சமர் இதழ் ஒன்றிற்கும் இதழ் இரண்டிற்குமிடையே நீண்ட இடைவெளி. இடையே கொக்கட்டிச்சோலையில் குருதிவெள்ளம் நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொடுத்தபோது இதயம் இரும்பால் அறையப்படடது. ரஞ்சன் விஜேரத்தினா இறந்துபோனான். “நேர்மையான அரசியல்வாதி”, “ஜனநாயகத்தின் பாதுகாவலன்” என்று வாழ்த்துப் பாடிய கொழும்பு தமிழ் துரோகக் கும்பல்கள் ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைத்தன. ராஜீவ்காந்தி கொலை! இதே புகழுரைகள். ஈழம் மறுபடியும் சிரித்துக்கொண்டே அழுதது. தென்னிந்தியாவில் நிறையத் தமிழர்களைக் காணவில்லை. தேடப்பட்டார்கள்! சாகவில்லை@ கொல்லப்பட்டார்கள்! கொழும்பில் குண்டு வெடித்தது இதே நிலை! ஆனையிறவில் ஆயிரக்கணக்கில் பிணக்குவியல்கள் ஒருகாலத்தில் உப்பு விளைந்த நிலம் இன்றைக்கு பிணங்களை விளைவித்துக் கொண்டது. நல்ல இயற்கை உரம் இனிமேல் புற்களும் விளையும்! எமது தாய்நிலம் சுடுகாடு. எமது கலாச்சாரம் கொலைக்கலாச்சாரம், எமது தேசிய தொழில் கடத்தல் மிரட்டல், கொலை, கொள்ளை!

ஆம் ஈழப்போராட்டம் சீரழிக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் முளைவிடாதபடி ஒரு தலைமுறை கொல்லப்படுகிறது. திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. போராட்ட உணர்வுள்ளவர்கள் தேசபக்தர்கள் தெரிந்தெடுத்துக் கொலை செய்யப்படுகிறார்கள். வெளிப்பார்வைக்கு அரசு – புலிகள் மோதல் எனத் தென்படலாம். ஆனால் ஒரு சந்ததி வேண்டுமென்றே அழிக்கப்படுகிறது. ஆனையிறவில் பலிகொடுத்த உயிர்களுக்கு பிரபாகரனின் கும்பல் ஈழத்தேசத்திற்கு எதனைப் பெற்றுத்தந்தது?


இந்தச்சண்டை தொடங்கிய பிறகு பலிகொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை?

சாகடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் உயிர்களுக்கு LTTE என்ன விலை தரப் போகிறது? ஜிகாத் என்ற கொலைக்களத்தில் ஆயிரக்கணக்கில் இளம் தமிழ் பேசும் முஸ்லீம் சந்ததி திட்டமிட்டு பலியிடப்படுகிறது. தமிழ் இணைஞர்கள் பலிகெடுக்கப்படுகிறார்கள். EPDP, ENDLF, TELO, PLOT, EPRLF, EROS என்ற தலையங்கங்களில் எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.


மலையகத்திலும் பிணவாடை வீசத் தொடங்குகிறது. இன்னும் JVP கொலையை பிரேமதாசா முடித்துவிடவில்லை! TNA, JVP, EPRLF, ENDLF, PLOT, TELO, EPDP, IPKF, LTTE, EROS,  ஜிகாத், சிறிலங்கா அரசு இவையெல்லாம் ஒரு குறித்த ஐந்து வருடங்களுக்குள் பல ஆயிரக்கணக்கில் ஒரு குறித்த வயது மனித உயிர்களை தியாகம் என்ற பெயரிலும், துரோகம் என்ற பெயிரிலும் பலிகொடுத்தும், பலியெடுத்தும்விட்டன. இளம் சமுதாயத்தின் இந்த அழிவுகள் ஈழப்பிரதேசத்தில் புரட்சியை மழுங்கடிக்கும் மேலாதிக்க சதிகளின் நீண்டகால கூட்டுச்சதித்திட்டமா? முஸ்லீம் தேசிய இனம் ஒரு பகுதி LTTE இன் கொலைப்பசிக்கு! மறுபகுதி ஜிகாத் - முஸ்லீம் காங்கிரஸ் UNP இன் இனவெறிக்கு!


அதன் உச்சநிலைதான் இப்போது அரங்கேறுகிறதா? இப்படியே இந்தப் போராட்டம் முற்றாக முளைவிட முடியாதபடி அழிக்கப்படப்போகிறதா?

அனைத்து சமூக உணர்வுள்ள தேசப்பற்றள்ள சக்திகளும் சிந்திப்போம்@ நாம் என்ன செய்யப் போகிறோம்.


ஆசிரியர்குழு

“எனது தேசத்தின் நேரம் பிணங்களில் எண்ணப்படுகிறது” – ராஜினி திரணகம

“புரட்சிக்கு ஏற்படும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் கண்டு ஆர்ப்பரித்து அகமகிழ்தல், பீதியைப் பரப்புதல், கடந்த காலத்துக்குத் திரும்பிவிட வேண்டுமெனப் பிரச்சாரம் செய்தல் - இவையாவும் தான் வர்க்கப் போராட்டத்தின் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் ஆயுதங்களும் வழிமுறைகளும் இவற்றால் தான் ஏமாற்றப்படுவதற்குப் பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கப்போதில்லை”
- லெனின்