அது ஒரு கிராமம். ஆம் கிராமம் தான். இங்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் பச்சை பசேலென்ற வயல் வெளிகளை நான் பார்க்க வில்லை. அது மேட்டாங்காடு என்று சொல்லப்படும் அதாவது மழை வந்தால்தான் பிழைப்பென்ற பகுதி.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே……………. பெருமை வாய்ந்த தமிழச்சமூகத்தின் கூடப்பிறந்த பிறப்பான சாதி ஆதிக்கம் கடையைப்பரப்பி தாழ்த்தப்பட்டோரின் ரத்தத்தை குடிக்கும் நிகழவுகள் தவறாது நடக்கும் கிராமம் அது. என்னுடன் வேலை செய்த இருவர் இந்த ஊரில் தானிருக்கிறார்கள். அவர்களை பார்க்கத்தான் நானும் தோழரும் வந்திருக்கிறோம்.
அந்த நண்பர்கள் தன் ஊரின் சாதிக்கட்டுமானத்தைப்பற்றி சாதி ஆதிக்கத்தின் விளைவை அவ்வப்போது சொல்லுவார்கள். சில சமயம் இருவரும் ஒரே நாளில் விடுமுறை எடுத்து விட்டுஊர்ல பிரச்சினை என்பார்கள். என்னைப்பொறுத்தவரை இதையல்லாம் அதிகம் கவனிப்பேன் அவர்களிடம் பேசுவேன். அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்கசாதிப்பிரச்சினையை இங்த நிறுவனத்தில் காது கொடுத்து கேட்டு ஆவேசமாக பேசும் நபர் நான்.
நானும் தோழரும் எங்கள் ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு செல்வதற்கு அவர்களிடம் வழிகேட்டபோது இரண்டு முதல் மூன்று பேருந்து பிடிக்க வேண்டும் என்றார்கள். இவ்வொரு பேருந்துக்கும் அரை மணி நேரம் என ஒரு வழியாய் வந்து சேர்ந்து நண்பர் சொன்ன படி வந்து கொண்டிருக்கிறோம்.
அக்கிராமம் சரியாய் இரண்டாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டுக்கு இருபுறமும் குடியிருப்பு பகுதிகள் அநியாயத்துக்கு வறண்டு போன நிலங்கள் அதற்கெதிராக போராடாத மக்களின் மீது அனற்காற்றை வீசிக்கொண்டிருந்தது. நண்பரின் செல் “not reachable ” என்றது. அவர் முன்னரே மேப் போட்டு கொடுத்திருந்தார் எப்படி வருதென்று. முதலில் ஓட்டு வீடுகளாகவும் தார்ஸ் போட்ட வீடுகளும் அந்த சிறு வீதிக்கு இருபுறமும் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தவுடன் சந்திக்க வேண்டிய நபர் ராஜா வந்தார் . அவருடனே பயணித்தோம்.
அவர் சொன்னார் ” நீங்க முன்னாடி பார்த்த அந்த வூடுங்கெல்லாம் அந்த சாதிக்காறங்க “ ,அந்த வீடுகள் சுமார் 150 இருக்கும் அப்புறம் வறண்ட பாலைவனம் போல இருந்த அந்தப்பகுதியில் நடந்து சென்றோம். அனல் வெகுவாய் அடித்தது. நண்பர் சொன்னார் “இதுதான் எங்க ஊர் வாய்க்கால் ஆத்துல தண்ணீ வந்தா மழை வந்தா இங்கேயும் வரும்”. வரும் வழியில் கோயில் இருந்தது. “இதுதான் அவுங்க கோயில்” என்றார். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். ஊர் வந்தது. ஊரை முதன் முறையாக யார் வந்து பார்த்தாலும் சொல்லிவிடுவார்கள். இது தாழத்தப்பட்டவர்களின் ஏரியாவென்று.
முன்னர் பார்த்த வீடுகளுக்கருகில் இருந்ததைப்போல அல்ல, 90 சதவிகிதம் குடிசை வீடுகள், சிலர் இப்போதுதான் கட்டிடங்கள் சிறியதாய் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ராஜாவின் நண்பர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். பேசிக்கொண்டிருந்தோம். மதிய வேளை நெருங்க நெருங்க நான் தோழரிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்றபடி கிசுகிசுத்தேன். கிளம்பும் போது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டுமென்று பிடித்து கொண்டார்கள்.
யார் வீட்டிலும் அதிகம் சாப்பிட்டு பழகாதவன் நான். அது வரை ஹோட்டலில் மொத்தமே 15 தடவை கூட சாப்பிட்டு இருக்க மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவேன். எங்கு போனாலும் சரி மதிய நேரம் நெருங்கும் போது ஏதாவது ஒரு பொய்யைச்சொல்லி கிளம்பிவிடுவேன். தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டிவரும் போது தர்ம சங்கடத்தோடு சாப்பிட்டு எழுவேன். தாழத்தப்பட்ட உழைக்கும் கிராமத்து மக்களின் அவர்களின் உணவு முறை எப்படி இருக்கும் அதைப்பற்றி நினைத்ததேயில்லை. ஏன் நினைக்கிறேன் ?அவசியமே அதுவரை எழவில்லை.
