இதழ் ஒன்றில் தூண்டிலின் 3வது நிலை பற்றி நாம்… என் பகுதியில் 3வது நிலைக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்திருந்தோம். அத்துடன் இம்மூன்றாவது நிலையானது எமது மண்ணில் உருவாக முடியாதென்பதால் வெளிநாடுகளில் உள்ள நாம் இம் மூன்றாவது நிலையினை உருவாக்குவதற்கு ஒன்றிணைவது பற்றிக் கேட்டிருந்தோம்.
எமது மண்ணில் இம் மூன்றாவது நிலையானது சாத்தியமற்றதென நாம் குறிப்பிட்டது தவறானதும் L.T.T.E இனதும் அராஜக வன்முறைகளுக்கு மத்தியிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும், எமது தேசத்தின் விடுதலைக்காகவும் இரகசியமான முறைகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு செயற்பட்டுவருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளை நாம் கவனத்தில் எடுக்கத் தவறியிருந்தோம்.
தாம் மட்டுமே தமிழீழ விடுதலைக்காக போராடும் பலமிக்க ஒரே சக்தியென சொல்லிக்கொள்ளும் L.T.T.E இன் கடந்தகால மாற்று இயக்க அழிப்பு நடவடிக்கைகளும், ஜனநாயக ரீதியில் செயல்பட்ட சிறிய இயக்கக் குழுக்களுக்குக் கூடத் தடை செய்து இயங்கவிடாமல் ஒழித்துக் கட்டிய பின்னரும் கூட சிறு குழுக்களாகவும், தனி நபர்களாகவும் மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் போராடி வரும் நல்ல சக்திகள் தேடியழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் கூட தம்மால் இயன்றவரை எமது போராட்டச் சூழலைவிட்டு அந்நியப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டும் தயாரிப்பு வேலைகளைச் செய்துவரும் சக்திகளின் செயற்பாடுகள் மதிப்புக்குரியவை.
இவ்வாறு மக்களின் விடுதலைக்காக செயற்பட்டுவரும் சக்திகளை கடந்தகாலங்களில் மாற்று இயக்கங்களில் இருந்தார்கள் எனும் காரணங்களையும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் புலிகள் கைது செய்கின்றனர்.
இத் தோழர்கள் விரும்பியதெல்லாம் இம் மக்களின் உண்மை விடுதலையையே. இவர்கள் சித்திரவதைகளுக்கும், ரகசிய மரண தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படலாம்.
படுகொலைகளும் சித்திரவதைகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது எம் மண்ணில்.. நாம் என்ன செய்யப்போகின்றோம்?
கேள்விக்குறி எம்முன் நிற்கின்றது. இவையே எம் மூன்றாவது நிலை பற்றிய தேவைக்குரிய காரணிகளாகியது.
இன்று இம் மூன்றாவது நிலையானது எமது மண்ணில் நிகழும் பழிவாங்கல் படுகொலைகளுக்கும் ஜனனாயக மறுப்புகளுக்கும் எதிரான அறைகூவலாகும்.
இம் மூன்றாவது நிலையானது எதனைச் சாதிக்கப்போகின்றது? எனக் கேள்வி உங்கள் முன் எழுவது நியாயமானதே.
எமது மண்ணில் ஜனநாயக மறுப்புகளுக்கும் அராஜகங்களுக்கும் மத்தியில் கைதுகளும், காணாமல் போதலும் என மக்கள் அடக்கப்பட்டு வருவது தொடராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பகிரங்கப்படுத்தவோ அல்லது இவற்றுக்கு எதிராகவோ செயற்படக்கூடிய வகையில் ஜனநாயகச் சூழல் இல்லாமையினால் நிகழும் அனர்த்தங்கள் யாவும் மறைக்கப்பட்டுவிடுகிறது. இம் மறைப்புகளையும், ஜனநாயக மறுப்புகளையும் பார்த்தும் மௌனமாகவே இருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே எம்மை போன்று வெளிநாடுகளில் பலருள்ளனர்.
L.T.T.E இனதும் அரசினதும், அதன் கைக்கூலிகளினதும் யெற்பாடுகள் மக்களினால் காணப்பட்டும் காணப்படாமலும் ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தங்களினால் ஆதரிக்கும் நிலைமைகளும் உள்ளன. இந்நிலைமைகள் யாவும் முறியடிக்கப்படவேண்டியவையே.
3வது நிலையானது குறைந்த பட்சம் கீழ் உள்ள வகைகளில் செயற்படமுடியும்.
1) L.T.T.E இனாலும், அரச பயங்கரவாதினாலும் எமது மண்ணை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் சிதறியுள்ள முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைக்கவும் அவர்களைச் சீரழியாது தடுக்கவும்.
2) எமது தேசவிடுதலை சம்பந்தமான முரண்பாடான தேவையான கருத்தியல் தர்க்கங்களை, விவாதங்களை நிகழ்த்துவதன் மூலம் சரியான கருத்துக்களை உருவாக்கவும்.
3) எமது மண்ணில் தனிநபர்களாகவும் சிறு குழுக்களாகவும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் சக்திகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களின் ஐக்கியப்படட போராட்டங்களை ஊக்குவிக்கவும்.
4) எமது மண்ணில் மக்கள் விரோத சக்திகளான L.T.T.E, E.P.R.L.F, E.N.D.L.F, P.L.O.T, T.E.L.O, E.P.D.P கும்பல்களினது அராஜகங்களுக்கு உள்ளாகும் மக்களின் அடிப்படை ஜனனாயக உரிமைகளுக்காக ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதற்கும்.
மூன்றாவது நிலை அவசியமாகின்றது.
எமது மண்ணில் மக்களின் விடுதலையை விரும்பும் சக்திகளின் போராடடம் பேராட்ட வழிமுறைகள் தந்திரரோபாயங்ள் வேலைத்திட்டங்களும் நடைமுறைகளும் என்பவற்றினூடாகவே போராட்டத் தலைமையானது உருவாகி தேசவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். எமது மண்ணில் இதற்கான தொடங்கு புள்ளிகள், சரியான கருத்தை நோக்கிய நகர்வுகள் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு ஆதரவளிப்போம்!
அராஜகங்களுக்கு எதிராகவும் மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராகவும் ஒருமித்துக் குரல் கொடுப்போம்!!