பியாங்கா ஜாக்கர், மத்திய அமெரிக்காவின் நிகராகுவா நாட்டில் பிறந்தவர். உலகின் பிரபல ராக் இசைக் கலைஞர் மைக் ஜாக்கரின் மனைவி. கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆர்வலர். ஐரோப்பிய நாடுகளுக்கான நட்புத் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ஒரிசா மாநிலம் நியம்கிரி மலைப் பகுதியில் வாழும் கோந்த் பழங்குடி மக்களிடையே பயணம் போவிட்டு சமீபத்தில் திரும்பிய பியாங்காவை "டெகல்கா" பத்திரிக்கையின் செய்தியாளர் சோமா சௌதுரி பேட்டி கண்டுள்ளார். நியம்கிரி பழங்குடி மக்கள் அடியோடு அழிந்து போகுமாறு அங்கு சுரங்கங்கள் தோண்டி, கனிமங்களைக் கொள்ளையிடும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பியாங்கா தனது நேர்காணலில் விளக்குகிறார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.
* தங்களது நியம்கிரி பயணம் எவ்வாறிருந்தது? அங்கு வேதாந்தாவின் சுரங்கத் திட்டம் எவ்வாறு உள்ளது?
* நான் முப்பது ஆண்டுகளாக மனித உரிமைகள், சமூக நீதி, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருபவள். பியாங்கா ஜாக்கர் மனித உரிமைகள் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர். இந்தியாவை நேசிப்பவளாகவும், இந்த நாட்டுடன் நீண்டநாள் உறவு கொண்டவளாகவும் இருக்கிறேன். இது பலருக்கும் தெரியும். அதனால்தான் "உதவும் செயலகம்" என்னை அணுகியது; வேதாந்தா பங்குதாரர்களின் லண்டன் கூட்டத்தின் நேருரை அளிக்கவிருந்த பழங்குடித் தலைவர் சீத்தாராம் குலிசிகாவைச் சந்திக்கும் படி அந்த அமைப்பு என்னிடம் கேட்டுக் கொண்டது. ஒதுக்கிவிட முடியாத வலுவான அவரது நேருரையும் தனது தாய்நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவருக்கிருந்த கடப்பாடும் கண்டு நான் நெகிழ்ந்து போனேன்.
"சுரங்கம் தோண்டுவதை அவர்கள் ஒருமுறை தொடங்கி விட்டால் போதும், ஆறுகள் வறண்டு போகும், எங்கள் வாழ்வாதாரங்களையெல்லாம் இழந்து விடுவோம்" என்று சொன்னார். "நகரங்களுக்கேற்ப எப்படித் தகவமைத்துக் கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாது; எங்கள் வாழ்க்கை முறை அங்கு கிடைக்காது; நாங்கள் அழிந்து போவிடுவோம்" என்றார். ஒரிசாவில் வேதாந்தா என்ன செய்கிறது என்பதைக் கேட்டு நான் மிகவும் திகைத்துப் போனேன்; உடனே நான் வேதாந்தாவின் பங்குகளை வாங்கிக் கொண்டு, அதன் பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
வேதாந்தா பிரகாசமான படமொன்றைத் திரையிட்டது; இந்தியாவில் அது செய்துவரும் அதிசயங்களை எல்லாம் அது காட்டியது. ஆனால், வேதாந்தா செயல்படும் அங்கு சர்வதேசப் பொது மன்னிப்பு அமைப்பு, உதவும் செயலகம், சர்வதேச வாழ்வியல் மற்றும் இந்தியக் குழுக்கள் போன்ற பல அமைப்புகள் உள்ளன. அவை, பல கேள்விகள் எழுப்பி, வேதாந்தா கம்பெனியின் மனித உரிமை மீறல் அட்டூழியங்களுக்கான ஆதாரங்களை முன் வைத்தன. அவற்றுக்கு வேதாந்தாவின் நிறுவன இயக்குனர் அனில் அகர்வாலிடம் பதில்கள் ஏதுமில்லை; எனவே பிரெஞ்சு பத்திரிக்கை "தி கார்டிய"னில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். வேதாந்தாவில் தங்கள் ஈடுபாட்டை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தேன். ஒரிசாவுக்குச் செல்வது எனது அடுத்த நடவடிக்கையானது.