என் மனதிற்கு தெரிந்ததெல்லாம் வீட்டில் தான் கரெக்டா இருக்கும். வீட்டில் என்றால் கொதிக்க வைத்த குடிநீர் சுத்தமாக வடிகட்டி அப்படி இப்படி என்று அதுவரை எனக்குத்தவறாக தெரியவில்லை. எப்போதும் எங்கு சென்றாலும் உணவிற்கு முன் கிளம்பும் நான் தோழரோடு வந்திருப்பதால் பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை விட்டுவிட்டேன். சில மாதங்களாகத்தானே தோழரே அறிமுகம் . அவரிடம் முன்னரே சொல்லவும் தவறி விட்டேன். ஒரு வழியாக சாக்கு சொல்லிவிட்டு தோழரை இழுத்துச்செல்லாத குறையாக கிளம்பினேன்.
கிளம்பும் போது என்னுடன் பணிபுரியும் இன்னொருவர் ” அதெல்லாம் முடியாது சாப்பிட்டுட்டுதான் போயாகணும்” என்றபடி கைகையை இழுத்துக்கொண்டு சென்றார். அருகில் அவர் வீடு. அது ஒரு குடிசை பனை இலையால் வேயப்பட்டிருந்தது. . அக்குடிசைக்கு வெளியே ஒரு கட்டிலைப் போட்டார்கள் . அது கயிற்றுக்கட்டில் வெள்ளைக்கயிறு பழுப்பு நிறமாய் பல்லைக்காட்டியது. அதற்கு எதிரில் இரு ஸ்டூல்களை போட்டார்கள் இரண்டிலும் இரு தட்டுக்கள் வைக்கப்பட்டன.
தட்டு நிறைய சோறு போட்டார்கள். எங்களை உட்காரச்சொன்னார்கள். வேறு வழியின்றி தயக்கத்தோடு சங்கடத்தோடு உட்கார்ந்தேன். தட்டிலிருந்த சோற்றைப்பார்ர்தேன். என் வாழக்கையில் இந்த கலரில் (லைட் பழுப்பு) சோறு இருப்பதே இப்போது தான் தெரிகிறது. ஏதோ குழம்பு ஊற்றினார்கள். பார்ப்பதற்கே வழவழப்பாக அருவருப்பாக இருந்தது. “ உட்கார்ந்தாயிற்றே இனி எழுந்திருக்கவும் முடியாதே”. தோழர் தயக்கமின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
குழம்மில் கைகை வைத்தேன், எனக்கு என்னபோல் இருந்தது. மனதை திடமாக்கிக்கொண்டு சோற்றைப்பிசைந்தேன் குழம்போடு, “அய்யோ!!!!!! எந்திரிச்சும் ஓட முடியாதே”பிசைந்த சோற்றில் ஒரு கவளத்ததை வாயில் போட்டேன். என் வாழ்வில் அவ்வளவு கேவலமான சுவை அது. வயிற்றைக் குமட்டியது வாந்தி வந்துவிடுமோ பயம் எனக்கு, எதிரில் எல்லோரும் நிற்கிறார்கள். வேறு வழியே இல்லை.
கண்ணை இறுக்க மூடினேன். பிசைந்த சோற்றுக்கவளங்கள் எப்படி என் வாய்க்குள் போயின என்பது எனக்குத்தெரியவில்லை. ஒரு பெருமிதம் எனக்கு ” அப்பாடா ஒரு வழியா முடிச்சாச்சு” கிளம்பினேன் அங்கிருந்து. பேருந்தில் வரும் போது கூட தோழரிடம் எதுவும் பேச வில்லை. பேருந்து நிறுத்தத்தில் பேசிவிட்டு அவரும் நானும் கிளம்பிவிட்டோம்.
வீட்டில் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஹோட்டலில் சாப்பிட்டதாய் சொன்னேன். தோழர் கொடுத்த புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கடுமையான செயலை செய்தது போல குழம்பினேன். இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்கள் உண்ணும் உணவு எனக்கு கேவலமாய்த் தெரிந்திருக்கிறது. அதைத்தின்றால் வயிறு குமட்டுகிறது. பச்சைத்தண்ணீர் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு கேவலமான வாழ்வை வாழந்திருக்கிறேன் எனில் அது எவ்வளவு கேவலமானது, நான் எவ்வளவு கேவலமானவன். அந்த சோற்றை தின்றுவிட்டுதான் இதோ இந்த சாலையை உழைக்கும் மக்கள் செப்பணிட்டார்கள். இதோ நான் படுத்திருக்கிறேனே இந்தக்கட்டிலை செய்தார்கள். வீட்டைக் கட்டினார்கள். அதில் சொகுசாய் வாழும் நான் அவர்களின் உணவை குற்றம் சொல்லிக்கொண்டு வாழும் போது , நான் இந்த மக்களிடமிருந்து எவ்வளவு அந்நியமாய் இருக்கிறேன்.எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்? நான் வெறுப்பாய் தின்ற சோற்றில் எவ்வளவு பெரிய பாடம் கற்றிருக்கிறேன்.
எப்படியும் பல ஆண்டுகளை கடந்து போன அந்த சம்பவம் என் நினைவில் அகலாத ஒன்றாகி விட்டது. எதிர்பாராத அந்நிகழ்ச்சி என்னுடைய நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான டீசண்ட் -ஐ புரட்டிப் பிய்த்து எறிந்துவிட்டது.
B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்
I.T-ன் ஆணாதிக்கம்
http://kalagam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/
http://kalagam.wordpress.com/2010/06/14/சோறு-சோறு-நடத்திய-பாடம்/