கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொண்டதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி இது.

கொளத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்தச் சாதியினரின் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தொடர்கின்றன. இதில் ஒரு கிராமம்தான் கருங்கலூர். இங்கு வன்னிய சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இரு மாதங்களுக்கு முன்பு கொளத்தூரின் அருந்ததிய இளைஞர் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னியப் பெண்ணைக் காதலித்துக் கூட்டிக் கொண்டு வர, அந்தியூர் பா.ம.க.வினர் மூலமாக கொளத்தூர் பா.ம.க. கவுன்சிலர் மாரப்பனுக்குத் தகவல் வர, அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர். அங்கு வி.சி. கட்சியினர் செல்வாக்கு உள்ளதால், பெண்ணை வன்னியர்களால் மீட்டுவர முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வின் வன்னிய வெறியர்கள் அருந்ததிய இளைஞரின் தந்தையான மாரியப்பனின் வீட்டைச் சூறையாடி, அவரின் மனைவி மற்றும் இரு உறவினர்களை அடித்து நொறுக்கினர். இக்கொடுஞ்செயலைப் பற்றி வி.சி. கட்சியினரிடம் மாரியப்பன் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்தனர். வேறு வழியின்றி, மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீது வன்கொடுமைத் தடுப்பு வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ, சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்றுக் கைது செய்யப்படாமல் தப்பித்துவிட்டார்.

வன்னிய சாதிப் பெண்ணை தாழ்த்தப்பட்ட அருந்ததி சாதிக்காரன் மணமுடித்து விட்டதாலும், பெண்ணை மீட்க முடியாதிருப்பதாலும் ஆத்திரத்தில் குமுறிய வன்னிய சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்டோரைச் சமூகப் புறக்கணிப்பு செய்யத் தொடங்கினர். சித்திரைத் திருவிழாவின் போது, "நமக்கு அடங்காத ஆதிதிராவிடர்கள் இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது, அருந்ததியர்களை வெச்சு மேளம் அடிச்சுக்கலாம்" என்று வன்னிய நாட்டாமைகள் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டனர். வன்னிய நாட்டாமைகளின் மிரட்டலுக்கு அஞ்சி மேளம் அடித்த அருந்ததியர்களிடம், முதல்நாள் திருவிழா முடிந்ததும் ஆதி திராவிடர்கள் சிலர் தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.

"நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க" என்று அருந்ததியர்கள் வன்னியர்களிடம் சொன்னவுடன், அதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15-ஆம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க. கவுன்சிலர் மாரப்பன் தலைமையில் 200 பேர் கொண்ட கும்பலாகத் திரண்டு கருங்கலூர் ஆதிதிராவிடக் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்கினர். இத்தாக்குதலில் பல ஆதிதிராவிடர்கள் பலத்த காயமடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்தனர். அடித்து முடித்த கும்பல், ஆதிதிராவிடக் குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிட்டது. இதனால், அவசர முதலுதவிக்கான 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்த போதிலும், படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் உடனடியாக மருத்துவ உதவிகூடப் பெறமுடியவில்லை.

கொளத்தூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு இத்தகவல் தெரிந்ததும், அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் வன்னிய சாதிவெறியாட்டத்தை வெளியுலகுக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் கொளத்தூர் போலீசு, தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.கட்சியினர் பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்றெண்ணிய போலீசார், 16-ஆம் தேதி காலை கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய கருங்கலூருக்கு வந்தனர். இதை எதிர்த்து, சாதிவெறியர்களால் அணிதிரட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் ஈடுபட்டு, சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதலை நடத்தினர். இதில் பல போலீசார் மண்டையுடைந்ததும், போலீசு 9 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் காயமடைந்த வன்னிய சாதியைச் சேர்ந்த சின்னதுரை மட்டும் அரசு மருத்துவமனையில் இருக்க, காயமடைந்த இதர வன்னியர்கள் வழக்கில் சிக்காமலிருக்க வெளியூரில் இரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அப்பாவி வன்னிய மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுத் துவண்டு கிடக்கிறார்கள்.

"ஆதிதிராவிடனுங்க வூடு பூந்து அடிச்சுட்டானுங்க, பாவம் அருந்ததி பொம்பளங்க. சிலருக்கு மண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம். அவ்வளவுதான், இதை என்னவோ பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க, இந்தப் பசங்க" என்று ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு, இப்போது புதுப் புரளியையும் கிளப்பி விடுகிறார்கள் பா.ம.க.வினர். ஆதிதிராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை, அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? இது, ஆதிக்க சாதி திமிர் அன்றி வேறென்ன?

பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, சின்ன பிரச்சினைக்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அரசைக் குற்றம் சாட்டினார். எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்னப் பிரச்சினையா? அவர்களுக்கு கொளத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் முதல் கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் வன்னிய சாதிவெறியர்களுக்குச் சிறிய பிரச்சினையாம்!

சட்டசபையில், சின்ன பிரச்சினைக்குத் துப்பாக்கிச் சூடு என்று ஜி.கே மணி பேசும் போது, வி.சி.கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அதற்கெதிராக வாய் திறக்கவில்லை. வன்னியர்கள் மீதான துப்பாக்கிச் சூடு என்று ஜி.கே.மணி இதை மாநில பிரச்சினையாக்கிய போதிலும், திருமா அதை எதிர்த்து வாய் திறக்கவில்லை. பா.ம.கட்சிக்கு முற்போக்கு வேடமிட்டு விளம்பரம் செய்த அறிவாளிகளும் வாய் திறப்பதில்லை.

கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயத்தை நாசமாக்கி வாழ்வைப் பறித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக வன்னியர் சங்கமோ, பா.ம.கட்சியோ எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை. மாறாக, வன்னிய ஏழைகளைச் சாதிவெறியூட்டி, கலவரத்தில் ஈடுபடுத்தி, அதன் மூலம் வன்னிய ‘ஒற்றுமையை’க் கட்டி, ஓட்டுப் பொறுக்குவதில்தான் அவை அக்கறை காட்டுகின்றன.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நடத்தும் போராட்டங்கள் வி.சி.கட்சியின் துரோகம் முற்றுப் பெறாமலே போய்விடுகின்றன. அவ்வப்போது நடத்தப்படும் எதிர்ப் போராட்டங்களால் மட்டும் சாதிவெறியாட்டத்துக்குச் சமாதி கட்டிவிட முடியாது. வன்னிய சாதி உழைக்கும் மக்களிடமிருந்து சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்துவதும், அச்சாதிவெறியர்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் இட ஒதுக்கீடு சலுகைகளையும் ரத்து செய்யக் கோரிப் போராடுவதும், வன்னியர், தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராடுவதும் இன்று அவசியமாகியுள்ளது. சாதி ஆதிக்கத்துக்கெதிரான போரில் தாழ்த்தப்பட்டோருடன் இதர பிரிவு உழைக்கும் மக்களும், புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டியது, இன்றைய உடனடிக் கடமையாகியுள்ளது.
*வேடியப்பன்
(செய்தி ஆதாரம்: வினவு.காம்)