*இத்திட்டத்தில் தவறானது என்று வடிகட்டிப் பார்த்தால் எதைத் தெரிவு செய்வீர்கள்?
* தவறானது எது என்பது மிக முக்கியமான கேள்வி. வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற பெயரால் பழங்குடிகள் மற்றும் பூர்வகுடி சமூகங்களின் அடிப்படை உரிமைகளைத் தியாகம் செய்யவேண்டும் என்று இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் சொல்கிறோமா? கூட்டுப் பங்கு நிறுவனங்கள் நமது இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதற்கு வசதியாக அவர்களின் வாழ்விருப்பையே ஆபத்துக்குள்ளாக்கப் போகிறோமா? கூட்டுப் பங்கு நிறுவனங்களும் அரசும் மக்களுடைய வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய சமூக மற்றும் கூட்டுப் பங்கு நிறுவனப் பொறுப்பை, கூட்டுப் பங்கு நிறுவனங்களும் அரசும் தாமே முன்வந்து அங்கீகரிக்க வேண்டும் என்ற காலக் குறியை நாம் வந்தடைந்து விடவில்லையா?
நியம்கிரி மலை மிக முக்கியமான மழை பொழிவுக் காடுகளைக் கொண்டது. கோந்த் பழங்குடிகள் அதைப் புனிதமானதாக மட்டும் கருதவில்லை; தங்களின் மரபைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்; இயற்கையோடு பொருத்தமான ஒரு முழு தன்னிறைவு வாழ்வும் வாழ்ந்திருக்கிறார்கள். வெளியிலிருந்து உப்பும் பெட்ரோல் எரிபொருளும் மட்டும் அவர்கள் வாங்கினர். "தண்ணீருக்கு வெளியே மீன் எப்படி உயிர் பிழைத்திருக்க முடியாதோ, அதைப்போல நியம்கிரிக்கு வெளியே நாங்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது" என்று பழங்குடி முதியவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார். நெடுந்தொலைவில் உள்ள இந்தப் பகுதிக்குப் போ, இந்த அழகான மக்களைப் பார்த்தால் உண்மையை நாம் புரிந்து கொள்வோம். வேறெங்கும் இவர்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
மேலும், கோந்த் பழங்குடிகள் மட்டும் பிரச்சினை இல்லை. மலையின் உச்சி பாக்சைட் கனிம வளமிக்க பீடபூமியைக் கொண்டது. இந்த மலையின் உச்சியில் உள்ள மழை நீர்ப்பிடிப்பு இந்தியாவின் இரு பெரும் ஆறுகளுக்கும் சுமார் 34 ஓடைகளுக்கும் நீர் கொண்டு சேர்க்கிறது. வேதாந்தா திட்டம் கோந்த் பழங்குடிகளின் வாழ்வுக்கு மட்டும் ஆபத்தாக இருக்காது. அது நீர் ஆதாரங்களைப் பாதிக்கும்; ஓடைகள், ஆறுகளின் கீழ்ப்பகுதிகளில் உள்ள பிற சமூகங்களையும் பாதிக்கும்.
எனவே, இந்தத் திட்டம் அதன் விலைக்குப் பொருத்தமானதா? வேதாந்தா நிறுவனத்தார் அரசையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டுள்ளார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தப்பித்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள வேதாந்தாவில் 25 சதவீதம் பங்கு அரசுக்குச் சொந்தமானது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் எனக்குச் சொல்லுகின்றன. எனவே, ஒரிசா அரசு இனிமேலும் ஒரு நம்பத் தகுந்த தரகனாக இருந்து, கம்பெனியைப் பதில் கூறும் பொறுப்புடையதாக்கவோ, மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் சட்டங்களையும், விதிகளையும் கடைப்பிடிக்கும்படி செய்யவோ முடியாது. அரசே கம்பெனியின் ஒரு பகுதியாகி விட்டது.
