Language Selection

இராசஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் அமைந்துள்ள மிகவும் புகழ் வாய்ந்ததும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் சுஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் திருத்தல வளாகத்தினுள் உள்ள அஹத்-இ-நூர் தர்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு ஐந்து மாதங்கள் முன்பாக, ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலுள்ள 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெக்கா மசூதியில் மே 18, 2007 அன்று நடந்த குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பைக் கண்டித்து முசுலீம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது ஆந்திர மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இக்குண்டு வெடிப்புகளுக்குப் பின் எழுந்த புகை மண்டலம் அடங்கும் முன்பே, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பிற்கு வங்க தேசத்தைச் சேர்ந்த ஹுஜி என்ற முசுலீம் தீவிரவாத அமைப்பும், ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு உள்ளூர் முசுலீம் தீவிரவாதிகளும் காரணமென அரசும், போலீசும், தேசியப் பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்துகொண்டு குற்றஞ்சுமத்தின.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் மைய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே அக்டோபர் 22 அன்று நடைபெற இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை விரும்பாத முசுலீம் தீவிரவாத அமைப்புகள்தான் இக்குண்டு வெடிப்பை நடத்தியிருப்பதாக’’க் குற்றஞ்சுமத்தினார்.

இப்‘புலனாய்வின்’ அடிப்படையில், இக்குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம் இளைஞர்களும், மதகுருமார்களும் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 140 முசுலீம்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுள் 24 பேர் மீது சதி வழக்கும், அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த வழக்கும் தொடுக்கப்பட்டது. அந்த 24 பேருக்கும் சர்வதேச முசுலீம் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பிருப்பதாகவும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் முடிவில் அந்த 24 பேரும் அப்பாவிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முசுலீம் இளைஞர்களும்கூட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்குகளை விசாரித்து வரும் போலீசு அமைப்புகள், இக்குண்டு வெடிப்புகளுக்கும், முசுலீம் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதை நிரூபிக்க நியாயமான ஆதாரம் எதையும் கடந்த மூன்று ஆண்டுகளில் காட்டவில்லை. இந்நிலையில், இந்த இரண்டு குண்டு வெடிப்புகளையும் இந்து மதவெறி அமைப்புகள் நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இராசஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத போலீசு படைப் பிரிவு அறிவித்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கை விசாரித்து வரும் மையப் புலனாய்வுத் துறையும் இந்த இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பலுக்கும் தொடர்பிருப்பதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தொடர்பாக தேவேந்திர குப்தா, சந்திரசேகர் என்ற இரு "இந்துக்கள்" இராசஸ்தான் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திர குப்தா, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரின் மசூதியொன்றில் 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான "அபிநவ் பாரத்" என்ற இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்தவன் என இராசஸ்தான் போலீசார் அறிவித்துள்ளனர்; அதே சமயம், அம்மாநில உள்துறை அமைச்சர் சாந்தி குமார் தாரிவால், " தேவேந்திர குப்தா பீகார் மாநிலத்திலுள்ள முஸாஃபர்பூரில் ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சாரக்காகப் பணியாற்றி வருவது உலகுக்கே தெரியும்" எனப் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி சிம் கார்டுகளின் எண்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பது; இந்த இரண்டு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதமும், இக்குண்டு வெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும் ஒரே விதமாக இருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரண்டு குண்டு வெடிப்புகளையும் தேவேந்திர குப்தாவுடன் தொடர்புடைய இந்து மதவெறிக் கும்பல்தான் நடத்தியிருக்கும் என இராசஸ்தான் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், மாலேகான், அஜ்மீர், மெக்கா ஆகிய மூன்று குண்டு வெடிப்புகளும் ஒரே சதித் திட்டத்தின் மூன்று கண்ணிகள் என்றும் அப்போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.பி. புரோகித்; ஒரிசா மாநிலத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.-இன் தூணாகச் செயல்பட்டு வரும் சுவாமி அஸிமானந்தா; மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்.-இன் மாவட்டப் பிரச்சாரக்காகப் பணியாற்றி வந்த காலஞ்சென்ற சுனில் ஜோஷி; மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கைபேசி சிம் கார்டை வாங்கிக் கொடுத்த ராம்நாராயண் கல்சங்கரா என்ற ராம்ஜி ஆகியோருக்கும் தேவேந்திர குப்தாவிற்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததற்கும், இம்மூன்று குண்டு வெடிப்புகளிலும் இவர்கள் அனைவருக்கும் பங்கு இருப்பதற்கும் பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாக ராஜஸ்தான் போலீசாரும், மையப் புலனாய்வுத் துறையினரும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பலின் பயங்கரவாத முகத்தை மட்டுமல்ல, இந்திய அரசின், குறிப்பாக போலீசாரின் இந்து மதவெறிச் சார்பையும் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன. முசுலீம்கள் புனிதமாகக் கருதும் மசூதியிலும், தர்காவிலும் முசுலீம் தீவிரவாத அமைப்புகள் குண்டு வைக்கும் முரண்பாடு பற்றி போலீசாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட சமயங்களில், போலீசார், "முசுலீம் தீவிரவாத அமைப்புகள் தங்களின் தந்திரத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர்; இந்துக்களுக்கு எதிராக முசுலீம்களைத் தூண்டிவிடவே அவர்கள் மசூதி-தர்காகளில் குண்டு வைப்பதாக" எவ்வித ஆதாரமும் இல்லாத கதையைத் தயாரித்துக் கூறி வந்தனர்.

மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி எஸ்.பி. புரோகித்திடம் விசாரணை நடத்தியபொழுது, அவர், "மாலேகான் குண்டு வெடிப்பில் மட்டுமின்றி, அஜ்மீர் தர்கா மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளிலும் தங்களுக்குள்ள பங்கையும், அக்குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டுள்ள இந்து மதவெறியர்களின் பெயர்களையும்" விலாவாரியாக விசாரணை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளார். இத்தகவல்கள் அனைத்தும் ஆந்திர மாநிலப் போலீசார் உள்ளிட்ட பல்வேறு விசாரணை ஏஜென்சிகளுக்கும் சொல்லப்பட்ட பிறகும்கூட, போலீசு அதிகாரிகள் இக்குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்துத் தீவிரமாக விசாரிக்கவில்லை என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, ஆந்திர மாநிலப் போலீசார் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும்கூட, அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது என்ற போர்வையில் துன்புறுத்தி வந்துள்ளனர். அஜ்மீர், மெக்கா, மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை குறித்து ஏராளமாக ஆதாரங்கள் 2008-ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டபோதும், "முசுலீம்தான் குண்டு வைப்பான்" என்ற போலீசின் காவிப் புத்திதான், இக்குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட இந்து மதவெறி பயங்கரவாதிகளை உடனடியாகக் கைது செய்யாமல் பாதுகாத்து வந்துள்ளது.

போலீசாரோ தங்களின் காவிப் புத்தியை, "போதிய ஆதாரம் திரட்ட வேண்டாமா?" என்ற காரணத்தைக் கூறி மறைத்துக் கொள்ள முயலுகின்றனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் முசுலீம்களைக் கைது செய்து சித்திரவதைச் செய்யத் தயங்காத போலீசார், இந்து மதவெறி பயங்கரவாதிகளைக் கைது செய்ய தக்க ஆதாரங்களைக் கேட்பது வேடிக்கையானது மட்டுமல்ல; அது, போலீசாரின் மூசுலீம் வெறுப்பு இந்து மதவெறி பாசிசப்புத்தியையும் சேர்த்தே காட்டுகிறது.

குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பயங்கரவாதிகளின் பாத்திரம் மேலும் மேலும் அம்பலமாகிவரும் நிலையில், மே 2008-இல் நடந்த 70 அப்பாவிகளைப் பலிகொண்ட ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்பு; 2007-ஆம் ஆண்டு நடந்த 68 பாகிஸ்தானியர்களைப் பலிகொண்ட சம்ஜௌதா விரைவு வண்டி குண்டு வெடிப்பு; ஹைதராபாத் நகரில் நடந்த 45 பேரைப் பலிகொண்ட லும்பினி பூங்கா மற்றும் கோகுல் சாட் பாந்தர் இரட்டை குண்டு வெடிப்பு ஆகியவை பற்றி மறுவிசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முசுலீம்கள் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் எழுப்பியுள்ளன.

இந்திய அரசும், அதன் அதிகார வர்க்கமும், ‘மதச்சார்பற்ற’ ஓட்டுக்கட்சிகளும் இந்து மதவெறி பயங்கரவாதிகளைத் தண்டிப்பதில் போதிய அக்கறையும் உறுதியும் காட்டுவதில்லை என்பது ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் அம்பலமாகியிருக்கிறது. இந்நிலையில், இந்து மதவெறி பயங்கரவாதிகள் சட்டத்தின் ஓட்டைகளையும், அரசின் காவிச் சார்பையும் பயன்படுத்திக் கொண்டு தப்பிவிடக் கூடாதெனில், இந்து மதவெறி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை உழைக்கும் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாகவும் தீவிரமாகவும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம், புரட்சியாளர்களின் முன், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் முன் எழுந்து நிற்கிறது.
* செல்வம்