Language Selection

புதிய ஜனநாயகம் 2010

லாவாஸா கார்ப்பரேஷன் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே நகருக்கு அருகே "லாவாஸா" என்ற பெயரில் புதிய நகரமொன்றை வெகுவேகமாக அமைத்து வருகிறது. மும்பய்ப் பெருநகரம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிதுங்கி வழிவதைப் பார்க்கும்பொழுது, இப்புதிய நகர நிர்மாணம் நல்ல விசயம்தானே என நம்முள் பலரும் கருதலாம். ஆனால், இந்தப் புதிய நகரம் யாருக்காக நிர்மாணிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. தனியார்மயம் பெத்துப்போடும் புதுப் பணக்காரக் கும்பலுக்காக உருவாக்கப்படும் நகரம்தான் இந்த "லாவாஸா’’.

மகாராஷ்டிராவின் புனேக்கு அருகே "லாவாஸா’’, அம்மாநிலத்தின் தலைநகர் மும்பய்க்கு அருகே "ஆம்பி பள்ளத்தாக்கு’’, அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகர் அருகே "நானோ சிட்டி’’, தமிழ்நாட்டின் சென்னை-மகாலிங்கபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் "ஒருங்கிணைந்த சமூகம்" என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புதிய நகரங்கள் உருவாகி வருகின்றன.

இப்புதிய நகரங்களில் அமையவுள்ள குடியிருப்புகள், கேளிக்கை விடுதிகள், சமூகக் கூடங்கள், வர்த்தக அங்காடிகள் போன்ற அசையா சொத்துகள் மட்டும் தனியாருக்குச் சொந்தமானவை கிடையாது. அந்நகரில் வரி வசூலிப்பது தொடங்கி அந்நகரைக் காவல் காப்பது வரையிலான பிற பொறுப்புகள் அனைத்தும் அந்நகரை எந்தத் தனியார் நிறுவனம் அமைத்து வருகிறதோ, அத்தனியார் நிறுவனத்திற்கும், அதனின் பங்குதாரர்களுக்கும் மட்டுமே உரியது. இப்புதிய நகரங்களுக்குத் தேவைப்படும் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தருவதோடு அரசின் பொறுப்பு முடிந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், புதிய தனியார் நகரங்கள் என்ற பெயரில் புது வகை சமஸ்தானங்கள் இந்தியாவிற்குள் உருவாகி வருகின்றன.

நகர நிர்வாகத்தைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளை நடைமுறைக்கு வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு, இப்புதிய நகரங்கள் எடுப்பான உதாரணங்களாக அமைகின்றன. லாவாஸா நகரை நிர்மாணித்து வரும் லாவாஸா கார்ப்பரேஷனுக்கு, மகாராஷ்டிரா மாநில அரசு, "சிறப்புத் திட்ட வரைவு ஆணையம்" என்ற தகுதியை வழங்கியிருக்கிறது. லாவாஸா கார்ப்பரேஷன் இத்தகுதியைப் பயன்படுத்திக் கொண்டு, நகராட்சிக்கு அல்லது மாநகராட்சிக்கு இணையான அதிகாரங்களைக் கொண்ட தனியார் நகர நிர்வாகக் குழுவை அமைத்துக் கொள்ள முடியும்.

சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் போலீசு பணிகள் அரசின் தனியுரிமையாக இருந்து வருகிறது. ஆனால், லாவாஸா கார்ப்பரேஷனோ, அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, தனது நகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் பணிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நிர்வகிக்கத் தனியொரு போலீசு படையைக் கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்நகரின் நிர்வாகம் தொடர்பாக, அரசோ அல்லது வேறு சிவில் அமைப்புகளோ எந்தவிதத்திலும் மூக்கை நுழைக்க முடியாது.

‘‘இந்தியாவிலுள்ள நகரங்களில் காணப்படும் மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், லாவாஸா போன்று நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களை உடனடியாக நிர்மாணிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்கள், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்கள். மைய அரசும் இதே காரணத்தை முன்வைத்து, "அரசும் தனியாரும் கூட்டுச் சேர்ந்து புதிய நகரங்களை நிர்மாணிக்கும் பணிகளில் இறங்க வேண்டும்" என்பதை இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலேயே கொள்கை முடிவாக அறிவித்திருக்கிறது. "தற்பொழுதுள்ள பழைய நகரங்களில் நில வாடகை அதிகமாக இருப்பதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனைத் தவிர்ப்பதற்கு லாவாஸா போன்ற புதிய நகரங்களை உருவாக்க மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும்" எனத் திட்ட கமிசனும் அறிவித்திருக்கிறது. அதாவது, நகர உருவாக்கம் மற்றும் நகர நிர்வாகம் ஆகிய பொறுப்புகளை அரசு கைவிடத் தயாராகிவிட்டது என்பதைத்தான் இந்த அறிக்கைகள் மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.