* திட்டத்தின் அடிப்படை அனுமானத்தையே நாம் மறுபரிசீலனை செய்வது அவசியமா? அது ஏழைகளுக்காக குரல் கொடுக்குமா? இது நம்மை எங்கே இட்டுச் செல்லும்; விமானத்தில் பறக்கிறோம்; குளிர் சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துகிறோம்; பெரிய கார்களில் சவாரி செய்கிறோம்; ஆனால் இவ்வாறான முன்னேற்றத்தின் பயனாளிகளான நாம் அதை விமர்சிக்கிறோம்...
* மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள அரசாங்கங்களின் பகுத்தறிவற்ற சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றி அவற்றோடு என் வாழ்நாள் முழுவதும் நான் அடிக்கடி மோதுகிறேன். "பியாங்கா, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவும் வேண்டி இதைச் செய்வது அவசியமாக உள்ளது; மக்களுக்கு வேலை வாய்ப்பைக் கொண்டு வரவேண்டியுள்ளது; நமது அந்நியக் கடன்களுக்கு தவணை செலுத்த வேண்டும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டது. உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அது, பூர்வகுடிமக்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இல்லை; வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை. பன்னாட்டுத் தொழில் கழகங்கள் மிகப் பெரிய இலாபமீட்டுவதற்கு உதவியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பேரழிவும் இயற்கை மூலதாரங்களுக்கு நாசமும் விளைவித்ததற்கான தழும்புகளை மட்டும்தான் அது விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், அது மக்களுக்கு எப்போதும் பயன்பட்டதே இல்லை. சிலரைக் கோடீசுவரர்களாக்கியது தவிர, சம்பந்தப்பட்ட நாடுகளின் நிலையையும் உயர்த்தி விடவில்லை. எனவே, சுற்றுச்சூழலை அழிக்காது, மக்கள் அனைவரையும் உள்ளடக்கி, அவர்களது வாழ்வை முன்னேற்றுகிற, நீடித்த ஒரு வளர்ச்சியின் அவசியத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
* இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுரங்கத் தொழிலைத் தொடர்ந்து ஊழல் கவ்விக் கொண்டுள்ளது. நாம் சட்டம் போடலாம். ஆனால் அதிகாரத்திலுள்ளவர்களை அவர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும். இதற்குத் தங்கள் பதிலென்ன?
* நமது நாகரிகத்தை ஒரு விளிம்புநிலைக்குத் தள்ளி விட்டோம் என்று நான் நம்புகிறேன். பேரழிவு விளைவிக்கும் பருவநிலைச் சூழலைப் பின்னிழுக்க வேண்டும் என்பதில் பாரிய அக்கறை கொள்வதானால் மாறுபட்ட வாழ்க்கை முறையைக் கட்டாயம் நாம் நடத்தவேண்டும். அது சரி, நமது வாழ்க்கை முறையையும் உண்மையில் மாற்றுவது பற்றி நாம் பேசினால் ஒவ்வொருவரும் நடுநடுங்கிப் போகிறோம். ஆனால், இதுதவிர அரசு அவசியம் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான வேறொன்று உள்ளது.
பல அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கும், ஒரு புரட்சிக்கும் உள்ளான ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன். போரால் பெரும் பேரழிவுக்குள்ளான நாடுகளின் மக்களிடையே பல ஆண்டுகள் நான் பணியாற்றியுள்ளேன். மக்களுடைய வாழ்வாதாரங்களைக் காவு கொண்டு இயற்கை வளங்களை தராதரமின்றிக் கொள்ளையிடுவது எல்லா இடங்களிலும் புரட்சிகர எழுச்சியைப் பெற்றெடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இது புதிதானதோ, அல்லது இந்தியாவுக்கு மட்டும் உரித்தானதோ இல்லை. எனவே, இது குறித்து இந்திய அரசு மீளாவு செய்வது அவசியம். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது மூதாதையர் நிலங்களிலிருந்து விரட்டி, அவர்களது அடிப்படை மனித உரிமைகளை நீங்கள் மறுத்துவிடுவீர்களேயானால், அவர்கள் தமது வாழ்விருப்பிற்கான வழிமுறைகள் இல்லாமல் போ விடுவார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்; கோந்த் என்னிடம் சொன்னவாறு, அவர்கள் இழப்பீடுகளை விரும்பவில்லை. நிலத்திற்குப் பணம் இழப்பீடாக முடியாது; எனவே, போரை எப்படித் தவிர்ப்பது என்பதுதான் பிரச்சினை. மக்கள் மீது குண்டுவீசுவது அல்லது இராணுவத்தை இறக்கி விடுவது மூலம் நீங்கள் போரைத் தவிர்க்க முடியாது; அதற்குப் பதிலாக உண்மையில் பிரச்சினையின் வேர்களைக் கண்டறிய வேண்டும்.
