நக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா? என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ஏழாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இறைவன் ஓய்வெடுக்கின்றார” என்ற உலகப் பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருப்பவருக்கு, ஈழத்தைப் பற்றிய பொய்களை அவித்து விடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் பல மில்லியன் வருடங்களை கடந்த உலக வரலாற்றை ஆதாரங்கள் எதுவும் இல்லாத கிறிஸ்துவின் பிறப்பினை வைத்து முன் பின் என அளப்பது போல், எமது காலத்தில் எமது கண் முன் நடக்கின்ற ஈழப் போராட்டத்தினை வைத்து கதையளக்க முடியாது. இந்தப் பாதிரியார் பற்றி வினவு தளத் தோழர்கள் மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கத்தோலிக்க மதத்தினது கற்பனைகளை பரப்புவது போல் ஈழம் பற்றிய பொய்களை கூச்சமின்றி பரப்பி வருகின்றார்.
கஸ்பர் பிரபாகரனிடம் நீங்கள் மற்றைய இயக்கங்களை, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கொல்கிறீர்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் உங்களது விளக்கம் என்ன என்று கேட்டாராம். நாங்கள் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களையே கொன்றோம். துரோகிகளை அழித்தோம். ஈழத்திற்காக போராடுபவர்களைக் கொல்வதில்லை என்று பிரபாகரன் சொன்னாராம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற கொள்கை கொண்டவர் எங்கள் தலைவர் என்று அவர் புல்லரித்துப் போகிறார்.
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுந்தரம், மனோ மாஸ்டர், ராஜினி, செல்வி கேசவன், விமலேஸ்வரன், ரமணி போன்ற எண்ணிலடங்கா போராளிகள் தான் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களாம். தமது கல்வி, தொழில், வாழ்க்கை என்று சகலதையும் தூக்கி எறிந்து விட்டு மக்களிற்காக போராடிய இவர்கள் துரோகிகளாம். ஓவ்வொரு பிரதேசமாக ராணுவம் கைப்பற்றிய போதும் துப்பாக்கி முனையிலே மக்களைப் பலவந்தமாக தம்முடைய பாதுகாப்பிற்காக முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று பலி கொடுத்த புலிகள் ஈழப் போராட்ட வீரர்களாம்.
வன்னிப் போரின் போது வீட்டுக்கொரு பிள்ளையை போரிட கட்டாயமாக பிடித்ததைப் பற்றி பாதிரியார் தனக்கு நம்பகமான ஒருவரிடம் கேட்டாராம். போரிட ஆள்பற்றாக் குறையால் தாம் வீட்டுக்கொரு பிள்ளையினை கேட்பதற்கு முடிவெடுத்ததாகவும், ஆனால் கட்டாயமாக சேரும்படி இழுத்துச் செல்லவில்லை. சில கீழ்மட்ட தளபதிகள் தான் கட்டாயமாக பிடித்தார்கள். ஆனால் இது பற்றி தலைவருக்கு நிச்சயமாக தெரியாது என்றும் அவரிற்கு தெரிந்திருந்தால் அப்படி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்திருப்பார் என்றும் பதில் வந்ததாம்.
தோழிலாளர்களின் போராட்டங்களின் போது முதலாளி நல்லவர், அதிகாரிகள் தான் பிரச்சனை என்று முதலாளிகளின் கைக்கூலிகள் பிரச்சனையினை திசை திருப்பி விடுவது போல் கஸ்பர் விளக்கம் சொல்கிறார். புலிகள் கட்டுப்பாடான இயக்கம் தலைவருக்கு தெரியாமல் நிழலும் ஆடாது என்று பீற்றித்திரிந்த இவர்கள், இன்று வீட்டுக்கொரு பிள்ளையை பிடித்தது மறைக்க முடியாதளவிற்கு வெளிவந்ததும் பழியை கீழ்மட்டத்தில் போட்டு தலைமையை புனிதமாக்குகின்றார்கள். புலனாய்வு பிரிவின் ழூலம் சகலத்தினையும் உளவு பார்த்து வந்த தலைமைக்கு இது மட்டும் தெரியாமல் போய்விட்டதாம். இயேசு ழூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையே நம்புகின்ற மக்கள் இதை நம்பமாட்டார்களா என்ற தைரியத்தில் பாதிரியார் கதை விடுகிறார்.
ஈழ விடுதலையின் துரோகிகள் மாபியா போல ஆகிவிட்டார்கள். ஆனால் தூயவர்கள் போல நடிக்கின்றார்கள். ஈழவிடுதலையை பயன்படுத்தி புலம்பெயர் மக்களிடம் சேர்த்த பணம் இவர்களிடம் தான் இருக்கின்றது. தமிழ்வின் இணையத்தளம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தன்னை நடேசனைக் காட்டிக் கொடுத்த துரோகி என்று பொய் செய்தி வெளியிட்டிருக்கின்றது என்று கஸ்பர் எழுதுகிறார். தமிழ்வின் இணையத்தளத்தின் முகப்பினில் வட்டிக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்களும், கோடம்பாக்கத்து முன்றாம் தர தமிழ்ச்சினிமா கூத்தாடிகளின் செய்திகளுமாக மின்னும் இந்த இணையத்தளம், கஸ்பருக்கு அவரை குற்றம் சாட்டும் வரை விடுதலைக்கான இணையத்தளமாக மிக நீண்ட காலமாகவே இருந்தது.
புலம் பெயர் நாடுகளில் விடுதலைக்கு என்று புலிகளால் மட்டுமே பணம் பல வருடங்களாக சேர்க்கப்பட்டது. தமிழ் மக்களின் பணம் இன்று மாபியாக்களின் கைகளில் இருக்கின்றது என்று சொல்வதன் முலம் கஸ்பர் புலிகள் தான் அந்த மாபியாக்கள் என்று தன்னையறியாமல் ஒத்துக்கொள்கின்றார்.
அனுராதபுரத்து வீதிகளில் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றதும், கிழக்கு மாகாணமெங்கும் முஸ்லீம் மக்களைக் கொன்றதும், ஈழ சுதந்திரத்திற்காக போராடியவர்களினதும் பொது மக்களினதும் சுதந்திரங்களைப் பறித்ததும், போராட்டத்தினை கொலைக்களமாக மாற்றியதும் இந்த (புலி) மாபியாக்கள் தான்.