காட்டுவேட்டை எனப்படும் உள்நாட்டுப் போரை நிறுத்தவும் அமைதி மற்றும் நீதிக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி பேரணி நடத்துவதற்காக கடந்த மே 5-ஆம் தேதியன்று, ராய்ப்பூரிலிருந்து தண்டேவாடாவுக்கு பிரபல காந்தியவாதியான நாராயண் தேசாய், விண்வெளி அறிவியலாளர் யஷ்பால், முன்னாள் யு.ஜி.சி தலைவர் ராம்ஜி சிங், சுவாமி அக்னிவேஷ் முதலானோர் வந்தனர். அமைதிப் பேரணி நடத்த முற்பட்ட அவர்கள் ஒரு பொறுக்கி கும்பலால் முற்றுகையிடப்பட்டனர்.

பா.ஜ.க மற்றும் காங்கிரசைச் சேர்ந்த ஆதிக்க சாதி வியாபாரிகள் ஏற்பாடு செய்து அழைத்து வந்த அப்பொறுக்கிகள் ஆபாசமான வசவுகளுடன், இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இக்கும்பலைப் புகைப்படம் எடுக்க முற்பட்ட பத்திரிகையாளரைத் தாக்கியது. ராய்ப்பூரிலிருந்து ஊர்வலத்துக்கு வந்தவர்கள், வாடகைக்கு எடுத்து வந்திருந்த பேருந்தின் டயர்களை நாசப்படுத்தி பஞ்சராக்கியது. போலீசு முன்னிலையிலேயே இவையனைத்தும் நடந்த போதிலும், போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி நின்றது. அமைதிப் பேரணி நடத்த முற்பட்ட அறிவுத்துறையினர், போலீசாரால் கௌரவமாகத் திருப்பியனுப்பப்பட்டனர்.

பஞ்சாபில் இந்திய மக்கள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் தர்ஷண்பால் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷண்பாலை விசாரணை என்ற பெயரில் அடைத்து போலீசு சித்திரவதை செய்து வருகிறது. காரணம், இவர் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுத் தலைவர் கோபாட் காந்தியுடன் தொடர்புடையவர் என்றும், அவரது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவினார் என்றும் கூறிவரும் போலீசு, அவர் மீது பல பொய்வழக்குகளைச் சோடித்துள்ளது. இதே போல, சுர்ஜித் சிங் பூல் என்ற விவசாய சங்கத் தலைவரும் மாவோயிஸ்டு தீவிரவாதி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதியன்று டெல்லி போலீசாரும் ஆந்திர சிறப்பு உளவுத்துறை போலீசாரும் சேர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தின் தயாள்சிங் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் சுனில் மண்டிவால் என்பவரைக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத "ஊபா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டு தலைவரான கோபாட் காந்தியுடன் தொடர்புடையவர் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை இயக்கச் செயல்வீரரான கிலாட்சன் டங்டங் என்பவர், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் உளவுத்துறை போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார். பழங்குடியினரின் நிலங்களைப் பறித்து மிட்டல் நிறுவனம் எஃகு ஆலை நிறுவுவதை எதிர்ப்பதாலேயே, இவர் மாவோயிஸ்டு ஆதரவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு மிரட்டப்படுகிறார். இவர் மட்டுமல்ல, நாடெங்கும் மனித உரிமை - ஜனநாயக உரிமைக்கான அமைப்புகள், கலை - இலக்கிய அமைப்புகள் உள்ளிட்டு உழைக்கும் மக்களிடம் செயல்பட்டுவரும் 57 அமைப்புகள் உளவுத்துறையின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