* சுரங்கங்கள் தோண்டுவது, அரசு அடக்குமுறை, புரட்சி மற்றும் அதன் விளைவு பற்றி உங்களுடைய லத்தீன் அமெரிக்க அனுபவம் என்ன?
* அவை முன்மாதிரியானவை. மிகவும் செல்வந்தருக்கும் மிகவும் ஏழைக்கும் பெரும் இடைவெளி உள்ளது. அரசாங்கங்கள் எல்லாம் தாம் துரத்தியடித்த ஏழை மக்களின் நலன்களைப் பாராது, இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் பன்னாட்டுத் தொழில்கழகங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுள்ளார்கள். நிகராகுவா, பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் வளரும் உலகம் முழுவதும் சுரங்கங்களில் நோய்களால் மாண்டுபோன மக்களது தடயங்களைக் காணலாம். மேலும் தொடர்ந்து குவாதிமாலா, சால்வடார், நிகராகுவா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பிற பல நாடுகளில் எல்லாம் புரட்சிகர எழுச்சிகளையும் காணலாம். கெட்ட நிகழ்வாக, பல புரட்சிகளும்கூட இறுதியில் மக்களுக்குத் துரோகம் செய்து விட்டன. எனவே, இந்திய அரசாங்கம் இம்மாதிரியான எடுத்துக்காட்டுகளையும் கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. பழங்குடி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகத் தாம் பயன்படுத்தும் ஒடுக்கும் முறைகளை ஒரிசா மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். காந்தியும் நேருவும் பழங்குடி மக்கள் உரிமைகள் குறித்து என்ன சொன்னார்கள் என்பதை இந்திய அரசியல்வாதிகள் படிப்பது முக்கியமான ஒன்றாக இருக்கலாம். வளர்ச்சித் திட்டங்களைப் பழங்குடி மக்களின் தொண்டைக்குள் திணிக்க முடியாது.
* சுரங்கத் தொழில் மற்றும் பெரும் கூட்டுப் பங்கு நிறுவன முறைகேடுகளின் நோய் குறியீடாக வேதாந்தாவை எது ஆக்கியது?
* நான் இதுவரை கண்ட நிறுவனங்களிலேயே வேதாந்தா மிக மோசமானது; ஆனால் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடியது என்னவென்றால், இது இருபத்தோராம் நூற்றாண்டில் நடக்கிறது. ஒப்பற்ற மக்கள் தொடர்பு பிரச்சாரத்தின் மூலம் உலகுக்கே தவறான புரிதலை உருவாக்குகிறது. பல்கலைக்கழகங்கள் கட்டுவது போன்ற நல்லவற்றை மக்களுக்காக அது செய்யப் போகிறது என்று மக்களை நம்ப வைக்கிறது; ஆனால், எல்லாம் பொய். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு இங்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தருகிறேன். அதன் அலுமினிய கச்சாப் பொருள் சுத்திகரிப்பு ஆலைக்கு மிக அருகில் உள்ள போந்தேகுடா என்றொரு இடத்தில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் காலி செய்து ஒரு ஆலையை அமைத்து, ஒவ்வொருவருக்கும் வேலை தருவதாக கிராமத்தாருக்குக் கம்பெனி சொன்னது. ஏற்கெனவே நான்கு கிராமங்களைக் காலி செய்துவிட்டது; நிலப்பட்டா வைத்திருப்பவர்களுக்கு (உங்களுக்குத் தெரியும் அவர்கள் ஒரு சிலரே குறிப்பாக பழங்குடிகள் நிலப்பட்டா வைத்திருக்க மாட்டார்கள்.) ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாயும், நிலப்பட்டா இல்லாதவர்களுக்கு 50,000 ரூபாயும், வீடுகளைக் காலி செய்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவாக ஆயிரம் ரூபாய் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தது. பாருங்கள் வெறும் ஆயிரம் ரூபாய் தான்! அதாவது 20 டாலர்தான்! இது அதிர்ச்சியடையச் செய்கிறது. அது சரி, அவர்களுக்கு இன்னமும் வேலையெதுவும் தரப்படவில்லை. இந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையில் 57 வெளிநாட்டவர்கள் வேலை செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
