Language Selection

தீவான்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எனது இளமைக் காலத்தில் எனது வீட்டுக்குப் பக்கத்து தோட்டத்தில்; மிளகாய் ஆயும் பெண்களைப் பார்த்து நடுவெய்யிலில் நின்று வீணி வடிப்பது எனது நாளாந்த தொழில். அப்போது என்னைப் பார்த்து என்ர ஆச்சி சொல்லுவார்  "எள்ளு காய்கிறது எண்ணைக்கு, எலிப்புளுக்கை ஏன் அதோட காயுது" என்று. இன்று நோர்வேயில் நடக்கும் அரசியல் நாடகங்கள் என்ர ஆச்சி சொன்ன மேற்கூறிய பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. சரி விடயத்துக்கு வருவோம்.

”வெளிநாட்டு அரச சார்பற்ற  தொண்டுநிறுவனங்களுக்கு வன்னியில் சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

வன்னியில் தொண்டுகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரச சார்பற்ற தொண்டுநிறுவனங்களுக்கு அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், இவை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டன என புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

எனவே, மீண்டும் ஒரு முறை அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னியில் கடமையாற்ற அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வன்னி மக்களுக்கு அதிகளவான உதவிகள் தேவைப்படுவதாகவும் இதனால் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை நிறுத்தக் கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.”

இச்செய்தி. ஜூன் 11 அன்று புகலிட சிந்தனை மையத்தின் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னியில் கடமையாற்ற அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளதானது மஹிந்த-பாசிச, இனவெறி  அரசியலின் ஒரு பகுதி என்ற போதிலும், அரசசார்பற்ற நிறுவனங்கள் சார்பான இலங்கை அரசின் கொள்கையில் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை.

எமது  நாட்டை  ஆட்டிப்படைத்த யுத்தத்தின் பங்காளர்களாக புலிகளும், இலங்கை அரசும் மட்டும் இருக்கவில்லை. சர்வேதேச சக்திகளும் அவர்களின் ஏவலாளர்களான அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட இருந்தனர்.

உதாரணமாக, நோர்வே அரசு பேச்சுவார்த்தை மத்தியஸ்தம் வகிப்பதற்கான வாய்ப்பானது இலங்கையில் இயங்கும் World View International Foundation என்ற  அரச சார்பற்ற நிறுவனதாலேயே நோர்வேக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந் நிறுவனமானது நோர்வேயை சேர்ந்த ஆர்னே பியர்ரோவ் இனால் நோர்வே அரசின் 100 சதவீத முதலீட்டை கொண்டு இலங்கையில் உருவாக்கப்பட்டது. இதன் இயக்குனர் ஆர்னே பியர்ரோவ்  யு.என்.பி.  தலைமையுடன் தனக்கு இருந்த தனிப்பட்ட நட்பைப் பயன்படுத்தி, அவ் வாய்ப்பை   நோர்வேயிய பிரதிநிதியான எறிக் சொல்ஹெய்முக்கும் இடையில் ஏற்படுத்திக்  கொடுத்தார். எல்லோருக்கும் தெரியும் நோர்வேயின் மத்தியட்சம் எங்கே போய் முடிந்ததென்று. புலிகளை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டது. அத்துடன் சர்வதேச தலையீடு என்ற பூச்சாண்டியை காட்டி, தேசிய வெறியூட்டி பதவிக்கு வந்த தரகு-பாசிச  மஹிந்த அரசு, இன்று தன் இன மக்களையும் நாட்டையும் ஆசிய பெரும்முதலாளிகளுக்கு கூறு போட்டு மலிவு விலையில் விற்பதற்கே வழிவகுத்தது.   