மே.வங்கத்தில் பங்ளார் மனாப் அதிகார் சுரக்ஷா மன்ச்சா (MASUM) என்ற விவசாய சங்கத்தின் செயலாளரான கீர்த்தி ராய், பயங்கரவாத தடுப்புப் போலீசாரால் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2008-ஆம் ஆண்டில் சித்திரவதைக்கு எதிரான மக்கள் நீதிமன்றத்தை ஒழுங்கமைத்து நடத்தினார். இதில் போலீசு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த அமைப்பின் இதர முன்னணியாளர்கள் மீதும் பொய்வழக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், டாங்கி மஸ்தூர் யூனியன் எனும் தொழிற்சங்கத்தின் முன்னணியாளர்களான அவினாஷ் குல்கர்னி, பாரத் பவார் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சங்கம், ஆதிவாசி மகாசபை எனும் பல்வேறு பழங்குடி மக்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பு சங்கமாகும். தெற்கு குஜராத்தில் நக்சல் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகப் பூச்சாண்டி காட்டி, இவர்கள் மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பொய்வழக்கு சோடிக்கப்பட்டுள்ளது. இக்கைதுகளைக் கண்டித்து கடந்த மார்ச் 25-ஆம் நாளன்று எதிர்க்கட்சியான காங்கிரசு சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது.

அசாமில், கிரிஷாக் முக்தி சங்கராம் சமிதி என்ற பழங்குடியின மக்களின் சங்கம் கடந்த மார்ச் 30-ஆம் தேதியன்று வன உரிமைக்காகவும், ரேஷன் பொருட்களை முறையாக விநியோகிக்கக் கோரியும் தேமாஜி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தடியடித் தாக்குதல் நடத்தி, இப்போராட்டத்தை போலீசு ஒடுக்கியது. இச்சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான அகில் கோகய், கைது செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று அவர் மீது பொய்வழக்கு சோடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் நொய்டா பகுதியிலுள்ள தொழிலாளர்களை அணிதிரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ள டெல்லியைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரான கோபால் மிஸ்ராவும் அவரது மனைவி அனுவும், பயங்கரவாத மாவோயிஸ்டு தலைவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதியன்று "ஊபா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஓக்லா தொழிற்பேட்டையிலுள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களிடம் பணியாற்றி வந்தவர்கள்தான் இவர்கள். ஜாதவபூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கோபால் மிஸ்ரா, தனது வாழ்வை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவே அர்ப்பணித்தவர்.

கர்நாடகத்தில் ராகுல் பெலாகலி என்ற செய்தியாளர், கடந்த ஆண்டில் மாவோயிஸ்டு கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் பேட்டி எடுத்து பிரஜா வாணி என்ற நாளேட்டில் வெளியிட்டார். இச்செய்தி பற்றி இதுவரை கண்டுகொள்ளாத போலீசு, இப்போது காட்டுவேட்டை தொடங்கியதும் அச் செய்தியாளர் மீது வழக்கு தொடுத்துள்ளது. மாவோயிஸ்டு தலைவரை எங்கே சந்தித்தார் என்ற தகவல் தேவைப்படுவதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் மீது "ஊபா" சட்டம் பாயும் என்றும் ஷிமோகா மாவட்டப் போலீசு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இக்கைதுகள் ஒருபுறமிருக்க, மாவோயிஸ்டுகளை ஆதரிப்போர் "ஊபா" சட்டப்படி பத்தாண்டுகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவளிப்பவர் என்று எதை வைத்து தீர்மானிப்பது என்று கேள்வி எழுப்பும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அரசுக்கு எதிராகப் போராடுவோரையும் மனித உரிமை இயக்கத்தினரையும் ஜனநாயக சக்திகளையும் கைது செய்து முடக்கும் நோக்கத்துடன்தான் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தி வருகின்றன. மனித உரிமை இயக்கத்தினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என அறிவுத்துறையினர் அனைவரையும் மிரட்டிப் பணியவைக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அறிவுத்துறையினர் ஆதரவு தருவதாலேயே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை என்கிறார் ப.சிதம்பரம். அதனாலேயே அறிவுத்துறையினரின் வாயை அடைத்து முடக்கிவிட பயங்கரவாத ‘‘ஊபா" சட்டம் ஏவிவிடப்படுகிறது. இந்தப் போர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான, நக்சல்பாரிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல; இது நாட்டு மக்களுக்கு எதிரான போர் என்பதைத்தான் இந்தக் கைது நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
*குணசேகரன்