எனவே, 2003-ஆம் ஆண்டு, அறிவிக்கப்பட்ட பகுதியை வெகுதூரம் தாண்டிக் காடுகளைக் கம்பெனி வெட்டத் தொடங்கியதையும் அது அளித்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாகிவிட்டதையும் மக்கள் கண்டபோது, ஆலைக் கட்டுமான இடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 400 பேர் திரண்டனர். ஆண்கள் அனைவரையும் ஏழு நாட்கள் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுதலை செய்தபோது, அவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டவர்கள்ஆகிவிட்டார்கள், பூரி ஜகந்நாதர் கோவிலுக்குப் போ பாவத்தைக் கழுவவேண்டுவது அவசியமாகி விட்டது என்று சொல்லப்பட்டது. அவர்களைப் பலவந்தமாக பூரிக்குக் கொண்டு செல்வதற்கு வேதாந்தா நிறுவன குண்டர்களோடு போலீசும் பயன்படுத்தப்பட்டார்கள்; அதுசமயம் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றிச் சுற்றுச் சுவர் எழுப்பிக் கொண்டார்கள். அங்கிருந்த பழங்குடியினரின் மூதாதையர் இடுகாட்டை, பாரம்பரிய மரபு விதியை மீறி அழித்து, வேதாந்தா ஆலையின் வளாகத்துக்குள் சட்டவிரோதமாக சேர்த்துக் கொண்டார்கள். அதாவது, பழங்குடியினர் தமது மூதாதையரை இனிமேலும் வழிபட போக முடியாது. இது பாரிய மனித உரிமைகள் மீறலாகும். இதில் அசாதாரணமானது என்னவென்றால், இவையெல்லாம் ஒரிசா அரசு மற்றும் போலீசின் உடந்தையோடு செய்யப்பட்டுள்ளன என்று என்னிடமுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. புவனேசுவரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் நான் இறங்கியபோது "சுரங்கத் தொழில் ஒரிசா மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது" என்ற விளம்பரப் பலகை என்னைத் தாக்கியது. என்னவொரு கேலிக்கூத்து! அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை அப்பகுதி சமூகங்களுக்கு துயரத்தையும், நோயையும், பட்டினியையும் தவிர, வேறெதையும் தரவில்லை.
* இந்திய ஜனநாயகத்தில் பிரச்சினை இப்போது அது வெறுமனே தேர்தல்களோடு சமப்படுத்தப்படுகிறது.
இது ஒரு இந்தியப் பிரச்சினையாக மட்டுமில்லை. இது முதலாவதாக அமெரிக்கா கொண்டு வந்தது. ஆப்கானில் ஒருவரையொருவர் படுகொலை செய்து கொண்டிருக்கையில் தேர்தல் நடத்தப்படுகின்றன. இறுதியில் அவை ஜனநாயகமே இல்லை. ஈராக்கில் மக்களே பங்கேற்காத தேர்தல்கள் நடத்தப்பட்டன. லத்தீன் அமெரிக்காவில்கூடத் தேர்தல்கள் நடத்தப்படுவதால், ஜனநாயகம் நிலவுவதாகி விடாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஜனநாயக அரசைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தல்களுக்கு மேலாகப் பலவும் தேவைப்படுகின்றன.
* எனவே, தார்மீகம் மிக்க கூட்டுப் பங்கு நிறுவன நடைமுறையை நாம் முன் தள்ளவேண்டுமா?
