அணுகி, ஸ்ரீலங்கா அரசின் இன வெறிப்படுகொலைக்கு எதிராகப் போராடுபவர்களாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக LTTE அறிமுகப்படுத்தி, டுவுவுநு இன் பின்னால் எல்லா மக்களும் அணிதிரள வேண்டும் என்று ப.மா.ஓ. தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ப.மா.ஓ கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ப.மா.ஓ இல் பலர் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளனர். ஒரு பொதுக்கூட்டம் கூட்டி முடிவெடுக்குமாறு மாணவர் தவைராக இருந்த வின்ஸ்ஸன் பணிக்கப்பட்டார். வாக்கெடுப்பில் தீர்மானம் 145இற்கு 110 ஆகத் தோல்வியடைந்தது. மறுபடி பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு LTTE பணித்தது. இரண்டாம் வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்தது.
இரண்டு நாட்களின் பின் LTTE வின்ஸ்ஸனிடம் தங்கள் தீர்மானத்தை எழுதிக் கையெழுத்திட்டுத் தரும்படி வற்புறுத்திற்று. வின்ஸ்ஸன் தீர்மானத்தை எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு ப.மா.ஓ. இலிருந்து விலகிக் கொண்டார். அவருடன் ஏனைய மாணவர்களும் விலகிக்கொண்டனர்.
குறிப்பு: ஒரு காலத்தில் LTTE க்கு ஆதரவாக வின்ஸ்ஸன் வேலை செய்தவர்.