இது இவ்வாறிருக்க புலம்பெயர் புலிப்பினாமிகள் வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் முந்தானையில் மறைந்து, தேசத்தில் திரும்பவும் கால் வைக்க முயற்சிகளை  மேற்கொண்டுள்ளனர். இதன் முதல் முயற்சி சாட்சாத் நோர்வேயிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. இதன்பால் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால்  வழிகாட்டியும், நோர்வேயின் சூழலியல் மந்திரியுமான ஏறிக் சூல்கெய்ம் இன் தலைமை உரையுடன் புலிப் பினாமிகளின் அமைப்பான நோர்வே ஈழத் தமிழர் பேரவையினால் (NCET), "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", Norwegian peacebuilding center (NOREF ) என்ற அமைப்பின்  வழிகாட்டலுடன் கருத்தரங்கு ஒன்று ஒஸ்லோவில் நடத்தப்பட்டது.
 
இதற்கு இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்ட, மேற்கொள்ளுகின்ற நோர்வேஜிய அரசசார்பற்ற  தொண்டு நிறுவனங்களும், நோர்வேயில் உள்ள  நாற்பது தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அழைக்கப்பட்டோரின் அனைத்து செலவுகளும், மற்றும் இதர செலவுகளும் "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", Norwegian peacebuilding center (NOREF ) ஊடாக  நோர்வே ஈழத்தமிழர் பேரவையினால் செலுத்தப்ப்பட்டது. 
 
இந்த கருத்தரங்கின் அனுசரணையாளர்களான, "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", (NOREF)இது ஏன் நடத்தப்பட்டது என்பதற்கு பல காரணங்கள் கூறினாலும், இதன் முக்கிய காரணம்; புலிகளின் பினாமி அமைப்புகளும், அவர்களுடன் நட்புறவு பாராட்டும் ஏனைய அமைப்புகள், தனிமனிதர்கள் எவ்வாறு, எந்த நோர்வேஜியன் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின்  ஊடக இலங்கைக்கு செல்லலாம் என கண்டு கொள்வதற்காகவும், மற்றும் அந்நிறுவனங்களுடன் தமது உறவை ஏற்படுத்துவதற்காகவுமே.


இதன் மூலம் நெடியவன் அணியை சேர்ந்த நோர்வே ஈழத்தமிழர் பேரவையானது (Nஊநுவு); தனது நிகழ்ச்சி நிரலின்படி திரும்பவும் ஓர் ஆயுதப் போராட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களின் ஒரு கட்டமாகவே இன் நிகழ்வை ஏற்பாடு செய்தது என்றால் மிகையாகாது. 
        
  
மேலும் இதற்கு அழைக்கப்பட்ட நோர்வேஜியன் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் தமிழர்களின் விபரங்கள் ரகசியமாகவே பேணப்படுகிறது. "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", Norwegian peacebuilding center (NOREF )உடன் தொடர்பு கொண்டு கேட்டபோதும், கருத்தரங்கு பற்றிய விபரங்களையும் யார் யார் பங்கு கொண்டனர் என்ற விபரத்தினையும் தரமறுக்கின்றனர். தாம் ஒரு "வாடிக்கையாளருக்காக" ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்ததாகவும், அது பற்றிய விபரங்களை வெளியிடுவது "வியாபார தர்மமாகாதெனவும்" அவர்கள் சொல்கின்றனர்.
 
ஆனாலும் அங்கு யார் பங்குபற்றினார்கள்; என்ன விடயங்கள் கதைக்கப்பட்டது போன்ற விடயங்கள் ஒன்றும் சிதம்பரரகசியமல்ல. இவ் விடயங்கள் அனைத்தும்; "தமிழ் ஈழ அபிவிருத்தி நிதி"  சேர்ப்பில் ஈடுபட்டிருக்கும்; நோர்வே ஈழத்தமிழர் பேரவை(NCET) உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
    
தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழ் மாணவர் அமைப்பு, தமிழ்ஈழ  பெண்கள் அமைப்பு , தமிழீழ பொருண்மிய கழகம், தமிழ் சுகாதார அமைப்பு(THO) போன்ற புலிகளின் முன்னணி அமைப்புகளுடனும், கற்றோர், சுதந்திர புத்திஜீவிகளுடனும் (free intellectuals) இணைந்து, நோர்வேஜிய அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின்  அனுசரணையுடன், விவசாயம், கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் என்ற அபிவிருத்தி தளங்களில் நோர்வே ஈழத்தமிழர் பேரவையினால் (NCET) தமிழீழத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட போவதாக நிதிசேர்க்கும் பேரவை (NCET) உறுப்பினர்கள் கூறுகின்றனர்.  ஆனாலும் இந்த கருத்தரங்கில் யார் யார் பங்கு கொண்டனர் என்பதை விளங்கிக்கொள்ள, அரசியலில் கலாநிதிப்பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.

அதில் பங்குபற்றியோர் பெரும்பான்மையானவர்கள்; புலிகளின் பினாமி முன்னணிகளின் பிரதிநிதிகள் என்பது வெளிப்படையானதொன்று.

ஆனால் இங்கு எழும் கேள்வி இந்த கருத்தரங்கில் பங்கு கொண்ட "கற்றோர்", "சுதந்திர புத்திசீவிகள்" (free intellectuals) யார் என்பதே! தமிழீழத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட போவதாக நிதிசேர்க்கும் பேரவை (NCET) உறுப்பினர்களே பெருமையுடன்  இக்கேள்விக்கும் பதில் சொல்லி உள்ளார்கள். நிதிசேர்க்கும் பேரவை (NCET) உறுப்பினர்கள் தரும் தகவல்களின்படி இக்கருத்தரங்கு புலிப்பினாமி கலாநிதிகளான இளங்கோ மற்றும் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் (NCET) தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையாவினாலுமே தலைமை தாங்கி நடாத்தப்பட்டது. இவ் இருவரின் ஆலோசனைப்படி சில சந்தர்பங்களில் "தமிழீழம்" "தேசிய விடுதலை" "ஆயுதப் போராட்டம்" போன்ற பதங்களைப் பாவிப்பதும்;, புலிகள் ஈழத்தில் இருந்தபோது புலியுடன் இருந்த புத்திஜீவிகளை மட்டும் முன்னிறுத்தி தற்போது வேலை செய்வதும் தந்திரோபாயமாகாது. ஆகவே இப்பதங்களை பாவிக்காமலும்;, புலிகளின் "பழைய" புத்திஜீவிகளை  அழைக்காமலும், புலிகளின் தரப்பிற்கு "புதியவர்களான” கற்றோர்களையும், "புதிய"  புத்திஜீவிகளையும் அழைத்தே  இக் கருத்தரங்கு நடைபெற்றது.

என்னடா  இவன் யார் அந்த  புத்திசீவிக் கனவான்கள் என்று சொல்லாமல் இழுத்து, மழுப்பி, சொதப்பி, அமுக்கி பீடிகை போடுகிறானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு விளங்குகிறது.

நோர்வேயை பொறுத்தமட்டில் இடதுசாரி அரசியல் சார்ந்த புத்திஜீவிகளாகவும், இடதுசாரிகளாகவும்; பெண்ணியவாதிகளாகவும், இலக்கியவாதிகளாகவும் காட்டிக் கொள்வோர் வெகுசிலரே. இவர்களில் பிரபலமானவர்கள் கவிஞர் ஜெயபாலன், கலாநிதி முனைவர் சண்முகரத்தினம், இசையமைப்பாளர் ரவிக்குமார் மற்றும் சுவடுகள் குழுவென இயங்கும் தம்பா மற்றும் இளவாலை விஜேந்திரனை குறிப்பிடலாம். இவர்களில் ஜெயபாலனும், இசையமைப்பாளர் ரவிக்குமாரும் பல வருடங்களுக்கு முன்பே புலிகளால் கொடுப்பதைக் கொடுத்து  உள்வாங்கப்பட்டவர்கள்.  இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.