லாவாஸா கார்ப்பரேஷன், தான் அமைத்து வரும் புதிய நகரில் ஓட்டுநர் போன்ற அடித்தட்டு உழைக்கும் பிரிவினரும் தங்குவதற்கு ஏற்றவாறு குடியிருப்புகள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. தற்பொழுதுள்ள நிலவரப்படி, லாவாஸா நகரில் ஒரு மிகச் சாதாரணமான ஒண்டுக் குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால்கூட, குறைந்தபட்சம் 16 இலட்ச ரூபாய் தேவைப்படும். அடித்தட்டு மக்கள் மீது லாவாஸா கார்ப்பரேஷனுக்கு இருக்கும் அக்கறையை மெச்சுவதா அல்லது ஒரு 16 இலட்ச ரூபாய் கையிருப்பில் இல்லாத அடித்தட்டு மக்களின் அவல நிலையை நொந்து கொள்வதா என்ற இக்கட்டுக்கள் இங்கு நாம் சிக்கி விடுகிறோம்.

உண்மையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் பறித்துவிட்டுத்தான் இப்புதிய நகரங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, லாவாஸா கார்ப்பரேஷன் அமைத்து வரும் லாவாஸா நகருக்காக புனே மாவட்டத்தைச் சேர்ந்த 18 கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட்டு, அங்கு அதுவரை வாழ்ந்து வந்த மக்கள் நாடோடிகளாகத் துரத்தப்பட்டுள்ளனர். இந்த 18 கிராமங்களைச் சேர்ந்த நிலங்களைக் கையகப்படுத்துவதற்குப் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக லாவாஸா கார்ப்பரேஷன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அத்துமீறல்கள் குறித்து எந்தவொரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால், லாவாஸா நிர்வாகம் லாவாஸா நகரின் முதல் நகரியத்தை (கூணிதீணண்டடிணீ) இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் கூலித் தொழிலாளர்களுக்கு நகரின் புறநகர்ப் பகுதிகளில்கூட வீடு கிடைப்பது தற்பொழுது குதிரைக் கொம்பாகிவிட்டது. அப்படியே வீடு என்ற பெயரில் ஒரு மாட்டுக் கொட்டகை கிடைத்தாலும், அதற்கான வாடகை அவர்களின் கூலியில் மூன்றில் ஒரு பகுதியை விழுங்கி விடுகிறது. அரசோ, இக்கூலித் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இவர்களை நகர்ப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவதில்தான் குறியாக இருந்து வருகிறது. நகரை அழகுபடுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது என்ற பெயரிலும், இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பது என்ற பெயரிலும் இந்த அப்புறப்படுத்தல் அரங்கேறி வருகிறது.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பழைய நகரங்களிலேயே கூலித் தொழிலாளர்கள் குடியிருக்க முடியாது எனும்பொழுது, தனியார் முதலாளிகள் தமது ‘சொந்த’ப் பணத்தில் உருவாக்கும் புதிய நகரங்களில், கூலித் தொழிலாளர்கள் நிழலுக்கு ஒதுங்குவதற்குக்கூட இடம் கிடைக்குமா? இப்புதிய நகரங்கள் கூலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு, அவர்களைக் கறிவேப்பிலை போலத் தூக்கியெறிவதில்தான் குறியாக இருக்கும்.

தனியார்மயம் பெத்துப் போட்டுள்ள புதுப் பணக்கார கும்பல் தமது பொழுதைக் கழிப்பதற்காக மால்கள் (Malls), சினிபிளக்ஸ்கள் (Cineplex), சூப்பர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, அவர்கள் மட்டுமே வசிப்பதற்கென்று இப்புதிய நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்புதிய நகரங்கள் சிங்கப்பூர் போல, துபாய் போல ஜொலிக்கும் என ஆளும் கும்பல் பீற்றிக் கொள்கிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை இப்புதிய நகரங்கள், அவர்களால் நெருங்க முடியாத, புதுவகை அக்ரஹாரங்களாகவே இருக்கும்!
* குப்பன்