* ஈக்குவடாரில் ஐந்து பூர்வகுடி ஆதிவாசிகள் உள்ளிட்ட சமூகங்களிடையே நான் பணிபுரிகிறேன். டெக்சாகோ எண்ணெ நிறுவனத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (அது செவரானுடன் இணைந்து இப்போது செவரான் என்றே அறியப்படுகிறது). அது ஈக்குவடார் நாட்டில் 20 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. இந்தக் காலத்தில் இந்நாட்டின் போர்வையாக உள்ள மழைவளக் காடுகளை அழித்து, அனைத்து நீர்வளங்களையும் மாசுபடுத்தி விட்டது; 1919-ஆம் ஆண்டு டெக்ஸாஸில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, நீர் மூலாதாரங்களுக்கு எண்ணெ கசிந்து பரவிவிடாதவாறு எல்லா எண்ணெக் குழிகளையும் உள்பூச்சுப் பூசிவிட வேண்டும் என்று எண்ணெ கம்பெனிகளுக்கு ஆணையிடப்பட்டது. ஆனால், அதற்கு கொஞ்சம் செலவிட வேண்டும் என்பதால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் பல ஆண்டுகளாக ஈக்குவடார் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிக்கிறார்கள், சமைக்கிறார்கள், குளிக்கிறார்கள், நீந்துகிறார்கள்; இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயால் மடிகிறார்கள். குழந்தைகள் தோல் நோய்களாலும், பெண்கள் தன்னியல்பான கருச்சிதைவினாலும் அவதிப்படுகிறார்கள்.
1993-ஆம் ஆண்டு அவர்கள் தமக்குள் அமைப்பாகி கம்பெனியின் தாய்நாடான அமெரிக்காவில் ஒரு மூல வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு இன்னமும் நடக்கிறது; ஆனால், இன்று 600 கோடி டாலர்கள் இழப்பீடாகப் பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஒரு மிகப் பெரிய நிறுவனத்துக்கு எதிராக நெடுந்தொலைவுக்குள் வாழும் பூர்வகுடி மக்கள் ஒன்றுதிரண்டு அமைப்பாகிப் போராட முடியும் என்று நீங்கள் ஒருபோதும் கனவு கண்டிருக்க முடியாது. ஆனால், அவர்கள் அதைச் செய்தார்கள். இந்த வழக்கில் அவர்கள் வெல்ல முடியுமானால் -அவர்கள் வெல்வார்கள் என்று நம்புகிறேன்- வளர்முக அல்லது தொழில் எழுச்சியுறும் தேசங்களில் தண்டனையின்றித் தப்பித்துக் கொள்ளும் வகையில் இனிமேலும் கூட்டுப் பங்கு நிறுவனங்கள் செயல்பட முடியாது என்ற தெளிவான செய்தியைச் சொல்லும்.
********
குறிப்பு:
பியாங்கா ஜாக்கர் ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் அல்ல. உள்நாட்டு பாசிச சர்வாதிகாரத்தையும் அமெரிக்க மேலாதிக்கத்தையும் எதிர்த்து ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்று, அமெரிக்கத் தலையீடு-நெருக்குதல் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டு, அதன் அடிவருடி ஆட்சி நிறுவப்பட்டு, பின்னர் தேர்தல்கள் மூலம் மீண்டும் அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி நிறுவப்பட்ட நிகாரகுவா நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள், சமூகநீதி மற்றும் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்தான் அவர். எனவே, காந்தி, நேரு, போன்றவர்கள் பற்றிய கறாரான மதிப்பீடுகள் கொண்டவரல்ல. பிற்போக்கு ஆட்சியாளர்களிடம்கூட ஜனநாயகப்பூர்வமான மனமாற்றத்தை எதிர்பார்ப்பவர். அவரது கண்ணோட்டத்தை முழுமையாக நாம் ஏற்கவில்லை என்ற போதும், வேதாந்தா போன்ற பன்னாட்டு கூட்டுப் பங்கு நிறுவனங்களுக்கு எதிராகவும், பழங்குடி மற்றும் பரந்துபட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர் முன்வைக்கும் முற்போக்கு கருத்துக்களுக்காக அவரது நேர்காணலை இங்கே வெளியிடுகிறோம். "தெகல்கா" ஏட்டிற்கு நன்றி.
_ ஆசிரியர் குழு.