ஆமாம்; கருத்தரங்கிற்கு நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் (NCET) தலைவர்    பஞ்குலசிங்கம் கந்தையாவினால் நேரடியாக அழைக்கப்பட்டு, பிரமுகத்தனத்துடன் அதில் பங்குபற்றியோர்  கலாநிதி, முனைவர் சண்முகரத்தினமும்; சுவடுகள் சார்பில் தம்பாவுமாகும்.

 
இதில் தம்பாவை விட மாவோயிச புத்திசீவியாகவும், இலக்கியவாதியாகவும், மக்கள் நண்பனாகவும் தன்னை காட்டிக்கொள்வதிலும், இந்த "இமேஜின்" அடிப்படையில் தன்னை சமுகத்தின் முன் முற்போக்காளனாக  கட்டமைப்பதிலும்; ”சமுத்திரன்” என தன்னை இலக்கிய உலகில் பகிரங்கப்படுத்தும் கலாநிதி; முனைவர் சண்முகரத்தினம் மிகக் கெட்டிக்காரர். இவர் எங்கு தன் சுயநலத்திற்கும், தனது அரசியல் இருப்பிற்கும், சுயதம்பட்டத்திற்கும் மேடை கிடைக்கிறதோ, அங்கே தனது அரசியல் திருகுதாளங்களை, சந்தர்ப்பவாத நயிந்தை மேளத்துடன் அரங்கேற்றத் தவறாத புத்திஜீவி.

உதாரணமாக கூறுவதானால்  சிலவருடங்களுக்கு முன்; சரிநிகர் சரா என்று தன்னை பிரசாரப்படுத்தும் முன்னாள் சரிநிகர் ஊடகவியலாளராலும், இயக்கியச் சந்திப்பு பிரபலமான ஜெர்மனி சுசீந்திரனாலும், இலங்கை அரசு சார்பாக நோர்வேயில் நடந்த கருத்தரங்கிலும் இவர் கலந்து கொண்டார். இப்போ புலிப்பினாமிகளின் கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இறுதியாக என்னுள் எழும் கேள்வி  இதுதான்:  

நான் ஆரம்பத்தில் எழுதியது போல புலிகள் தமது நலனுக்காகவும், தமது பாசிச-தரகு அரசியலை நிலைநாட்டுவதற்காகவும்; ”எண்ணைக்காக காயும் எள்ளுப்போல” இயங்குகிறார்கள். புலிகளைப் பொறுத்த மட்டில் இது ஒரு இயல்பான ஒரு விடயம். ஆனால்;   இடதுசாரிகளாகவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளாகவும் தம்மை காட்டிக்கொள்ளும் சண்முகரத்தினமும், சுவடுகள் குழுவும் ஏன் புலம்பெயர் புலிப்பினாமிகளுடன் சேர்ந்து இலங்கையில் புலிகள் அழிந்த பின்பும்  ”எள்ளுடன்  காயும் எலிப்புளுக்கை போல” இயங்க முற்படுகின்றார்கள்????  


பிற்குறிப்பு :

1.இங்கு வேறு சில இடது  புத்திஜீவிகள் இக்கருத்தரங்கில் பங்கு பற்றினாலும், அவர்கள் தம்மை மக்கள் மத்தியில் தம்பட்டம் அடித்து தம்மை முன் நிறுத்தாததால் ஊடக தர்மம் கருதி இங்கு அவர்கள் பெயர் குறிப்பிடப்படுவதை தவிர்த்துள்ளோம்.

2.இங்கு எழுதப்பட்டுள்ளது அவதூறு என்று பிரச்சாரம் பண்ணுவதற்கும், இதை யார் எழுதினார்கள் என்றும், எழுதியவனை தமது ரசிகர் மன்றங்கள் மூலமாக தேடுவதற்கும் நேரத்தை பாவிக்காமல், இங்கு எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பிரமுகர்கள் பதில் தர முயற்சிப்பார்கள் என எதிர்பார்கிறோம்